நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு உள்ளதாக யாழ், மாநகர சபை முதல்வருக்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பினால் , ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  அதேவேளை குறித்த தொலைபேசி அழைப்பு விஷமி ஒருவரின் விஷமத்தனமான செயற்பாடு என யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு  இன்றைய தினம் சனிக்கிழமை தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்ட நபர் ஒருவர் நல்லூர் ஆலயத்திற்கு வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.   அது தொடர்பில் முதல்வர்  காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடமையில் உள்ள காவல்துறையினருக்கு மேலதிகமாக காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் , காவல்துறை  விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுளள்னர்.

அத்துடன் ஆலய சூழலில் உள்ள வீதித் தடைகளுக்கு அருகில் சோதனை கூண்டுகள் அமைத்து , பொதிகளுடன் வருவோர் மற்றும் சந்தேகத்திற்கு இடமான முறையில் வருவோரை காவல்துறையினர் சோதனை செய்தனர்.  அதேவேளை , முதல்வருக்கு வந்த வெடிகுண்டு எச்சரிக்கை தொலைபேசி அழைப்பு தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.