‘யுக்ரேன், ஐரோப்பிய தலைவர்களுடனான சந்திப்புக்கு நடுவே புதினுடன் பேசிய டிரம்ப்’ – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Reuters

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ரஷ்யா – யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ரஷ்ய அதிபர் புதினைத் தொடர்ந்து யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களை டிரம்ப் சந்தித்துப் பேசியுள்ளார். வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு அரங்கேறியது.

டிரம்பை மீண்டும் சந்திப்பதற்காக வெள்ளை மாளிகை வந்திருந்த ஜெலன்ஸ்கியிடம் இம்முறை மாற்றம் தெரிந்தது. கடந்த முறையைப் போல அல்லாமல் இம்முறை கோட் -சூட் அணிந்து வந்திருந்தார். டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு மிகவும் நட்பு ரீதியான ஒன்றாக இம்முறை அமைந்திருந்தது. யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றிய விவாதத்தின் போது சில தருணங்களில் இருவருமே அவ்வப் போது சிரித்துக் கொண்டனர். ஆகவே, இம்முறை இரு தலைவர்களின் சந்திப்பில் இறுக்கம் தளர்ந்து, நட்பு ரீதியான ஒன்றாக அமைந்தது.

பட மூலாதாரம், Getty Images

வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை

ஓவல் மாளிகையில் டிரம்ப், ஜெலன்ஸ்கியுடன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில், ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யுக்ரேனிய குழந்தைகளை மீட்பதற்கான அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்பின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஜெலன்ஸ்கி தனது மனைவி ஒலேனா ஜெலன்ஸ்காவிடமிருந்து ஒரு தனிப்பட்ட கடிதத்தை டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பிற்கு வழங்கினார்.

கூட்டத்தில், போரை முடிவுக்கு கொண்டு வர யுக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று பிரிட்டனும், அமைதியை உறுதிப்படுத்த கூட்டு ராணுவ வீரர்களை நிறுத்த வேண்டும் என்று பிரான்சும், உடனடி போர் நிறுத்தத்தை ஜெர்மனியும் வலியுறுத்தின.

பட மூலாதாரம், Reuters

‘முத்தரப்பு பேச்சுவார்த்தை’ – டிரம்ப்

வெள்ளை மாளிகை சந்திப்புகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஜெலன்ஸ்கி மற்றும் புதினுடன் முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முயற்சிக்க விரும்புவதாக கூறினார். அவர்கள் “ஏதாவது ஒன்றைச் செய்வார்கள்” என்ற உள்ளுணர்வு தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“நாம் அனைவரும் ஒரு நீடித்த அமைதிக்காக பாடுபடும் போது உடனடி போர் நிறுத்தத்தை விரும்புவோம், ஒருவேளை அது போன்ற ஏதாவது நடக்கலாம். இந்த தருணத்தில் அது நடக்கவில்லை” என்று டிரம்ப் கூறினார். மற்ற போர்களில், முதலில் போர் நிறுத்தம் எதுவும் ஏற்படவில்லை என்றும், அது அவசியமா என்று தனக்குத் தெரியாது என்றும் டிரம்ப் தெரிவித்தார். முத்தரப்பு சந்திப்பு ஒப்புக் கொள்ளப்பட்டால், கைதிகள் பரிமாற்றங்களும் இருக்கும் என்றார் டிரம்ப்.

பட மூலாதாரம், Reuters

பேச்சுவார்த்தைக்கு நடுவே புதினுடன் டிரம்ப் பேச்சு?

வெள்ளை மாளிகையில் யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே ரஷ்ய அதிபர் புதினை டிரம்ப் தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாயின. வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே, ரஷ்ய அதிபரை டிரம்ப் தொடர்பு கொண்டார் என்று பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்த பெயர் குறிப்பிடாத ஆதாரங்களை.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசுவதற்காக பேச்சுவார்த்தையை டிரம்ப் இடைநிறுத்தினார் என்று ஜெர்மன் மற்றும் அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து வெள்ளை மாளிகை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அது நடந்ததா என்பதை பிபிசி தனிப்பட்ட முறையில் உறுதி செய்யவில்லை.

முன்னதாக, வெள்ளை மாளிகை சந்திப்புகளுக்குப் பிறகே புதினை அழைக்கவிருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். இன்றைய தினம் ஏற்கனவே இருவரும் நேரடியாக அல்லாமல் மாற்று வழியில் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார்.

டிரம்ப் பேசியதை உறுதிப்படுத்திய கிரெம்ளின்

வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு நடுவே புதினுடன் டிரம்ப் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார் என்று ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ரஷ்ய ஊடகங்கள் கூறுவது என்ன?

புதினின் செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி, ரஷ்ய ஊடகங்கள் டிரம்ப் – புதின் தொலைபேசி பேச்சை உறுதிப்படுத்தின. இருவரும் என்ன பேசினார்கள் என்பது இன்னும் தெரியவரவில்லை. ரஷ்ய ஊடகங்களும் அதுகுறித்து அதிக விவரங்களை வெளியிடவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு