“குப்பை அள்ளுவது குலத்தொழில் அல்ல” : தூய்மைப் பணியாளர் போராட்டம் குறித்த திருமாவளவனின் கருத்து விமர்சிக்கப்படுவது ஏன்?

எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ்34 நிமிடங்களுக்கு முன்னர்

சென்னை மாநகராட்சியில் தனியார்மயத்தை எதிர்த்து, பணி நிரந்தரம் கோரி போராடி வந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் நேரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ கட்சிகளோடு நேரில் சென்று வலியுறுத்தவும் செய்தார்.

இந்த நிலையில் தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘பணி நிரந்தரம் கேட்பது மரபு சார்ந்த, அடிமை சார்ந்த சிந்தனை’ என்றும் சொல்லி, அந்த கோரிக்கையின் அடிப்படையையே விமர்சித்துள்ளார்.

போராடிய தொழிலாளர்கள், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இரவோடு இரவாக அகற்றப்பட்ட நிலையில், திருமாவளவனின் கருத்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

விசிக இடம்பெற்றிருக்கும் திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரது கருத்து சரியல்ல என்று கூறியுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

திருமாவளவன் பேசியது என்ன?

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அவர் இப்படி பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. ” பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர்களின் குரலோடு இணைந்து நாம் கூறினாலும் கூட அம்பேத்கரின் பார்வையிலிருந்து இதை அணுக வேண்டும். மலம் அள்ளுபவனே மலம் அள்ளட்டும், குப்பையை அள்ளுபவனே குப்பை அள்ளட்டும் என்ற கருத்துக்கு இது வலுசேர்ப்பதாக இருக்கிறது. அம்பேத்கரின் மாணவனாக, பெரியாரின் பிள்ளையாக இருந்து இதை நாம் சொல்ல முடியாது. அந்த கோரிக்கையை எதிர்த்து பேச வேண்டும்” என்று திட்டவட்டமாக பேசினார்.

ஆனால் திருமாவளவனின் கருத்துக்கு போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்களும், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், Facebook/Thol.Thirumavalavan

போராடுபவர்கள் என்ன கூறுகிறார்கள்?

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணி ஏற்கெனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றி வரும் உழைப்பாளர் உரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் கே ஜோதி பிபிசி தமிழிடம் பேசும் போது, “நாங்கள் பல ஆண்டுகளாக இந்த தொழிலில் தான் இருக்கிறோம். எங்களுக்கான சலுகைகளை கேட்கக் கூடாது என்றால் என்ன அர்த்தம்? இத்தனை வருடங்களாக இல்லாத அக்கறை இப்போது ஏன்? கொரோனா காலத்தில் உயிருக்கு ஆபத்தான காலத்தில் களத்தில் பணியாற்றினோம். அப்போது சொல்லி இருக்கலாமே, நாங்கள் எதையும் கையால் தொட வேண்டாம் என்று” என்கிறார்.

படக்குறிப்பு, உழைப்பாளர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் கே ஜோதி குப்பை அள்ளுபவர்களை பணி நிரந்தரம் செய்வது அந்த தொழிலையே நீங்கள் செய்துக் கொண்டிருங்கள் என்று சொல்வதாகும் என்று பேசியிருந்தார் திருமாவளவன்.

“அதிலிருந்து மீள வேண்டும் என்பது தான் போராட்டம். அந்த தொழிலையே ஒழிக்க வேண்டும்.” என்றார். பிற நாடுகளில் இத்தொழிலில் பிறப்பின் அடிப்படையில் செய்யப்படுவது இல்லை என்றும், அதற்கான முன்னேறிய தொழில்நுட்பங்கள் உள்ளன, அதை கற்றுக் கொண்டவர்கள் அந்த தொழிலை செய்யலாம் என்ற நிலையை இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் தான் இப்போதும் கையால் மலம் அள்ளுபவர்கள் ரயில்வே போன்ற துறைகளில் இருக்கிறார்கள், அவர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது என்றும் பேசினார்.

” இதையெல்லாம் சொன்னால், நான் அவர்களுக்கு எதிராக பேசுவது கூறுவார்கள், எனவே நாமும் அவர்களோடு சேர்ந்து பேச வேண்டியுள்ளது. தலித்துகளின் பிள்ளைகள் தான் குப்பையை அள்ள வேண்டுமா? அந்த வேலையை நிரந்தரமாக்கினால், அந்த பணிக்கு யார் வருவார்கள்? எத்தனை பேர் குப்பை அள்ள தயாராக இருக்கிறார்கள்? 70 வயதிலும் குப்பை அள்ளும் ஒருவர் யார்? ரயில் நிலையங்களில் கையால் மலம் அள்ளுபவர்கள் யார்? அடுத்த தலைமுறை இந்த தொழிலில் வரக்கூடாது என்பது தானே சமூக நீதி?” என்று கேள்விகளை முன் வைத்தார் திருமாவளவன்.

“சென்னையில் பத்து மண்டலங்களில் துப்புரவு பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு என்ன ரோபோக்களை கொண்டு வந்து நிறுத்திவிட்டார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார் ஜோதி.

“அங்கு வேலை பார்ப்பதும் தலித்துகள் தானே? அரசு எங்களுக்கு வேறு துறைகளில் வேலை தரட்டும். ஏன் அப்படி செய்வதில்லை? நாங்கள் இதே தொழிலை தான் செய்வோம் என்று கூறவில்லையே. படிப்பு இல்லை அதனால் இந்த வேலையை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் படித்தவர்களும் சில நேரங்களில் வேறு வேலை கிடைக்காமல் இந்த வேலைக்கு வர தான் செய்கிறார்கள்.” என்று தெரிவிக்கிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.திருமாவளவனின் கருத்தை ஆதரிக்கும், ஆதி தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அடுத்த தலைமுறை மட்டுமின்றி இப்போது உள்ள தலைமுறை கூட தூய்மை செய்யும் இழிதொழிலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆதிக்க சமூகத்தினுடைய சதித்திட்டம் தான் பணி நிரந்தரம் என்று கோரிக்கை ஆகும். பணி நிரந்தரம் மூலமாக குறிப்பிட்ட சமூகங்களை பரம்பரை பரம்பரையாக தூய்மை தொழிலில் ஈடுபடுத்துவது சமூக மாற்றத்தில் அக்கறை உள்ள யாரும் ஏற்க மாட்டார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

திருமா கருத்துக்கு கூட்டணிக் கட்சி எதிர்ப்பு

படக்குறிப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திருமாவளவன் மற்றும் அதியமான் கூறுவது தவறான கருத்து என்கிறார் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.

ஊழியர்களின் கோரிக்கை சட்டப்பூர்வமானது என்று கூறும் அவர், ” 480 நாட்கள் வேலை செய்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1981, பிரிவு 3 கூறுகிறது. இது எல்லா பணிகளுக்கும் பொருந்தும். இதை அமல்படுத்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் போராடுகின்றன. இது சட்டப்பூர்வமான கோரிக்கை. திருமா கூறுவது சரியில்லை. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் அப்பா அம்மா இருவரும் நிரந்தர பணியில் துப்புரவு ஊழியர்களாக இருந்தார்கள், அவர்களது மகளை படிக்க வைத்து முனைவர் பட்டம் பெற்று அவர் தற்போது பேராசிரியராக இருக்கிறார். இந்த பொருளாதார வாய்ப்பை பணி நிரந்தரம் ஏற்படுத்தி தருகிறது” என்கிறார்.

“மலம் அள்ளுவதும் தூய்மை பணியும் ஒன்றல்ல”

பட மூலாதாரம், Bezwada Wilson

படக்குறிப்பு, சஃபாய் கர்மசாரி ஆந்தோலன் எனும் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரான மகசேசே விருது பெற்ற பெஸ்வாடா வில்சன்கையால் மலம் அள்ளுவதற்கு எதிரான சஃபாய் கர்மசாரி ஆந்தோலன் எனும் இயக்கத்தை தொடங்கி அதன் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ள மகசேசே விருது பெற்ற பெஸ்வாடா வில்சன், “இந்தியாவில் கையால் மலம் அள்ளுவது சாதி அடிப்படையிலான பணியாகும். இது சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. (மலம் அள்ள மனிதர்களை பணிக்கு அமர்த்துவதும் உலர் கழிப்பறைகள் கட்டுவதும் 1993-ம் ஆண்டு முதல் இந்தியாவில் சட்டப்படி தடை செய்யப்பட்டதாகும்.)

ஆனால் தெருக்களை சுத்தம் செய்தல், அலுவலகங்களை சுத்தம் செய்தல் போன்ற துப்புரவு பணிகள் தடை செய்யப்பட்டவை அல்ல. எல்லா வேலையும் ஒன்று கிடையாது. அண்ணல் அம்பேத்கர் – பிற மனிதரின் மலத்தை அள்ளக் கூடாது, இறந்த விலங்குகளின் உடல்களை தொடக் கூடாது என்று கூறினார். போராடும் ஊழியர்கள் அவர்களின் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடுகிறார்கள்.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சென்னை புளியந்தோப்பில் வசிக்கும் உழைப்பாளர் உரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் கே.ஜோதி கடந்த 15 ஆண்டுகளாக தூய்மை பணி செய்து வருகிறார்.

“இப்போது மாதம் ரூ.23 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது. தனியார்மயப்படுத்தினால் வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு பிடித்தம் போக ரூ.15 ஆயிரம் மட்டுமே கையில் கிடைக்கும். ஒன்பது மாதங்களுக்கு முன்பு வரை ரூ.15 ஆயிரம் தான் பெற்று வந்தோம். வழக்கு தொடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கி, அதை சென்னை மாநகராட்சி அமல்படுத்த போராட்டம் நடத்தி, பிறகே ரூ.23 ஆயிரம் கிடைத்தது.

பணி நிரந்தரம் செய்தால் ரூ.30 முதல் 35 ஆயிரம் கிடைக்கக் கூடும். இப்போதைக்கு எங்கள் குடும்பத்தை நல்லபடியாக நடத்த எங்களுக்கு நியாயமான ஊதியத்துடன் வேலை வேண்டும்” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு