Tuesday, August 19, 2025
Home பிபிசிதமிழிலிருந்துதமிழ்நாட்டில் 1204 அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை இல்லாதது ஏன்? – BBC News தமிழ்

தமிழ்நாட்டில் 1204 அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை இல்லாதது ஏன்? – BBC News தமிழ்

by ilankai
0 comments

தமிழ்நாட்டில் மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகள், மாணவர் சேர்க்கை இல்லாத 1204 பள்ளிகள் – என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘பிறப்பு விகிதம் குறைவு காரணமாக 1,204 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை’ எனவும் அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்45 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாத 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதாக, கடந்த வாரம் அரசின் தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

banner

‘பிறப்பு விகிதம் குறைவு காரணமாக 1,204 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை’ எனவும் அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

பிறப்பு விகிதம் குறைந்ததால் அரசுப் பள்ளிகள் மூடப்படுகிறதா? கல்வியாளர்கள் கூறுவது என்ன?

இவற்றில், நீலகிரி மாவட்டத்தில் 17 பள்ளிகளும் சென்னை, ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 10 பள்ளிகளும் சிவகங்கை மாவட்டத்தில் 16 பள்ளிகளும் தருமபுரி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 7 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 6 பள்ளிகளும் கிருஷ்ணகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா 5 பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவித்தன. இதர மாவட்டங்களில் 2, 1 என்ற அளவில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

‘மேற்கண்ட 207 பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கு தேவை ஏற்பட்டால் அவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பள்ளிகள் மூடப்படுவது என்பது அரசின் நோக்கம் அல்ல’ என, தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பி.ஏ.நரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை நிகழாத பள்ளிகளில் சுமார் 72 சதவீதம் சுயநிதிப் பள்ளிகள் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 208, நிதி உதவி பெறும் பள்ளிகள் 114, பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகள் 11, சுயநிதிப் பள்ளிகள் 869, மத்திய அரசின் பள்ளிகள் 2 என 1204 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என, தொடக்கக் கல்வித்துறை கூறியுள்ளது.

இதற்கான காரணத்தையும் தொடக்கக் கல்வித்துறை முன்வைத்துள்ளது. “அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என எந்தவித வேறுபாடும் இல்லாமல் மாணவர் சேர்க்கையில் குறைவு ஏற்பட்டதற்கு தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்ததே காரணம்” என, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பி.ஏ.நரேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சில தரவுகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாணவர் சேர்க்கை நிகழாத பள்ளிகளில் சுமார் 72 சதவீதம் சுயநிதிப் பள்ளிகள் எனக் கூறப்பட்டுள்ளது.இந்திய அரசின் சுகாதாரத்துறை கூறியது என்ன?

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட மக்கள் தொகைக் கணிப்புகள் 2011-2036 (Ministry of Health & Family Welfare 2020 Population Projections for India and States 2011-2036) அறிக்கையில் தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு 10.74 லட்சமாக இருந்துள்ளது. அதுவே, 2016 ஆம் ஆண்டில் 10.45 லட்சமாகவும் 2021 ஆம் ஆண்டில் 9.53 லட்சமாக குறைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் 8.78 லட்சமாக குறையும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்களின்படி, தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டு 9,02,718 குழந்தைகள் பிறந்துள்ளது. அதுவே, 2024 ஆம் ஆண்டில் 6.2 சதவீதம் குறைந்து 8,46,709 குழந்தைகளே பிறந்துள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குழந்தை பிறப்பு விகிதம் (TFR) என்பது 2011-15 ஆம் ஆண்டில் 1.68 என்ற அளவீட்டில் இருந்து 2021-25 காலகட்டத்தில் 1.54 என்பதாக குறைந்துவிட்டதாக பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இதன் காரணமாக, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக, தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ளது.

‘தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு’

“அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு மக்கள்தொகை குறைவு என்பது ஒரு காரணம் அல்ல” எனக் கூறுகிறார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஒரு பள்ளி தொடங்கப்பட்ட காலத்தில் என்ன மக்கள்தொகை இருந்ததோ அதைவிட தற்போது பன்மடங்காக உயர்ந்துவிட்டது. கல்வியை அளிக்கும் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு இதை ஒரு காரணமாக அரசு முன்வைக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது” என்கிறார்.

“தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை அரசு தீவிரமாக செயல்படுத்தியது. இதன் விளைவாக குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை உணர முடியும். அப்படியானால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஏன்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசின் எமிஸ் (Educational Managment Information System) தரவுகளின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 61 லட்சத்து 49 ஆயிரத்து 337 மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 59 லட்சத்து 73 ஆயிரத்து 677 மாணவர்களும் படித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 61 லட்சத்து 49 ஆயிரத்து 337 மாணவர்கள் படித்து வருகின்றனர்.தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 660 மாணவர்கள் கூடுதலாக படித்து வருவதாக, தொடக்கக் கல்வித்துறை கூறியுள்ளது.

“அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, உள்கட்டமைப்பில் குறைபாடு ஆகியவை காரணமாக தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர் செல்கின்றனர்.” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

இதற்குப் பதில் அளித்துள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ், “தனிநபர் பொருளாதார வளர்ச்சி அதிகரித்ததன் காரணமாகவும் தங்களின் பிள்ளைகள் தனியார் பள்ளியில் சேருவதை பெருமையாக ஒரு சில பெற்றோர்கள் கருதுவதாலும் தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி ஆங்கில வழிக் கல்வியை தொடர்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், @Facebook

படக்குறிப்பு, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு”அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை”

இந்த விவகாரத்தில் மாற்று காரணம் ஒன்றை முன்வைத்தார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஒரு பள்ளி அமைந்துள்ள இடத்தில் இருந்து மூன்று கி.மீ தொலைவுக்கு வேறு பள்ளி இயங்குவதற்கு அனுமதி தரக் கூடாது. ஆனால், இங்கு அரசுப் பள்ளிக்கு அருகிலேயே ஏராளமான தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது” என்கிறார்.

” ‘அண்மைப் பள்ளித் திட்டம்’ என்ற பெயரில் இவற்றை முறையாக அமல்படுத்தினால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதைத் தடுக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.

“ஒவ்வோர் ஆண்டும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தபடியே உள்ளது. ஒரு பள்ளியைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கும்போது அங்கு ஏற்கெனவே பள்ளி செயல்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை” என்கிறார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய தொடக்கக் கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர், “செலவு செய்ய வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்கின்றனர். அதனை கேள்வி எழுப்ப முடியாது” எனக் கூறுகிறார்.

அதேநேரம், மாதம் தோறும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் தொடர் ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “இதன்மூலம் ஆசிரியர்கள் வருகையை உறுதிப்படுத்துவது, நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு நேரடியாக சென்று சேருவது, போலி மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பது ஆகியவற்றை உறுதி செய்துள்ளோம்” எனக் கூறினார்.

மாணவர் இல்லாத நிலை ஏன்?

தற்போது மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளிகள் பலவும் குக்கிராமங்களில் செயல்பட்டு வந்ததாகக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ்.

“அங்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் வசிக்கின்றனர். தவிர, நகரத்தை நோக்கிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. இதனால் ஒற்றை இலக்க மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்கிறார்.

‘கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் வேலைவாய்ப்புக்காக நகர்ப்புறம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்கின்றனர். இதனால் அவர்கள் வசித்த பகுதிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து மாணவர் இல்லாத நிலையை அடைந்துள்ளது’ என தொடக்கக் கல்வித்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், @Facebook

படக்குறிப்பு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ்’பள்ளியைத் திறப்பது கடினம், மூடுவது மிக எளிது’

“ஒரு கிராமத்தில் பள்ளியைத் திறப்பது கடினம். ஆனால் அதை மூடுவது மிக எளிது” எனக் கூறும் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ், “தங்கள் பகுதியில் உள்ள பள்ளியை சிறப்பாக நடத்திச் செல்லும் பணியில் கிராம கல்விக் குழுக்களை அரசு ஈடுபடுத்த வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“கிராமங்கள்தோறும் குழுக்களை அமைத்து மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணங்களை ஆராய வேண்டும்” எனக் கூறும் மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, “கிராம மக்களிடம் கலந்து பேசி தீர்வைக் கொடுப்பதற்கான முயற்சிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார்.

அரசுப் பள்ளிகள் மூடப்படுவது குறித்து, தொடக்கக் கல்வித்துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது.

பெயர் அடையாளங்களைத் தவிர்த்துவிட்டுப் பேசிய அவர், “இந்தப் பள்ளிகள் எல்லாம் 50 முதல் 100 வருடங்கள் பழமையானவை. பள்ளி தொடங்கிய காலத்தில் அவை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது” எனக் கூறினார்.

“தனியார் பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்ததைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது. அதை முறியடித்து அரசுப் பள்ளிகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர் சேர்க்கையில் பிறப்பு விகிதத்தின் விளைவு முக்கியமானதாக உள்ளதாகக் கூறிய அவர், “மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதும் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி தக்கவைப்பதும் எங்களின் பிரதான இலக்காக உள்ளது” எனத் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like