நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளை மறுதினம் வியாழக்கிழமை (21.08.25)காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது.

நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

அந்நிலையில் 23ஆம் திருவிழாவான நாளைய தினம் புதன்கிழமை மாலை 04.45 மணிக்கு வசந்தமண்டப பூஜைகள் இடம்பெற்று முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பர் அளிப்பார்.

சப்பர திருவிழாவின் போது தமிழர்களின் கலை கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் கரகாட்டம் , மயிலாட்டம் , குதிரையாட்டம் , தீப்பந்த விளையாட்டுகள் என்பன இடம்பெறும்.

மறுநாள் வியாழக்கிழமை காலை 06.15 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பர்.

தேர் திருவிழாவில் புலம்பெயர்நாடுகள் , மற்றும் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறுமுக பெருமானின் அருட்காட்சியை கண்டுகளிக்கவுள்ளனர்.

தேர் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதஷ்டை , அடியழித்தல் , கற்பூர சட்டி எடுத்தல் , காவடி எடுத்தல் என தமது நேர்த்திக்கடன்களை நிறைவு செய்வார்கள்.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , தீர்த்தோற்சவம் நடைபெறும்.

அதனை தொடர்ந்து மாலை 04.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று . கொடியிறக்கம் நடைபெறும்.