‘மூன்று மாதங்களாக மனஉளைச்சல்’ : வக்ஃப் நில சர்ச்சையால் தவிக்கும் தருமபுரி மக்கள்

படக்குறிப்பு, வக்ஃப் நிலங்கள் எனக் கூறி யாரும் தடை கோரியதாக எந்த விவரங்களும் அரசிடம் இல்லை என்கிறார் செட்டிக்கரையில் வசிக்கும் ராமசாமி.எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“என் மகன் +2 முடித்துவிட்டு கல்லூரி செல்ல உள்ளதால், எனக்கு சொந்தமான 4 சென்ட் நிலத்தை விற்க முடிவு செய்தேன். ‘இந்த நிலம் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது’ எனக் கூறி பத்திரப்பதிவை முடக்கிவிட்டனர். இதனால் எங்கள் வாழ்வாதாரமே முடங்கிவிட்டது” எனக் கூறுகிறார், கீதா.

தருமபுரி மாவட்டம், செட்டிக்குளம் ஊராட்சியில் கீதாவை போல சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் நிலங்களின் மீது எந்தவித உரிமையும் கொண்டாட முடியாமல் தவிக்கின்றனர்.

ஆகஸ்ட் 17 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தருமபுரிக்கு வருகை தரவுள்ளதால், அவரிடம் முறையிட உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். செட்டிக்கரை ஊராட்சியில் என்ன பிரச்னை? தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் விளக்கம் என்ன?

தருமபுரி மாவட்டத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் செட்டிக்கரை ஊராட்சி அமைந்துள்ளது. விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்களே இந்தக் கிராமத்தில் பிரதானமாக உள்ளன.

செட்டிக்கரை ஊராட்சியில் டாக்டர் கான் காலனி, பள்ளக்கொல்லை, குரும்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இவற்றில் உள்ள சுமார் 166 ஏக்கர் நிலங்களுக்கு வக்ஃப் வாரியத்தின் வடிவில் சிக்கல் எழுந்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

படக்குறிப்பு, செட்டிக்கரை ஊராட்சியில் உள்ள சுமார் 166 ஏக்கர் நிலங்களுக்கு வக்ஃப் வாரியத்தின் வடிவில் சிக்கல் எழுந்துள்ளது.’மனஉளைச்சலில் தவிக்கிறோம்’

“சுமார் 35 வருடங்களுக்கு முன்பு சபியுல்லா கான் என்பவர் 2000 சதுர அடி அளவுள்ள நிலத்தை சம்பத் என்பவருக்கு விற்றார். அவரிடம் இருந்து என் பெற்றோர் வாங்கினர். அதனை என் பெயருக்கு தானப் பத்திரமாக மாற்றிக் கொடுத்துவிட்டனர்” என்கிறார், செட்டிக்கரை ஊராட்சியை சேர்ந்த கதிரவன்.

தனது நிலத்தைக் கிரயம் செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் சென்ற தனக்கு அதிர்ச்சி காத்திருந்ததாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“வக்ஃப் வாரிய நிலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், பத்திரப்பதிவு முடக்கப்பட்டுள்ளதாக தருமபுரி சார்-பதிவாளர் அலுவலகத்தில் கூறினர். என்னைப் போல கிராமத்தில் உள்ள பலரும் மனஉளைச்சலில் உள்ளனர்” எனவும் கதிரவன் கூறினார்.

பத்திரப்பதிவு முடக்கப்பட்டுவிட்டதால் பலரும் வங்கியில் கடன் பெற முடியாமல் தவிப்பதாகவும் தங்களின் பத்திரத்தை அடமானமும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார், செட்டிக்கரையில் வசிக்கும் ராமசாமி.

இவருக்கு இதே ஊரில் பத்து சென்ட் நிலம் உள்ளது. “வக்ஃப் நிலங்கள் எனக் கூறி யாரும் தடை கோரியதாக எந்த விவரங்களும் அரசிடம் இல்லை. எந்தப் பள்ளிவாசலும் உரிமை கோரவில்லை. பிறகு எப்படி பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப்பட்டது?” எனவும் ராமசாமி கேள்வி எழுப்பினார்.

படக்குறிப்பு, செட்டிக்கரை ஊராட்சியில் டாக்டர் கான் காலனி, பள்ளக்கொல்லை, குரும்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன.ஆர்.டி.ஐ மூலம் அதிர்ச்சி தகவல்

இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தருமபுரி மாவட்ட வட்டாட்சியர் அலுவலத்தில் ராமசாமி மனு கொடுத்துள்ளார். இதற்கு ஜூலை 9 அன்று தலைமையிட துணைத் தாசில்தார் பதில் அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், ‘செட்டிக்கரை ஊராட்சி ‘அ’ பதிவேட்டில் வக்ஃப் வாரிய சொத்து எதுவும் இல்லை’ எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தைக் கிரயம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் ராமசாமி தெரிவித்தார்.

“கணேசன் என்பவரிடம் பத்து சென்ட் நிலத்தை வாங்குவதற்கு முன்தொகை கொடுத்தேன். தருமபுரி சார் பதிவாளர் அலுவலகம் சென்றபோது, வக்ஃப் வாரிய நிலம் எனக் கூறி மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திரண்டு சென்று மனு கொடுத்தனர்” என ராமசாமி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், ‘செட்டிக்கரை கிராமத்தில் 51 சர்வே எண்களில் உள்ள 166 ஏக்கர் நிலத்தை முடக்கிவிட்டனர். மாவட்ட பதிவாளரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. தமிழ்நாடு வக்ஃப் வாரிய இணையதளத்தில் நிலம் தொடர்பாக எந்த விவரங்களும் இல்லை’ எனக் கூறப்பட்டிருந்தது.

‘நிலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவு தடையை நீக்க வேண்டும்’ எனவும் மனுவில் கூறியிருந்தனர்.

ஆனால், செட்டிக்கரை ஊராட்சியில் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் உள்ளதாக 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர். பத்திரப்பதிவுத் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், செட்டிக்கரையில் உள்ள சர்வே எண்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

இதன்பேரிலேயே பத்திரப்பதிவு முடக்கப்பட்டதாக, சார்-பதிவாளர் அலுவலக அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.வக்ஃப் வாரியத்தின் எச்சரிக்கை கடிதம்

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன்மை செயல் அலுவலராக இருந்த பரீதா பானு, 2022, பிப்ரவரி 21 அன்று அனுப்பியுள்ள கடிதத்தில் செட்டிக்கரை ஊராட்சியில் உள்ள 51 சர்வே எண்களைப் பட்டியலிட்டிருந்தார்.

வக்ஃப் சட்டம் 1995ன் பிரிவு 104Aன் கீழ் சொத்துக்களை விற்பனை செய்தல், பரிசு, பரிமாற்றம், அடமானம் வைத்தல் அல்லது மாற்றுவதைத் தடை செய்தல் தொடர்பாக கடிதம் தெரிவிக்கிறது.

கடிதத்தில், 1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் (மத்திய சட்டம் 1908) பிரிவு 22-Aன் கீழ், வக்ஃப் சொத்து தொடர்பான ஆவணங்களில் வாரியத்தின் தடையில்லா சான்று வழங்கப்படாவிட்டால் அவற்றை பத்திரப் பதிவு செய்ய மறுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வக்ஃப் சொத்துகளை வாரியத்தின் அனுமதியின்றி கையகப்படுத்தினால் வக்ஃப் சட்டம் 1995 பிரிவு 52ஏ-வின்படி இரண்டு ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படும் எந்தவொரு குற்றமும் கைது செய்யக்கூடியதாகவும் ஜாமீனில் வெளிவர முடியாததாகவும் இருக்கும் எனவும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

‘வக்ஃப் நிலம் என குறிப்பிடப்படவில்லை’

படக்குறிப்பு, “சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் பயன்பாட்டில் நிலம் இருந்து வந்துள்ளது” எனக் கூறுகிறார், மணிவண்ணன்.செட்டிக்கரை ஊராட்சியில் உள்ள சுமார் 166 ஏக்கர் நிலங்களை சன்னி பிரிவை சேர்ந்த தரணி ஷா முகைதீன் (Darani Sha Mohaideen) என்பவர் வக்ஃப் வாரியத்துக்கு இனாமாக கொடுத்துள்ளதாக வாரியத்தின் கடிதம் கூறுகிறது.

“1863 ஆம் ஆண்டில் வக்ஃப் வாரியத்துக்கு இனாமாக அவர் கொடுத்துள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், 1906 ஆம் ஆண்டில் இருந்து வருவாய்த்துறை ஆவணங்களில் வக்ஃப் நிலம் என எங்கும் குறிப்பிடப்படவில்லை” என்கிறார், செட்டிக்கரை ஊராட்சியை சேர்ந்த மணிவண்ணன்.

“இனாமாக வழங்கப்பட்ட நிலத்தை தரணி ஷா முகைதீனுக்கு பிறகு வந்த அவரது குடும்பத்தார் நிலங்களைப் பிரித்து விற்றிருக்கலாம். இவற்றை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்” எனக் கூறுகிறார், தருமபுரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவர்.

“சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் பயன்பாட்டில் நிலம் இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இதனால், தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டோம். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை” எனக் கூறுகிறார், மணிவண்ணன்.

தருமபுரி மாவட்டத்துக்கு 17 ஆம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் வரவுள்ள நிலையில், அவரிடம் மனு கொடுப்பதற்கு கிராம மக்கள் ஆயத்தமாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

படக்குறிப்பு, இந்தப் பிரச்னை தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் செட்டிக்கரை கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.’மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை’

தருமபுரி வட்டாட்சியர் சவுகத் அலியிடம் பிபிசி தமிழ் பேசியது.

“செட்டிக்கரை ஊராட்சியில் பிரச்னைக்குரிய நிலங்களில் வசிக்கும் மக்களிடம் இருந்து நிலம் தொடர்பான ஆவணங்களைப் பெற்றுள்ளோம். மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

‘பத்திரப்பதிவு செய்யக் கூடாது’ என வக்ஃப் வாரியத்தில் இருந்து கடிதம் வந்ததால் பதிவுகளை முடக்கி வைத்திருந்ததாகக் கூறிய சவுகத் அலி, “இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் தற்போது விரிவாக பேசுவதற்கு வாய்ப்பில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் கூறுவது என்ன?

படக்குறிப்பு, “செட்டிக்கரை ஊராட்சியில் பிரச்னைக்குரிய 166 ஏக்கர் நிலங்களும் தனி நபர்களுக்கு சொந்தமானது அல்ல.” என்கிறார் நவாஸ்கனி.செட்டிக்கரை ஊராட்சி விவகாரம் தொடர்பாக போதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறுகிறார், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் நவாஸ்கனி எம்.பி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நிலம் தொடர்பான விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டிருந்தோம். அங்கிருந்து ஆவணங்கள் பெறப்பட்டன. இதில், சுமார் 60 ஏக்கர் நிலங்கள் வக்ஃப் வாரிய சொத்துகள் அல்ல என்பது தெரியவந்துள்ளது” எனக் கூறினார்.

“அது தனிநபர்களின் சொத்து என வாரியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கும் கடிதம் அனுப்ப உள்ளோம். மீதம் உள்ள சொத்துகளின் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன” என்கிறார், நவாஸ்கனி.

“செட்டிக்கரை ஊராட்சியில் பிரச்னைக்குரிய 166 ஏக்கர் நிலங்களும் தனி நபர்களுக்கு சொந்தமானது அல்ல. சிலர் அதை விற்றிருக்கலாம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

வக்ஃப் வாரிய ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்குமாறு கூறியுள்ளதாகத் தெரிவித்த நவாஸ்கனி, “ஆவணங்களில் உண்மைத்தன்மை இருந்தால் அதற்கு தடையில்லா சான்று கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. அடுத்தவர் நிலத்தை வாரிய நிலமாக உரிமை கொண்டாடுவதற்கு விருப்பம் இல்லை” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “வக்ஃப் வாரிய சொத்துகள், பல்வேறு வகைகளில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்ததால் 2022 ஆம் ஆண்டு பத்திரப்பதிவுத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது” எனக் கூறுகிறார்.

“சில வகையான ஆவணங்கள் முறையாக விற்கப்பட்டது தெரியவந்தால் அவற்றை நீக்கும் பணிகளை மேற்கொள்கிறோம். அதேநேரம், முறைகேடாக விற்கப்பட்டதைக் கண்டறிந்தால் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றன” என்கிறார், நவாஸ்கனி எம்.பி.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு