பட மூலாதாரம், YRF – Yash Raj Films/FB

எழுதியவர், ஜி.ஆர். மகரிஷிபதவி, பிபிசிக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜுனியர் என்.டி.ஆர் பாலிவுட்டில் வார் 2 படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். ஹ்ரித்திக் ரோஷனும் நடித்துள்ள இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

வார் படத்தின் தொடர்ச்சி தான் வார் 2. முதல் பாகத்தில் டைகர் ஷெராஃப் நடித்திருந்தார். இந்தப் பாகத்தில் ஜுனியர் என்டிஆரும் இணைந்துள்ளார். உளவுப் பணி சார்ந்த கதையைக் கொண்டது இந்தப் படம்.

கபீர் (ஹிருத்திக்) ஒரு ரா ஏஜென்சி முகவர். அவர் காளி என்ற சர்வதேச மாஃபியா குழுவில் சேர்கிறார்.

இந்தியாவை பலவீனப்படுத்துவது மற்றும் பிரதமரைப் பதவியில் இருந்து நீக்குவதே காளியின் நோக்கமாக உள்ளது. இதுதான் கதையின் மையம்.

இதற்காக கபீர், தனது மேலாளரான கர்னல் லுத்ராவை (அசுதோஷ் ராணா) கொல்கிறார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அதற்குப் பிறகு, விக்ரம் (ஜுனியர் என்டிஆர்) என்ற புதிய உளவுத்துறை முகவர், கபீரை எதிர்கொள்ள வருகிறார்.

அவர்கள் இருவருக்குள்ளும் நடந்தது என்ன? வென்றது யார்? என்பதுதான் இந்தக் கதையின் சுருக்கம்.

பட மூலாதாரம், YRF – Yash Raj Films/FB

இந்த மாதிரியான படங்களில், கதை சிக்கலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆக்‌ஷன் காட்சிகள்தான் முக்கியம். ஆனால், உணர்ச்சிகரமான ஒரு பின்னணி இருக்க வேண்டும். அப்போதுதான் பார்வையாளர்கள் கதையுடன் ஒன்றிணைவார்கள். இல்லையென்றால், வீடியோ கேம் பார்ப்பது போன்ற உணர்வு தான் ஏற்படும்.

வார் படம் வெற்றிபெற்றதுக்கு முக்கிய காரணம், ஹ்ரித்திக் மற்றும் டைகர் ஷெராஃப் இடையேயான வலுவான காட்சிகள் தான்.

ஒரு பயங்கரவாதியின் மகன் தேசபக்தராக மாறும் ஒரு சுவாரஸ்யமான கதையும், மற்றவர்களை விட வலிமையான ஒரு வில்லன் கதாபாத்திரமும் அதில் இருந்தது.

வார் 2 படத்தில் இந்த அம்சம் இல்லை.

இரண்டு பெரிய ஹீரோக்கள் இருந்தால், அவர்களுக்கு சமமான ஒரு வில்லன் இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, ‘காளி’ என்ற முகமற்ற குழுவை மட்டும் காட்டினால், ஹீரோக்கள் யாரை எதிர்கொள்கிறார்கள் என்பதே பார்வையாளர்களுக்குப் புரியாமல் குழப்பமாக இருக்கும்.

கதை மற்றும் கதைசொல்லலில் இருந்த குறைபாடுகள், படத்தைப் பாதித்தன.

ஆரம்பத்தில் ஹ்ரித்திக் ரோஷனின் வருகை மிகச் சிறப்பாக இருந்தது. பின்னர் ஜூனியர் என்டிஆரின் வருகையும் நன்றாக எடுபட்டது.

ஆனால் அதன் பிறகு, வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகள் தொடர, படம் சலிப்பை ஏற்படுத்துகிறது. இடைவேளையில் வரும் திருப்பம் மட்டும் சற்று சுவாரஸ்யமாக இருந்தது.

முதல் பாதி நன்றாகத் தெரிந்தாலும், ஒரு குழந்தையை அடிக்கும் அத்தியாயத்துடன் தொடங்கும் இரண்டாம் பாதி, பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கிறது.

அதன் பிறகு வரும் ஹ்ரித்திக் ரோஷனின் காதல் ஃப்ளாஷ்பேக் தேவையற்றதாகவே தெரிகிறது.

நாயகி கியாரா அத்வானியின் பாத்திரம் கதையில் முக்கியமானது.

தனது தந்தையைக் கொன்றது, தனது காதலன் தான் என்பதை அறிந்தவுடன், பழிவாங்கும் உணர்ச்சியை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, அவரை ஒரு பாடல் காட்சியில் மட்டுமே இயக்குனர் பயன்படுத்தியுள்ளார்.

அவ்வப்போது துப்பாக்கிகளால் சுடுவதைத் தவிர அவர் வேறு எதுவும் செய்யவில்லை.

பட மூலாதாரம், YRF – Yash Raj Films/FB

படக்குறிப்பு, நாயகி கியாரா அத்வானியின் பாத்திரம் கதையில் முக்கியமானது.அனில் கபூர் ஒரு நல்ல நடிகர். ஆனால், அவருக்காக படத்தில் நான்கு அல்லது ஐந்து முக்கியக் காட்சிகள் கூட இல்லை.

ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திரம் வலிமையானது. அவருக்கு திரையில் அதிக இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜூனியர் என்டிஆரின் கதாபாத்திரம் குழப்பமாக உள்ளது. இரண்டாம் பாதியில் அவர் ஹீரோவா, வில்லனா என்பதே தெளிவாகத் தெரியவில்லை.

மற்றபடி, இரண்டு ஹீரோக்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகிற பாடல் நன்றாக இருக்கிறது. முதல் பாதியில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஜூனியர் என்.டி.ஆர், இரண்டாம் பாதியில் ஏமாற்றமளிக்கிறார்.

மொத்தத்தில், இது ஜேம்ஸ் பாண்ட், மிஷன் இம்பாசிபிள் மாதிரியான ஆக்‌ஷன் படம். இடையில் அங்கங்கே கதையைக் கொண்டிருக்கிறது.

ஹீரோக்கள் பல நாடுகளில் சுற்றித் திரிகிறார்கள், எதையும் யோசிக்காமல் விமானங்கள், கப்பல்கள், ரயில்களில் குதிக்கிறார்கள்.

இப்படத்தில் ஸ்டண்ட் இயக்குநர்கள்தான், இயக்குனரை விட அதிக வேலை செய்துள்ளனர்.

தோட்டாக்கள், கத்திகள், கூர்மையான ஆயுதங்களால் ஹீரோக்கள் காயமடைகிறார்கள். ஒருபுறம் ரத்தம் கசிந்தாலும், அவர்கள் எதற்கும் அசைய மாட்டார்கள்.

படத்தில் லாஜிக்குக்கு இடமேயில்லை. படத்தில் முக்கியமானதாக இருந்திருக்க வேண்டிய விஎஃப்எக்ஸ், சில இடங்களில் மோசமாக இருந்தது.

தயாரிப்பின் தரம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. குறிப்பாக ரயில் காட்சி மிகச் சிறப்பாக இருந்தது. எந்தவிதக் குறையும் இல்லாமல் செலவு செய்திருக்கிறார்கள். கேமராவும் இசையும் நன்றாக இருந்தன.

171 நிமிடங்கள் இந்தப் படம் ஓடியது. அது சற்று அதிகமாகத் தோன்றியது. அதேபோல், இந்தப் படத்தின் எடிட்டர் எதுவுமே செய்யாதது போலத் தோன்றியது. குறிப்பாக அந்தக் குழந்தை வரும் காட்சிகளை வெட்டியிருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

பட மூலாதாரம், YRF – Yash Raj Films

படக்குறிப்பு, படத்தில் முக்கியமானதாக இருந்திருக்க வேண்டிய விஎஃப்எக்ஸ், சில இடங்களில் மோசமாக இருந்தது.ஜூனியர் என்டிஆர் வரும் சில காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் மெய் சிலிர்க்க வைக்கும். ஆனால், இந்த வகையான பாலிவுட் முயற்சி பெரிதாக பலன் தராது. இது ரசிகர்களை ஈர்க்கும் படமும் இல்லை.

படத்தின் பலம் :

1. ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் வரும் காட்சிகள்

2. ஆக்‌ஷன் காட்சிகள்

3. கேமரா மற்றும் பிரமாண்டமான தயாரிப்பு

படத்தின் குறைகள்:

1. கதை

2. வலுவான வில்லன் இல்லாதது

3. படத்தின் பெரும்பாலான காட்சிகளை எங்கேயோ பார்த்தது போன்ற உணர்வு.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஒரு நல்ல பிரியாணி சமைக்க, அருமையான மசாலா பொருட்கள் மட்டும் போதாது. நிறைய கோழித்துண்டுகளும், தரமான அரிசியும் தேவை.

ஆனால், வார்-2 திரைப்படத்தில் மசாலாப் பொருட்களையும், உணர்ச்சியையும் மறந்துவிட்டார்கள்.

மற்றபடி இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு