டிரம்ப்- புதின் சந்திப்பு இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேன் விவகாரம் தொடர்பாக டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.எழுதியவர், தீபக் மண்டல்பதவி, பிபிசி செய்தியாளர்2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே அலாஸ்காவில் நடந்த நேரடி சந்திப்பு எந்த உறுதியான பலனையும் தரவில்லை.

பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சம் யுக்ரேன் போர் என்று வெள்ளை மாளிகை கூறியிருந்தது. ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும், ரஷ்யா-யுக்ரேன் போரை நிறுத்துவது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

“உண்மையான ஒப்பந்தம் ஏற்படும் வரை எந்த முடிவும் இருக்காது” என்று டிரம்ப் கூறினார். மோதலை (ரஷ்யா-யுக்ரேன்) முடிவுக்குக் கொண்டுவர, அதன் “மூல காரணம்” அகற்றப்பட வேண்டும் என்று புதின் கூறினார்.

டிரம்ப் மற்றும் புதின் இடையேயான இந்த சந்திப்பை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த சந்திப்பின் முடிவுகள் இந்தியாவிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன. ஏனெனில், பேச்சுவார்த்தைக்கு சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், “டிரம்ப் மற்றும் புதின் இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாவிட்டால், இந்தியா மீதான வரிகள் மேலும் அதிகரிக்கப்படும்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இந்தியா மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டால், ரஷ்யா மீது அதிக அழுத்தம் ஏற்படும் என்பது டிரம்பின் வாதமாக இருந்து வருகிறது.

கேள்வி என்னவென்றால், இந்த முடிவில்லாத பேச்சுவார்த்தை இந்தியாவிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? அமெரிக்கா அறிவித்த 50 சதவீத வரியில் இந்தியா இப்போது ஏதாவது நேர்மறையான மாற்றத்தை எதிர்பார்க்க முடியுமா?

நேர்மறையான மாற்றம் வருமா அல்லது பிரச்னை அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்துள்ளார். இதன் பிறகு, ஆகஸ்ட் 7 ஆம் தேதி, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கான காரணத்தைக் கூறி, இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அறிவித்தார்.

இருப்பினும், இந்த கூடுதல் வரி விதிப்பு ஆகஸ்ட் 27 முதலே அமலுக்கு வரும்.

டொனால்ட் டிரம்ப், அலாஸ்காவில் புதினுடனான சந்திப்புக்குச் சென்றிருந்தபோது, அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டார்.

“அவர்கள் (ரஷ்யா) உண்மையில் ஒரு (எண்ணெய் வாங்கும்) வாடிக்கையாளரை இழந்துவிட்டார்கள், இந்தியா. அது சுமார் 40 சதவீத எண்ணெயை வாங்கிக் கொண்டிருந்தது. உங்களுக்குத் தெரியும், சீனாவும் நிறைய வாங்குகிறார்கள். நான் இரண்டாம் நிலைத் தடைகளை விதித்தால், அது அவர்களின் பார்வையில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். அதை நான் செய்ய வேண்டியிருந்தால், நிச்சயம் செய்வேன். ஒருவேளை அவ்வாறு செய்ய வேண்டிய நிலை ஏற்படாது”

புதினுடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த மற்றொரு நேர்காணலில், “இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு நான் அதைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும், ஆனால் இப்போது அதைப் பற்றி நாம் யோசிக்கத் தேவையில்லை” என்று கூறினார்.

இருப்பினும், டிரம்ப் தனது பதிலில், அவர் சீனாவிற்கு எதிரான இரண்டாம் நிலை வரிகளை நிறுத்துவது பற்றிப் பேசுகிறாரா அல்லது இந்தியாவிற்கு எதிரான வரிகள் பற்றிப் பேசுகிறாரா என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.

ஆகஸ்ட் 27ஆம் தேதி என்ற காலக்கெடு முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதுபோன்ற நிலையில், பின்வாங்குவதற்கான ஒரு சூழலை டிரம்ப் உருவாக்கிக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் சமீபத்திய பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, அலாஸ்காவில் புதினுடனான சந்திப்பிற்குப் பிறகு அமெரிக்கா- இந்தியா உறவுகள் மேலும் மோசமடையக்கூடும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

வாஷிங்டனின் வில்சன் மையத்தின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன், “எந்த ஒப்பந்தமும் அறிவிக்கப்படாததால், சந்திப்பு சரியாக நடக்கவில்லை என்று தெரிகிறது. இப்போது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பதற்றங்கள் மேலும் அதிகரிக்கக் கூடும்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா-அமெரிக்க உறவுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்தியாவின் மூலோபாய சுயாட்சியை டிரம்ப் புறக்கணித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிரம்பின் இந்தக் கொள்கைக்குப் பிறகு, அமெரிக்காவுடனான தனது உறவுகளை மறுபரிசீலனை செய்வது குறித்து இந்தியா யோசிப்பது அவசியமானது.

“இப்போது ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவை நம்ப வேண்டாம் என்று நாங்கள் ஏற்கனவே உங்களை (இந்தியா) எச்சரித்திருந்தோம் என்று கூறுகின்றன,” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் இணைப் பேராசிரியர் அரவிந்த் யெலேரி பிபிசியிடம் கூறினார்.

“இரு நாடுகளும் இப்போது இந்தியாவை ஆதரிப்பது போல் தெரிகிறது. இரண்டு நாடுகளும் மூலோபாய சுயாட்சி இந்தியாவின் உரிமை என்று கூறியுள்ளன. அமெரிக்கா அதைப் புறக்கணிக்க முடியாது. யாரிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும், யாரிடமிருந்து வாங்கக்கூடாது என்பதை முடிவு செய்யும் முழு உரிமையும் இந்தியாவிற்கு உள்ளது” என்று அவர் கூறுகிறார்.

ஒருபுறம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மறுபுறம் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் வசித்த இந்தியர்கள் அமிர்தசரஸில் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவத்தை அரவிந்த் யெலாரி நமக்கு நினைவூட்டுகிறார்.

“இது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நம்பிக்கையின்மை தொடர்பான விஷயம் அல்ல. இது இந்தியாவின் நம்பிக்கைக்கு ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. இதுபோன்ற சூழ்நிலைகளில், அதிலிருந்து வெளியேறுவதற்கான வழி என்னவென்று எங்களுக்குத் தெரியும்” என்று அவர் கூறுகிறார்.

“ஆனால் இத்தகைய ஒரு அதிர்ச்சி ஏற்படும்போது, மீள்வதற்கு மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது. டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அவரது நடவடிக்கைகள், இந்தியாவின் அமெரிக்கக் கொள்கைகளுக்கு சவால்களை ஏற்படுத்தத் தொடங்கின. இப்போது வரி தொடர்பான மிரட்டல்களுக்குப் பிறகு, அவை இன்னும் அதிகமாகிவிட்டன” என்று அரவிந்த் யெலாரி கூறுகிறார்.

ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுமா?

பட மூலாதாரம், Mikhail Svetlov/Getty Images

படக்குறிப்பு, வரிகள் குறித்த டிரம்பின் அணுகுமுறை இந்தியாவை ரஷ்யாவின் பக்கம் செல்ல வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தற்போதைய சூழ்நிலையில், இந்தியா அமெரிக்காவை விட்டு விலகி ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் பழமையானவை. நீண்ட காலத்திற்கு, இந்தியா மூலோபாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ரஷ்யாவை பெரிதும் நம்பியிருந்தது.

ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா அமெரிக்காவுடனான தனது உறவுகளை வலுப்படுத்தத் தொடங்கியது. பொருளாதார தாராளமயமாக்கலில் இந்தியா பெரிதும் பயனடைந்தது. அமெரிக்காவிடமிருந்து புதிய தொழில்நுட்பத்தையும் பெற்றது.

இந்திய நிபுணர்கள்/வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் வேலைகள் கிடைத்தன. ஏராளமான இந்திய மாணவர்கள் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர்.

ஆனால் இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் சமீபத்திய நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்தியா மீண்டும் ரஷ்யாவின் பக்கம் சாயக்கூடும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், சில நிபுணர்கள் ரஷ்யா அமெரிக்காவிற்கு மாற்றாக இருக்க முடியாது என்று கூறுகிறார்கள்.

வெளியுறவு மற்றும் மூலோபாய விவகாரங்களை ஆராயும் ஒரு அமைப்பான அனந்தா மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சி, “ரஷ்யா தன்னை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது. இப்போது ரஷ்யாவிடம் என்ன இருக்கிறது? ரஷ்யாவின் பக்கம் சாய்வதால் இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்? அணு ஆயுதங்களும் எண்ணெயும் மட்டுமே. ரஷ்யாவிடம் புதிய தொழில்நுட்பம் இல்லை, அது அதன் பொருளாதாரத்தை அழித்துவிட்டது. ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுவதால் இந்தியாவுக்கு இனி எந்தப் பயனும் இல்லை” என்று கூறினார்.

ரஷ்யா இப்போது முழுமையாக சீனாவைச் சார்ந்துள்ளது என்றும், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்னையால் பதற்றம் அதிகரித்துள்ளது என்றும் இந்திராணி பாக்சி கூறுகிறார்.

“அதனால்தான் இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுவதற்கு முன்பு பல முறை யோசிக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

சீனாவுடன் மோதல் ஏற்பட்டால் ரஷ்யா வெளிப்படையாக இந்தியாவை ஆதரிக்கும் என்று சொல்ல முடியாது என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக இந்திராணி பாக்சி கூறுகிறார்.

“வரிகளை விதிப்பதன் மூலம், எந்த நாடும் யாருக்கும் எதிரியாகாது. மூலோபாய மற்றும் தந்திரோபாய உறவுகள் வரிகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. இந்தியாவில் வரிகள் மிக அதிகம். அப்படியென்றால், இது மற்ற நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை மோசமாக்கியுள்ளதா?” என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.

இந்தியா மீதான அமெரிக்காவின் அதிக வரிகள் இந்தியாவிற்கு ஒரு ‘எச்சரிக்கை மணி’ என்று இந்திராணி பாக்சி கூறுகிறார். இந்தியா இப்போதே விழித்தெழுந்து அதன் பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டும்.

“வெளிநாடுகளுடனான நமது வணிகம் அதிகரிக்கும் வகையில் இந்தியா வரிகளைக் குறைக்க வேண்டும். இந்தியாவில் அதிக அந்நிய முதலீடு இருக்க வேண்டும், வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

1991ஆம் ஆண்டின் பொருளாதார சீர்திருத்தங்களைப் போன்ற நடவடிக்கைகளை இந்தியா எடுக்க, இது மீண்டும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் நம்புகிறார்.

உலகின் பிற பகுதிகளில் இதன் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Andrew Kravchenko/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, ரஷ்யா-யுக்ரேன் போரின் எதிர்காலம் குறித்து விவாதிக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி திங்களன்று அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கிறார்.டிரம்ப் மற்றும் புதின் இடையேயான சந்திப்புக்குப் பிறகு, யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் அணுகுமுறை மென்மையாக மாறுமா என்பது மற்றொரு பெரிய கேள்வியாக எழுகிறது.

ஏனென்றால், ஜெலென்ஸ்கி க்கும் புதினுக்கும் இடையே நேரடி உரையாடல் இருக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் அவர் இதை சூசகமாகக் தெரிவித்தார்.

புதினின் அமெரிக்க விஜயமும் டிரம்புடன் அவர் பேசியதும், மிக முக்கியமான ஒரு முன்னேற்றம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருப்பினும், ரஷ்யா-யுக்ரேன் போர்நிறுத்தம் தொடர்பாக முதல் சந்திப்பிலேயே எந்த நேர்மறையான முடிவையும் எதிர்பார்க்க முடியாது என்பதை முழு உலகமும் அறிந்திருந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஏனென்றால், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நடக்கும் யுக்ரேன் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் யுக்ரேன் அதிபர் கலந்து கொள்ளாத போது, எந்தவொரு முக்கிய முடிவையும் எப்படி எடுக்க முடியும்?

யுக்ரேனின் இறையாண்மைக்கான தங்களது அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் வலியுறுத்தி ஐரோப்பிய தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். எதிர்காலத்தில் நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் யுக்ரேன் எவ்வாறு இணையும் என்பதை ரஷ்யாவால் தீர்மானிக்க முடியாது என்று இந்த நாடுகள் தெரிவித்தன.

யுக்ரேனில் “நீதி மற்றும் நீடித்த அமைதி” நிலைநாட்டப்படும் வரை ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தம் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் போன்ற தலைவர்கள் டொனால்ட் டிரம்பின் புதினை சந்திக்கும் முயற்சியைப் பாராட்டினாலும், எந்தவொரு பேச்சுவார்த்தையும் யுக்ரேனுக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்பதை அவர்கள் தெளிவாகக் கூறினர்.

பேச்சுவார்த்தையில் யுக்ரேனைச் சேர்க்க வேண்டும் என்ற டிரம்பின் முன்மொழிவை ஜெலென்ஸ்கி வரவேற்றார், ஆனால் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்ய ஐரோப்பாவின் பங்கேற்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) அமெரிக்கா செல்வதாக ஜெலென்ஸ்கி கூறினார். டிரம்புடனான ஒரு ‘நீண்ட மற்றும் பயனுள்ள’ உரையாடலுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்ததாகவும், யுக்ரேனின் எதிர்கால பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளில் அமெரிக்காவின் பங்கேற்பு குறித்து தனக்கு ‘நேர்மறையான சமிக்ஞைகள்’ கிடைத்ததாகவும் அவர் கூறுகிறார்.

இருப்பினும், டிரம்பின் சமீபத்திய கருத்துகள் யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கவலைகளை எழுப்பியுள்ளது. டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸில் அளித்த பேட்டியில், ரஷ்யா மற்றும் யுக்ரேனின் சக்தியை ஒப்பிட்டு, “ரஷ்யா மிகப் பெரிய சக்தி, ஆனால் யுக்ரேன் அப்படி இல்லை, எனவே ஜெலென்ஸ்கி ‘சமரசம்’ செய்ய வேண்டியிருக்கும்” என்று கூறினார்.

ஒரு வகையில், இது ஐரோப்பிய தலைவர்களுக்கு ஒரு சமிக்ஞையாகும். ஏனெனில் டிரம்ப் ரஷ்யாவிடமிருந்து எந்த உத்தரவாதத்தையும் பெற முடியாது, ஆனால் யுக்ரேன் விட்டுக்கொடுக்க வேண்டுமென யுக்ரேன் மீது அழுத்தம் கொடுக்க முடியும்.

டிரம்ப்-புதின் சந்திப்புக்குப் பிறகு ஐரோப்பியத் தலைவர்களின் அறிக்கைகள், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. ‘போரில் வென்ற யுக்ரேன் பகுதிகளை ரஷ்யா வைத்துக்கொள்ள அனுமதித்தால் மட்டுமே அமைதியை அடைய முடியும்’ என்று டிரம்ப் ஒரு நிபந்தனையை விதிக்க முடியும். ஆனால் ஐரோப்பிய நாடுகள் அதற்கு ஒருபோதும் உடன்படாது.

இரண்டாவது முக்கியமான பிரச்னை, நேட்டோவிற்குள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான மோதல். இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஐரோப்பாவின் பாதுகாப்புச் செலவை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். ஐரோப்பா, அதன் பாதுகாப்புச் செலவுகளுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டியிருக்கும் என்று அவர் பலமுறை கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள், தங்கள் குடிமக்களின் பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்வைப் பேணிக் கொள்ளும் நாடுகளாக இருந்துகொண்டு, பாதுகாப்புச் செலவை அமெரிக்காவின் மீது சுமத்துவது இனியும் நடக்காது என்று டிரம்ப் கூறுகிறார்.

ஐரோப்பா-அமெரிக்க உறவுகளில் இனி என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ரஷ்யாவுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் முதலில் யுக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிபந்தனையுடன் வர வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்காவின் தெளிவான நிலைப்பாடு என்னவென்றால், அது நேட்டோ உறுப்பினராக இருந்தாலும், இனி செலவை ஏற்காது; ஐரோப்பாவே செலவை ஏற்க வேண்டும்.

மறுபுறம், ஐரோப்பிய தலைவர்கள் ரஷ்யா-யுக்ரேன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் யுக்ரேன் இதில் சமரசம் செய்து கொள்ள வேண்டியதில்லை, போர் நிறுத்தத்திற்கான ரஷ்யாவின் ஒவ்வொரு நிபந்தனையும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

ரஷ்யா ஆக்கிரமித்துள்ள யுக்ரேனின் பகுதிகளை ரஷ்யாவிற்கே வழங்க வேண்டும் என்று புதின் வலியுறுத்தி வருகிறார். இந்த நிபந்தனையை யுக்ரேன் ஏற்றுக்கொள்வது கடினம். அதேசமயம், இந்த விஷயத்தில் சலுகைகளை வழங்குவதன் மூலம் யுக்ரேன் ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.

ரஷ்யா ஒரு நாட்டின் நிலத்தை போரின் மூலம் கைப்பற்றியுள்ளதாக இந்திராணி பாக்சி கூறுகிறார், “அவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்களது நிலத்தின் மீதான உரிமையை எந்த இறையாண்மை கொண்ட நாடும் (யுக்ரேன்) எவ்வாறு கைவிட முடியும்?” என அவர் கேள்வியெழுப்புகிறார்.

இதற்கிடையில், ஐரோப்பா இப்போது அமெரிக்காவுடனான தனது உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று அரவிந்த் யெலேரி கூறுகிறார்.

ஐரோப்பா இனி ஒரு ‘ஸ்விங் மாகாணம்’ (Swing state) போல நடந்து கொள்ள முடியாது என்று அவர் கூறுகிறார்.

“அது இந்தியா, சீனா மற்றும் பிற வளர்ந்து வரும் நாடுகளுடனான தனது உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.”

ஒருவேளை இந்த யோசனைக்கான பணிகள் ஐரோப்பாவில் தொடங்கியிருக்கலாம். சமீபத்தில் பிரிட்டன் இந்தியாவுடன் ஒரு எஃப்டிஏ (சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்) கையெழுத்திட்ட விதம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு