Thursday, August 21, 2025
Home பிபிசிதமிழிலிருந்துகாணொளி: 3வது பெரிய அணு ஆயுத நாடாக இருந்த யுக்ரேனுக்கு ஏன் இந்த நிலை? – BBC News தமிழ்

காணொளி: 3வது பெரிய அணு ஆயுத நாடாக இருந்த யுக்ரேனுக்கு ஏன் இந்த நிலை? – BBC News தமிழ்

by ilankai
0 comments

காணொளிக் குறிப்பு, 3வது பெரிய அணு ஆயுத நாடாக இருந்த யுக்ரேனுக்கு ஏன் இந்த நிலை?காணொளி: 3வது பெரிய அணு ஆயுத நாடாக இருந்த யுக்ரேனுக்கு ஏன் இந்த நிலை?

20 ஆகஸ்ட் 2025

ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் மூன்றாவது பெரிய அணு ஆயுத களஞ்சியத்தை கொண்ட நாடாக யுக்ரேன் இருந்தது. பின்னர் யுக்ரேன் அதனைக் கைவிட்டது. ஆனால் ஏன்?

1991ல் சோவியத் யூனியன் சிதைந்தபோது, நான்கு முன்னாள் சோவியத் குடியரசுகள் அணு ஆயுதங்களோடு இருந்தன.

banner

சோவியத் அணு ஆயுத களஞ்சியமும், முழு அமைப்பும் மிக ரகசியமாகவும், மையப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்த நாடுகள் தங்கள் நிலப்பரப்பில் என்னென்ன ஆயுதங்கள் நிலை நிறுத்தப்பட்டிருந்தன என்பதை அறிந்துகொள்ள சில செயல்முறைகள் இருந்தன.

பெரிய இலக்குகளைத் தாக்குவதற்கு Strategic nuclear weapons சுருக்கமாக SNW பயன்படுத்தப்படுகின்றன. இவையல்லாத குறுகிய இலக்குகளைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்கள் Tactical nuclear Weapons எனப்படுகிறது.

சோவியத் ஒன்றியம் பிரிந்தபோது, யுக்ரேன் இத்தகைய ஆயுதங்களைப் பெருமளவில் பெற்றிருந்தது. இது மட்டுமின்றி சுமார் 2,000 strategic அணு ஆயுதங்கள், கிட்டத்தட்ட 200 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் சில டஜன் strategic குண்டுவீச்சு விமானங்களையும் யுக்ரேன் வைத்திருந்தது.

இவை அனைத்தும் பனிப்போரின் போது மேற்கத்திய நாடுகளை – குறிப்பாக அமெரிக்காவை – குறிவைத்து அமைக்கப்பட்ட சோவியத் அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஓர் அங்கமாக இருந்தன.

இதன் உருவாக்கத்தில் யுக்ரேன் உதவியிருந்தது. எனவே, தற்போது அவற்றை என்ன செய்வது என்று முடிவு எடுக்க வேண்டியிருந்தது. அதில் சில சிக்கல்களும் இருந்தன.

அணு ஆயுதங்களின் கட்டுப்பாடு பெரும்பாலும் ரஷ்யாவிடம் இருந்ததால், யுக்ரேன் அணு ஆயுதங்களை வைத்திருப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும். மேலும், இந்த ஆயுதங்களைப் பரமாரிப்பதும் செலவுமிக்கது.

1990-களில் யுக்ரேன் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதேசமயம் உலகின் மிக மோசமான அணு விபத்தான செர்னொபிலின் (Chornobyl) தாக்கமும் மக்கள் மனதில் நீங்காமல் இருந்தது.

அணுசக்தியுடன் தொடர்புடைய எதுவும் மக்களிடையே பிரபலமடையவில்லை. இதில் மிகப்பெரிய சிக்கலாக அரசியல் தான் இருந்தது.

அமெரிக்காவும் ரஷ்யாவும், யுக்ரேன் தனது அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று மிகுந்த அழுத்தம் கொடுத்தன.

இருநாடுகளுக்கும் அதற்கு தனித்தனி காரணங்கள் இருந்தன. பிராந்திய மோதல்கள் மற்றும் அணு ஆயுதங்கள் தவறான கைகளில் போய்ச் சேரக்கூடும் என்று அமெரிக்கா கவலைப்பட்டது. பொதுவாக, அமெரிக்கா எந்த புதிய நாடும் அணு சக்தியாக மாறுவதை விரும்பவில்லை. இது ரஷ்யாவின் அரசியல் நோக்கங்களுடனும் பொருந்தியது.

ரஷ்யா, சோவியத் ஒன்றியத்தின் அணு வாரிசு என்ற நிலையை தனியே காக்க தீவிரமாக முயன்றது. இதில், ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒரே பக்கத்தில் இருந்தன.

இந்த அழுத்தங்களால், யுக்ரேன் தனது அனைத்து அணு ஆயுதங்களையும் கைவிட ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, அணு மின் நிலையங்களுக்கு எரிபொருள், பொருளாதார ஆதரவு மற்றும் பாதுகாப்பு உறுதிமொழிகளை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்யாவிடமிருந்து யுக்ரேன் பெற்றது.

1994 டிசம்பர் 5ஆம் தேதி, யுக்ரேன் புடாபெஸ்ட் (Budapest) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதில், யுக்ரேனின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்படும் என்றும், இதில் கையெழுத்திட்ட நாடுகள் யுக்ரேனுக்கு எதிராக தங்கள் பலத்தைப் பயன்படுத்த மாட்டார்கள் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட உறுதியின் அடிப்படையில் யுக்ரேன் அணு ஆயுதக் குழுவிலிருந்து வெளியேறியது. தனது அணு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு மாற்றியது. ஏவுகணைகள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களை அகற்றியது. மேலும் ஏவுதளங்களை அழித்தது.

ஆனால், 20 ஆண்டுகள் கழித்து, ரஷ்யா க்ரைமியாவை (Crimea) சட்டவிரோதமாக இணைத்துக்கொண்டது. மேலும் யுக்ரேனின் கிழக்குப் பகுதியில் ஒரு மறைமுக போரைத் தொடங்கியது. ரஷ்யா, புடாபெஸ்ட் (Budapest) ஒப்பந்தத்தை மீறவில்லை என வலியுறுத்தியது.

மேற்கத்திய நாடுகள் இந்த ஆவணத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது புறக்கணிக்கப்பட்டது.

2022-இல், ரஷ்ய ராணுவம் யுக்ரேனில் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. அதே நேரத்தில், அதிபர் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக அச்சுறுத்தினார். தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால் தான் இந்த நடவடிக்கை தூண்டப்பட்டதாக ரஷ்யா கூறியது.

அப்படியென்றால் ஏன் யுக்ரேன் இந்த ஒப்பந்தத்தால் பாதுகாக்கப்படவில்லை?

புடாபெஸ்ட் ஒப்பந்தம் செயல்படாததற்கான ஒரு காரணம், அதில் உள்ள குழப்பமான விதிமுறைகள். அந்த ஆவணத்தில் ‘பாதுகாப்பு உத்தரவாதம்’ என்பது உண்மையில் ‘உத்தரவாதம்’தானா அல்லது ‘உறுதிமொழிகளா’ என்ற குழப்பம் இருந்தது . இதனால், அது சட்டப்பூர்வமாகக் கட்டாயம் பின்பற்ற வேண்டியதல்ல எனக் கருதப்பட்டது.

உக்ரைனிய மற்றும் ரஷ்ய மொழிபெயர்ப்புகளில் ‘Security guarantees’ அதாவது ‘பாதுகாப்பு உத்தரவாதம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஆங்கிலத்தில் பரந்த அர்த்தம் கொண்ட ‘security assurances’ அதாவது ‘பாதுகாப்பு உறுதிமொழிகள்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

அதனால் தான் இன்று பெரும்பாலான உக்ரைனியர்கள் நேட்டோவில் சேர வேண்டும் என்று விரும்புகிறார்கள். நேட்டோ தங்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், யுக்ரேனை ஏற்க நேட்டோ தயாராக உள்ளதா என்பதுதான் கேள்விதான்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like