Wednesday, August 20, 2025
Home பிபிசிதமிழிலிருந்துஆசியக் கோப்பை: இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் மறுக்கப்பட்டது ஏன்? – BBC News தமிழ்

ஆசியக் கோப்பை: இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் மறுக்கப்பட்டது ஏன்? – BBC News தமிழ்

by ilankai
0 comments

“இன்னும் என்ன நிரூபிக்க வேண்டும்” : இந்திய அணியில் புறக்கணிக்கப்படுகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர்?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று ( ஆகஸ்ட்19) அறிவிக்கப்பட்டது. இதில் டி20 அணிக்குள் சுப்மன் கில் மீண்டும் துணைக் கேப்டன் அந்தஸ்துடன் வந்துள்ளார்.

banner

இதற்கு முன் துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேலிடமிருந்து பதவி பறிக்கப்பட்டு, கில்லிடம் தரப்பட்டுள்ளது. அதிரடி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், நடுவரிசைக்கு பலம் சேர்க்கும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இதில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் இடம் பெற்றநிலையில் திறமையான வீரரான ஸ்ரேயாஸுக்கு அதில்கூட இடமில்லை.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியையும், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பெற்றுக் கொடுத்து சிறந்த கேப்டனாக வலம்வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து புறக்கணிப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுபவர்களின் பட்டியலை மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர். யார் பலிகடா?

தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் ஆசியக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இளம் வீரர்கள், அனுபவம் மிகுந்தவீரர்கள், திறமையான சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள் இருக்கும் அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு, துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேல் நீக்கப்பட்டு, சுப்மன் கில்லிடம் அந்தப் பதவி தரப்பட்டுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

15 பேர் கொண்ட இந்திய அணியில் தொடக்க வீரர்களுக்கு அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்ஸன் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் கில் இடம் பெற்றுள்ளதால், டாப் ஆர்டரில் அபிஷேக் அல்லது சாம்ஸன் இருவரில் யார் பலிகடாவாகப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த அக்ஸர் படேல் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு,சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் பற்றிய கேள்விக்கு பதில் என்ன?

இந்திய அணியின் தலைமைத் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன் என்று கேட்டபோது, அதற்கு அகர்கர் ” ஸ்ரேயாஸ் ஐயர் வாய்ப்பு அளிக்கப்படாதது வருத்தம்தான், ஆனால், அவரை சேர்த்தால் யாரை அணியில் இருந்து நீக்குவீர்கள்? அவர் மீதும் தவறு இல்லை, எங்கள் மீதும் தவறு இல்லை. இந்த நேரத்தில் நாங்கள் 15 வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம், ஆதலால் வாய்ப்புக்காக ஸ்ரேயாஸ் காத்திருக்கவேண்டியதுதான்” எனத் தெரிவித்தார்.

அபிஷேக், ஜெய்ஸ்வால் குறித்து அகர்கர் பேசுகையில் ” ஜெய்ஸ்வால் இடம் பெறாதது துரதிர்ஷ்டம்தான். ஆனால், அபிஷேக் கடந்த ஓர் ஆண்டாக சிறப்பாக விளையாடி வருகிறார், சிறிது பந்துவீசும் திறமையுடையவர். அந்த வாய்ப்பு இருப்பதால், 6வது பந்துவீச்சாளராகவும் பயன்படுத்தலாம் என்பதால் அவர் இடம் பெற்றார்” எனத் தெரிவித்தார்.

கில் இடம் பெற்றது குறித்து கேப்டன் சூர்யகுமார் கூறுகையில் ” டி20 உலகக் கோப்பைக்குப்பின் கில்லுக்கு டி20 அணியில் பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. இலங்கைக்கு எதிரான தொடரில்தான் கடைசியாக கில் துணைக் கேப்டன் பொறுப்பில் என்னுடன் ஆடினார்.

அதன்பின் கில் டெஸ்ட் தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் பரபரப்பாக செயல்பட்டால் அவரின் பெயரை பரிசீலிக்க முடியவில்லை. இப்போது அணிக்குள் கில் மீண்டும் வந்தது மகிழ்ச்சிதான்” எனத் தெரிவித்தார்.

ஸ்ரேயாஸ் குறித்து அஸ்வினின் கணிப்பு

கடந்த சில நாட்களக்கு முன் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் தளத்தில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து ஊகப் பட்டியலை வெளியிட்டிருந்தார்.

அதில் ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான வீரராக இருந்தபோதும், ஷிவம் துபே இடம் பெற்றால் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்புக் கிடைப்பது கடினம் என்று பேசியிருந்தார். அவரின் கணிப்பிலிருந்து சற்றும் மாறாமல் ஃபார்மில் இல்லாத துபே இடம்பெற்றார், வெற்றிக் கேப்டனாக ரசிகர்களால் புகழப்படும் ஸ்ரேயாஸ் கண்டு கொள்ளப்படவில்லை.

ஸ்ரேயாஸ் புறக்கணிக்கப்படக்கூடியவரா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் இடம் பெறவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான பேட்டர், பீல்டர், கேப்டனாக தன்னை ஐபிஎல் தொடர்களிலும், இந்திய அணியிலும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நிரூபித்த போதிலும் அவரை மீதான தேர்வுக்குழுவினர் ஓரவஞ்சனை தொடர்கிறது. கடந்த இரு ஐபிஎல் சீசன்களிலும் இரு அணிகளுக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ், இருமுறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற வெற்றிகரமான கேப்டன்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பல ஆட்டங்களில் நடுவரிசையில் சிறப்பான ஆட்டத்தை ஸ்ரேயாஸ் வழங்கியபோதிலும் “அன்சங் ஹீரோவாகவே” வலம்வந்தார். ஸ்ரேயாஸ் இன்னும் எதையெல்லாம் நிரூபித்தால் இந்திய அணிக்குள் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரியவில்லை. டி20, ஒருநாள் போட்டிகளில் 3வது வீரராக சிறப்பாக ஆடக்கூடியவர் என்று ஸ்ரேயாஸ் பலமுறை நிரூபித்த போதிலும் அவருக்கான உரிமை, இடம் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.

2025 ஐபிஎல் சீசனில் ஸ்ரேயாஸ் 17போட்டிகளில் 604 ரன்கள் குவித்து 50 ரன்கள் சராசரியும், 175 ஸ்ட்ரேக் ரேட்டும் வைத்திருந்தார், இதில் 6 அரைசதங்களும் அடங்கும். கடந்த 2024 சீசனில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாகஇருந்து 350க்கும் மேல் ரன்களைக் குவித்தார் ஸ்ரேயாஸ்.

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றபின் ஸ்ரேயாஸ் 26 டி20 போட்டிகளில் விளையாடி 949 ரன்கள் குவித்து 179 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் இதில் ஒரு சதம், 7 அரைசதங்களும் அடங்கும். ஸ்ரேயாஸ் தலைமையில் மும்பை அணி சயத் முஸ்தாக் அலி கோப்பையையும் வென்றது. டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் தனது பேட்டிங் திறமையை நிரூபித்த போதிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இந்திய அணியில் கடைசியாக 2023, டிசம்பர் 3ம் தேதி பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஆடினார், 37 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த ஸ்ரேயாஸ் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அதன்பின் ஏறக்குறைய 2 ஆண்டுகளாகியும் அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

சமூக வலைத்தளத்தில் கொந்தளிப்பு

பட மூலாதாரம், Getty Images

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது எக்ஸ் தளத்தில் ” கடந்த ஆண்டில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அளவுக்கு எந்த வீரரும் சிறப்பாக பேட் செய்யவில்லை. ஆனாலும் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கான இடம் இன்னும் பெறவில்லை. ஸ்ரேயாஸை யாருக்கோ பிடிக்கவில்லை என்பது மட்டும தெரிகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் ” ஸ்ரேயாஸ் டி20 அணியில் இருக்க வேண்டும் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை, அது மட்டுமல்லாமல் கேப்டனுக்குரிய தகுதிப்பட்டியலிலும் ஸ்ரேயாஸ் இருப்பவர். இந்த நேரத்தில் ஸ்ரேயாஸுக்கு பொறுமைதான் முக்கியமான கருவியாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

” ஸ்ரேயாஸை ஆசியக் கோப்பை தொடருக்கு இந்திய அணியில் தேர்வு செய்யாத பிசிசிஐ வெட்கப்பட வேண்டும்” என்று எக்ஸ் தளத்தில் இர்பான் என்பவர் தெரிவித்திருந்தார். இதுபோன்று ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாததற்கு தங்கள் அதிருப்தியையும், ஆதங்கத்தையும் சமூகவலைத்தளத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.

ஃபார்மில் இல்லாத வீரர்கள்

ஆனால், கடந்த ஐபிஎல் சீசனில் பேட்டிங் திறமையை வெளிப்படுத்த திணறிய ஆல்ரவுண்டர் அந்தஸ்து பெற்ற ஷிவம் துபேவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

கடந்த 2 ஐபிஎல் சீசன்களாக 300 ரன்களைக் கூட தாண்டாத ரிங்கு சிங், கடந்த ஐபிஎல் சீசனில் 350 ரன்களை எட்டாத திலக் வர்மாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை எந்த வகையில் நியாயப்படுத்துவது என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளிக்கிறார்கள்.

இந்திய அணிக்குள் சுப்மன் கில் மீண்டும் கொண்டு வரப்பட அவரின் பேட்டிங் திறமை எந்த விதத்தில் காரணமோ, அதில் சற்றும் தகுதிக் குறையாத ஸ்ரேயாஸ் பேட்டிங் இருந்தும் அவருக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுவது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

வழக்கமான வீரர்கள்

நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்டிங்கிற்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர் உள்ளனர். இதில் கடந்த ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங் ஃபார்மிலேயே இல்லை, ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் சாம்ஸன், ஜிதேஷ் சர்மா என இரு விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கீழ்வரிசையிலும், நடுவரிசையிலும் ஜிதேஷ் சர்மா சிறப்பாக ஆடக் கூடியவர், நல்ல ஃபினிஷிங் தரக்கூடியவர், சாம்ஸன் தொடக்க வீரராகவும், ஒன்டவுனிலும் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர்.

இதில் டாப்ஆர்டரில் அபிஷேக், கில் களமிறங்கினால், சாம்ஸன், ஜிதேஷ் இருவரில் யாரேனும் ஒருவர் வெளியே அமரவைக்கப்படுவார்கள். இதில் யாருக்கு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை அபிஷேக் சர்மா அமரவைக்கப்பட்டால் சாம்ஸன், கில் கூட்டணி டாப்ஆர்டராக களமிறங்கலாம். ஜிதேஷ் அமரவைக்கப்பட்டு கூடுதலாக பேட்டர் அல்லது பந்துவீச்சாளர் வரலாம்.

இரு தமிழக வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர், சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் ஆகிய 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இதில் ஆல்ரவுண்டர்களாகவும், நடுவரிசை பேட்டிங்கை ஸ்திரப்படுத்த ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேலுக்கு வாய்ப்புக் கிடைத்தால், வேகப்பந்துவீச்சில் ராணா அமரவைக்கப்பட்டு அர்ஷ்தீப், பும்ரா மட்டுமே இடம் பெறக்கூடும். சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் வருண், அக்ஸர், குல்தீப் இடம் பெறலாம்.

ரிசர்வ் வீரர்களாக 5 பேர் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை, ஆனால், ரிசர்வ் வீரர்கள் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர் தவிர பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சுப்மன் கில் வருகை ஏன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். சுப்மன் கில் கடைசியாக 2024 ஜூலையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார் அதன்பின் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மட்டும் கில்லுக்கு இந்திய அணி நிர்வாகம் முக்கியத்துவம் அளித்தது.

இதனால், இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டி20 தொடரில்கூட துணைக் கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், சாம்பியன்ஸ் டிராஃபி, இங்கிலாந்துக்கு எதிரான சச்சின்-ஆன்டர்சன் டெஸ்ட் தொடரை சமன் செய்தது போன்றவற்றில் கில்லின் அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டதையடுத்து, அவருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த ஐபிஎல் சீசனில்கூட கில் 650 ரன்கள் குவித்து 155 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி விவரம்

சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சுப்மன் கில்(துணைக் கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, ரிங்கு சிங், சஞ்சு சாம்ஸன்

ரிசர்வ் வீரர்கள்( பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்)

17-வது ஆசியக் கோப்பை

17-வது ஆசியக் கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபு தாபி நகரங்களில் செப்டம்பர் 9 முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலில் முழு உறுப்பு நாடுகளான நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை தேர்வு பெற்றநிலையில், இந்த முறை 2024 ஆசிய ப்ரீமியர் கோப்பையில் முதல் 3 இடங்களைப் பிடித்த ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், ஓமன் அணிகளும் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த 8 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்,ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களின் குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும், முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும். இந்த சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இந்த சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தியா-பாக். போட்டி

இந்திய அணி செப்டம்பர் 10ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியையும், 14ம் தேதி துபாயில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்கிறது. 19ம் தேதி நடக்கும் கடைசி லீக்கில் ஓமன் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like