பட மூலாதாரம், X/@TVKITWingOfficial
படக்குறிப்பு, விஜய் 1984லிருந்து குழந்தை நட்சத்திரமாகவும் 1992லிருந்து நாயகனாகவும் நடித்துவருகிறார்.எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ரஜினிகாந்த்தின் பல திரைப்படங்களில் அவருக்கு இருந்த அரசியல் ஆர்வம் வெளிப்படையாகக் கூறப்பட்டாலும், விஜய்யின் திரைப்படங்களில் அவை வெகு அரிதாகவே வெளிப்பட்டிருக்கின்றன. அப்படி வெளியான சில திரைப்படங்கள் குறித்த பட்டியல் இது.
விஜய் 1984லிருந்து குழந்தை நட்சத்திரமாகவும் 1992லிருந்து நாயகனாகவும் நடித்துவருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்தது உட்பட இதுவரை 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் விஜய், கதாநாயகனாக நடித்திருக்கும் 69வது படம் ‘ஜனநாயகன்’.
இத்தனை படங்களில் விஜய் தனது அரசியல் வருகைக்கான விருப்பத்தையோ, நேரடியாக அரசியலையோ பேசி நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இருந்தபோதும், சில இடங்களில் அரசியலுக்கு வருவது குறித்தும் , சமூகம் பற்றி தனது பார்வை என்ன என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
தமிழன் (2002)
பட மூலாதாரம், YouTube
படக்குறிப்பு, ‘தமிழன்’ படத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பார் விஜய். எஸ்.ஏ. சந்திரசேகரின் கதையை வைத்து புதுமுக இயக்குநரான மஜீத் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இந்தப் படத்தில் வழக்கறிஞர் சூர்யா என்ற பாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆரம்பத்தில் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் விஜய், ஒரு கட்டத்தில் சகோதரியின் அறிவுரையால் பொறுப்பானவராக மாறுவார். முதலில் இந்தியாவின் கடனை அடைக்க தன் பங்காக 4 ஆயிரம் ரூபாயை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு, எல்லோரும் அதைப் போலச் செய்ய வேண்டுமெனக் கூறுவார்.
இதற்குப் பிறகு, இலவச சட்ட உதவி மையம் துவங்கி, நகராட்சி பிரச்னை, பேருந்துகளில் ஏற்படும் பிரச்னை, கள்ளச்சாராய பிரச்னை போன்றவற்றை சட்ட ரீதியாக தீர்த்துவைப்பார்.
இந்தப் படத்தில், “நான் யாருக்கும் எதிரியாக இருக்க விரும்பலைங்க.. மக்களுக்கு நண்பனாக இருக்கனும்னுதான் ஆசைப்படுறேன்”, “எந்தக் கட்சிக்காரன் மேடை போட்டாலும் கைதட்டி, விசிலடிச்சு கேட்கிறோம். எவனாவது அவங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டிருந்தா, இந்த மேடைகள் குறைந்திருக்கும். இதற்குக் காரணம் மக்களின் அறியாமைதான்”, “தமிழன் ஜெயிப்பான்” என்பது போன்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தன.
படத்தின் இறுதியில் குடியரசுத் தலைவரே அவரைப் பாராட்டுவது போல படம் நிறைவடையும்.
தலைவா (2013)
பட மூலாதாரம், YouTube
படக்குறிப்பு, ‘தலைவா’ படத்தின் தலைப்புக்குக் கீழே Time to Lead என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.ஏ.எல். விஜய் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே Time to Lead என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இந்தப் படத்தில் மும்பையின் ‘டான்’ ஆன தனது தனது தந்தை இறந்த பிறகு அவரது இடத்தை ‘தலைவா’ என்ற பட்டத்துடன் ஏற்றுக்கொள்வார் விஜய்.
இதற்குப் பிறகு மும்பையில் அமைதி திரும்பச் செய்ய, முயற்சிகளை மேற்கொள்வார்.
ஆனால், இந்தப் படத்தின் தலைப்பின் கீழே Time to Lead என்ற வாசகம் இருந்ததை அப்போதைய ஆளும் கட்சி ரசிக்கவில்லை.
இந்தப் பிரச்னையை அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிடம் எடுத்துச் செல்ல படக்குழு முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.
முதலில் ஆகஸ்ட் 9ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் பல திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறப்பட்டு தமிழ்நாடு, புதுச்சேரி தவிர பிற இடங்களில் படம் வெளியானது.
இதற்குப் பிறகு, விஜய் தன் தரப்பை விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இந்தப் படம் வெளியானது. தலைப்புக்குக் கீழே இருந்த Time to Lead என்ற வாசகம் நீக்கப்பட்டு படம் வெளியானது.
ஆனால், இதற்கு முன்பே படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானதால், பட வசூல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
கத்தி (2014)
பட மூலாதாரம், YouTube
படக்குறிப்பு, 2 ஜி ஊழலை வெளிப்படையாக குறிப்பிட்டு வசனம் பேசியிருந்தார் விஜய்.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் கத்தி. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜீவானந்தம் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் பொதுவுடமைத் தத்துவம், முதலாளித்துவத்தின் தீமை, விவசாயிகள் பிரச்னை, குடிநீர் பிரச்னை போன்ற பல விஷயங்களைப் பேசியிருந்தார் முருகதாஸ்.
‘காத்துல ஊழல் பண்ற ஊருயா’ என 2 ஜி ஊழலை வெளிப்படையாக குறிப்பிட்டு வசனம் ஒன்றையும் பேசியிருந்தார் விஜய். இது தொடர்பாக வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
மெர்சல் (2017)
பட மூலாதாரம், Zee Tamil
படக்குறிப்பு, மருத்துவத் துறையை லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிரான கருத்தைச் சொன்ன படம் இது.விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்தார்.
மருத்துவத் துறையை லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிரான கருத்தைச் சொன்ன படம்தான் இது. ஆனால், இதில் பல இடங்களில் வெளிப்படையாகவே அரசியல் பேசப்பட்டது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் விமர்சிப்பது போன்ற காட்சிகளுக்கு பா.ஜ.க. கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.
பா.ஜ.கவின் மூத்த தலைவர் எச். ராஜா, விஜய்யின் மதத்தைக் குறிப்பிட்டு அவரை விமர்சிக்க ஆரம்பித்தார்.
படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சி, “உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்” என்ற எம்.ஜி.ஆர். பாடலுடன் இருந்தது கவனிக்கப்பட்டது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த “ஆளப்போறான் தமிழன்” பாடலும் வெகுவாக கவனிக்கப்பட்டது.
சர்க்கார் (2018)
பட மூலாதாரம், YouTube
படக்குறிப்பு, இந்தப் படத்தில் அமெரிக்காவில் வசிக்கும் சுந்தர ராமசாமி வாக்களிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான இந்தப் படத்தில் அமெரிக்காவில் வசிக்கும் சுந்தர ராமசாமி வாக்களிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
தேர்தலின்போது வாக்களிக்கச் செல்பவர், தனது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்.
இதற்குப் பிறகு சுந்தரின் முயற்சிகளால் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்படுகிறது. இதனால், முதலமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்ட மாசிலாமணியின் எதிரியாகிறார் சுந்தர். ஆகவே தானும் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்கிறார்.
பிரசார காலகட்டத்தில் பல பிரச்னைகளை சந்திக்கிறார். மொத்த தேர்தல் அமைப்புமே மாற வேண்டுமென உணர்கிறார். தேர்தலில் சுந்தரும் அவரது ஆதரவாளர்களும் வெற்றிபெறுகிறார்கள். இருந்தபோதும் தான் முதலமைச்சராகாமல், நேர்மையான ஒரு அதிகாரியை முதலமைச்சராகத் தேர்வுசெய்கிறார் சுந்தர் என படம் முடிவுக்கு வரும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தப் படத்தில் இலவசங்களுக்கு எதிராக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாயகனின் பேச்சைக்கேட்டு விழிப்புணர்வடையும் மக்கள் தாங்கள் பெற்ற மிக்ஸி, கிரைண்டர், டிவி போன்ற இலவசப் பொருட்களைக் குப்பைத்தொட்டியில் போடுவதாகவும் அது ஒரு சுயமரியாதை சார்ந்த செயலாகவும் காண்பிக்கப்பட்டதும் விமர்சனத்திற்கு உள்ளானது.
மேலும், படத்தில் வரும் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திற்கு கோமளவல்லி எனப் பெயர் சூட்டியது, அ.தி.மு.கவினரிடம் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.
இந்தப் படம் முன்வைத்த அரசியலை விஜய் நிஜத்தில் ஏற்றுக்கொண்டாரா என்பது தெரியாவிட்டாலும், அவரது ரசிகர்கள் பல இடங்களில் இலவசங்களைத் தூக்கிப்போடுவது போல வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “இந்தப் படத்தில் நான் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை. நிஜத்தில் நான் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். தலைவன் நல்லவனாக இருந்தால் எல்லாமே நல்லதாக மாறும். நெருக்கடியான நேரத்தில் ஒரு நல்ல தலைவன் வருவார். அவர் நல்ல சர்கார் அமைப்பார்,” என்று குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு