குழந்தை திருமணத்தை ஏற்க மறுத்து ஓடும் காரில் இருந்து குதித்த 13 வயது சிறுமியின் கதை

படக்குறிப்பு, குழந்தைத் திருமணம் என்ற சமூக இடரில் சிக்கினாலும் படிப்பு என்ற கனவை நனவாக்கிய சோனாலி படே எழுதியவர், பிராச்சி குல்கர்னி பதவி, பிபிசி செய்தியாளர்55 நிமிடங்களுக்கு முன்னர்

“சோட்டி ஸி உமர்….” என்று துவங்கும் மெகா சீரியலின் பாடல் ஒலிக்காத வீடுகளே வட இந்தியாவில் இல்லை என்று சொல்லலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர்களில் மிகவும் பேசப்பட்ட இந்தி மொழித் தொடர், ‘பாலிகா வது’.

குழந்தைப் பருவ திருமணத்தை மையக்கருவாக கொண்ட தொடர் அது. நிதர்சனத்தில் இந்த கதையின் நாயகியுடன் சோனாலி படேவை ஒப்பிடலாம். இந்தப் பெண்ணும் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர்.

“நான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு திருமணம் நடைபெற்றபோது எனக்கு 13 வயது, மாப்பிள்ளைக்கு 30 வயது.”

உலகம் தெரியாத வயதிலேயே குடும்பத்தினரின் கட்டாயத்தால் சோனாலிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. தற்போது 26 வயதாகும் சோனாலி, 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தை நினைக்கும் போது உணர்ச்சிவசப்படுகிறார்.

சோனாலி படே, மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் தாலுகாவில் உள்ள ஷிரூர் காசர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள். மூன்று சகோதரிகளும் நான்காவதாக பிறந்த ஒரு சகோதரன் என பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் சோனாலி படே.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கறும்பு அறுவடை காலத்தில், சோனாலியின் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்குச் செல்வார்கள். வேலைக்குச் செல்லும்போது, குழந்தைகளை யார் கவனித்துக்கொள்வது, வயதுக்கு வந்த மகளை யார் பொறுப்பாக பார்த்துக்கொள்வது என்று யோசித்த பெற்றோர், சோனாலியை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துவிட்டனர்.

சட்டப்படி குழந்தைத் திருமணம் தவறு என்றாலும், அந்த சமயத்தில் பீட் பகுதியில் நடந்த பல குழந்தை திருமணங்களில் சோனாலியுடையதும் ஒன்று.

மாப்பிள்ளை வீட்டினருக்கு பெண்ணை காட்டும்போது, பள்ளியிலிருந்தே வீட்டிற்கு கூட்டிச் செல்லப்பட்டதாக சோனாலி கூறுகிறார்.

ஆனால் ஒவ்வொரு முறை பெண் பார்க்கும் படலம் நடைபெறும்போதும், திருமணமான பிறகும் தன்னுடைய கல்வியை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்று சோனாலி தன் பெற்றோரிடம் சொல்வார்.

“நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த ஒரே ஒரு விஷயம், 12ஆம் வகுப்பு வரை என்னை படிக்க அனுமதிக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், திருமணமாகிவிட்டாலும் என் மாமியார் வீட்டில் படிக்க முடியும் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் ‘உனக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்?’ என்ற கேள்வியைத் தான் நான் எதிர்கொண்டேன்” என்கிறார் சோனாலி.

தங்களது பகுதியில் பெண்கள் 10ஆம் வகுப்பு முடிப்பதற்கு முன்பே திருமணம் செய்து கொள்வது வழக்கம், எனவே சோனாலி மட்டும் ஏன் திருமணத்திற்குத் தயாராக இல்லை? என்று அவளுடைய பெற்றோர் யோசிக்கத் தொடங்கியதாக சோனாலி கூறுகிறார்.

சோனாலியின் அக்காவுக்கும் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. சிறு வயதில் திருமணம் செய்வது சரியா அல்லது தவறா என்றெல்லாம் தெரியாது, ஆனால், படிக்க வேண்டும் என்பதே சோனாலியின் கனவு. இருப்பினும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, அவளுடைய திருமணம் முடிவு செய்யப்பட்டு விரைவாக நடந்து முடிந்தது, யோசிக்கக்கூட நேரம் இல்லை.

“மணமகன் நாசிக்கைச் சேர்ந்தவர். திருமணம் நடைபெற்றபோது எனக்கு 13 வயது, மாப்பிள்ளைக்கு 30 வயது. முதல் நாள் பெண் பார்த்தார்கள். அதன்பிறகு, ஒரு நாள் விட்டு, மூன்றாம் நாளில் திருமணம் நடந்தது” என்று சோனாலி கூறுகிறார்.

திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக அப்பா தன்னை மிரட்டியதாக கூறுகிறார்.

“ஹல்தி நிகழ்ச்சியின் போது, புது மணப்பெண் போல நடந்து கொள்ளவில்லை என்பதற்காக நான் பலமுறை அடிவாங்கினேன். தற்கொலை செய்து கொள்வதாக அப்பா மிரட்டினார்.”

அண்டை வீட்டில் குடியிருக்கும் ஒருவர், தன் மகள் சொல்வதை கேட்பதில்லை என்று கோபித்துக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அனைவரும் அதையே சொல்லி, “உன் பெற்றோர் இறந்துவிட்டால் என்ன செய்வாய்? குடும்பம் என்னவாகும்?” என்று கேட்க ஆரம்பித்தனர்.

திருமணம் செய்து கொள்ள மறுத்த சோனாலிக்கு பெற்றோரின் அடிஉதை முதல் பலவகையிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. உண்மையில் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது என்றே புரியவில்லை. ஆனால் நடப்பது எதுவும் சரியல்ல என்பது மட்டுமே சோனாலிக்கு புரிந்தது.

பெண் பார்த்து திருமணம் நடைபெறும் வரையிலான இரண்டு நாட்களும் குடும்பத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. இருந்த போதிலும், காவல் நிலையத்திற்குச் சென்று உதவி கேட்டார். ஆனால், குழந்தை திருமணம் சர்வசாதாரணமாக நடக்கும் பகுதி என்பதால், காவல் நிலையத்திலும் கூட தனக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்று சோனாலி கூறுகிறார்.

தனக்கு நடத்தப்பட்ட குழந்தைத் திருமணத்தில் கிராமத் தலைவரும் காவல்துறையினரும் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். பள்ளி வளாகத்தில் உள்ள கோவிலில் சோனாலியின் திருமண சடங்குகள் தொடங்கின. பள்ளியைப் பார்த்ததும், சோனாலியால் அழாமல் இருக்க முடியவில்லை.

மணப்பெண் ஏன் இவ்வளவு அழுகிறாள் என்று கேட்கப்பட்ட போது, தனியாக விடப்பட்டுப் பழக்கமில்லாததால் தான், சோனாலி அழுவதாக அவருடைய பெற்றோர் மணமகன் வீட்டாரிடம் சொல்லியிருக்கின்றனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.திருமணம் நடந்து முடிந்ததும், கணவன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக சோனாலியை காரில் உட்கார வைத்தனர். ஆனால் மாமியார் வீட்டிற்கு செல்வதில்லை என்று உறுதியாக இருந்த சோனாலி, காரின் கதவு பக்கத்தில் அமர்ந்தாள்.

கிராமத்தை விட்டு வெளியேறிய கார், நெடுஞ்சாலையை அடைந்தது. வாந்தி வருவதாகக் கூறி கார் ஜன்னலைத் திறக்கச் சொன்னார் சோனாலி. சிறிது நேரம் கழித்து, கதவைத் திறந்து நகரும் காரிலிருந்து கீழே குதித்துவிட்டார்.

“கீழே விழுந்ததும் எனக்கு சுயநினைவில்லை. எலும்பு முறிவுகளோ அல்லது பெரிய காயங்களோ எதுவும் இல்லை. நான் காரில் இருந்து குதித்து உயிர் பிழைத்தால், ஏதாவது செய்ய முடியும் என்று நினைத்தேன்” என்று சோனாலி கூறுகிறார்.

படிக்க வேண்டும் என்ற நினைப்பில் சோனாலி வீடு திரும்பினாள். ஆனால், ஊராரின் கேலிப் பேச்சை தவிர்ப்பதற்காக, பல்வேறு உறவினர்களின் வீட்டிற்கு சோனாலி அனுப்பி வைக்கப்பட்டார்.

இப்படி சுமார் ஓராண்டு காலம் உறவினர்களின் வீட்டிற்கு அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்டதால் சோனாலியின் படிப்பு வீணானது. ஒன்பதாம் வகுப்பில் அவர் பள்ளிக்கூடத்திற்கு தொடர்ந்து செல்ல முடியவில்லை என்றாலும், படிக்க வேண்டும் என்ற அவருடைய உறுதியில் மாற்றம் ஏற்படவில்லை.

தனது தோழிகளின் உதவியுடன் தேர்வெழுதினார். அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வுக்கான படிவத்தையும் நிரப்பினார். ஆனால் அவளுடைய கணவர் அவளை தன்னுடன் அழைத்துச் செல்லும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டார்.

அவர் தனது வீட்டிற்கு வரும்போது, சில சமயங்களில் தன்னிடம் தன்மையாக பேசியும், சில சமயங்களில் வலுக்கட்டாயமாகவும் தன்னை சமாதானப்படுத்த முயற்சித்தார் என்று சோனாலி சொல்கிறார்.

“என் பெற்றோர்,’நீ இறக்கவும் துணிந்துவிட்டாய்’, எனவே ‘இப்போது முடிவு உன்னுடையது, என்ன செய்ய வேண்டும் என்பதை நீயே முடிவு செய்’ என்று சொல்லிவிட்டார்கள்.”

என்னை அழைத்துச் செல்ல என் கணவர் வரும்போது, நான் வீட்டிலிருந்து வெளியேறி விடுவேன். அவர் திரும்பி வரும் வரை வீட்டிற்கு வரமாட்டேன். சில நேரங்களில் திரும்பி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, என் கையில் ஏதாவது ஆயுதம் இருக்கும். ஒரு முறை என்னிடம் கத்தி இருந்தது. ஒரு முறை நான் பிளேடுடன் திரும்பி வந்தேன்.

இப்படிப்பட்ட அழுத்தமான சூழ்நிலையில், சோனாலி தனது படிப்பைத் தொடர்ந்தார். புத்தகங்களுக்கு பணம் இல்லாததால், அவ்வப்போது வயல்வேலைக்குச் சென்று நாளொன்றுக்கு 70 ரூபாய் சம்பாதித்தார்.

இந்த காலகட்டத்தில், கிராமத்தில் பணிபுரியும் ஆஷா பணியாளர் ஒருவரை சந்தித்தார். அவருடன் பேசிய பிறகு படிப்பதற்காக சோனாலி வெளியூருக்குச் செல்ல முடிவு செய்தார்.

இதற்கிடையில், சதாராவில் உள்ள வழக்கறிஞர் வர்ஷா தேஷ்பாண்டேவைப் பற்றி சோனாலிக்குத் தெரியவந்தது. குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்ட அவரைத் தொடர்பு கொள்ள சோனாலி சதாரா செல்ல முடிவு செய்தார்.

சதாரா செல்வதற்கு கையில் பணம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தபோது தன்னுடைய தாலியைப் பற்றிய நினைவு சோனாலிக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. பாதுகாப்பாய் தன் தாயிடம் இருந்த தங்கத் தாலியை திருடி விற்றுவிட்டார். அதன் மதிப்பு தெரியாத சோனாலி, தாலியை கொடுத்துவிட்டு, தனக்கு தேவையான 5 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு சதாராவிற்கு சென்றார்.

சதாராவுக்கு வந்த சோனாலி, வர்ஷா தேஷ்பாண்டேவை தொடர்பு கொண்டார். அவருடைய அறிமுகம் வாழ்க்கையை திசை திருப்பியது. அவரிடம் இருந்து பல்வேறு பயிற்சி வகுப்புகளைப் பற்றி அறிந்து கொண்ட சோனாலி நர்சிங் படிப்பை தேர்ந்தெடுத்தார்.

சதாராவில் ஆரம்ப நிலை நர்சிங் படிப்பில் சேர்ந்து பயின்ற பிறகு, வேலைக்காக புனேவுக்கு வந்தார்.

பல்வேறு மருத்துவமனைகளில் செவிலியராகப் பணிபுரிந்த போது, கிடைத்த அனுபவங்களினால் மேல் படிப்புகளைப் பற்றி தெரிந்துக் கொண்டார். ஆனால் படிப்பதற்கு தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.

செவிலியராக வேலை பார்த்து பணத்தைச் சேமித்த சோனாலி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, JNM-ல் தனது நர்சிங் பட்டப் படிப்பை முடித்தார்.

தற்போது புனேவில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் பணிபுரிகிறார். 26 வயதான சோனாலி, இப்போது தனது சொந்தக் காலில் நிற்கிறார். தனது முயற்சிகளின் மூலம் தன்னுடைய தங்கைகளை குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு வரை படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

கனவு மெய்ப்படும் என்பதை நிரூபித்து தனது படிப்பு என்ற கனவை நனவாக்கிய சோனாலி, புதிய வாழ்க்கைத் துணையைப் பெறமுடியும் என்று இப்போது கனவு காண்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு