ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா? – ‘தி ஹண்ட்’ தொடரால் எழும் கேள்விகள்
படக்குறிப்பு, ராஜீவ் காந்தி, சிவராசன் (வலது)எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்21 நிமிடங்களுக்கு முன்னர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தீவிரமாகத் தேடப்பட்டுவந்த சிவராசன், சுபா உள்ளிட்டோர் 1991ஆம் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி பெங்களூருக்கு அருகில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தத் தேடுதல் வேட்டையின்போது என்னவெல்லாம் நடந்தது? அவர்கள் வேறு கொலைகளைத் திட்டமிட்டிருந்தனரா?
கடந்த 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்த முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளருமான ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இவரது கொலை குறித்து விசாரிப்பதற்காக டி.ஆர். கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட சி.பி.ஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது தேடுதல் வேட்டையில் கொலையில் தொடர்புடைய ஒவ்வொருவராகக் கைது செய்ய ஆரம்பித்தது.
இந்தக் கொலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியதாகக் கருதப்பட்ட சிவராசனை சி.பி.ஐ. தீவிரமாகத் தேடிவந்தது. ஆனால், அந்தத் தேடுதல் வேட்டையில் பலன் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சிவராசனை சி.பி.ஐ. நெருங்கியபோது, அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். முடிவில் அவர்கள் சடலமாகவே மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை பின்னணியாக வைத்து சமீபத்தில் The Hunt: The Rajiv Gandhi Assassination Case என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்று வெளியானது.
அந்தத் தொடரில், ராஜீவ் காந்தி கொல்லப்படுவதிலிருந்து சிவராசன் மரணம் வரையிலான பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்தத் தொடர் வெளியான பிறகு, இதில் இடம்பெற்ற சில அம்சங்கள் குறித்து சர்ச்சை எழுந்தது. குறிப்பாக, ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு சிவராசன் தேடப்பட்டுவந்தபோது, அவர் வேறு சில தலைவர்களை, குறிப்பாக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக அந்தத் தொடரில் காட்டப்படுவது சலசலப்பை ஏற்படுத்தியது.
பட மூலாதாரம், Sony Liv
படக்குறிப்பு, தி ஹண்ட் தொடரில் இடம்பெற்ற சிவராசன் கதாபாத்திரம்.அந்தத் தருணத்தில் உண்மையில் என்ன நடந்தது?
1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்காக வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒன்பது காவல்துறையினர் உட்பட மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு அடுத்த நாளே, மத்திய ரிசர்வ் காவல் படையின் தென் பிராந்திய இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த டி.ஆர். கார்த்திகேயன் இந்த விசாரணைக்குத் தலைமை தாங்குவார் என முடிவுசெய்யப்பட்டது. அவர் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் இது தொடர்பான விசாரணைக்காக சி.பி.ஐயின் சென்னைக் கிளை, தமிழ்நாடு காவல்துறை, சிஆர்பிஎஃப், மத்திய – மாநில அரசுகளின் சில நிறுவனங்களில் இருந்து அதிகாரிகளைத் தேர்வுசெய்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே அங்கு வந்த காவல்துறை ஐ.ஜி. ஆர்.கே. ராகவன் அங்கிருந்த தடயங்களை சேகரித்தார். அதில், இறந்துபோன புகைப்படக்காரர் ஹரிபாபுவின் உடல் மீதிருந்த கேமராவும் இருந்தது. அதனை காவல்துறை போட்டோகிராபர் ஒருவரிடம் கொடுத்து, அதனை டெவலப் செய்து கொண்டுவரச் சொன்னார். ஆனால், கலர் பிலிம் என்பதால் உள்ளூரில் அதைச் செய்ய முடியவில்லை. இதற்குப் பிறகு, சட்டம் – ஒழுங்கு பிரசனை ஏற்பட்டதால் மே 23ஆம் தேதியன்று முன்னிரவில்தான் அதிலிருந்த புகைப்படங்கள் ப்ரிண்ட் செய்யப்பட்டன.
மொத்தம் பத்து புகைப்படங்கள். அதில் ஒன்றில் கையில் சந்தன மாலையுடன் நின்று கொண்டிருந்த சல்வார் கம்மிஸ் அணிந்த பெண், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லதா கண்ணன், அவர் மகள் கோகிலா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்குச் சற்றுத் தள்ளி குர்தா – பைஜாமா அணிந்த ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
பட மூலாதாரம், Sony Liv
படக்குறிப்பு, மனித வெடி குண்டு பெண்ணின் பெயர் தணு.சிறப்புப் புலனாய்வுக் குழு அந்த மனிதர் யார் எனத் தேட ஆரம்பித்தது. தொடர்ந்து நடந்த விசாரணை, “புகைப்படக் கலைஞர் ஹரிபாபு, இறந்த மனித வெடிகுண்டு, என்ன ஆனார் எனத் தெரியாத குர்தா பைஜாமா மனிதர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தியது” என்கிறது ‘ராஜீவ் காந்தி படுகொலை – ஒரு புலனாய்வு’ என்ற புத்தகம்.
இந்த நூல், சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த டி.ஆர். கார்த்திகேயனாலும் மற்றொரு உயரதிகாரியான ராதா வினோத் ராஜுவாலும் இணைந்து எழுதப்பட்டது.
இதற்குப் பிறகு சிறப்புப் புலனாய்வுக் குழு, சந்தேகத்திற்குரிய கொலையாளி, குர்தா – பைஜாமா நபர் ஆகியோரின் படங்களை வெளியிட்டு, அவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி கூறியது.
இதற்கிடையில் தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறை ரூசோ என்ற சங்கரைக் கைதுசெய்தது. அவரிடம் நளினி, தாஸ் ஆகிய இருவரின் தொலைபேசி எண்கள் கிடைத்தன. அவர் அளித்த கூடுதல் தகவலின் பேரில், திருத்துறைப்பூண்டியில் ஒரு கடத்தல் புள்ளி கைதுசெய்யப்பட்டார். அவரை விசாரித்தபோதுதான், குர்தா – பைஜாமா நபரின் பெயர் சிவராசன் என்பதும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதற்கிடையில், இது குறித்து விசாரிப்பதற்காக கொழும்பு சென்றிருந்த குழு ஒன்று சென்னைக்குத் திரும்பியது. அந்தக் குழுவினரும் குர்தா – பைஜாமா நபர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவராஜா மாஸ்டர்தான் எனக் குறிப்பிட்டனர்.
இதற்குப் பிறகு, நளினியின் சகோதரர் பாக்கியநாதனை விசாரித்தபோது அவரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
மேலும், மனித வெடி குண்டு பெண்ணின் பெயர் தணு, அவரது தோழியின் பெயர் சுபா, புலிகள் இயக்கத்தில் சிவராசனின் பெயர் ரகு ஆகிய தகவல்களும் கிடைத்தன. இதற்கிடையில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், பேரறிவாளன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
ஜூலை மாத இறுதியில் கோவையில் பதுங்கியிருந்த டிக்ஸன், குணா ஆகிய புலிகளைப் பிடிக்க முயற்சி செய்தபோது அவர்கள் இருவரும் சயனைட் அருந்தி உயிரிழந்தனர். பெங்களூரில் நடந்த தேடுதல் வேட்டையிலும் இருவர் உயிரிழந்தனர்.
படக்குறிப்பு, முருகனுடன் நளினிபெங்களூருவில் சுற்றி வளைக்கப்பட்ட குழுவினர்
இதற்கிடையில் பெங்களூருக்குத் தப்பிச் சென்ற சிவராசனும் சுபாவும் லேத் ஒன்றை நடத்திவந்த ரங்கநாதன் என்பவரது வீட்டின் ஒரு அறையில் தங்கினர்.
பிறகு பெங்களூரின் கோனனகுண்டேவில் இருந்த இன்னொரு வீட்டிற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று சிவராசனும் அவரது குழுவினரும் இடம்மாறினர். தேடுதல் வேட்டைத் தீவிரமடைந்தபோது மற்றொரு சம்பவமும் நடந்தது. கர்நாடக மாநிலம் மூதாடி, பிரூடா ஆகிய இடங்களில் புலிகள் தங்கியிருந்த இடத்தை காவல்துறை சுற்றிவளைக்க அந்த இரு வீடுகளில் தங்கியிருந்த 17 பேர் சயனைடு அருந்தி உயிரிழந்தனர்.
இந்தச் செய்தி சிவராசன் குழுவினருக்குத் தெரிந்ததும், ரங்கநாதனின் மனைவி மிருதுளா பதற்றமடைந்தார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட மிருதுளா சிகிச்சைக்காக எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறி தன் சகோதரர் வீட்டில் சென்று தங்கினார். விரைவிலேயே காவல்துறை மிருதுளாவைப் பிடித்தது. ஆகஸ்ட் 18ஆம் தேதி பிடிபட்ட அவர் கடந்த 16 நாட்களில் புலிகளுடனான தனது அனுபவத்தை விரிவாக காவல்துறையிடம் தெரிவித்தார். கோனன குண்டேவில் அவர்கள் தங்கியருந்த வீட்டையும் காட்டினார்.
அந்த வீட்டில் அந்தத் தருணத்தில் சிவராசன், சுபா ஆகிய இருவருடன் மேலும் ஐந்து பேரும் தங்கியிருந்தனர். இதற்குப் பிறகு சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். என்ன நடவடிக்கை எடுப்பதென டி.ஆர். கார்த்திகேயன், சி.பி.ஐயின் இயக்குநரிடம் கேட்டபோது, தான் அங்கே வரும்வரை காத்திருக்கும்படி சொன்னார் அவர்.
பட மூலாதாரம், Sony Liv
மருத்துவருடன் வந்த சி.பி.ஐ இயக்குநர்
சி.பி.ஐயின் இயக்குநர் அங்கு வந்து சேரும்போது, தன்னுடன் டாக்டர் ராமாச்சாரி என்ற சயனைடு விஷ நிபுணரையும் அழைத்துவந்தார். ராமாச்சாரி, வேறொரு விஷ முறிவு மருந்து தேவை என்று குறிப்பிட்டார். அந்த மருத்து குவாலியரிலிருந்து வர வேண்டியிருந்தது. இதில் சில மணி நேரங்கள் கடந்தன. இதற்கிடையில், ரங்கநாத்தும் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி காலையில் சிவராசன் தங்கியிருந்த வீட்டிற்கு சற்று தூரத்தில் லாரி ஒன்று பழுதாகி நிற்க, அதிலிருந்த டிரைவர் லாரியைப் பழுது பார்க்க கீழே இறங்கினார். அவர்களை காவல்துறையினர் என நினைத்து சிவராசனும் குழுவினரும் சுட ஆரம்பித்தனர். காலை ஐந்து மணியளவில் குவாலியரிலிருந்து விஷ முறிவு மருந்து வந்தது. ஆறு மணியளவில் கறுப்புப் பூனைப் படையினர் உள்ளே புகுந்தனர். ஆனால், உள்ளே போய் பார்த்தபோது ஏழு பேருமே இறந்து போயிருந்தனர்.
அந்த ஏழு பேரும் சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அம்மன், டிரைவர் அண்ணா, முந்தைய நாள் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்த ஜமுனா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் சிவராசன் மட்டும் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்து போயிருக்க, மற்றவர்கள் சயனைடு அருந்தி உயிரிழந்திருந்தனர்.
“மறுநாள் காலை வரை காத்திருந்திருக்காமல் முந்தைய இரவே அதிரடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமென நாங்கள் கருதினோம்” என இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் டி.ஆர். கார்த்திகேயன்.
“முடிவு எங்களிடமே விடப்பட்டிருந்தால் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று நாங்கள் அந்த இடத்தை புயலென புகுந்து தாக்கியிருப்போம். சையனைடு நச்சு முறிப்பு ஊசியோடு ஒரு மருத்துவரும் இருந்தும்கூட நாங்கள் பொறுப்பின்றி செயல்பட்டதாக விமர்சனத்திற்கு உள்ளானோம்” என தன் நூலில் குறிப்பிடுகிறார் அவர்.
ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து இந்த சம்பவம் நடந்ததாலும் தற்செயலாக ஆகஸ்ட் 20ஆம் தேதி ராஜீவ் காந்தியின் பிறந்த நாளாக இருந்தாலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன என்றும் இந்த மரணங்கள் முன்னாள் பிரதமரின் பிறந்த நாள் பரிசுபோல திட்டமிடப்பட்டதா என சில பத்திரிகைகள் விமர்சித்தன என்றும் டி.ஆர். கார்த்திகேயனின் நூல் குறிப்பிடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.வேறு திட்டமா?
The Hunt தொடரில், ராஜீவ் காந்தியின் கொலை முடிந்த பிறகு சிவராசன் இலங்கைக்குத் திரும்பிச் செல்லாமல் வேறு சில திட்டங்களையும் தீட்டுவதாக காட்டப்படுகிறது. அதில் ஒன்று, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமையகமான மல்லிகையைத் தாக்குவது. இரண்டாவது, அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்களை கொல்வது. இதனை சிவராசனை மற்றொரு கூட்டாளியிடம் சொல்வதாகக் காட்டப்படுகிறது.
The Hunt தொடரைப் பொறுத்தவரை, பத்திரிகையாளர் அனிருத்ய மித்ரா எழுதிய Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi’s Assassins நூலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
அந்த நூலில், இது போன்ற ஒரு திட்டத்தை சிவராசன் சொல்வதாக அல்லாமல், உளவுத் துறையின் கருத்தாக இடம்பெறுகிறது. “ஐ.பியிலிருந்து வந்த தகவல்களின்படி, புலிகள் இயக்கம் தீர்த்துக்கட்ட வேண்டிய நீண்ட பட்டியலுடன் மிகப் பெரிய இலக்குகளை வைத்திருக்கிறது. இந்தக் கொலைப் படையினர், குறைந்தது மூன்று வி.ஐ.பிகளைத் தீர்த்துக் கட்ட நினைக்கின்றனர் – தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி கே. ராமமூர்த்தி, தமிழக காவல்துறை டிஜிபி எஸ். ஸ்ரீபால்” என அந்த நூல் குறிப்பிடுகிறது.
இந்த நூலை எழுதிய அநிருத்ய மித்ரா, இந்தியா டுடே இதழுக்காக ராஜீவ் கொலை தொடர்பான சிறப்பு புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளை தொடர்ந்து சேகரித்துவந்தவர்.
ஆக்ஸட் 21, 1991ஆம் தேதியிட்ட இந்தியா டுடே தமிழ் இதழில் இந்தத் தகவலை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் அவர். “ராஜீவைக் கொன்ற பிறகு சிவராசன் தப்பிக்கவில்லை, கொலைப் பட்டியலில் இருந்த அடுத்த இரண்டு வி.ஐ.பிக்களைத் தாக்கத் தயாரானார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது எஸ்.ஐ.டியை உலுக்கியிருக்கிறது. இந்த முறை டெல்லியில் கொலையை நடத்த திட்டமிட்டார். ஜூலை மாத மத்தியில் ஜெயலலிதா, ராமமூர்த்தியுடன் பி.பி. நரசிம்மராவைப் பார்க்கப் போவதாக இருந்தது. ராஜீவைக் கொலைசெய்ததைப் போன்ற ஜெயலலிதாவையும் கொலை செய்ய இருந்ததாக கனகசபாபதியும் ஆதிரையும் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டபோது தெரிவித்தார்கள்” என தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் அனிருத்ய மித்ரா.
பட மூலாதாரம், Sony Liv
படக்குறிப்பு, The Hunt தொடரில், ராஜீவ் காந்தியின் கொலை முடிந்த பிறகு சிவராசன் இலங்கைக்குத் திரும்பிச் செல்லாமல் வேறு சில திட்டங்களையும் தீட்டுவதாக காட்டப்படுகிறதுவாழப்பாடி கே. ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தனிடம் கேட்டபோது, “அந்தத் தருணத்தில் அவர் விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்துவந்ததால், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது உண்மைதான். இதனால், சேலம் வீட்டிலும் சென்னை வீட்டிலும் 24 மணி நேரமும் போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது” என்பதை மட்டும் அவர் நினைவுகூர்ந்தார்.
ஆனால், டி. கார்த்திகேயனின் நூல் இது குறித்து எதையும் குறிப்பிடவில்லை. கனகசபாபதியையும் ஆதிரையையும் கைதுசெய்தபோது விடுதலைப் புலிகளுக்கு என டெல்லியில் ஒரு இடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் சிவராசன் உத்தரவாக இருந்தது என்று குறிப்பிட்டார்கள்.
டெல்லியில் ஒரு இடம் ஏற்படுத்திக்கொண்டால் இந்தியா முழுவதும் புலிகளின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லவும் சௌகர்யமாக இருக்கும் என்பதுதான் அவர்களது திட்டம் என்கிறது கார்த்திகேயனின் நூல்.
அந்தத் தருணத்தில் இது குறித்து தொடர்ந்து செய்தி சேகரித்துவந்த மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங்கும் பிற தலைவர்களைக் கொல்லும் திட்டம் ஏதும் புலிகளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை என்கிறார்.
“சிவராசன் உயிரோடு பிடிபடவில்லை. அவர் உயிரோடு பிடிபட்டு இதைச் சொல்லியிருந்தால் அதை ஏற்கலாம். அவர் யாரிடமோ இதைச் சொல்லி, அவர்கள் அதை வெளியில் சொன்னார்கள் என்பது ஏற்கக்கூடியதாக இல்லை. புலிகளைப் பொறுத்தவரை, யாருக்கு எவ்வளவு தகவல்கள் தெரிய வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டுமே சொல்வார்கள். தவிர, அந்த நேரத்தில் அவர்கள் ஜெயலலிதாவைக் கொல்வதற்குக் காரணமே இல்லை. அவர் புலிகள் எதிர்ப்பாளராக இருப்பதுதான் காரணம் என்றால், ராஜீவ் கொலைக்குப் பிறகு பலருக்கும் அந்த மனநிலைதான் இருந்தது. தவிர, அந்நிய மண்ணில் இதுபோல செய்வதன் விளைவுகள் அவர்களுக்குத் தெரியும். ஆகவே, ராஜீவ் கொலைக்குப் பிறகு அப்படி எந்தத் திட்டமும் அவர்களிடம் இருந்ததாகச் சொல்ல முடியாது” என்கிறார் அவர்.
அதே சமயத்தில் தி ஹிந்து நாளிதழுக்காக இது தொடர்பான செய்திகளைச் சேகரித்துவந்த டி.எஸ். சுப்பிரமணியனும் இது போல தான் கேள்விப்படவில்லை என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு