Wednesday, August 20, 2025
Home பிபிசிதமிழிலிருந்துசிறுநீரகத்துக்கு எட்டு லட்சம், கல்லீரலுக்கு நான்கரை லட்சம் ! – நாமக்கல் பெண்ணின் புகாரால் அதிர்ச்சி – BBC News தமிழ்

சிறுநீரகத்துக்கு எட்டு லட்சம், கல்லீரலுக்கு நான்கரை லட்சம் ! – நாமக்கல் பெண்ணின் புகாரால் அதிர்ச்சி – BBC News தமிழ்

by ilankai
0 comments

சிறுநீரகத்துக்கு எட்டு லட்சம், கல்லீரலுக்கு நான்கரை லட்சம் ! : நாமக்கல் பெண்ணுக்கு சென்னையில் நேர்ந்த துயரம்

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சிறுநீரக விற்பனை புகாரில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடும் நடைபெற்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தரகர்கள் மூலம் ஒரு கட்டத்தில் தனது கல்லீரலை இழக்க நேரிட்ட பெண் இதனை பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளார்.

banner

இதில் சம்பந்தப்பட்ட 2 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாக நாமக்கல் மாவட்ட சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வறுமையினால் கடனைத் தீர்ப்பதற்காக சிறுநீரகத்தை விற்பனை செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்பகுதியில் 5 பேரிடம் முறைகேடாக சிறுநீரகம் எடுக்கப்பட்டதாக சமீபத்தில் எழுந்த புகாரின்பேரில், அரசு சார்பில் சிறப்புக்குழு ஆய்வு செய்து, திருச்சி மற்றும் பெரம்பலுார் நகரங்களில் உள்ள 2 மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சில பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது இதே பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர், தன்னிடம் விலை பேசி தன்னுடைய கல்லீரல் எடுக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட பெண், இதை பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார் . அந்தப் பெண் பேசிய காணொளியும் சில ஊடகங்களில் வெளியானது.

இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும், போலீசில் புகார் தரப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் சிறுநீரகம் 8 லட்ச ரூபாய்; கல்லீரலுக்கு நாலரை லட்ச ரூபாய்!

இதில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பிபிசி தமிழ் பேசியது. அந்த பெண்ணின் தனியுரிமை கருதி அவரது அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளிபாளையம் பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

தனது கணவர் தன்னை விட்டுப் பிரிந்து வேறு ஒரு பெண்ணை மணந்து விட்ட காரணத்தால் தன் மகன் மற்றும் மகளுடன் அவர் இங்கு வந்து குடியேறியதாகத் தெரிவித்தார். அதற்குப் பின் ஏற்பட்ட கடன் பிரச்னையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் வேறு வழியின்றி ஒரு பெண் முகவரிடம் சிக்கி கல்லீரலைக் கொடுத்ததாகவும் அவர் விளக்கினார்.

”வீட்டு வாடகை, பிள்ளைகளை வளர்ப்பதற்கு வெவ்வேறு இடங்களில் கடன் வாங்கினேன். வட்டி அதிகமாகி மூன்றரை லட்சம் கடனாகிவிட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டில் எனக்குக் கடன் கொடுத்த ஒருவர் பள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்தில் வைத்து என்னை கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கலா என்ற ஒரு பெண் என்னிடம் அறிமுகமானார். உன் கடனைத் தீர்க்க ஒரு ஐடியா தருகிறேன் என்று அவர்தான் சிறுநீரகத்தைக் கொடுத்தால் 8 லட்ச ரூபாய் வாங்கித்தருவதாகக் கூறினார்.” என்றார் அப்பெண்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அதைப்பற்றி மேலும் விளக்கிய அவர், ”ஈரோடு, சேலம் என சில இடங்களில் எனக்கு மருத்துவப்பரிசோதனை செய்தார்கள். அதன்பின் சென்னைக்கு என்னை அந்தப் பெண் அழைத்துச் சென்றார். அங்கே எனது சிறுநீரகத்தை எடுப்பதாகத்தான் சொல்லியிருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் என் சிறுநீரகத்தை பெற்றுக்கொள்வதாகக் கூறியவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அதனால் சிறுநீரகத்தை எடுக்கவில்லை என்று கூறிவிட்டனர். அதனால் நான் நிம்மதியடைந்தேன்.” என்றார்.

அதன்பின்பு, வீட்டிற்குச் செல்லலாம் என்று இவர் புறப்பட நினைத்துள்ளார். அப்போது இதுவரை மருத்துவ பரிசோதனைக்கு செலவிட்ட 50 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டுப் போகச்சொன்னதாக தன்னை அங்கிருந்தவர்கள் மிரட்டியதாகக் கூறும் அந்த பெண், அதனால் சிறுநீரகத்துக்குப் பதிலாக கல்லீரலில் ஒரு பகுதியை மட்டும் எடுப்பதாகவும் அது மீண்டும் வளர்ந்து விடும் என்றும் கூறினர் என்கிறார்.

”அங்கே என் பெயரை மாற்றி சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார்கள். அந்த மருத்துவமனையில் 3 நாட்கள் இருந்தேன். நான்காம் நாள் எனக்கு ஆபரேஷன் நடந்தது. ஆனால் அப்போதே அந்தப் பெண்ணைக் காணவில்லை. அதன்பின் அந்தப் பெண்ணைப் பார்க்கவே இல்லை. போனிலும் பேசமுடியவில்லை. அங்கே என்னிடம் எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. எனக்குப் பேசியதைப் போல 8 லட்ச ரூபாய் கொடுக்காமல் நாலரை லட்சம்தான் கொடுத்தார்கள்.” என்று மேலும் விளக்கினார் அந்தப் பெண்.

பட மூலாதாரம், Getty Images

நாமக்கல்லில் லட்சங்களில் விற்கப்படும் சிறுநீரகம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், ஏழை மக்களின் வறுமை சூழ்நிலையைப் பயன்படுத்தி, அவர்கள் சிறுநீரகத்தை முறைகேடாக எடுப்பதாக நீண்ட காலமாக புகார்கள் உள்ளன.

சமீபத்தில் இப்பகுதியில் சிறுநீரகத்தை விற்பனை செய்த ஒருவர், தனக்கு 10 லட்ச ரூபாய் கொடுப்பதாகக் கூறி, 5 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்ததாகப் பேசிய ஆடியோ வெளியானது.

அதைத்தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் பலரிடம் சிறுநீரகம் முறைகேடாக எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதால், அதுபற்றி விசாரிப்பதற்காக தமிழக அரசால் சிறப்புக்குழு உருவாக்கப்பட்டது.

இரண்டு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து

தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழு கள விசாரணை நடத்தி, இரண்டு கட்டமாக அறிக்கை அளித்தது. அப்பகுதியில் 5 பேரிடம் சிறுநீரகம் எடுக்கப்பட்டதாகவும், அவர்கள் ஒப்புதலின்பேரில் தரப்பட்டதால் இது சிறுநீரக திருட்டு அல்ல, சிறுநீரக முறைகேடு என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

குழுவின் இறுதி அறிக்கையின்படி, திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆகிய 2 மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தரகர் இருவர் மீது போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது மட்டுமின்றி, அந்தக் குழு வேறு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளதாக அரசு தெரிவித்தது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில் ”மனித உறுப்பு மாற்றுச்சட்டம் 1994ன் படி. உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேடு கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் உள்ள 4 அங்கீகாரக்குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரத்துடன் புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும் ஆணை வெளியிடப்படும்.” என்றும் கூறப்பட்டிருந்தது.

படக்குறிப்பு, கல்லீரல் முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கருமுட்டையும் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு

இந்த பகுதிகளில் சிறுநீரக விற்பனை முறைகேடு மட்டுமின்றி, கல்லீரல், கருமுட்டை போன்றவையும் முறைகேடாக எடுக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக இந்த கட்சியின் சார்பில் பள்ளிபாளையத்தில் சமீபத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

பிபிசி தமிழிடம் பேசிய சிஐடியு மாவட்டச்செயலாளர் அசோகன், ”நாமக்கல் மாவட்டத்தில் நீண்ட காலமாக சிறுநீரக விற்பனை முறைகேடு நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கல்லீரல், கருமுட்டை விற்பனையும் அதிகளவில் நடக்கிறது. இதைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

கல்லீரல் முறைகேட்டில் சிக்கிய பெண்ணுக்கு என்ன ஆனது?

கல்லீரல் முறைகேட்டில் சிக்கிய பெண்ணுக்கு கல்லீரல் நீக்கப்பட்ட ஒரு வாரத்தில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2022 நவம்பர் 16 ஆம் தேதியன்று சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவருடைய கல்லீரல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான மருத்துவக் குறிப்பையும் அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.

ஆனால், கல்லீரல் கொடுத்த மருத்துவமனையின் ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறினார். அந்த ஒரே ஒரு முறை மட்டுமே சென்னை சென்றிருப்பதாலும், ஆட்டோவில் தன்னை பல குறுகலான வீதிகள் வழியாக அழைத்துச் சென்றதாலும் அந்த மருத்துவமனை எங்கு இருந்தது என்பதும் நினைவில் இல்லை என்றும் கூறிய அவர், அந்த மருத்துவமனையின் பெயர் 3 ஆங்கில எழுத்துகளில் இருந்தது என்கிறார்.

”அந்தத் தொகையை வாங்கிக் கடனைக் கட்டிவிட்டேன். ஆனால் இப்போது என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. சாப்பிடவே முடியவில்லை. சாப்பிட்டாலும் ஜீரணம் ஆவதேயில்லை. கடுமையான வேதனையை அனுபவிக்கிறேன். அதனால் என் மகன் ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறான். என் மகள் எட்டாம் வகுப்புப் படித்து விட்டு, என்னைப் பார்த்துக் கொள்வதற்காக என்னுடன் வீட்டில் இருக்கிறாள்.” என்று அந்தப்பெண் கண்ணீருடன் வேதனையைப் பகிர்ந்தார்.

சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணைக் குழு

இந்த பெண் தெரிவித்த தகவல், ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் ராஜ்மோகனிடம் கேட்டபோது, ”எங்களுக்கு இதுபற்றி எந்தப் புகாரும் வரவில்லை. ஊடகத்தில் பார்த்து விஷயம் தெரிந்ததும், துறை இயக்குநருக்கு முறைப்படி தகவல் தெரிவித்து விட்டோம்.” என்றார்.

சம்பந்தப்பட்ட பெண் பிபிசி தமிழிடம், ”செல்போனில் சிலர் என்னை தொடர்பு கொண்டு அதிகாரிகள் என்று கூறி சிலர் பேசினர். சில விபரங்களை என்னிடம் கேட்டனர். நான் இப்போது படுகின்ற வேதனையை வேறு எந்தப் பெண்ணும் அனுபவிக்கக்கூடாது என்றுதான் இப்போது இதை வெளிப்படையாகக் கூறுகிறேன். அரசு எடுக்கும் நடவடிக்கை எனக்கு ஏதாவது ஒரு நிவாரணத்தையும் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வையும் ஏற்படுத்தினால் நல்லது.” என்றார்.

அந்தப் பெண் கூறியுள்ள தகவல் பற்றியும், அமைச்சர் கூறியுள்ள விசாரணை பற்றியும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா தேவியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”இந்த கல்லீரல் முறைகேடு புகார் பற்றி சார்பு ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவை நியமித்து விசாரணை நடத்துகிறோம். விசாரணையின் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like