வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?
பட மூலாதாரம், Getty Images/Skynesher
படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரம் என்பது உற்பத்தித்திறனை பாதிக்காமல் நல்வாழ்வை மேம்படுத்துவது புதிய ஆய்வில் நிரூபணமாகியுள்ளதுஎழுதியவர், சோஃபியா பெட்டிஸா, பிபிசி உலக சேவைபதவி, 4 நிமிடங்களுக்கு முன்னர்
வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்து, வார இறுதியை கொண்டாடுவோம். அதன் பின் மீண்டும் வேலைக்குத் திரும்பும் சோகத்திற்கு தயாராவோம். ஆனால் இந்த நடைமுறை இனியும் அவ்வாறு இருக்க வேண்டியதில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்?
நேட்ஷர் ஹியூமன் பிஹேவியர் இதழில் வெளியான பெரிய அளவிலான ஆய்வு ஒன்று வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் மனிதர்களில் நல்வாழ்வு கணிசமாக மேம்படுவதாகக் கூறுகிறது.
பாஸ்டன் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள 141 நிறுவனங்களில் சோர்வு, வேலை திருப்தி, உடல் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட நான்கு முக்கிய குறியீடுகளை கண்காணித்தனர்
“ஊழியர்களின் நல்வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டதை நாங்கள் கண்டோம்” என முன்னணி ஆசிரியர் வென் ஃபேன் பிபிசியிடம் தெரிவித்தார்.
“நிறுவனங்கள் உற்பத்தித்திறன் மற்றும் வருவாயிலும் லாபம் கண்டன. தற்போது ஆய்வு முடிந்த பிறகு 90 சதவிகிதமானோர் நான்கு நாள் வேலை முறையையே தேர்வு செய்கின்றனர்” என்றார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இது குறைந்த வேலைவாரத்தை நல்ல ஆரோக்கியம், மேம்பட்ட வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் ஒட்டுமொத்த மேம்பட்ட வேலை திருப்தியுடன் தொடர்புபடுத்தும் ஆய்வுகளோடு சேர்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று நீண்ட வேலை நேரங்கள் மூளை கட்டமைப்பை மாற்றுவதாக கண்டறிந்துள்ளது, அதன் வரிசையிலே இந்த ஆய்வும் வந்துள்ளது.
எனவே இதன் ஆரோக்கிய நலன்கள் வெளிப்படையான பிறகு எது நம்மைத் தடுக்கிறது என்கிற கேள்வியும் உள்ளது.
அதிகவேலை மரியாதையின் சின்னமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பல கலாச்சாரங்களில் கூடுதல் வேலை என்பது மரியாதையின் சின்னமாகப் பார்க்கப்படுகிறதுசீனா ‘996’ வேலை கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறது. அங்கு தொழிலாளர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வேலை செய்கிறார்கள்.
இந்தியாவில் வளர்ந்து மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஊழியர்கள் நீண்ட, ஒழுங்கற்ற நேரம் வேலை செய்ய வேண்டும் என்கிற இடைவிடாத அழுத்தத்தை அடிக்கடி சந்திக்கின்றனர்.
“சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நீண்ட வேலை நேரம் என்பது மரியாதையின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது என்கிறார் பேராசிரியர் ஃபேன்.
ஜப்பானில் சம்பளமில்லாத கூடுதல் வேலை நேரம் மிகவும் சகஜமானது. எந்த அளவிற்கு என்றால் கூடுதல் வேலையால் ஏற்படும் மரணத்திற்கு ‘கரோஷி’ என தனி வார்த்தையே உள்ளது.
“ஜப்பானில் வேலை என்பது வேலை மட்டுமல்ல, அது ஒரு சமூக சடங்கு போல உள்ளது” என்கிறார் ஹிரோஷி ஓனோ. இவர் ஜப்பானில் உள்ள வேலையிட கலாச்சாரம் மற்றும் தொழிலாளர் சந்தைகளின் வல்லுநர் ஆவார்.
“மக்கள் சீக்கிரமாக வந்து, வேலையே இல்லையென்றாலும் தங்களின் உறுதிபாட்டை காண்பிப்பதற்கு என்றே தாமதமாக செல்வார்கள். இது தற்காப்பு கலைகள் போன்று செயல்திறன் சார்ந்தது, அதைச் செய்வதற்கு வழி உள்ளது” எனத் தெரிவிக்கிறார் ஹிரோஷி
இதனை ஜப்பானின் கூட்டு கலாச்சாரம் எனக் கூறிய ஹிரோஷி தொடர்ந்து விளக்குகிறார். ” ஜப்பானில் ‘வேலையில் சமாளிப்பவர்களுக்கு (ஃப்ரீ ரைடர்ஸ்) எதிராக ஒரு வலுவான களங்கம் உள்ளது. ஒரு வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்தால் மற்றவர்கள் ‘அவர் ஏன் இன்று வேலையைத் தவிர்த்துவிட்டார்’ என யோசிப்பார்கள்” என்றார்.
இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ஜப்பானில் சட்டப்பூர்வமான பலன்களான பேறுகால விடுப்பு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை.
“ஆண்கள் ஒரு ஆண்டு வரை விடுப்பு எடுக்கலாம், ஆனால் வெகு சிலர் மட்டுமே அவ்வாறு செய்கின்றனர் – விடுப்பு தங்கள் உடன் வேலை செய்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் என நினைப்பார்கள்” எனத் தெரிவித்தார் ஹிரோஷி.
எனினும் இது போன்ற ஆய்வுகள் கூடுதல் வேலை செய்யும் வலுவான பாரம்பரியம் உள்ள இடங்களிலும் பார்வையை மாற்றி வருகிறது என்கிறார் வென் ஃபேன்.
ஐஸ்லாந்தில் 90 சதவிகிதமானோர் தற்போது குறைவான நேரங்களே வேலை செய்கின்றனர் அல்லது அவர்களின் வேலை நாட்களை குறைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர்.
தென் ஆப்ரிக்கா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெய்ன், டொமினிகன் குடியரசு, போட்ஸ்வானா உள்ளிட்ட பல நாடுகளில் இது போன்ற ஆய்வுகள் நடைபபெற்று வருகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பான் அரசு ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை முயற்சி செய்யத் தொடங்கியது. துபாயிலும் அரசு ஊழியர்களுக்கு இதே போன்றதொரு கோடைக்கால முன்னெடுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியா அக்டோபர் 2025-இல் 67 நிறுவனங்களில் 4.5 நாள் வேலைவாரத்தை பரிசோதிக்க உள்ளது.
வேலை என்பது வாழ்க்கையுடன் தொடர்பில்லாமல் உள்ளது
பட மூலாதாரம், City of Golden PD
படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாறிய பிறகு கொலராடோ காவல்துறை ராஜினாமாக்கள் பாதியாக குறைந்துள்ளது.”கொரோனாவுக்குப் பிறகு பலரும் தங்களின் வேலையும் வாழ்க்கையும் தொடர்பில்லாமல் இருப்பதாக உணர்கின்றனர். இந்தப் போக்கை உங்களால் திருப்ப முடியும்” என்கிறார் 4 டே வீக் குளோபல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கேரன் லோவ்.
அவரின் அமைப்பு பிரேசில், நமிபியா, ஜெர்மனி உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் நிறுவனங்கள் நான்கு நாள் முறையை சோதிக்க உதவுகின்றன.
அவரின் வெற்றிகரமான முயற்சிகளில் ஒன்று கொலராடோவின் கொல்டன் நகர காவல்துறையில் 250 பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டது தான். நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய பிறகு கூடுதல் வேலை நேர செலவுகள் 80% வரை குறைந்துள்ளது, ராஜினாமாக்கள் பாதியாக குறைந்துள்ளது.
“அவசர காலங்களில் வேலை செய்யும், ரோந்து செய்யும் காவல்துறையில் இது வேலை செய்கிறது என்றால் வேறு எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும்” என்கிறார் லோவ்.
“நாங்கள் 2019-இல் இந்த ஆய்வை தொடங்கியபோது ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம் காட்டின. தற்போது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இதைச் செய்து வருகின்றன. ஆதாரம் உள்ளது, ஆனால் இல்லாத ஒரு விஷயம் புரிதல் தான்” என்றார்.
பட மூலாதாரம், Karen Lowe
படக்குறிப்பு, நான்கு நாள் வாரம் என்பது தேவையற்றவைகளை குறைப்பது என்கிறார் கேரன் லோவ்குறைந்த வேலை நாட்கள் என்றால் குறைவான செயல்திறன் ஒரு பொதுவான தவறான புரிதல் இருக்கிறது என்கிறார் லோவ். ஆனால் அதற்கு மாறானது தான் உண்மை என அவர் வாதிடுகிறார்.
2019-இல் மைக்ரோசாஃப்ட் ஜப்பானில் நான்கு நாள் வேலை வாரத்தை பரிசோதித்தபோது முந்தைய ஆண்டை காட்டிலும் ஒவ்வொரு ஊழியரிடமும் 40% விற்பனை அதிகரித்தது. எனினும் அதனை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டாம் என அந்நிறுவனம் முடிவு செய்துவிட்டது.
பெருநிறுவனங்களில் பல துறைகள் இருப்பதாலும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நேர மண்டலங்களில் செயல்படுவதாலும் அவை மிகவும் சிக்கலான பிரச்னைகளைச் சந்திக்கின்றன என்கிறாற் லோவ்.
ஃபேனின் ஆய்வில் உற்பத்தித்திறன் பெரும்பாலும் தக்கவைப்பது, ஏனென்றால் நிறுவனங்கள் குறைந்த மதிப்புள்ள பணிகளை குறைத்துவிட்டன. தேவையில்லாத மீட்டிங் அனைத்து செல்போன் அழைப்பு அல்லது குறுஞ்செய்தியில் முடிக்கப்பட்டன.
மற்றுமொரு தவறான புரிதல் இருப்பதாக கூறுகிறார் லோவ். அது ஊழியர்கள் விடுப்பு எடுத்த நாளுக்கு ஈடு செய்ய கூடுதல் கடினவேலை செய்ய வேண்டும் என்பது தான்.
“ஐந்து நாள் வேலைகளை நான்கு நாட்களுக்கு சுருக்குவது அல்ல, தேவையற்ற வேலைகளை குறைப்பது தான் முக்கியமானது” என்கிறார்.
தற்போது ஏஐ மூலம் பல பணிகளும் தானியங்கிமயமாகின்றன. நம்மால் அத்தகைய பணிகளை எளிதாக அடையாளம் காண முடியும் என்றும் தெரிவித்தார்.
ஆரோக்கியத்தில் வேலை ஏற்படுத்தும் பாதிப்பு
பட மூலாதாரம், Charl Davids
படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாறியது தன் குழுவிற்கு உயிர்நாடியாக உள்ளதாகக் கூறும் சார்ல் டேவிட்ஸ், முடிவுகள் சிறப்பாக இருந்தது என்கிறார்.கேப் டவுனில் உள்ள ஸ்டெல்லன்போஸ் பல்கலைக்கழகத்தின் உளவியல் மையத்தின் இயக்குநரான சார்ல் டேவிட்சுக்கு நான்கு நாள் வாரம் என்பது மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு உயிர்நாடி.
அவரின் குழு 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு மனநல உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த மாற்றத்திற்கு முன்பாக பணியாளர்கள் மிகவும் சோர்வாக இருந்ததாகக் கூறுகிறார்.
“அதிக அளவில் வேலையைத் தவிர்த்துவந்தனர். மக்கள் அடிக்கடி சுகாதார விடுப்பு எடுத்தனர். அவர்கள் சோம்பேறியாக இருந்ததால் அல்ல, அவர்கள் ஆற்றலே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர்” என்றார்.
தென் ஆப்ரிக்கா உலகின் மிக மன அழுத்தம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் உள்ளது.
சார்லின் குழுவில் 56 பேர் உள்ளனர். அவர்கள் அதிர்ச்சியில் உள்ளவர்களை அதிகம் சந்திப்பது, அதிக பணிச்சுமை மற்றும் வளங்கள் பற்றாக்குறை போன்றவற்றால் உணர்வு ரீதியாக மிகவும் சோர்வுற்று இருந்தனர்.
நிறுவனத் தலைமையின் ஆட்சேபனை மற்றும் தனது சொந்த குழுவின் அவநம்பிக்கை காட்டிலும் அவர் நான்கு நாள் வேலை வாரத்தை முயற்சித்தார்.
“அவர்கள் இது வேலை செய்யாது என நினைத்தார்கள். ஆனால் வேலை செய்தது, அதன் முடிவுகள் மிகவும் சிறப்பாக இருந்தது” எனத் தெரிவித்தார்.
இந்த முயற்சிக்கு முந்தைய ஆண்டு இவரின் குழு 51 சுகாதார விடுப்பு எடுத்தனர். இந்த முயற்சி அமலில் இருந்த ஆறு மாதத்தில் இது 4 நாட்களாக குறைந்தது.
பணியாளர்கள் நல்ல உறக்கம், கூடுதல் உடற்பயிற்சி மற்றும் அவர்களின் பொழுதுபோக்குகளைப் பின் தொடர முடிந்தது. “வார இறுதி நாட்களில் பணி செய்யாமல் அவர்களால் குடும்பத்துடன் செலவிட முடிந்தது” என்கிறார் சார்ல்.
“அவர்களின் பெரும்பாலானவர்கள் கூடுதல் நேரத்தைப் பயன்படுத்தி தனியாக வேலை செய்து கூடுதலாக சம்பாதிப்பார்கள் என நான் நினைத்தேன். ஆனால் ஒருவர் மட்டுமே அவ்வாறு செய்தார்” என்றார்.
ஊழியர்கள் மேம்பட்ட நல்வாழ்வு அவர்களை பணியில் சிறப்பாக்கியது என சார்ல் நம்புகிறார்.
“அவர்கள் கூடுதல் கவனத்துடனும் அககறையுடனும் இருந்தனர். இது மாணவர்களுக்கு சிறந்த பராமரிப்பு வழங்கக்கூடியதாக மாறியது”
அனைவருக்கும் பொருந்தாத ஒற்றை அணுகுமுறை
இவ்வகையான மாற்றங்கள் எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை.
“ஒருநாட்டின் தொழில்துறை அமைப்பு, அதன் வளர்ச்சி கட்டமும் இதில் முக்கியமாகிறது” என்கிறார் ஃபேன்.
“ஆப்ரிக்காவில் பல தொழிலாளர்கள் வேளாண்மை, சரங்கம் அல்லது முறைசாரா துறைகளில் உள்ளனர்” என்கிறார் கேரன்.
“இவர்கள் வேலை நெகிழ்வுத்தன்மை பற்றிய உரையாடலை சிந்திக்கவே முடியாது” என்றும் தெரிவித்தார்.
குறைந்த திறன் கொண்ட மனிதனால் செய்யப்படும் வேலைகளை மாற்றியமைப்பது கடினமானது. இந்த துறைகளில் உள்ள முதலாளிகள், வேலை நேரத்தை மாற்ற யோசிப்பதை விட பெரும்பாலும் லாபத்தை அதிகரிக்கவே பார்ப்பார்கள்” என்கிறார் லோவ்.
ஆனால் சில முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
ஃபேனின் ஆய்வில் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுற்றுலா துறையில் உள்ள நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. அதில் சில வெற்றிகளும் உள்ளன.
“இவை பல துறைகளில் வேலை செய்ய முடியும். ஆனால் நான்கு நாள் வேலை வாரத்தை நான் ஒரு சர்வரோக நிவாரணி என கூற மாட்டேன்” என்கிறார் அவர். இது அனைவருக்கும் பொருந்தும் ஒற்றைத் தீர்வு கிடையாது என்றும் தெரிவித்தார்.
இளம் தலைமுறையினர் மாற்றத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இளம் தொழிலாளர்கள் குறைவான வேலை வாரத்திற்காக சம்பளக் குறைப்பும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள்.இந்த மாற்றத்தின் மிகப்பெரிய விசை இளைஞர்களிடமிருந்து வரும் என வல்லுநர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
2025-இல் நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய கருத்துகணிப்பில் முதல் முறையாக சம்பளத்தை விட வேலை-வாழ்க்கை சமநிலை தான் மிகவும் முக்கியமானது என்பது தெரியவந்துள்ளது.
தென் கொரியாவில் பல இளம் தொழிலாளர்கள் குறைவான வேலை வாரத்திற்காக சம்பளக் குறைப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள்.
“இளம் தலைமுறையிடம் அதிகரித்து வரும் எதிர்ப்பை நாம் பார்க்க முடிகிறது. வேலையின் நோக்கம் மற்றும் வாழ்க்கையிடமிருந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் அவர்கள் அடிப்படையிலே வேறான எண்ணங்கள் உள்ளன” என்கிறார் ஃபேன்.
“கிரேட் ரெசிக்னேஷன் (Great resignation, பேரிடருக்குப் பிறகு கூட்டாக ராஜினாமா செய்வது , கொயட் க்வுட்டிங் (Quiet quitting, வேலையில் என்ன தேவையோ அதை மட்டும் செய்வது) போன்ற இயக்கங்கள் இளம் தொழிலாளர்கள் அவர்களின் அதிருப்தியை பதிவு செய்ய வழிகளைத் தேடி வருவதையும் சோர்வு கலாசாரத்தை நிராகரிப்பதையும் காட்டுகின்றன என்கிறார். காலப்போக்கில் இந்த மாற்றங்கள் வேலையிட விதிமுறைகளை மாற்றி அமைக்கலாம் என்றும் தெரிவித்தார்.
ஜப்பானில் சில மாற்றங்களைப் பார்ப்பதாகக் கூறுகிறார் ஹிரோஷி ஓனோ.
“30% ஜப்பான் ஆண்கள் தற்போது பேறுகால விடுப்பை எடுக்கின்றனர். இது முன்னர் பூஜ்ஜியமாக இருந்தது. இது மக்கள் நல்வாழ்விற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை காட்டுகிறது” என்றார்.
முதல்முறையாக பணியாளர்கள் உண்மையில் எதிர்க்க தொடங்குகின்றனர் என்பதை ஒப்புக்கொள்ளும் கேரன் வயது குறைய குறைய கூடுதல் மாற்றங்களைக் கேட்கின்றனர் என்றார். அதற்கான உத்வேகம் உருவாகி வருவதாக அவர் நம்புகிறார்.
“கொரோனா முதல் திருப்புமுனையை வழங்கியது. நான்கு நாள் வாரம் அடுத்த திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு