பட மூலாதாரம், Sun Pictures

படக்குறிப்பு, ரஜினிகாந்த்எழுதியவர், சுதா ஜி திலக்பதவி, 15 ஆகஸ்ட் 2025, 08:33 GMT

புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்

திரையுலகில் நீண்ட காலம் நிலைத்திருப்பது சுலபமான விஷயம் அல்ல.

‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளார்’ என்பது அவரது நீண்ட பயணத்தை மட்டுமல்ல, மாறாக அவர் தொடர்ந்து திரைத்துறையை ஆட்சி செய்துள்ளார் என்பதையும் சேர்த்தே குறிக்கிறது.

அவரது படங்கள் திரையரங்குகளை கோயில்களாகவும், ரசிகர்களை பக்தர்களாகவும் மாற்றியுள்ளன. அவரது பெரும்பாலான படைப்புகள் தமிழ் திரைப்படத் துறையில் உருவானவை. தமிழ் சினிமாவில் அவர் நடித்த பல படங்கள் பல தலைமுறையினரின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

1975-ல், பின்னர் உலகம் முழுக்க ‘ரஜினிகாந்த்’ என்று அறியப்பட்ட சிவாஜி ராவ் கெய்க்வாட், சென்னையில் (அப்போது மெட்ராஸ்) நடந்த அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பில் முதல் முறையாகக் கால் பதித்தார். அந்த படத்தில், அவர் சிறிது நேரம் மட்டுமே தோன்றினாலும், திமிரான கதாபாத்திரத்தில் நடித்த அவரது நடிப்பு, அனைவரின் நினைவிலும் பதிந்துவிட்டது.

தற்போது, ஐம்பது ஆண்டுகளைக் கடந்துள்ள அவரது திரைப்பயணத்தில், 170 படங்களைத் தொடர்ந்து, ரஜினிகாந்தின் புதிய படமான கூலி வெளியாகியுள்ளது. இந்த படம், அவரது வாழ்க்கைப் பயணத்தைப் பிரதிபலிக்கும் கதையுடன், அவரது பயணத்தைக் கொண்டாடுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பணக்கார, அடக்குமுறை செய்யும் வில்லனை ஒரு தொழிலாளர் வர்க்க ஹீரோவாக எதிர்கொள்ளும் வேடத்தில் அவர் நடித்துள்ளார்.

தற்போது 74 வயதாகும் ரஜினிகாந்த், ஒரு அதிசயம்.

அவருக்காக கோயில்கள் கட்டப்பட்டுள்ளன, திரைப்பட விளம்பரங்களின் போது அவரது புகைப்படம் விமானங்களில் ஒட்டப்படுகிறது. இந்தியாவில் இருந்து வெகுதொலைவில் உள்ள ஜப்பானில் கூட, அவர் உள்ளூர் நாயகனைப் போலவே கொண்டாடப்படுகிறார்.

இந்தியத் திரை உலகில் மிகப் பிரபலமான நபராக உயர்ந்த, ஒரு சாதாரண நபரின் பிரமிப்பூட்டும் பயணம் தான் ரஜினிகாந்தின் வாழ்க்கை.

ரஜினிகாந்த், தொழிலாளர் வர்க்கத்தின் ஹீரோவாக, மொழி, வர்க்கம், நிலவியல் போன்ற எல்லைகளைத் தாண்டி மக்களின் இதயங்களை வென்றவர். கடும் வறுமையிலிருந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்து வரை உயர்ந்த அவரது வாழ்க்கை, ஒரு அசாதாரணமான வெற்றிப் பயணம்.

இதன் பலனாக, இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதையும், நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதையும் ரஜினி வென்றுள்ளார்.

லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும், சுமார் 50,000 ரசிகர் மன்றங்களுக்கும், இந்த 50வது ஆண்டுவிழா அவர்களின் நாயகனைக் கொண்டாடும் ஒரு முக்கியத் தருணமாக உள்ளது.

ரசிகர்கள் ரஜினிகாந்தை புராணக் கதைகளில் வரும் தெய்வமாக மதிக்கிறார்கள். “கடவுள் யாரோ ஒருவர் வடிவில் வரவேண்டும். ரஜினிகாந்த் அப்படி ஒரு தோற்றத்தில் இருக்கிறார்,” என்கிறார் அவரது தீவிர ரசிகர் ஏ. ராஜேந்திரன்.

“நம்மை பார்க்க வைக்கும் சக்தி, ரஜினிகாந்திடம் உள்ளது.”

பட மூலாதாரம், The India Today Group via Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் இருந்து வெகுதொலைவில் உள்ள ஜப்பானிலும் அவர் போற்றப்படுகிறார்.ரஜினிகாந்தின் ரசிகர்கள் வால் ஸ்ட்ரீட் வங்கியாளர்கள் முதல் தமிழ்நாட்டில் துணி துவைக்கும் பெண்கள் வரை பல்வேறு தரப்பினரை உள்ளடக்கியவர்கள் என்று “ரஜினிகாந்த்: ஒரு முழுமையான வாழ்க்கை வரலாறு” புத்தகத்தின் ஆசிரியர் நமன் ராமச்சந்திரன் கூறுகிறார்.

திரையில், ரஜினிகாந்த் ஏழைகளின் கனவுகளை வெளிப்படுத்துகிறார். சவால்களை வென்று முன்னேற வேண்டும், ஆனால் மனிதநேயத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே அவரது கதைகளின் மையக்கருத்தாக உள்ளது.

2015-ல் ரிங்கு கால்சி மற்றும் ஜோயோஜீத் பால் இயக்கிய “ஃபார் தி லவ் ஆஃப் எ மேன்” என்ற ஆவணப்படம் ரஜினிகாந்தைப் பற்றியது. இப்படம் அவரது ரசிகர்களின் தீவிர பக்தியை வெளிப்படுத்தியது.

சில ரசிகர்கள் தங்கள் வீடுகளை அடமானம் வைத்தனர், சேமித்து வைத்திருந்த தங்கத்தை விற்றனர், அவரது படங்கள் வெளியாகும் நாளை, வாழ்நாளில் ஒருமுறை வரும் பண்டிகையாகக் கொண்டாடினர்.

“இது சாதாரண ரசிகர் மன்றம் அல்ல,” என்று கூறும் கால்சி, “இது அவர்களின் அடையாளம். பணிவுடன், ஒழுக்கமாக, ஆனால் தேவையான நேரத்தில் சக்தி வாய்ந்தவராக அவர்கள் எப்படியிருக்க விரும்புகிறார்கள் என்பதை ரஜினிகாந்த் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்” என்கிறார்.

சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் வீடு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரும் ஒரு புனித இடமாக மாறியுள்ளது. அவரைப் பார்ப்பதற்காக, அவரிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக, அல்லது குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக, ஏன் ஒரு சிறிய சந்திப்புக்காக கூட ரசிகர்கள் வருகிறார்கள். அவரை நேரில் காண்பது என்பது அவர்களுக்கு ஒரு பெரிய அனுபவமாக உள்ளது.

2016-ல் “கபாலி” திரைப்படம் வெளியான போது, ஏர் ஆசியா நிறுவனம் தனது விமானம் ஒன்றில் ரஜினிகாந்தின் முகத்தை பொறித்திருந்தது. இது அவரது புகழ் வானில் பறக்கக்கூடிய அளவுக்கு உயர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

ரஜினிகாந்தின் ரசிகர் மன்றங்கள், அவரது பெயரில் ரத்ததான முகாம்கள், நிவாரண உதவிகள், சமூக நிகழ்வுகள் நடத்துகிறன்றன.

அவர் மீதான பிரியம் சமூக சேவையாக மாறுகிறது.

“என் அப்பா வீட்டில் ஒருபோதும் சூப்பர் ஸ்டார் போல நடக்க மாட்டார்… படங்களில் மட்டும் தான்”என்று அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது “ஸ்டாண்டிங் ஆன் ஆன் ஆப்பிள் பாக்ஸ்” என்ற புத்தகத்தில் ரஜினியைக் குறித்து எழுதியுள்ளார்.

ரஜினிகாந்தின் ரசிகர்கள் சினிமாவையும், வாழ்க்கையையும் ஒன்றாகப் பார்க்கிறார்கள்.

ரஜினிகாந்த் படம் வெளியாகும் போது, அது ஒரு பெரிய விழாவாக மாறுகிறது.

நான் பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கியபோது, முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களின் உற்சாகத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். திரையில் நாணயங்கள் வீசப்படும், கற்பூரம் எரியும், பூக்கள் தூவப்படும், கட்-அவுட்களில் பால் அபிஷேகம் செய்யப்படும், ரசிகர்கள் அவரது பெயரைக் கத்துவார்கள். அந்த நாள் ஒரு பண்டிகை போல் இருக்கும்.

பட மூலாதாரம், The India Today Group via Getty Images

படக்குறிப்பு, ரஜினிகாந்த் 170 படங்களில் நடித்துள்ளார், அவரது படங்கள் பெரும்பாலும் தமிழ் மொழியில் வெளியானவை .ரஜினிகாந்தின் படத்தைப் பார்ப்பது என்பது ஒரு சாதாரண திரையரங்க அனுபவம் மட்டுமல்ல, நம்பிக்கை, தொழிலாளர் வர்க்கத்தின் பெருமை, மகிழ்ச்சி, மற்றும் உற்சாகம் எல்லாம் கலந்து அது ஒரு திருவிழாவைப் போன்றதும் கூட.

மூன்று மணி நேர நீதி, நகைச்சுவை, காதல், பழிவாங்கல் நிறைந்த படம் முடிந்ததும், திரையரங்குகள் முழுக்க பாப்கார்னால் நிரம்பிவிடும். தெருக்களில் ரசிகர்கள் ஆடிப்பாடி முழு மனதுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இந்த ஆண்டு, கொண்டாட்டங்கள் உச்சத்தை எட்டியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் ஒரு ரசிகர், 5,500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கோவிலைக் கட்டி, ரஜினிகாந்த் சிலைக்கு வழிபாடு செய்துள்ளார்.

ரஜினிகாந்த் 4 குழந்தைகளில் ஒருவராக, வறுமையில் வளர்ந்தவர். அவரது தந்தை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்.

“நான் கல்லூரி படிப்பை விட்டபோது, என் தந்தை என்னை கூலி வேலைக்கு அனுப்பினார்,” என்று ரஜினிகாந்த் நினைவு கூறுகிறார். பின்னர் ஒரு உறவினர் அவருக்கு பேருந்து நடத்துநராக வேலை கிடைக்க உதவினார்.

நாடகத்தின் மீதான அவரது ஆர்வத்தைக் கவனித்த ஒரு நண்பர், அவரை அரசு நடத்தும் திரைப்படப் பள்ளியான மெட்ராஸ் திரைப்பட நிறுவனத்திற்கு அனுப்ப நிதி திரட்டினார்.

அங்கு, தமிழ் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர் ரஜினியின் திறமையை கவனித்து, 1975-ல் அவருக்கு வாய்ப்பு வழங்கினார்.

எம்.ஜி.ராமச்சந்திரனைப் போல தமிழ் சினிமாவின் நாயகர்கள் வெள்ளை நிறமும் மென்மையாகப் பேசும் உடல்மொழியும் கொண்டவர்கள். ஆனால், ரஜினிகாந்த் வித்தியாசமாகத் தனித்து நின்றார். அவரது கருமை நிறம், கிராமிய பாணி, மற்றும் துணிச்சல் ஆகியவை சினிமாவில் அவரது அடையாளமாகின.

பட மூலாதாரம், India Today Group via Getty Images

படக்குறிப்பு, ரசிகர்கள் ரஜினிகாந்தை புராணக் கதைகளில் வரும் தெய்வமாக மதிக்கிறார்கள். ரஜினிகாந்த் மீதான நீண்ட கால ஈர்ப்புக்கு காரணமாக, அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும், அவர் ஏற்று நடிக்கும் பலவிதமான கதாபாத்திரங்களும் உள்ளன.

அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே போன்ற படங்களில் வில்லனாகவும் , ஹீரோ அல்லாத வேடங்களிலும் நடித்த ரஜினிகாந்த் , ஜானி, முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்களில் சிக்கலான மற்றும் சோகமான கதாபாத்திரங்களை ஏற்றார்.

1980-ல் வெளியான பில்லா படம் மூலம், அவர் ஒரு அதிரடி ஹீரோவாக பெயர் பெற்றார். அதன்பிறகு தமிழ், ஹிந்தி படங்களில் நடித்த அவர், அமெரிக்க படமான பிளட்ஸ்டோனில் சிறப்பு தோற்றத்திலும் நடித்தார்.

1990-களில், ஸ்ரீ ராகவேந்திரர், பாபா போன்ற ஆன்மீக பாத்திரங்களில் ரஜினிகாந்த் நடித்தார். அதே நேரத்தில், நியாயத்தை நிலைநாட்டும் கதாபாத்திரங்களிலும் பிரபலமானார்.

1998-ல், முத்து படம் ஜப்பானில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

ரஜினிகாந்த் ரோபோவாக நடித்த எந்திரன், சிவாஜி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றன. அவருக்கு உடல்நலப் பிரச்னைகள் இருந்தபோதிலும், அவரது படங்கள் தொடர்ந்து வணிக ரீதியான வெற்றிகளைக் குவித்தன.

ஒரு காலத்தில் விமர்சகர்கள், ரஜினிகாந்தை “ஸ்டைல் கிங்” என புகழ்ந்தனர்.

சிகரெட்டைச் சுழற்றுவது, சன் கிளாஸை சுழற்றுவது, நகைச்சுவை கலந்த பஞ்ச் வசனங்கள் பேசுவது போன்றவற்றுக்கு பெயர் பெற்றார் ரஜினிகாந்த்.

ஆனால், அவர் நடித்த கதாபாத்திரங்களில் உள்ள நம்பிக்கை, தைரியம், நகைச்சுவை, நீதி போன்றவை காலத்தால் அழியாத, எல்லா இடங்களிலும் பொருந்தக் கூடிய நற்பண்புகள்.

அவருடன் 25 படங்களில் பணியாற்றிய திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.பி. முத்துராமன், அவரது வெற்றிக்கு “கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, நல்லெண்ணம் மற்றும் சக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் பொறுப்பான நடத்தை” தான் காரணம் என்று கூறுகிறார்.

தமிழ்நாட்டில், அவரது திரையுலக நண்பர்கள் பலரும் அரசியலில் நுழைந்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட முயற்சி செய்தாலும், கட்சி தொடங்கவில்லை, தேர்தலில் போட்டியிடவும் இல்லை.

ஆனால், அரசியல்வாதியாக இல்லாமல், ரசிகர்களுக்கான தார்மீக வழிகாட்டியாக அவர் ஒரு தனி இடத்தில் இருக்கிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நட்சத்திரங்கள், ஒரு காலத்தில் நாட்டுப்புற தெய்வங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்கிறார் திரைப்பட வரலாற்றாசிரியர் தியோடர் பாஸ்கரன்.

அந்த வகையில், ரஜினிகாந்த் ஒரு பிரபலமாக மட்டுமல்லாமல், செல்வாக்கு மிகுந்த நபராகவும் திகழ்கிறார்.

அவரது ரசிகர்கள் விடியற்காலையில் பால் பாக்கெட்டுகளுடனும் , மாலைகளுடனும் வரிசையில் நிற்கிறார்கள்.

ரஜினிகாந்தால், அவர்களது கனவுகளுக்கு வண்ணம் சேர்க்கவும், வாழ்க்கைக்கு ஒளி பாய்ச்சவும் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு