காங்கிரஸ் இந்துத்துவா கட்சி, காந்தி இந்துக்களின் தலைவர் என்று விமர்சித்த ஜின்னா – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது அலி ஜின்னாவும், மகாத்மா காந்தியும்.எழுதியவர், ஜெய் சுக்லாபதவி, பிபிசி செய்தியாளர் 17 ஆகஸ்ட் 2025, 02:16 GMT

புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்

உலக வரைபடத்தையே மாற்றிய குஜராத்தில் பிறந்த இரு முக்கியமான தலைவர்கள் தான் மகாத்மா காந்தியும், முகமது அலி ஜின்னாவும். இவர்களுக்கிடையிலான உறவு, இந்திய சுதந்திர இயக்கத்திலும், பிரிவினை காலத்திலும் உருவாகி, பின்னர் மங்கிய ஒரு நட்பின் கதையாகும்.

ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் மரியாதை கொண்டு வாழ்ந்து வந்த காந்தியும் ஜின்னாவும் இந்திய தேசியவாதத்திற்கு இந்து-முஸ்லீம் ஒற்றுமை முக்கியம் என்பதில் ஒருமித்த கருத்தில் நிலைத்திருந்தனர்.

ஆனால், அந்த காலத்தில் அரசியல் சூழ்நிலைகள் வேகமாக மாறின. சமூகம் பற்றிய அவர்களின் பார்வைகள் வேறுபட்டிருந்தன. இதனால், அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின.

இந்து மற்றும் இஸ்லாமிய சமூகங்கள் ஒருபோதும் ஒன்றிணைந்து ஒரு தேசமாக இருக்க முடியாது என்று நம்பினார் ஜின்னா.

ஒரு காலத்தில் ஜின்னாவை “இந்து-இஸ்லாமிய ஒற்றுமையின் தூதர்” என்று சுதந்திரப் போராட்ட வீரர் சரோஜினி நாயுடு புகழ்ந்திருந்தார். ஆனால் பின்னர் ஜின்னாவோ காந்தியை ஒரு “இந்துத் தலைவர்” என்று சித்தரிக்க முயன்றார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அவ்வாறு செய்வது ஒரு இஸ்லாமிய தலைவராக தனது பிம்பத்தை மேலும் உறுதிப்படுத்த அவருக்கு வாய்ப்பளித்தது.

இறுதியில், காந்தியும் ஜின்னாவும் மக்கள் மனதில், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை ஆதரிக்கும் தலைவர்களாக அல்லாமல், அரசியல் மற்றும் சித்தாந்த வேறுபாடுகளின் அடிப்படையில் உருவான இந்து மற்றும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளின் தந்தையர்களாக அறியப்பட்டனர்.

முன்பு, “மகாத்மா” என்று காந்தியை அழைத்த ஜின்னா, பின்னர் அவரை “இந்துத் தலைவர்” என்று அழைக்கத் தொடங்கினார். காந்திக்கு அஞ்சலி செலுத்தும் போது கூட, ஜின்னா அவரை “இந்து சமூகத்தின் தலைவர்” என்று குறிப்பிட்டார்.

இந்த இரு தலைவர்களுக்கிடையிலான நட்பு எப்படி உருவானது? அது எப்படி மாறியது? எந்த நிகழ்வுகள், எந்த நம்பிக்கைகள் அந்த நட்பை முடிவுக்கு கொண்டு வந்தன? என்பதைத் தெரிந்துகொள்வோம்.

பட மூலாதாரம், HULTON ARCHIVE

படக்குறிப்பு, முன்பு, “மகாத்மா” என்று காந்தியை அழைத்த ஜின்னா, பின்னர் அவரை “இந்துத் தலைவர்” என்று அழைக்கத் தொடங்கினார். ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாக இருந்த ஜின்னாவும் காந்தியும்

1915 ஜனவரியில், தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பியதை கொண்டாட பம்பாயில் சர் ஜஹாங்கீர் பெட்டிட் வீட்டில் ஒரு விருந்து நடந்தது. அதில் முகமது அலி ஜின்னா கலந்து கொண்டு, காந்தியை வரவேற்றுச் சந்தித்தார்.

அதே ஆண்டில், காந்தி ஒரு இந்துவாக இருந்தாலும், ஜின்னா அவரை முஸ்லிம் லீக்கின் அமர்வில் பங்கேற்க அழைத்தார்.

இங்குதான் அவர்களின் ‘இனிப்பும் புளிப்பும் கலந்த’ உறவு தொடங்கியது.

1916 அக்டோபரில் ஆமதாபாத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸின் பம்பாய் மாகாண மாநாட்டின் தலைமைப் பதவிக்கு ஜின்னாவின் பெயரை காந்திஜி முன்மொழிந்தார். இந்தக் கூட்டத்தில் ஆமதாபாத்தில் ஜின்னாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

காந்திஜிக்கும் ஜின்னாவுக்கும் இடையிலான உறவு பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்தது.

ஆனால், 1937க்குப் பிறகு, இருவருக்கும் இடையிலான தூரம் அதிகரிக்கத் தொடங்கியது.

அதன் முன்பு, இரு தலைவர்களும் ‘இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்காக’ பாடுபட்டனர்.

1920 ஆம் ஆண்டு காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்தபோது இருவருக்கும் இடையிலான வேறுபாடுகள் தொடங்கின. அந்த இயக்கம் நாட்டில் ‘குழப்பத்தை உருவாக்கி வன்முறையை அதிகரிக்கும்’ என்று ஜின்னா நம்பினார்.

பட மூலாதாரம், KEYSTONE/HULTON ARCHIVE

படக்குறிப்பு, காந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தபோது, ஜின்னா அதை ஏற்கவில்லை.1916-17ல் காங்கிரசில் ஜின்னாவின் நிலை பலவீனமடைந்தது

“1916–17 காலத்தில், தேசியளவில் ஜின்னாவின் நிலை பலவீனமடைந்தது. அவர் தான் தனிமைப்படுத்தப்பட்டதாக கருதத் தொடங்கினார்”என்று காந்திஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தி தனது ‘முஸ்லீம் மன் கா ஐனா’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

“ஒரு கட்டத்தில் நிலைமை தங்களுக்கு சாதகமாக மாறும் என்று அவர்கள் நம்பினார்கள். சூழலும் மாறியது, ஆனால் ஜின்னாவுக்குச் சாதகமாக அல்ல”என்றும்,

“1919 ஜனவரியில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஏகாதிபத்திய கவுன்சிலில் ரௌலட் மசோதா முன்மொழியப்பட்டது. அதைத் திரும்பப் பெற வைஸ்ராயிடம் முறையிடப்பட்டது”என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மசோதா நிறைவேற்றப்பட்டால், மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்றும், நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காந்தி, நாடு முழுவதும் தனது கவனத்தை செலுத்தினார். அவர் வன்முறைக்கு எதிரானவர் என்றும், அமைதியான எதிர்ப்பை முன்னிறுத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.”

ஜின்னா 1909 முதல் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த இம்பீரியல் லெஜிஸ்ட்லேட்டிவ் கவுன்சில் உறுப்பினராக இருந்தார். அவர் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தார்.

“இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், நாட்டின் ஒரு கடற்கரையிலிருந்து மற்ற கடற்கரை வரை, நீங்கள் இதுவரை பார்த்திராத அளவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்துவார்கள் என்பதை உங்களுக்குச் சொல்வது எனது கடமை” என்று அவர் கூறினார்.

ஆனால், காந்தியின் வேண்டுகோளும், ஜின்னாவின் எச்சரிக்கையும் பிரிட்டிஷ் ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மார்ச் 22ஆம் தேதி, வைஸ்ராய் அந்த மசோதாவில் கையெழுத்திட்டார். அதன் மூலம், ரௌலட் மசோதா சட்டமாகிவிட்டது.

அடுத்த நாளே, காந்தி ஏப்ரல் 6 அன்று நாடு முழுவதும் மக்கள் தங்கள் கடைகள், வணிகங்களை மூட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதே நாளில், உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடவும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு, இந்தக் ‘கறுப்புச் சட்டத்தை’ எதிர்த்து ஜின்னா தனது பதயை ராஜினாமா செய்தார்.

“இந்த நடவடிக்கை அசாதாரணமானது. ஏனென்றால் ஜின்னா அரசியலில் நன்றாக வளர்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவரது (மசோதாவுக்கு எதிரான எதிர்ப்பு) காந்தியின் வேண்டுகோளைப் போல அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை”என்று ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.

“அந்த நேரத்தில், காந்தி திடீரென்று ஒரு நட்சத்திரத்தைப் போல உயர்ந்தார். ஜின்னா எப்போதும் தன்னைத் தகுதியானவர் என்று கருதிய அந்த இடத்தை காந்தி பிடித்தார். 1916–17ல் அவர் அந்த இடத்தை கிட்டத்தட்ட அடைந்திருந்தார்.”

“இது எவ்வாறு நடந்தது என்பதற்கான தெளிவான காரணம் தெரியவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், ஜின்னா இருக்க வேண்டிய இடத்தில் காந்தி இருந்தார்.”

1920ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ஜின்னா தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். அதன்பிறகு, அவர் தனது சொந்த வழியில் செல்லத் தொடங்கினார்.

‘ஒத்துழையாமை இயக்கத்திற்குப்’ பிறகு பிரிந்த காந்தியும் ஜின்னாவும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு சமயத்தில், பிரிட்டிஷ் அரசு காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த போது, அவர் ஜின்னாவின் உதவியை நாடினார்.சிறிது காலம் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர். ஒரு சமயத்தில், பிரிட்டிஷ் அரசு காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த போது அவர் ஜின்னாவின் உதவியை நாடினார்.

1919ஆம் ஆண்டின் இறுதியில், அமிர்தசரஸில் காங்கிரஸ் மாநாடு கூடிய போது, ஜின்னா காந்தியை ‘மகாத்மா காந்தி’ என்று அழைத்தார்.

“அதன் பிறகு, ஜின்னா காந்தியை மகாத்மா என்று ஒருபோதும் அழைத்ததில்லை. காந்திஜி அவரை மரியாதையுடன் ‘கைதே ஆசம்’ என்று அழைத்து வந்தார்” என எழுத்தாளர் குன்வந்த் ஷா தனது ‘காந்தியின் கண்ணாடிகள்’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

ஆனால் காந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த போது, ஜின்னா அதை ஏற்கவில்லை.

கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தா) நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஜின்னா, “காந்தி நாட்டுக்கு ஒத்துழையாமை திட்டத்தை முன்வைத்துள்ளார். நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது உங்கள் விருப்பம். இந்திய மக்களை உதவியற்றவர்களாக மாற்ற வேண்டாம் என்று நான் மீண்டும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன், இல்லையெனில் ஒத்துழையாமை கொள்கையைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. ஒத்துழையாமை என்பது காந்தியின் திட்டத்தைப் போலவே இருக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

அதனைத் தொடர்ந்து, “ஒரு மாதத்திற்குப் பிறகு, காந்திக்கும் ஜின்னாவுக்கும் இடையே முதல் மோதல் ஏற்பட்டது. ஹோம் ரூல் லீக்கின் தலைமைப் பொறுப்பு இப்போது காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்டோபரில், காந்தியின் முன்முயற்சியின் பேரில், அது ‘சுயராஜ்ய சபா’ என்று பெயர் மாற்றப்பட்டது” என்று ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

“அதன் அமைப்பு விதிகளும் மாற்றப்பட்டன. அப்போது, பேரரசின் கீழ் சுயராஜ்ஜியம் என்ற நோக்கத்திற்கு பதிலாக, முழு சுயராஜ்யம் என்ற இலக்கை நோக்கி நகர்ந்தது.”

“ஜின்னா, பல ஆண்டுகளாக அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தவர். அவர், பேரரசின் கீழ் சுயராஜ்ஜியம் என்ற கோரிக்கையை தனியாகவே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார்.”

“அமைப்பு விதிகளை மாற்ற காந்திஜிக்கு எந்த உரிமையும் இல்லை” என்று ஜின்னா காந்திஜியைக் குற்றம் சாட்டினார்.

ஆனால் காந்தி ஜின்னாவுடன் உடன்படவில்லை.

காந்தி ஒரு ‘சர்வாதிகாரி’ என்று சாடிய ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காந்தி ஜின்னாவுடன் உடன்படவில்லை.”ஜின்னா, காந்தியை ஒரு சர்வாதிகாரி என்று குற்றம் சாட்டினார். காந்தியின் சீர்திருத்தங்களை எதிர்த்த 18 பேருடன் சேர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.”என்று ராஜ்மோகன் காந்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், காந்தி ஜின்னாவுக்கு ஒரு கடிதம் எழுதி, அவரது ராஜினாமாவால் தான் வருத்தமடைந்ததாகக் கூறினார்.

“உங்கள் ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். நாடு எதிர்கொள்கின்ற பொறுப்புகளில் உங்கள் பங்கைச் செய்யுமாறு அழைக்கிறேன்” என்று காந்தி எழுதினார்.

ஜின்னா, காந்தி தமக்கு ஒரு முக்கியப் பங்கு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை விரும்பவில்லை.

“நாட்டின் முன்புள்ள பொறுப்பில் என் பங்கைச் செய்ய வேண்டும் என்ற உங்கள் ஆலோசனைக்கு நன்றி. ஆனால் அந்த புதிய பொறுப்பு உங்கள் திட்டத்தை குறிக்கிறது என்றால், அதை நான் ஏற்க முடியாது. அது நாட்டுக்கு அழிவை மட்டுமே ஏற்படுத்தும்.”என்று அவர் பதிலளித்தார்.

அதே ஆண்டு டிசம்பரில், காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் இணைந்து ஒத்துழையாமை முடிவை உறுதி செய்ய நாக்பூரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் ஜின்னா மீண்டும் காந்தியை எதிர்த்தார். மதன் மோகன் மாளவியாவும் காந்தியின் திட்டத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்தார்.

“காங்கிரஸையும் நாட்டையும் தங்கள் பக்கம் இழுக்கும் போட்டியில் ஈடுபட்ட காந்தியும் ஜின்னாவும், இந்து-முஸ்லீம் ஒற்றுமை போன்ற ஒத்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டாலும், பிரிந்து செல்வது உறுதி” என்று ராஜ்மோகன் காந்தி பதிவு செய்துள்ளார்.

இஸ்லாமியர்கள் பக்கம் நின்ற ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “காங்கிரஸையும் நாட்டையும் தங்கள் பக்கம் இழுக்கும் போட்டியில் ஈடுபட்ட காந்தியும் ஜின்னாவும், இந்து-முஸ்லீம் ஒற்றுமை போன்ற ஒத்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டாலும், பிரிந்து செல்வது உறுதி” என்று ராஜ்மோகன் காந்தி பதிவு செய்துள்ளார்.”ஜின்னா, தனது எதிர்காலம் இஸ்லாமிய சமூகத்துடன் இணைந்திருப்பதாக உணர்ந்திருக்கலாம். தாராளமான எண்ணங்கள் மற்றும் சமூகத்தின் விருப்பம் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில், அவர் சமூகத்தைத் தேர்ந்தெடுத்தார்”என்றும் ராஜ்மோகனின் புத்தகத்தில் குறிப்பு உள்ளது.

ஜனவரி 1922 இல், காந்தியின் இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, ஜின்னா தற்காலிகமாக தனது தலைவராகும் ஆசையை விட்டுவிட்டு, சிலருடன் சேர்ந்து, காந்திக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் ஒரு சமரசத்தை ஏற்படுத்த முயன்றார்.

இதற்கிடையில், முஸ்லிம் லீக் அவரை லாகூர் அமர்விற்கு தலைமை தாங்க அழைத்தது. எதைத் தேர்வு செய்வது எனத் தெரியாமல் அவர் ஒரு குழப்பத்தில் இருந்தார்.

இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்து அவர் கூறுகையில், “இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபடும் நாளில், இந்தியா ஒரு பொறுப்பான அரசாங்கத்தை அடையும்” என்றார்.

இதற்கிடையில், சிறையில் இருந்து விடுதலையான காந்தி, ஜின்னாவின் கூற்றுக்கு பதிலளித்தார்.

“நான் ஜின்னாவுடன் உடன்படுகிறேன். இந்து-முஸ்லீம் ஒற்றுமை என்றால் சுயராஜ்யம்” என்றார்.

1925 ஆம் ஆண்டு பேசிய ஜின்னா, “நான் முதலில் ஒரு தேசியவாதி, பின்னரும் தேசியவாதி தான்” என்று கூறியிருந்தார்.

ஆனால் நாட்டில் இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்து சந்தேகங்கள் தொடர்ந்தன. காந்தியும் ஜின்னாவும் பல முறை ஒற்றுமை மாநாடுகளில் சந்தித்தனர். ஆனால் எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை.

காங்கிரஸ் ஒரு இந்துத்துவா கட்சி – ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜின்னாவை சமாளிப்பது கடினம் என்று சர்தார் படேல், ஆசாத் மற்றும் நேரு ஆகியோர் நம்பினர்.ஜின்னாவை சமாளிப்பது கடினம் என்று சர்தார் படேல், ஆசாத் மற்றும் நேரு ஆகியோர் நம்பினர்.

காந்தியும் ஜின்னாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை, ஏனெனில் ஜின்னா நேரு, சர்தார் படேல், ஆசாத் ஆகியோரின் செல்வாக்கை குறைக்கும் ஆபத்தான நபராக அவர் கருதினார் என்ற குறிப்பையும் ராஜ்மோகனின் புத்தகத்தில் காணமுடிகிறது.

இஸ்லாம் வேகமாகப் பரவியதற்குக் காரணம் வாள் முனை அல்ல, மாறாக அதன் எளிமை, தர்க்கம் மற்றும் அதன் நபியின் உயர்ந்த ஒழுக்கம் ஆகியவற்றால் என்று ஜின்னா எப்போதும் கூறி வந்தார்.

அதேபோல், உலகிற்கு அமைதி, நிவாரணம் மற்றும் புதிய ஒளியைக் கொண்டுவரும் ஒரு மதம் இஸ்லாம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் காந்தியின் நடைமுறைகள், குறிப்பாக இந்து மதத்தைக் குறிக்கும் சின்னங்கள், ஜின்னாவுக்கு எரிச்சலூட்டின. ஜின்னா அவற்றை இந்துத்துவா பிரசாரமாக பார்த்தார்.

உதாரணமாக, ‘ராம ராஜ்ஜியம்’ என்ற காந்தியின் கருத்தை, ‘இந்து ராஜ்ஜியம்’ என்று ஜின்னா ஒப்பிட்டார்.

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான எம்.ஜே. அக்பர் தனது ‘காந்தியின் இந்து மதம் – ஜின்னாவின் இஸ்லாத்திற்கு எதிரான போராட்டம்’ என்ற புத்தகத்தில், “காந்தி அமைதியைப் பற்றிப் பேசுகிறார், ஆனால் அது முஸ்லிம்களை அதிகாரத்திலிருந்து அகற்றும் நோக்கத்தைக் கொண்ட ஒரு பண்டிதரின் பாசாங்குத்தனம்”என எழுதியுள்ளார்.

“அவரது ஆசிரமங்களில் சர்வமத பிரார்த்தனைகள் தொடங்கி, குர்ஆனின் வசனங்கள் ஓதப்பட்ட போது, அவரது இந்து நண்பர் ஒருவர் அதை எதிர்த்தார், அவர் இந்து மதத்தை அழிப்பதாகக் கூறினார். அவரோ, ‘குர்ஆனைப் படிப்பது இந்துக்களின் இதயங்களைத் தூய்மைப்படுத்தும்’ என்று பதிலளித்தார்.”

“காந்திஜியின் மதவாதம், சுயபரிசோதனை பழக்கம், அகிம்சை, உண்மை, எளிமை மற்றும் பணிவு ஆகியவற்றில் ஊறிய வாழ்க்கை முறை ஆகியவற்றை ஜின்னாவால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று குன்வந்த் ஷா எழுதுகிறார்.

பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லூயிஸ் ஃபிஷரின் குறிப்புகளை மேற்கோள் காட்டி, “கோஜா இஸ்லாமியர்கள் மீண்டும் இந்துக்களாக மாற விரும்பினர், ஆனால் அவ்வாறு செய்வதில் அவர்கள் தடைகளை எதிர்கொண்டனர். இதன் விளைவாக, ஜின்னாவின் மனத்தில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு உருவாகியிருக்கலாம்”என குன்வந்த் ஷா எழுதியுள்ளார்.

“இந்துக்களைப் போல பிரிவினையை விரும்பும் மக்களை ஒன்றிணைப்பது கடினம். மதம் மாறிய ஒருவர் மீண்டும் இந்துவாக மாற விரும்பினால், அதைத் தடுக்க முயல்வார்கள்” என்று அவர் எழுதுகிறார்.

இதனால், இந்துக்கள் இந்துக்கள் அல்லாதவர்களை ‘மாலேச்சா’ என்று தொடர்ந்து கருதினர், முஸ்லிம்கள் இந்துக்களை ‘காஃபிர்கள்’ என்று அழைத்தனர். இத்தகைய மத அடிப்படையிலான முட்டாள்தனத்தை ஆங்கிலேயர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.”

ஜின்னாவின் மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜின்னா பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் கொள்கையை நன்கு பயன்படுத்தினார் என்று ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.ஜின்னா பிரிட்டிஷ் அரசின் ‘பிரித்தாளும் கொள்கையை’ நன்கு பயன்படுத்தினார் என்று ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில், “காங்கிரஸ் குழு, இந்து ராஜ்ஜியம் வந்துவிட்டது போல நடந்து கொள்கிறது, என ஜின்னா கூறினார்”

காங்கிரஸ் டிக்கெட்டில் வென்ற முஸ்லிம் உறுப்பினர்களை ஜின்னா ‘பித்தஸ்’ (பணிவானவர்கள்) என்று அழைத்தார். “மிஸ்டர் ஜின்னா இப்போது ஜனாப் ஜின்னா ஆகிவிட்டார்” என்று ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டார்.

லக்னோவில் ஜின்னா முதல் முறையாக மேற்கத்திய உடையை விட்டு, ஷெர்வானி மற்றும் பைஜாமா அணிந்து, இந்துஸ்தானி முஸ்லிம் தோற்றத்தில் வந்தார். அங்கே, அவர் ‘பூரி ஆசாதி’ (முழு சுதந்திரம்) என்ற முழக்கத்தை எழுப்பினார்.

“லக்னோவில் உங்கள் பேச்சு போர் அறிவிப்பு போல் ஒலித்தது” என்று காந்திஜி ஜின்னாவுக்கு எழுதினார்.

“இது ஒரு போர் அறிவிப்பு, இது தற்காப்பு என்று நீங்கள் நினைப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று அக்கடிதத்துக்கு ஜின்னா பதிலளித்தார்.

“உங்கள் பேச்சில் உங்கள் பழைய தேசியவாத ஆளுமையை நான் காணவில்லை. நீங்கள் அதே பழைய ஜின்னாவா?”என்று காந்தி மீண்டும் எழுதினார்.

“1915-ல் மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைத்தார்கள், இன்று அவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை” என்று பதிலுக்கு ஜின்னா எழுதினார்.

மார்ச் 1940 இல், முஸ்லிம் லீக்கின் லாகூர் மாநாடு ஒரு தனி மற்றும் இறையாண்மை கொண்ட முஸ்லிம் அரசை முன்மொழிந்தது.

லாகூரில், ஜின்னா, “இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருபோதும் கூட்டாக தேசியத்தை வளர்க்க முடியாது” என்றார்.

அதேபோல், காங்கிரஸை ஒரு இந்துத்துவா அமைப்பு என்று அழைப்பதில் அவருக்கு எந்த தயக்கமும் இல்லை.

75 வயதை நெருங்கிக் கொண்டிருந்த காந்தியும், 68 வயதை நெருங்கிக் கொண்டிருந்த ஜின்னாவும், மும்பையில் உள்ள மலபார் ஹில்ஸில் உள்ள அவர்களது பங்களாவில் 14 முறை சந்தித்தனர்.

1944 இல் தோல்வியுற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, காந்தி, “நாங்கள் நண்பர்களாகப் பிரிந்தோம். ஜின்னா ஒரு நல்ல மனிதர் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

மறுபுறம், இந்து அடிப்படைவாத தலைவர்கள் காந்தியின் ‘ஆதரவு மனப்பான்மையை’ எதிர்த்தனர்.

எனவே காங்கிரசிலிருந்து, மௌலானா அபுல் கலாம் ஆசாத், காந்தி ஒரு ‘தவறு’ செய்கிறார் என்று நம்பினார்.

ஆனால், இரு தலைவர்களுக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்படும் என்றும் சிலர் நம்பினர். இருப்பினும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மும்பை பேச்சுவார்த்தைகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜின்னா தனி பாகிஸ்தானை உருவாக்கினார். இந்தியா பிரிந்த சில மாதங்களுக்குள் காந்தியும் ஜின்னாவும் இறந்தனர்.

‘காந்திஜியை பாபு என்று அழைத்தனர், உண்மையில் அவர் பாகிஸ்தானின் பாபு. அவரது உள் குரல், அவரது ஆன்மீக சக்தி, அவரது தத்துவம், இவை அனைத்தும் ஜின்னாவின் முன் சரிந்தன’ என்று காந்திஜியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலம் அளித்தார்.

இதுதான் காந்தி மீதான இந்து அடிப்படைவாதிகளின் ‘கோபம்’. காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகும், ஜின்னா அவருக்கு அஞ்சலி செலுத்தினார், ஆனால் அப்போது அவர் காந்திஜியை ‘இந்துத் தலைவர்’ என்றே அழைத்தார்.

காந்திக்கு அஞ்சலி செலுத்திய அவர், “காந்தி மீதான தாக்குதல் மற்றும் படுகொலைக்கான காரணத்தை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். எங்கள் வேறுபாடுகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன, ஆனால் அவர் இந்துக்களிடையே பிறந்த சிறந்த மனிதர்களில் ஒருவர்” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு