காணொளி: கமுதி கோட்டை கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுவது ஏன்? சுவாரஸ்ய வரலாறுகாணொளிக் குறிப்பு, வட்ட வடிவ கமுதி கோட்டையின் சுவாரஸ்ய வரலாறுகாணொளி: கமுதி கோட்டை கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுவது ஏன்? சுவாரஸ்ய வரலாறு

57 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தக் கமுதிக் கோட்டையை யார் கட்டியது என்று பார்த்தால், ராமநாதபுரம் ராஜாவாக இருந்த முத்து விஜயரகுநாத சேதுபதிதான். பாம்பன் கோட்டையும், செங்கமடைக் கோட்டையும்கூட அவரால்தான் கட்டப்பட்டன. பாம்பன் கோட்டை முழுமையாக அழிந்துவிட்டது. இந்தக் கமுதிக் கோட்டையின் பெரும் பகுதி அழிந்துவிட்டாலும், அதன் பல பகுதிகள் நமக்குக் காணக் கிடைக்கின்றன.

ராமநாதபுரம் கமுதியில், அந்த நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது வட்ட வடிவமான இந்தக் கோட்டை. கட்டப்பட்டு சுமார் 300 ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்தக் கோட்டை பல சுவாரஸ்யமான கதைகளைக் கொண்டது.

ராமநாதபுரம் நாட்டை அட்சிசெய்த மன்னர்களில் கிழவன் சேதுபதிக்கு அடுத்ததாக குறிப்பிடத்தக்க மன்னர்களில் ஒருவராக இருந்தவர் முத்து விஜய ரகுநாத சேதுபதி. ராமநாதபுரம் நாட்டின் நிர்வாகத்தை சீர்செய்ததுடன், அதன் ராணுவப் பாதுகாப்பையும் வலுப்படுத்தியவர் இவர்தான். இவருடைய காலகட்டத்தில்தான் ராமநாதபுரம் அரண்மனையைச் சேர்ந்த ராமலிங்க விலாசத்தின் சுவர்கள் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன. இவருடைய காலகட்டத்தில்தான் ராமேஸ்வரம் கோவிலின் புகழ்பெற்ற மூன்றாவது பிரகாரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

முத்து விஜய ரகுநாத சேதிபதி மன்னரானபோது, ஏற்கனவே திருப்பத்தூர், காளையார் கோவில், மானாமதுரை, அனுமந்தக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கோட்டைகள் இருந்தன. முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னரான பிறகு, ராமநாதபுரம் நாட்டின் வலிமையை அதிகரிப்பதற்காக மூன்று இடங்களில் சிறிய கோட்டைகளைக் கட்டினார். இந்தக் கோட்டைகள், ராஜசிங்கமங்கலம், பாம்பன், கமுதி ஆகிய இடங்களில் கட்டப்பட்டன.

கமுதி கோட்டையை அக்கால வழக்கப்படி செவ்வக வடிவில் கட்டப்படாமல் வட்டவடிவில் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையை பிரான்ஸ் நாட்டு பொறியாளர் ஒருவரது உதவியுடன் மன்னர் கட்டியதாகக் குறிப்பிடப்பட்டாலும் அந்தப் பொறியாளரின் பெயர் ஏதும் கிடைக்கவில்லை. குண்டாற்றின் வடக்குக் கரையில் பாறைகள் நிறைந்த பகுதியில் இந்தக் கோட்டை கட்டப்பட்டது.

இந்தக் கமுதிக் கோட்டையைப் பொறுத்தவரை, செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு கோட்டை. ஆனால், அந்தக் காலகட்டத்தில் பலர் இதனைக் கற்கோட்டை எனக் கருதினார்கள். என்ன காரணம்னா செங்கற்கற்களால் கோட்டை கட்டப்பட்ட பிறகு, இங்கே கிடைக்கக்கூடிய கருங்கற்களை வெட்டி எடுத்து வெளிப்புறத்தில் பூசியிருக்கிறார்கள். தூரத்திலிருந்து பார்க்கும்போது கல்லால் கட்டப்பட்ட கோட்டையைப் போலக் காட்சியளித்திருக்கிறது. கால ஓட்டத்தில் அந்த கருங்கற்கள் எல்லாம் உதிர்ந்துவிட்ட நிலையில் இது செங்கல் கோட்டை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கான செங்கற்கற்கள் உள்ளேயே செய்யப்பட்டிருக்கின்றன. கோட்டை பாதுகாப்பாகவே இருக்கிறது. கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட இடம் அகழியைப் போல காட்சியளிக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இக்கோட்டையில் ஆயுத கிடங்குகள் அமைத்து போர் வீரர்களுக்கு ஆயுத பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்ததாக மருது சகோதரர்கள் இங்கு சில காலம் தங்கி விட்டு சென்றதாவும் தமிழக தொல்லியல் துறையின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1795வாக்கில் ராமநாதபுரம் சேதுபதியாக இருந்த முத்துராமலிங்க சேதுபதி, கிழக்கிந்தியக் கம்பனிக்கு ஒத்துழைக்காத நிலையில், ராமநாதபுரம் மீது கிழக்கிந்தியக் கம்பனி தாக்குதல் நடத்தியது. இதில் ராமநாதபுரம் கைப்பற்றப்பட்டது. இதற்குப் பிறகு, பொதுமக்கள் அவ்வப்போது கம்பனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுவந்தனர். 1799ஆம் ஆண்டு ஏப்ரலில் மயிலப்பன் என்பவரது தலைமையில் உருவான கிளர்ச்சி சில நாட்களுக்குப் பிறகு முறியடிக்கப்பட்டது. அந்தத் தருணத்தில் நடந்த சண்டையில் கமுதிக் கோட்டை முக்கியப் பங்கு வகித்தது. அதற்குப் பிறகு இந்தக் கோட்டை கிழக்கிந்தியக் கம்பனி வசம் முழுமையாக வந்தது.

கமுதிக் கோட்டையைப் பொறுத்தவரை அதனை கட்டபொம்மனோடு தொடர்புபடுத்துகிறார்கள். ஆங்கில அதிகாரிகள் கட்டபொம்மனை பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து ராமநாதபுரத்திற்கு வரச்சொல்கிறார்கள். அந்த சமயத்தில் கட்டபொம்மன் கமுதிக் கோட்டையில் தங்கிச் சென்றதாக சில வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. தமிழகத் தொல்லியல் துறையின் குறிப்புகளும் அதனைச் சொல்கின்றன. வேறு சில வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், லூசிங்டன் கலெக்டராக இருந்தபோது கட்டபொம்மன் அவரைச் சந்திக்க வந்தார்., படை பரிவாரங்களோடு வந்தார். லூசிங்டன் மூன்று பேருக்கு மிகாமல்தான் தன்னைச் சந்திக்க வர வேண்டும் என்கிறார். இந்தக் கோரிக்கையை கட்டபொம்மன் ஏற்க மறுத்துவிடுகிறார். லூசிங்டனைச் சந்திக்காமலேயே சென்றுவிடுகிறார் என சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தொடர்புகளால், இந்தக் கோட்டையை கட்டபொம்மன் கோட்டை என்று குறிப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கட்டபொம்மனோடு தொடர்புபடுத்தப்படும் கதை என்பது மிகக் குறுகியதாகத்தான் இருக்கிறது.

ராமநாதபுரத்தை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு 1803 – 1804ஆம் ஆண்டுகளில் அந்த நாட்டில் இருந்த கோட்டைகள் அனைத்தும் இடித்துத் தள்ளப்பட்டன. அந்தத் தருணத்தில் இந்தக் கோட்டையின் பெரும் பகுதியும் இடித்துத் தள்ளப்பட்டது. எஞ்சியிருந்த பகுதிகள் 1877ஆம் ஆண்டில் குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.

இப்போது, பழைய யுத்தத்தின் சத்தத்தை எதிரொலித்தபடி கோட்டைச் சுவர்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன.

முழு விவரம் காணொளியில்..

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு