எம்ஜிஆர், அதிமுக வாக்குகளை விஜய் கவருவாரா? கள நிலவரம் என்ன?
பட மூலாதாரம், TVK
எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 49 நிமிடங்களுக்கு முன்னர்
இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், சுமார் அரை மணிநேரம் தான் ஆற்றிய உரையில் பிரதானமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரை முன்னிறுத்தி பேசியிருக்கிறார். எம்ஜிஆர் 1977ல் பெற்ற வெற்றியை போன்று 2026 தேர்தலிலும் மாற்றம் நிகழும் என தொடர்ச்சியாக கூறி வருகிறார் விஜய்.
அதிமுகவின் நிலைமையை நினைத்து அதன் தொண்டர்களே கவலை கொள்வதாக விஜய் பேசியிருப்பதன் மூலம் அக்கட்சியின் வாக்காளர்களுக்கு அவர் வெளிப்படையாக குறிவைத்ததாக, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உண்மையில், எம்ஜிஆரை முன்னிறுத்தும் விஜய், அவர் கூறுவது போன்ற அரசியல் மாற்றத்தை நிகழ்த்த முடியுமா? எம்ஜிஆருக்கு கிடைத்த வெற்றி அவருக்கு சாத்தியமா?
எம்ஜிஆர் பற்றி பேசியது என்ன?
‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு ஏராளமான தொண்டர்களும் நிர்வாகிகளும் வந்தனர்.
மாநாட்டில் பேசிய விஜய், ”எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எம்ஜிஆரை மாதிரியே குணம் கொண்ட விஜயகாந்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரும் மதுரையை சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியாது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
1967, 1977ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேபோன்று 2026ல் அப்படியொரு வரலாறு திரும்பப் போகிறது என்பதை உறுதியாக சொல்வதற்கான மாநாடு இது.” என்றார்.
தன் பேச்சுக்கு நடுவே எம்ஜிஆரின் ‘நான் ஆணையிட்டால்’ பாடல் வரிகளையும் ஆங்காங்கே பாடினார். ‘எதிர்காலம் வரும் என் கடமை வரும்’ என்ற பாடல் வரிகளை பாடிய விஜய், “‘மக்கள் அரசியல்’ எனும் சவுக்கை பாசிச பாஜக, ‘பாய்சன்’ திமுகவுக்கு எதிராக கையில் எடுக்கலாமா?” என கூட்டத்தை நோக்கி கேள்வி எழுப்பினார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, ‘அரசியலிலும் சினிமாவிலும் தனக்கு பிடித்தவர் எம்ஜிஆர்’ என பேசியுள்ளார் விஜய் களச்சூழல் எப்படி உள்ளது?
1977ம் ஆண்டில் எம்ஜிஆருக்கு கிடைத்தது போன்ற வெற்றி சாத்தியமா என எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் சுகுணா திவாகரிடம் கேட்டதற்கு, “1977 போன்ற களச்சூழல் இப்போது இல்லை. அதுமட்டுமல்லாமல், எம்ஜிஆர் சினிமாவில் நடித்து மட்டும் அரசியலுக்கு வரவில்லை. அதிமுகவை தொடங்கும் முன் சுமார் 20 ஆண்டுகள் திமுகவுக்காக பணியாற்றியுள்ளார், பல பொறுப்புகளை வகித்துள்ளார். அதன்பின் தான் கட்சியை ஆரம்பித்து ஆட்சியை பிடித்தார். எம்ஜிஆர், அண்ணாவின் பயணம் நெடியது” என்றார்.
அரசியலில் வெற்றி பெற கருத்தியல் ரீதியாக பணியாற்றுவது, மக்கள் ஆதரவை பெறுவது முக்கியம் எனக்கூறிய சுகுணா திவாகர், எந்த தேர்தலையும் விஜய் சந்திக்கவில்லை என்றும் தேர்தலில் பணியாற்றிய அனுபவம் அவரின் தொண்டர்களுக்கு இல்லை என்றும் தெரிவிக்கிறார்.
“அரசியல்ரீதியாக பணியாற்றும் தொண்டர்களை உருவாக்கிய பின்பே எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார். ஆனால், அவருடைய நிர்வாகிகளையே விஜய் பார்ப்பதில்லை என புகார் இருக்கிறது. விஜய் சினிமா போன்றே அரசியலை நினைக்கிறார். அவ்வப்போது மாநாடுகள், அறிக்கைகள் என இருக்கிறார். எல்லாவற்றுக்கும் வீட்டுக்குள்ளிருந்து செயல்படுகிறார். இது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ” என்கிறார் சுகுணா திவாகர்.
சுகுணா திவாகர், ‘திராவிட அரசியலின் எதிர்காலம்’, ‘அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
வீட்டுக்குள்ளிருந்து செயல்படுவதாக முன்வைக்கும் விமர்சனங்களுக்கு விஜய் தன்னுடைய உரையில் பதிலளித்திருந்தார்.
இதுகுறித்து மாநாட்டில் பேசிய விஜய், “‘ஒரு சிங்கம் எப்போதும் தனித்துவம் வாய்ந்தது, சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிலோமீட்டருக்கு அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. சிங்கம் உயிருடன் உள்ள, பெரிய விலங்குகளையே தாக்கும், ஜெயிக்கும். உயிருள்ளாததை, கெட்டுப் போனதை தொடாது. அப்படிப்பட்ட சிங்கம் எதையும் தொடாது, தொட்டால் விடாது. சிங்கம் காட்டின் எல்லையை தானே வகுக்கும். கூட்டத்துடனும் இருக்கும், அஞ்சாமல் தனியே வரும். தனியாக இருந்தாலும் அது காட்டின் அரசாக இருக்கும். ” என்றார்.
“ஆனால், சிங்கம் யாரையும் தன் குகைக்கே வரவழைத்து வேட்டையாடுவதில்லை, விஜய் தான் இருக்கும் இடத்துக்கே மக்களை வரவழைத்து பேசுகிறார்” என விமர்சிக்கிறார் சுகுணா திவாகர்.
பட மூலாதாரம், TVK
படக்குறிப்பு, மாநாட்டில் கூடிய கூட்டம் சினிமாவில் இருந்து வரும் எல்லோருக்கும் ரோல் மாடல் எம்ஜிஆர்தான் எனக் குறிப்பிட்ட சுகுணா திவாகர், அதற்கு உதாரணமாக விஜயகாந்தை குறிப்பிடுகிறார்.
” விஜயகாந்த் தனது படங்களில் தீவிர அரசியல் கருத்துகளை பேசியுள்ளார். ஆனால், விஜய் ஒரு வெகுஜன எண்டர்டெயினராக தான் இருந்திருக்கிறார்.” என கூறினார்.
எம்ஜிஆருக்கு அடுத்து பல தலைமுறைகள் உருவாகிவிட்டது எனவும் இளைய தலைமுறை மத்தியில் இந்த ‘எம்ஜிஆர் பிம்பத்துக்கு’ என்ன தாக்கம் இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
அதிமுக வாக்குக்கு குறியா?
இதே கருத்தை வலியுறுத்துகிறார், அரசியல் விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான எஸ்.பி.லட்சுமணன்.
“எல்லாரும் எல்லார் மாதிரியும் ஆகிவிட முடியாது. எம்ஜிஆர்-விஜய் என இரண்டு காலகட்டமும் வேறு. அது விஜய்க்கு தெரியாமல் இல்லை. தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக விஜய் அவ்வாறு பேசுகிறார். ஆனால், யதார்த்தம் அப்படியில்லை.” என்கிறார் அவர்.
மாநாட்டில் பேசிய விஜய், ”இந்த ஆட்சியை பார்த்து நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்? நீங்கள் (ஸ்டாலின்) நடத்தும் ஆட்சியில் யாருக்காவது பாதுகாப்பு இருக்கிறதா? தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களைப் பார்த்து ‘வாயே இல்லாத வயிறு கூட சிரிக்கிறது’. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா? வெளியே செல்லும் இடங்களில் பாதுகாப்பு இல்லை என பெண்கள் கதறுகின்றனர். அந்த கதறல் உங்களுக்குக் கேட்கிறதா? ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.” என்றார்.
பெண்கள், வயதானவர்களுக்கே தான் முக்கியத்துவம் அளிப்பதாக பேசியிருந்தார் விஜய்.
ஆனால், “பெண்கள், தாய்மார்கள், வயதானவர்களின் வாக்குகளை கவர்வதற்காக விஜய் என்ன செய்தார்? களத்திலும் சரி, சினிமாவிலும் சரி பெண்களுக்கான தலைவர் என்ற பிம்பம் விஜய்க்கு உருவாகவில்லை. ஆனால், அது எம்ஜிஆருக்கு இருந்தது. மூதாட்டிகளின் அன்பை எம்ஜிஆர் பெறுவது போன்ற புகைப்படங்கள் இப்போது வரை பிரபலம்.” என்கிறார் சுகுணா திவாகர்.
யாருடைய வாக்குகளை விஜய் பெறலாம் என்ற கேள்விக்கு, “புதிதாக யாராவது ஆட்சி வகிக்க வேண்டும் என்பவர்களும் முதல் தலைமுறை வாக்காளர்களும் விஜய்க்கு வாக்களிப்பார்கள். இது அதிமுகவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில், முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம். நாம் தமிழர் வாக்குகள் கணிசமாக விஜய்க்கு வரும். அவர் குறிவைக்கும் அதிமுக வாக்குகள் அவருக்கு வரலாம்.” என்கிறார் அவர்.
படக்குறிப்பு, ‘அதிமுக வாக்குகளை விஜய் குறிவைப்பதால் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ – பத்திரிகையாளர் லட்சுமணன் ‘பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’
”எம்ஜிஆரின் மாஸ் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அவர் உயிருடன் இருக்கும்வரை ஒருவராலும் முதலமைச்சர் சீட் பற்றி கனவு கூட காண முடியவில்லை. ‘எப்படியாவது சி.எம். சீட்டை எனக்கு தாருங்கள், என் நண்பர் வந்தவுடன் திரும்பித் தருகிறேன்,” என தன் எதிரியைக் கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர்.” என மாநாட்டில் பேசினார் விஜய்.
மேலும், “ஆனால், எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக் காப்பது யார்? அப்பாவி தொண்டர்களே அதை சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கின்றனர். அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு 2026ல் யாருக்கு ஓட்டு செலுத்த வேண்டும் என நன்றாகவே தெரியும். அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி.
திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறது. ஒரு ரெய்டு நடந்தால், டெல்லி சென்று ரகசிய கூட்டம் நடத்துகின்றனர் திமுகவினர். அந்த சந்திப்புக்குப் பிறகு அந்த பிரச்னை அப்படியே காணாமல் போயிருக்கும்.” எனவும் பேசினார் விஜய்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இதுபற்றி பேசிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் “தொண்டர்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும், தகுதியற்றவர்கள் கையில் அதிமுக இருக்கிறது எனக்கூறி அதிமுக வாக்குகளை நேரடியாக குறிவைத்திருக்கிறார் விஜய்.
நேரடியாக, மறைமுகமாக கூட்டணி இல்லை என இதன்மூலம் கூறியிருக்கிறார். விஜய் தனித்து நிற்பார் அல்லது அவர் தலைமையில் அணி அமையும். இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிமுக வாக்கு வாங்கி அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வர முடியாது, ஆனாலும் அவர் கவனமாக இருக்க வேண்டும். ஒன்றுபட்ட அதிமுக பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிமுக வாக்குகளில் விஜய்க்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு