Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இஸ்ரேல் அதிபராக பதவியேற்குமாறு வந்த அழைப்பை ஐன்ஸ்டீன் நிராகரித்தது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஐன்ஸ்டீனுக்கு இஸ்ரேலுடன் ஆழமான தொடர்பு இருந்தது.எழுதியவர், ஃபெலிபே வான் டியூர்சன்பதவி, பிபிசி நியூஸ் பிரேசில், புளோரியானோபோலிஸ்18 ஆகஸ்ட் 2025, 04:56 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ரஷ்யப் பேரரசில் பிறந்த பிரிட்டிஷ் விஞ்ஞானி சைம் வெய்ஸ்மன் (1874-1952), சர்வதேச அளவில் புகழ்பெற்ற உயிரி வேதியியலாளராக இருந்தார்.
1910களில், முதல் உலகப் போரின் போது பிரிட்டன் பரவலாகப் பயன்படுத்திய கார்டைட் என்ற வெடிபொருள் தயாரிப்பதற்கு தேவையான அசிட்டோனை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு அவரது கண்டுபிடிப்புகள் முக்கிய பங்கு வகித்தன.
வெய்ஸ்மனின் அரசியல் வாழ்க்கை இன்னும் குறிப்பிடத்தக்கது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவான சியோனிச இயக்கத்தின் பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தார். இந்த இயக்கம், பாலத்தீனத்தில் ஒரு யூத நாட்டை உருவாக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தது.
யூத இன அழிப்பின் (Holocaust) கொடுமைகளைத் தொடர்ந்து, 1947இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலத்தீனத்தை ஒன்று யூதர்களுக்கு, மற்றொன்று அரேபியர்களுக்கு என்று இரண்டு நாடுகளாக பிரிக்க ஒப்புதல் அளித்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இன்று வரை பாலத்தீனம் ஒரு நாடாக உருவாகவில்லை, இருப்பினும் 140க்கும் மேற்பட்ட நாடுகள் அதை தனிநாடாக அங்கீகரிக்கின்றன.
செப்டம்பரில், அடுத்த ஐநா பொதுச் சபை விவாதங்களின் போது பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக சில நாடுகள் அறிவித்துள்ளதால், இந்த எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் இஸ்ரேல், 1948இல் தனது சுதந்திரத்தை அறிவித்தது. 1949இல், சியோனிச கொள்கைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வெய்ஸ்மன் புதிய அரசின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருப்பினும், இஸ்ரேல் ஆளும் அதிகாரம் பிரதமரிடம் உள்ள ஒரு நாடாளுமன்றக் குடியரசாக இருப்பதால், இந்தப் பதவி பெரும்பாலும் சம்பிரதாயம் மற்றும் அடையாள ரீதியாக முக்கியத்துவம் கொண்டதாகவே இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெய்ஸ்மான் (இடது) மற்றும் ஐன்ஸ்டீன்: இருவரும் விஞ்ஞானிகள் மற்றும் சியோனிஸ்டுகள்.1952-இல், தனது 77 வயதில் வெய்ஸ்மன் மரணமடைந்தார்.
இஸ்ரேலுக்கு புதிய அதிபர் தேவைப்பட்டார்.
பதவிக்கு பொருத்தமானவராகவும், குடியேற்றத்தை ஊக்குவிக்கக் கூடியவராகவும் இருக்கும் புகழ்பெற்ற யூதர்களை அந்தப் பதவிக்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை பரிந்துரைத்தது.
பிரதமர் டேவிட் பென்-குரியனின் அரசு, மற்றொரு விஞ்ஞானியை பதவிக்கு அழைக்க முடிவு செய்தது.
உடனடியாக, உலகின் மிகப் பிரபலமான விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை மீது அவர் கவனம் திரும்பியது.
‘அதிபருக்கான திறன்கள் என்னிடம் இல்லை’
அமெரிக்காவிற்கான இஸ்ரேல் தூதர் அப்பா எபான், பென்-குரியன் சார்பாக ஐன்ஸ்டீனுக்கு கடிதம் எழுதினார்.
1933இல், அடால்ஃப் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்து ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான துன்புறுத்தல் தொடங்கியது முதலே ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் வாழ்ந்துவந்தார்.
“இஸ்ரேல் ஒரு சிறிய அரசு,” என்று எபான் கடிதத்தில் எழுதினார். “ஆனால், யூத மக்கள் பண்டைய மற்றும் நவீன காலங்களில் உருவாக்கிய உயர்ந்த ஆன்மீக மற்றும் அறிவுசார் மரபுகளை பிரதிபலிக்கும் மாபெரும் அரசாக உயர முடியும்.”
ஐன்ஸ்டீன் தனது விஞ்ஞான வாழ்க்கையை விட்டுவிட வேண்டிய அவசியமில்லை என்றும், ஆனால் நியூ ஜெர்சியின் பிரின்ஸ்டனின் ‘இன்ஸ்டிடியூட் ஃபார் அட்வான்ஸ்ட் ஸ்டடியிலிருந்து’ இஸ்ரேலுக்கு குடிபெயர வேண்டும் என்றும் எபான் குறிப்பிட்டார்.
73 வயதான ஐன்ஸ்டீன் மரியாதையுடன் பதிலளித்தார். அழைப்பு தன்னை மகிழ்ச்சியடையச் செய்தாலும், அதை ஏற்க முடியாது என்று கூறினார்.
ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக் கழகத்தின் ஐன்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தின் பாதுகாவலர் ஜீவ் ரோசன்கிரான்ஸ், ஐன்ஸ்டீனின் கடிதங்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை கொண்ட ‘தி ஐன்ஸ்டீன் ஸ்கிராப்புக்’ என்ற நூலில், ஐன்ஸ்டீன் தனக்கு அந்த பதவிக்கு தேவையான திறன்கள் இல்லை என்று குறிப்பிட்டதாக கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டேவிட் பென்-கூரியன் (வலது) ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை (இடது) இஸ்ரேலின் அதிபராக்க விரும்பினார், ஆனால் அதே நேரத்தில் அஞ்சினார்.”இஸ்ரேல் அரசின் இந்த அழைப்பு என்னை நெகிழ வைக்கிறது, அதேநேரத்தில் இதை ஏற்க முடியாததால் வருத்தமாகவும் வெட்கமாகவும் உணர்கிறேன்,” என்று ஐன்ஸ்டீன் பதிலளித்தார்.
“எனது வாழ்நாள் முழுவதும் புலப்படுத்த முடியாத பொருட்களுடன் பணியாற்றியுள்ளேன். எனவே, மக்களுடன் திறம்பட பழகவும், அதிகாரப்பூர்வ கடமைகளை நிறைவேற்றவும் எனக்கு இயல்பான திறனோ அனுபவமோ இல்லை.
இந்த காரணங்களால், இந்த உயர்ந்த பதவியின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு நான் பொருத்தமற்றவன். உலக நாடுகளிடையே நமது நிலையற்ற நிலையை முழுமையாக உணர்ந்த பிறகு, யூத மக்களுடனான எனது உறவு மிக வலுவான மனித தொடர்பாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலைகள் என்னை இன்னும் அதிகமாக வருத்தமடையச் செய்கின்றன.”
ஐன்ஸ்டீனைப் பற்றிய பல புத்தகங்களை எழுதிய ஆலிஸ் கலாப்ரைஸின் கூற்றுப்படி, ஐன்ஸ்டீனின் மறுப்பால் பென்-குரியன் நிம்மதியடைந்தார்.
“கொள்கைகள் பற்றிய ஐன்ஸ்டீனின் வெளிப்படையான பேச்சுகள், அவரது மனசாட்சிக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிராக இருக்கலாம் என்று அவர் அஞ்சினார்,” என்று அவர் ஆன் ஐன்ஸ்டீன் என்சைக்ளோபீடியா (An Einstein Encyclopedia ) என்ற நூலில் எழுதினார்.
பென்-குரியன், தனது தலைமைப் பணியாளர் யிட்ஸாக் நவோனிடம் (1978-1983 இல் இஸ்ரேல் அதிபராக இருந்தவர்) கூறியதாவது: “அவர் சரி என்று சொன்னால் என்ன செய்வது என்று சொல்லுங்கள்.”
“இந்த பதவியை அவருக்கு வழங்க முன்வரத்தான் வேண்டும், ஏனெனில் அதை செய்யாமல் இருக்க முடியாது. ஆனால் அவர் ஏற்றால், நமக்கு பிரச்னைகள் வரும்.”
ஐன்ஸ்டீனும் இஸ்ரேலும்
பதவியை ஏற்கவில்லை என்பதற்காக, ஐன்ஸ்டீன் இஸ்ரேலின் அரசியல் போக்கை பற்றி அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார் என்பது பொருளல்ல.
மாறாக, “ஐன்ஸ்டீன் சியோனிச இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார். 1921 முதல், வெய்ஸ்மனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவர், பாலத்தீனத்தில் அரேபியர்களுக்கும், யூதர்களுக்கும் தேசிய உரிமைகளுடன் இரு-நாடுகள் கொள்கையை ஆதரிக்கும் இடதுசாரி சியோனிசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்,” என்று ரியோ டி ஜெனீரோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், சியோனிசம் மற்றும் இஸ்ரேல்-பாலத்தீன ஆய்வாளருமான மைக்கேல் கெர்மன் விளக்குகிறார்.
ஐன்ஸ்டீனின் கடிதங்கள் இதை புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.
1947இல், இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, ஐன்ஸ்டீன் இந்தியாவின் புதிய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
இந்தியாவின் சாதனையைப் பாராட்டிய அவர், “தவறு என தெளிவாக் தெரிந்த ஒன்றை சரிசெய்வதற்கான ஒரு வழி என கருதியதால் நான் சியோனிச கொள்கையை ஏற்றுக்கொண்டேன்” என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போது, சியோனிசத்திற்காக பல தசாப்தங்களாக போராடிய ஐன்ஸ்டீன் திருப்தியடைந்திருக்கலாம். ஆனால், இஸ்ரேலின் தீவிரவாத பிரிவினரால் நடத்தப்பட்ட அநியாயங்களை அவர் கண்டித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேலுடன் அதன் சுதந்திரத்திற்கு முன்பே ஐன்ஸ்டீனுக்கு நெருக்கமான உறவிருந்தது1948 இறுதியில், ஐன்ஸ்டீனும் மற்ற யூத அறிவுஜீவிகளும், நியூயார்க் டைம்ஸுக்கு ஒரு திறந்த கடிதம் எழுதினர், அரசியல்வாதி மெனாக்கெம் பெகின் அந்த நாட்டிற்கு மேற்கொண்ட பயணத்தை விமர்சித்தனர்.
பெகின், இஸ்ரேலுக்கு முந்தைய காலத்தில், பாலத்தீனர்கள் மற்றும் பிரிட்டிஷாருக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய இர்குன் என்ற சியோனிச ராணுவ அமைப்பின் தலைவராக இருந்தார்.
அதே ஆண்டு, இர்குன் அமைப்பு ஜெருசலேமுக்கு அருகிலுள்ள டெய்ர் யாசின் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பாலத்தீன பொதுமக்களை—ஆண்கள், பெண்கள், குழந்தைகள்—படுகொலை செய்தது.
பின்னர், ஹெருட் (எபிரேய மொழியில் “சுதந்திரம்” என்று பொருள்) என்ற புதிய கட்சியை இர்குன் உருவாக்கியது.
“இந்த கட்சியின் தலைவர் மெனாக்கெம் பெகினின் அமெரிக்க பயணம், இஸ்ரேலில் வரவிருக்கும் தேர்தல்களில் அமெரிக்க ஆதரவு தனக்கு இருக்கும் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக வெளிப்படையாக திட்டமிடப்பட்டுள்ளது,” என்று நியுயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு எழுதப்பட்ட கடிதம் கூறியது.
ஹெருட் கட்சி “நாஜி மற்றும் பாசிஸ்ட் கட்சிகளுடன் அமைப்பு, முறை, அரசியல் தத்துவம் மற்றும் சமூக ஈர்ப்பு ஆகியவற்றில் நெருக்கமாக தொடர்புடையது” என்று கடிதத்தின் முதல் பத்தியிலேயே கடிதத்தை எழுதியவர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர்.
2024இல், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (பி.டி.) இஸ்ரேலின் காஸா பகுதியில், ஹமாஸுக்கு எதிரான போரை ஹோலோகாஸ்ட்டுடன் ஒப்பிட்டபோது பிரேசிலின் இடதுசாரி சமூக ஊடக பயனர்கள் இந்த கடிதத்திற்கு புத்துயிர் அளித்து வெளியிட்டன.
இந்த வாதங்கள், சூழலுக்கு வெளியே பயன்படுத்தப்பட்டால், ஐன்ஸ்டீன் இஸ்ரேலுக்கு எதிரானவர் என்று தோன்றலாம்.
“தங்களது சொந்த விருப்பத்திற்காக அவரை உரிமை கொண்டாட விரும்புவோரின் நோக்கங்களுக்கு ஏற்ப ஐன்ஸ்டீன், சியோனிசம் மற்றும் இஸ்ரேலின் விமர்சகராகவோ, அல்லது ஆதரவாளராகவோ சித்தரிக்கப்பட்டார்,” என்று பிரிட்டன் வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் க்ரோகாட் தனது ஐன்ஸ்டீன் ஆண்ட் தி ட்வென்டியத் சென்சுரி பாலிடிக்ஸ் (Einstein and the Twentieth-Century Politics) புத்தகத்தில் கூறினார்.
க்ரொக்கட் பார்வையில், இஸ்ரேல் நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஐன்ஸ்டீனின் கண்ணோட்டத்தில் ஒரு அடிப்படை கூறாக, பரந்த மதிப்பீட்டிற்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பும் இருந்தது.
“முக்கியமாக, தேசியவாதத்துக்கு எதிரான வெறுப்பும், சர்வதேசவாதத்துக்கான அர்ப்பணிப்பும் அவரது சியோனிச கண்ணோட்டத்துக்கும் இஸ்ரேலுக்கான நிலைப்பாட்டுக்கும் எப்போதும் ஒரு எல்லையாக இருந்தன,” என்று அவர் விளக்கினார்.
இதுதான் நாட்டின் அதிபராக இருக்கும்படி 1952-ல் அழைக்கப்பட்ட ஐன்ஸ்டீன்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஐன்ஸ்டீனை நினைவுகூர்ந்து, இஸ்ரேல் அரசு 1968ஆம் ஆண்டு அவரது உருவம் கொண்ட 5 லீரா பணத்தை வெளியிட்டது.”சில வருடங்களுக்கு முன்னர் நடந்த கொடூரமான யுத்தத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு முறையான சர்வதேச அங்கீகாரத்தை வழங்குவதே இதன் நோக்கமாக இருந்திருக்கலாம்,” என 1948-1949 மோதலை குறிப்பிட்டு சொல்கெர்மன்.
இந்தப் போரில் இஸ்ரேல் அரபு லீக்கை தோற்கடித்து, எதிர்கால பாலத்தீன நாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பாதியை கைப்பற்றியது.
“துரோகிகள்”
வரலாற்றாசிரியர் மைக்கேல் கெர்மன், இஸ்ரேலின் அதிபர் பதவி சம்பிரதாயமான பொறுப்பாக இருந்தாலும், “மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று குறிப்பிடுகிறார்.
“ஐன்ஸ்டீன் யூதராக இருந்ததற்காக மட்டுமல்ல, சியோனிச இயக்கத்துடனும் இஸ்ரேல் உருவாக்கத்திற்கு ஆதரவாகவும் அரசியல் தொடர்புகள் இருந்ததால்தான் அழைக்கப்பட்டார்,” என்று அவர் கூறுகிறார்.
நாட்டின் பிம்பத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் மற்ற குறிப்பிடத்தக்க யூதர்கள் இஸ்ரேலை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக “சம்பிரதாய பதவிகளுக்கு” அழைக்கப்பட்டனர் மற்றும் அழைக்கப்படுகின்றனர் என்பதை அவர் நினைவுகூர்கிறார்,
1990களில், முன்னாள் பிரதம மந்திரி ஷிமோன் பெரெஸ், எழுத்தாளர் ஆமோஸ் ஓஸ் அரசியலில் நுழைய வேண்டும் என்று நேர்காணல்களில் கூறினார்.
1952இல், ஐன்ஸ்டீன் உறுப்பினராக இருந்த பிரிட் ஷாலோம் குழு, சிறுபான்மை கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது, ஆனால் தனிமைப்படுத்தப்படவில்லை என கெர்மன் விளக்குகிறார்.
இந்தக் குழுவில், ஹன்னா ஆரெண்ட், மார்ட்டின் பூபர், கெர்ஷோம் ஷோலெம் போன்ற சர்வேத அளவில் மதிக்கப்பட்ட நேசிக்கப்பட்ட அறிவுஜீவிகள் இருந்தனர்.
பிரிட் ஷலோம் குழுவில் இருந்தவர்களே ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தை நிறுவினர்.
ஆனால், பிரிட் ஷாலோம் உறுப்பினர்கள் இன்றைய இஸ்ரேல் அரசால் துரோகிகள் என கருதப்படுவார்கள் என கெர்மன் நம்புகிறார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நிர்வாகம், இரு-நாடுகள் தீர்வு போன்ற கருத்துகளுக்கு இடமளிக்கவில்லை என்று கெர்மன் கருதுகிறார்.
“நமது காலத்தின் ஐன்ஸ்டீன் யார்? பாலஸ்தீன பகுதிகளின் ஆக்கிரமிப்பு மற்றும் காஸாவில் நடப்பவற்றை விமர்சிக்கும், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் ஆடா யோனாத் இந்தப் பதவியை ஏற்பாரா? மாட்டார் என்று நினைக்கிறேன்.”
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஐன்ஸ்டீன் பதவியை ஏற்காததால், அந்த ஆண்டு இஸ்ரேலின் அதிபராக வரலாற்றாசிரியர் யிட்ஸாக் பென்-ஸ்வி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐன்ஸ்டீனால் விமர்சிக்கப்பட்ட அரசியல்வாதி மெனாக்கெம் பெகின், இஸ்ரேலில் அதிக செல்வாக்கு பெற்றார்.
ஹெருட் கட்சி, பின்னர் பல தசாப்தங்களாக தொழிலாளர் கட்சி அதிகாரத்தில் இருந்த போது முக்கிய பழமைவாத கட்சியாக இருந்தது.
1977-ல் பிரதமராக பதவியேற்ற பெகின், 1983 வரை அந்தப் பதவியில் நீடித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1988இல், லிகுட் என்ற மற்றொரு வலதுசாரி கட்சியில் ஹெருட் இணைந்தது. 2006 முதல், லிகுட் கட்சியின் தலைவராகவும், இஸ்ரேலின் மிக நீண்ட கால பிரதமராகவும் (மூன்று பதவிக் காலங்களில் சுமார் 18 ஆண்டுகள்) பெஞ்சமின் நெதன்யாகு உள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு