ஹர்த்தாலை நிரகாரித்துள்ள வடக்கு , கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்கள் இரண்டாவது தடவையாகவும் இனவாதத்தை தோற்கடித்துள்ளதாக, தொழில் பிரதி யமைச்சர் மஹிந்த ஜயசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஹர்த்தாலை தோற்கடித்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், சுமந்திரனின் நிலை கவலைக்குரியது என்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மீதான விவாதத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதிரமைச்சர்;
வடக்கு மற்றும் கிழக்கில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஹர்த்தால் வெற்றி பெற்றதாக ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள். இந்த ஹர்த்தால் தோல்வி என்றே குறிப்பிட வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இரண்டாவது தடவையாகவும் இனவாதத்தை தோற்கடித்துள்ளார்கள்.
இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிலை கவலைக்குரியது.
கடந்த காலங்களில் இவர் நடுநிலையான நிலையிலிருந்து செயற்பட்டவர்.ஆனால் தற்போது தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இனவாத சேற்றுக்குழியில் விழுந்துள்ளார்.
அரசாங்கம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என ஒருபோதும் குறிப்பிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வரையறையற்ற வகையில், அரச முறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
அதனால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.கடனில் ஒவ்வொரு ரூபாவுக்கும் நாம் பொறுப்புக்கூறுவோம் என மேலும் தெரிவித்தார்.