பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், பெர்ண்ட் டெபுஸ்மேன் & லாரா கோஸ்ஸிபதவி, பிபிசி நியூஸ்19 ஆகஸ்ட் 2025, 03:29 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி திங்கட்கிழமை அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்திருந்தார். யுக்ரேனில் நடைபெறும் போரை நிறுத்தும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் சந்தித்து பேச அவர் வந்திருந்தார்.

பல்வேறு ஐரோப்பிய தலைவர்கள் தங்கள் பயணத் திட்டங்களை, வாஷிங்டனில் நடைபெறும் கூட்டத்துக்கு செல்லும் வகையில் மாற்றி அமைத்துக் கொண்டனர். சில நாட்கள் முன்பு நடைபெற்ற ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த தவறிய பிறகு, இந்த சந்திப்பு நடைபெற்றது.

டிரம்ப் சில நம்பிக்கையான வார்த்தைகளை கூறியிருந்தாலும், ஐரோப்பிய தலைவர்கள் சிலர் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தாலும், திங்கட்கிழமை மாலை வரை பாதுகாப்பு உறுதிகள் குறித்தோ அமைதிக்கான ஒப்பந்தம் குறித்தோ சொல்லும்படியான எந்த முன்னேற்றமும் இல்லை.

வெள்ளை மாளிகை சந்திப்பு குறித்த முக்கிய அம்சங்கள் இவை

புதின்-ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெறவுள்ளதா?

ஜெலன்ஸ்கி மற்றும் புதினை கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது டிரம்ப் அதிகம் பேசும் ஒன்றாகும்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இனி அப்படியான ஒரு சந்திப்பு “நடைபெறுமா என்பது கேள்வியல்ல, எப்போது என்பது தான் கேள்வி” என்று டிரம்ப், ஐரோப்பிய தலைவர்களுடன் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதற்கு முன்பாக தெரிவித்திருந்தார்.

ஒரு குறிப்பிட்ட, முடிவு செய்யப்பட்ட இடத்தில் புதின் மற்றும் ஜெலன்ஸ்கிக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகு, அமெரிக்க அதிபருடன் சேர்ந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் டிரம்ப் கூறினார்.

திங்கட்கிழமை டிரம்பும் புதினும் 40 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியதாக புதினின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் உள்ள கிழக்கு அறையில் (East Room) திங்கட்கிழமை ஐரோப்பிய தலைவர்களும் டிரம்பும் சந்தித்து பேச தொடங்கும் முன், அந்த அறையில் இருந்த மைக் ஒன்றின் மூலம் , டிரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் இடையிலான கருத்து பரிமாற்றத்தை கேட்க முடிந்தது.

“அவர் ஒரு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்று விரும்புவதாக நினைக்கிறேன். அவர் எனக்காக ஒரு ஒப்பந்தம் ஏற்பட விரும்புகிறார் என்று கருதுகிறேன். புரிகிறதா? இது எவ்வளவு விசித்திரமானதாக இருந்தாலும்” என்று டிரம்ப் மக்ரோனிடம் கூறுகிறார். அவர் புதினை குறிப்பிட்டு பேசுவது போல் தோன்றுகிறது.

2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் முழு அளவிலான ஆக்கிரமிப்பை ரஷ்யா நடத்தி வரும் நிலையில், இரண்டு கசப்பான எதிரிகளை ஒரே மேஜையில் அமர வைப்பது எவ்வளவு சாத்தியமானது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பல மாதங்களாக ஜெலன்ஸ்கி புதினுடனான சந்திப்புக்கு வலியுறுத்தி வருகிறார். எனினும் அந்த சந்திப்பு போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று அவர் நினைப்பதாக ஒரு அறிகுறியும் இல்லை.

மாறாக, ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என்ற ஜெலன்ஸ்கியின் வாதத்தை நிரூபிக்கும் ஒரு வழியாக இருக்கலாம். புதின் இப்படியான ஒரு சந்திப்புக்கு விருப்பம் தெரிவிக்கவே இல்லை என்று ஜெலன்ஸ்கி கருதுகிறார்.

புதின் – ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சுவார்த்தையை ரஷ்யா எப்போதும் நிராகரித்துள்ளது.

திங்கிட்கிழை இரவு ரஷ்யா தரப்பில் யூரி அஷகோவ், ரஷ்யா – யுக்ரேன் இடையிலான பேச்சுவார்த்தை குழுக்களில் “உயர்மட்ட பிரதிநிதிகள்” இருக்கும் வாய்ப்பை ஆராய்வது சரியானதாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதின் – ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு நடைபெறுமா என்பது கேள்வியல்ல, எப்போது என்பது மட்டுமே கேள்வி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ( கோப்புப் படம்) போர் நிறுத்தத்துக்கான அவசியத்தை டிரம்ப் நிராகரிக்கிறார்.கடந்த காலஙகளில் அதுவே யுக்ரேனின் பிரதான கோரிக்கையாக இருந்தது. ரஷ்யாவுடன் தொடர்ந்து பேசும் முன், முதலில் போரை நிறுத்த வேண்டும் என்று யுக்ரேன் விரும்பியது தெளிவாக தெரிந்தது. அதை தொடர்ந்து ஒரு நீண்ட கால முடிவுக்கான ஒப்பந்தத்தை எதிர்பார்த்தது.

ஒரு முழு அளவிலான அமைதி ஒப்பந்தத்தை விட ஒரு போர் நிறுத்தம் சற்று எளிதாக இருக்கலாம். முழு அளவிலான அமைதி ஒப்பந்தம் ஏற்பட பல மாதங்கள் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டியிருக்கும், அதற்குள் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்துக் கொண்டிருக்கும்.

“அது வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை” என்று போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால் ஐரோப்பிய தலைவர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. ஜெர்மன் சான்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் “ஒரு போர் நிறுத்தம் ஏற்படாமல் அடுத்த சந்திப்பு நடைபெறும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை” என்று கடுமையாக பேசியிருந்தார். “எனவே அதை நோக்கி நமது வேலைகளை முடுக்கிவிடுவோம், ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க முயல்வோம்” என்றும் அவர் கூறினார்.

ஜெலன்ஸ்கி பேசிய போது போர் நிறுத்தம் வேண்டும் என்று அவர் ஏற்கெனவே கேட்டிருந்ததை மீண்டும் வலியுறுத்தவில்லை.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து டிரம்ப் என்ன கூறினார்?

போரை நிறுத்துவது குறித்த எந்த ஒப்பந்தத்திலும் யுக்ரேனின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உறுதியளிக்க உதவி செய்யும் என்று டிரம்ப் ஜெலன்ஸ்கியிடம் கூறினார். ஆனால் எந்த அளவுக்கு உதவி வழங்கப்படும் என்று அவர் கூறவில்லை.

அமெரிக்க படைகளை களத்தில் நிலைநிறுத்துவது குறித்து டிரம்ப் யுக்ரேனுக்கு எதுவும் கூறவில்லை. எனினும், அமெரிக்கா கூறும் பாதுகாப்பு உத்தரவாதம் என்பது அமெரிக்க ராணுவம் களத்தில் இருப்பதா என்று கேட்டதற்கு, அதை டிரம்ப் நிராகரிக்கவும் இல்லை.

“ஐரோப்பா தான் முதல் வரிசை பாதுகாப்பு, ஆனால் நாங்களும் உடனிருப்போம்” என்று அவர் பதிலளித்தார்.

பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து டிரம்ப் இதுவரை கூறிய தீர்க்கமான வார்த்தைகள் இவையே. ரஷ்யாவுடனான எந்த வகையிலான ஒப்பந்தத்துக்கு இது மிகவும் முக்கியம் என்று கருதப்படுகிறது.

கடந்த வாரம் அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பின் போது, எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திலும் யுக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கும் என்று புதின் கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்.

பாதுகாப்பு உத்தரவாதத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா-யுக்ரேன் இடையில் 90 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தம் போடப்படும் என்று ஜெலன்ஸ்கி, திங்கட்கிழமை சந்திப்பு பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.

இதில் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட யுக்ரேனிடம் இல்லாத அமெரிக்க ஆயுதங்கள் அடங்கும் என்று அவர் கூறினார். மேலும் சில ஆயுதங்களை அவர் வெளிப்படையாக குறிப்பிட விரும்பவில்லை என்றார்.

யுக்ரேனின் டிரோன்களை அமெரிக்கா வாங்கும் என்றும் ஜெலன்ஸ்கி கூறினார். இதன் மூலம் தங்கள் உள்நாட்டு டிரோன் உற்பத்திக்கு நிதி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யுக்ரேனுக்காக பாதுகாப்பு உத்தரவாதம் பத்து நாட்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஐரோப்பிய தலைவர்களும் வெள்ளை மாளிகையில் டிரம்புடனான சந்திப்பில் பங்கேற்றனர். ஜெலன்ஸ்கியின் நட்பு பாராட்டல்

கடந்த பிப்ரவரி மாதம் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற கசப்பான சந்திப்புக்கு பிறகு, இந்த முறை அமெரிக்க அதிபரை சந்தித்த ஜெலன்ஸ்கி, டிரம்பை குஷிப்படுத்த முயற்சிகள் எடுத்ததை காண முடிந்தது – சந்திப்பின் முதல் சில நிமிடங்களிலேயே அவர் ஆறு முறை “நன்றி”களை அடுக்கினார்.

கடந்த முறை அவர் வெள்ளை மாளிகைக்கு வந்த போது, யுக்ரேனை அமெரிக்கா ஆதரிப்பதற்கு அவர் நன்றியுடன் இருக்கவில்லை என்று ஜெலன்ஸ்கியை அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் விமர்சித்திருந்தார்.

இந்த முறை தனது வழக்கமான ராணுவ உடையில் அல்லாமல் ஒரு கருப்பு ஆடையை ஜெலன்ஸ்கி அணிந்திருந்தார். கடந்த முறை அவரது ராணுவ உடையை டிரம்ப் கிண்டல் செய்து பேசியிருந்தார்.

இந்த முறை சில குடும்ப ரீதியிலான உறவுகளை ஏற்படுத்தவும் ஜெலன்ஸ்கி முயன்றார். யுக்ரேனின் முதல் பெண்மணியான தனது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா, அமெரிக்க முதல் பெண்மணி மெலனிய டிரம்புக்கு எழுதிய கடிதத்தை கொடுத்தார். “இது உங்களுக்கு அல்ல, உங்கள் மனைவிக்கு” என்று அவர் டிரம்பிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது ஜெலன்ஸ்கி அணிந்திருந்த உடையும் ( வலது) திங்கட்கிழமை கூட்டத்தில் அவர் அணிந்திருந்ததும் (இடது) வெவ்வேறாக இருந்தன. தங்கள் சந்திப்புக்கு முன்பாக ஐரோப்பிய தலைவர்களும் டிரம்பை புகழ்ந்து பேசினர், “உங்கள் தலைமைத்துவத்துக்கு மிக்க நன்றி” என்று நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே கூறினார்.

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இதற்கு முன் ரஷ்யா அமைதியை நோக்கி நகர்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாத போது, இப்போது “ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது”, டிரம்புக்கு நன்றி என்றார்.

இந்த வார்த்தைகளை பேசினாலும், ரஷ்யா ஆக்கிரமிப்புக்கு எதிர்காலத்தில் தாங்களும் உள்ளாகலாம் என்று நினைப்பதை ஐரோப்பிய தலைவர்கள் வெளிப்படுத்தினர்.

“பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேசும் போது, ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் பேசுகிறோம்” என்று பிரான்ஸ் அதிபர் பிற ஐரோப்பிய தலைவர்களிடம் பேசினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு