Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ‘தங்கிய’ பிரமாண்ட கோட்டையின் வியக்க வைக்கும் வரலாறு
படக்குறிப்பு, கட்டப்பட்டு சுமார் 300 ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்தக் கோட்டை பல சுவாரஸ்யமான கதைகளைக் கொண்டது.எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கட்டப்பட்ட வட்ட வடிவிலான கோட்டை, இன்னமும் ஆச்சரியமளிக்கிறது. இந்தக் கோட்டையின் வியக்க வைக்கும் வரலாறு என்ன?
ராமநாதபுரத்தில் கமுதியிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது வட்ட வடிவமான இந்தக் கோட்டை. கோட்டையின் பெரும் பகுதிகள் சிதைந்துவிட்டாலும் கோட்டையின் கம்பீரம் இன்னமும் குறையவில்லை. கட்டப்பட்டு சுமார் 300 ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்தக் கோட்டை பல சுவாரஸ்யமான கதைகளைக் கொண்டது.
ராமநாதபுரம் நாட்டை ஆட்சிசெய்த மன்னர்களில் கிழவன் சேதுபதிக்கு (1678 – 1710) அடுத்ததாக குறிப்பிடத்தக்க மன்னர்களில் ஒருவராக இருந்தவர் முத்து விஜய ரகுநாத சேதுபதி (1713-1725). ராமநாதபுரம் நாட்டின் நிர்வாகத்தை சீர்செய்ததுடன், அதன் ராணுவப் பாதுகாப்பையும் இவரே வலுப்படுத்தியதாக தனது ‘சேதுபதி மன்னர் வரலாறு’ நூலில் குறிப்பிடுகிறார் எஸ்.எம். கமால்.
படக்குறிப்பு, வட்ட வடிவிலான கோட்டை, இன்னமும் ஆச்சரியமளிக்கிறதுஇவருடைய காலகட்டத்தில்தான் ராமநாதபுரம் அரண்மனையின் அத்தாணி மண்டபமான ராமலிங்க விலாசத்தின் சுவர்கள் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன. இந்த மண்டபத்தின் ஒரு இடம்கூட விடாமல் ஓவியங்கள் தீட்டப்பட்டன. அந்த காலகட்டத்தின் வாழ்வைப் புரிந்துகொள்ள இந்த ஓவியங்கள் இப்போதும் உதவுகின்றன. இவருடைய காலகட்டத்தில்தான் ராமேஸ்வரம் கோவிலின் புகழ்பெற்ற மூன்றாவது பிரகாரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
முத்து விஜய ரகுநாத சேதிபதி மன்னரானபோது, திருப்பத்தூர், காளையார் கோவில், மானாமதுரை, அனுமந்தக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கோட்டைகள் இருந்தன. இவை எல்லாமே கோட்டை வாசல், கொத்தளங்கள், அகழி ஆகியவற்றுடன் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருந்தன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னரான பிறகு, ராமநாதபுரம் நாட்டின் வலிமையை அதிகரிப்பதற்காக மூன்று இடங்களில் சிறிய கோட்டைகளைக் கட்டினார். இந்தக் கோட்டைகள், ராஜசிங்கமங்கலம், பாம்பன், கமுதி ஆகிய இடங்களில் கட்டப்பட்டன.
படக்குறிப்பு, கமுதி கோட்டையை அக்கால வழக்கப்படி செவ்வக வடிவில் கட்டப்படாமல் வட்டவடிவில் கட்டப்பட்டது.கமுதி கோட்டையை அக்கால வழக்கப்படி செவ்வக வடிவில் கட்டப்படாமல் வட்டவடிவில் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையை பிரான்ஸ் நாட்டு பொறியாளர் ஒருவரது உதவியுடன் மன்னர் கட்டியதாகக் குறிப்பிடப்பட்டாலும் அந்தப் பொறியாளரின் பெயர் ஏதும் கிடைக்கவில்லை. குண்டாற்றின் வடக்குக் கரையில் பாறைகள் நிறைந்த பகுதியில் இந்தக் கோட்டை கட்டப்பட்டது.
குண்டாற்றின் கரையில் பாறைகள் நிறைந்த, மேடான, அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இதன் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு, கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகள், தற்போதும் அந்தப் பகுதியில் கிடைக்கின்றன.
பாறைகளை வெட்டியதால் ஏற்பட்ட பள்ளம் இந்தக் கோட்டைக்கான அகழியைப் போல் அமைந்துள்ளது. இந்தக் கோட்டையில் ஏழு கண்காணிப்புக் கோபுரங்கள் உள்ளன. இவை வீரர்கள் நின்று காவல் புரியவும் கண்காணிக்கவும் பீரங்கி இயக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
படக்குறிப்பு, இந்தக் கோட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது.இந்தக் கோட்டை செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் பாறைக் கற்கள் ஒட்டப்பட்டன. இதனால் இந்தக் கோட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது. கோட்டையைக் கட்டுவதற்கான செங்கற்களை இங்கேயே தயாரித்துள்ளனர்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இக்கோட்டையில் ஆயுத கிடங்குகள் அமைத்து போர் வீரர்களுக்கு ஆயுத பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்ததாகவும் மருது சகோதரர்கள் இங்கு சில காலம் தங்கி விட்டு சென்றதாவும் தமிழக தொல்லியல் துறையின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
1795வாக்கில் ராமநாதபுரம் சேதுபதியாக இருந்த முத்துராமலிங்க சேதுபதி, கிழக்கிந்தியக் கம்பனிக்கு ஒத்துழைக்காத நிலையில், ராமநாதபுரம் மீது கிழக்கிந்தியக் கம்பனி தாக்குதல் நடத்தியது. இதில் ராமநாதபுரம் கைப்பற்றப்பட்டது. இதற்குப் பிறகு, பொதுமக்கள் அவ்வப்போது கம்பெனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுவந்தனர்.
படக்குறிப்பு, இந்தக் கோட்டையைப் பொறுத்தவரை வீரபாண்டிய கட்டபொம்மனோடும் தொடர்புபடுத்தப்படுகிறது.1799ல் முத்துராமலிங்க சேதுபதியின் தளபதியான மயிலப்பன் சேர்வைக்காரர் என்பவர், திருச்சியில் சிறை வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க சேதுபதியை விடுவிக்க முயற்சிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிடுகிறார் எஸ்.எம். கமால்.
1799 ஏப்ரல் 24ஆம் தேதி மயிலப்பன் தலைமையிலான கிளர்ச்சிக்காரர்கள் முதுகுளத்தூரில் இருந்த கம்பனிக்காரர்களின் இலக்குகளைத் தாக்கினர். இதற்குப் பிறகு அபிராமம் தாக்குதலுக்குள்ளானது. இதற்குப் பின் கமுதிக்குச் சென்ற கிளர்ச்சியாளர்கள் அங்கும் தாக்குதல் நடத்தினர். இந்தக் கிளர்ச்சியினால் 42 நாட்கள் முதுகுளத்தூர், கமுதி பகுதிகள் கம்பனி நிர்வாகத்திலிருந்து விலகியிருந்தன.
இந்தக் கிளர்ச்சியின் உச்சகட்டமாக கமுதிக் கோட்டையில் நடந்த சண்டையில் ஆங்கிலேயருக்கு எட்டையபுரம் வீரர்களும் சிவகங்கையின் வீரர்களும் உதவியதாக எஸ்.எம். கமாலின் நூல் குறிப்பிடுகிறது. இதில் கிளர்ச்சிக்காரர்கள் தோல்வியைத் தழுவினர். இதற்குப் பிறகு, கமுதிக் கோட்டை கிழக்கிந்தியக் கம்பனி வசம் முழுமையாக வந்தது.
இந்தக் கோட்டையைப் பொறுத்தவரை வீரபாண்டிய கட்டபொம்மனோடும் தொடர்புபடுத்தப்படுகிறது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆங்கிலேயர் வரிகேட்பு கூட்டத்திற்கு பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து இராமநாதபுரம் செல்லும்போது வீரபாண்டிய கட்டபொம்மன் இங்கு தங்கி சென்றதாவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, இந்தக் கோட்டையைச் சிலர் கட்டபொம்மன் கோட்டை எனக் குறிப்பிடுவதும் உண்டு.
ஆனால், உண்மையில் கட்டபொம்மன் இங்கு தங்கிச் செல்லவில்லை என்கிறார் ‘கதைப் பாடல்களில் கட்டபொம்மன்’ நூலின் ஆசிரியரான பேராசிரியர் வே. மாணிக்கம்.
“ஜாக்ஸனுக்குப் பிறகு லூசிங்டன் என்பவர் கிழக்கிந்தியக் கம்பனியின் உயரதிகாரியாக இருந்த காலத்தில் பாஞ்சாலங்குறச்சியிலிருந்து இப்பகுதிக்கு வந்தார் கட்டபொம்மன். கோட்டைக்குள் வந்து லூசிங்டனைச் சந்திக்க விரும்பினார் அவர். ஆனால், கட்டபொம்மன் கோட்டைக்குள் வருவதாக இருந்தால் 3 – 4 பேருக்கு மிகாமல் வர வேண்டுமென்றார் லூசிங்டன். இதனைக் கட்டபொம்மன் ஏற்கவில்லை. தனது பரிவாரங்களுடனேயே வர விரும்புவதாக அவர் கூறினார்.”
“இதற்குப் பிறகு, வரி வசூலிப்பவனை கட்டபொம்மனிடம் அனுப்புவதாகவும் வரியை அவனிடமே கொடுத்துவிடும்படியும் கூறுகிறார் லூசிங்டன். ஆனால், போரின் காரணமாக குடியானவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் வரி வசூலிக்கப்படவில்லை என்கிறார் கட்டபொம்மன். அப்படியானால், இங்கே வந்து என்னைப் பார்ப்பதில் பிரயோஜனமில்லை என்றார் லூசிங்டன். இதையடுத்து கட்டபொம்மன் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். உள்ளே செல்லவில்லை” என்கிறார் வே. மாணிக்கம்.
படக்குறிப்பு, 1877ஆம் ஆண்டில் குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.ராமநாதபுரம் நாட்டை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு 1803 – 1804ஆம் ஆண்டுகளில் அந்த நாட்டில் இருந்த கோட்டைகள் அனைத்தும் இடித்துத் தள்ளப்பட்டன. அந்தத் தருணத்தில் இந்தக் கோட்டையின் பெரும் பகுதியும் இடித்துத் தள்ளப்பட்டது. எஞ்சியிருந்த பகுதிகள் 1877ஆம் ஆண்டில் குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.
இப்படிப் பல காரணங்களால் கோட்டையின் சுற்றுச்சுவர்கள், பாதுகாப்பு அரண்கள் ஆகியவை சேதமடைந்திருந்தாலும், கோட்டை நன்றாக இருந்த காலகட்டத்தில் எவ்வளவு வலிமையாக இருந்திருக்கும் என்பதை உணரவைக்கின்றன.
காணொளிக் குறிப்பு, வட்ட வடிவ கமுதி கோட்டையின் சுவாரஸ்ய வரலாறு- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு