Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
டிரம்ப்-புதின் சந்திப்பால் இந்தியாவுக்கு என்ன சாதகம்? – வரி விதிப்பில் மாற்றம் இருக்குமா?காணொளிக் குறிப்பு, அலாஸ்காவில் டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லைடிரம்ப்-புதின் சந்திப்பால் இந்தியாவுக்கு என்ன சாதகம்? – வரி விதிப்பில் மாற்றம் இருக்குமா?
48 நிமிடங்களுக்கு முன்னர்
அலாஸ்காவில் டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. அதற்குப் பிறகான பேட்டியில் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது பற்றி டிரம்ப் மீண்டும் பேசியிருக்கிறார். இந்த நிலையில் இந்தியா மீது மீண்டும் வரிகள் விதிக்கப்படுமா என்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.
அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப்-புதின் சந்திப்பின் மீது தான் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் கவனம் இருந்தது.
இந்த சந்திப்பில் ரஷ்யா- யுக்ரேன் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அல்லது ஒப்பந்தம் தொடர்பாகவும் எந்த குறிப்பும் இல்லை.
அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தைகள் பற்றி இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், ” டிரம்ப்-புதின் இடையே நடைபெற்ற உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்களை இந்தியா பாராட்டுகிறது. அடுத்தக்கட்ட நகர்வுகளை பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் மட்டுமே அடைய முடியும். யுக்ரேனில் நடைபெற்று வரும் மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உலகம் விரும்புகிறது.” என்றார்.
தான் விதித்த வரிகளால் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக Fox News தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“ரஷ்யா அதன் எண்ணெய்க்கான முக்கிய வாடிக்கையாளரை இழந்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தின் 40 சதவிகிதத்தை இந்தியா வாங்கி வந்தது. நான் இப்போது இரண்டாம் கட்ட பொருளாதார தடைகளை விதித்தால் அது அவர்களுக்கு மோசமானதாக இருக்கும்” என டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்பின் இந்த கூற்றுக்கு இந்தியா தற்போது வரை எதிர்வினை ஆற்றவில்லை.
டிரம்பின் வரி அறிவிப்பை கடந்தும் ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவது நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பேரல்கள் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது.
டிரம்ப்-புதின் சந்திப்பிற்குப் பிறகு இந்தியா மீதான வரி என்ன?
ஆசிய நாடுகளிலே அதிகபட்சமாக இந்தியா மீது தான் 50% வரியை விதித்துள்ளார் டிரம்ப். இந்த வரி உயர்வு ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து யுரேனியம் மற்றும் உரங்கள் வாங்குகின்றன, இந்தியா மீது மட்டும் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என்று இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
அலாஸ்கா உச்சிமாநாட்டிற்குப் பிறகு இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க வரிகள் என்னவாக இருக்கும் என்பது கேள்வியாக உள்ள நிலையில்,
இந்தியாவிற்கு நிவாரணம் கிடைக்கலாம் என்கிறார் மூலோபாய விவகார வல்லுநரான பிரம்மா செல்லானே.
“அலாஸ்கா பேச்சுவார்த்தை ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மீதான இரண்டாம் கட்ட தடைகளை டிரம்ப் மறுபரிசீலனை செய்ய தூண்டும். சீனா மீதான வரிகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் (டிரம்ப்), ‘இன்று நடந்த விஷயங்களுக்குப் பிறகு நாம் அதைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்’ எனத் தெரிவித்தார். இந்த கருத்தின்படி பார்த்தால், இந்தியா மீதான கூடுதல் 25% வரி உள்ளிட்ட இரண்டாம் கட்ட பொருளாதார தடைகளும் தள்ளி வைக்கப்படலாம்” என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார் பிரம்மா.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டிய பேசிய பிரம்மா, “இது அமெரிக்கா விதித்த காலக்கெடுவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடக்க உள்ளது. இத்தகைய சூழலில் டிரம்ப், தான் பின்வாங்குவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
வாஷிங்டனைச் சார்ந்த வில்சன் சென்டரின் இயக்குநர் மைக்கேல் கூகல்மேன், அலாஸ்கா சந்திப்பிற்குப் பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள் மேலும் கசப்படையலாம் எனத் தெரிவித்துள்ளார்.
“எந்த ஒப்பந்தமும் அறிவிக்கப்படாததால் சந்திப்பு நன்றாக நடைபெற்றதாகத் தெரியவில்லை. தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றங்கள் மேலும் அதிகரிக்கலாம்” என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் பேட்டியில் இந்தியா மற்றும் சீனா வரிகள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், “நான் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து தான் அதைப்பற்றி யோசிக்க வேண்டும். தற்போது அதைப்பற்றி யோசிக்க வேண்டியதில்லை” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு