சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் – பாஜக அறிவிப்பு

பட மூலாதாரம், ANI

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.

டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் கூட்த்திற்கு பிறகு நடந்த செய்தியாளர்களை சந்தித்த, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

“பாஜக ஆட்சிமன்றக் கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை நாங்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்தோம். எங்கள் கூட்டணி கட்சிகளுடன் (தேசிய ஜனநாயக கூட்டணி) முன்னதாகவே விவாதித்தோம். தேர்தலை சுமுகமாக நடத்த எங்கள் எதிர்க்கட்சியையும் விவாதிப்போம்…” என்று நட்டா கூறினார்.

சி.பி. ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படும், சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிராவின் 24வது ஆளுநராகப் பணியாற்றி வருகிறார், ஜூலை 31, 2024 அன்று இந்தப் பதவியை அவர் ஏற்றுக்கொண்டார். முன்னதாக அவர் பிப்ரவரி 2023 முதல் ஜூலை 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார். மார்ச் மற்றும் ஜூலை 2024 க்கு இடையில் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னராகவும் கூடுதல் பொறுப்பை வகித்தார்.

ஆர்.எஸ்.எஸ்-ல் தொடங்கிய அரசியல் வாழ்க்கை

பட மூலாதாரம், Maharashtragov.in

மகாராஷ்டிர அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், அக்டோபர் 20, 1957 அன்று தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஆர்எஸ்எஸ் சுயம்சேவகராகத் தொடங்கி, 1974 இல் பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரானார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

1996 இல், ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் பாஜகவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998 மற்றும் 1999 என தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.

2004 ஆம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றக் குழுவில் ஒரு பகுதியாக ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார். தைவானுக்கான முதல் நாடாளுமன்றக் குழுவிலும் அவர் ஒரு உறுப்பினராக இருந்தார்.

2004 முதல் 2007 வரை இவர் தமிழ்நாட்டில் பாஜகவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். இந்த பொறுப்பில் இருந்த போது 19,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரத யாத்திரை நடத்தினார்.

ஒரு தீவிர விளையாட்டு வீரரான ஸ்ரீ ராதாகிருஷ்ணன் டேபிள் டென்னிஸில் கல்லூரி சாம்பியனாகவும், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தேர்தல் எப்போது?

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அதே நாளில் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும், அதே நேரத்தில் வேட்பாளர்கள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.

ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் உடல்நலக் காரணங்களைக் கூறி ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் பதவி காலியாகிவிட்டது.

“உடல்நலத்துக்கு முன்னுரிமை அளிக்கவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், அரசியலமைப்பின் பிரிவு 67(a) இன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பதவியை ராஜினாமா செய்கிறேன்,” என்று தங்கரின் ராஜினாமா கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு