அறிவியலை கேடயமாக்கி கணவர் கொலை வழக்கில் வாதிட்ட பேராசிரியை – நீதிமன்றம் உண்மையை உறுதி செய்தது எப்படி?

படக்குறிப்பு, கணவர் நீரஜை (இடது) மின்சாரம் பாய்ச்சி கொன்றதற்காக மம்தா பதக்கிற்கு (வலது) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்பதவி, பிபிசி செய்திகள்35 நிமிடங்களுக்கு முன்னர்

“நீங்கள் ஒரு வேதியியல் பேராசிரியரா?” என்று நீதிபதி கேட்டார்.

“ஆமாம்,” என்று மம்தா பதக் மரியாதையுடன் கைகளைக் கூப்பி பதிலளித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நீதிமன்ற அறையில், வெள்ளைப் புடவையுடன், மூக்கில் கண்ணாடி அணிந்து, ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியை இரண்டு நீதிபதிகள் முன் நின்று பேசினார். அது ஒரு தடயவியல் வேதியியல் வகுப்பைப் போலவே இருந்தது.

“பிரேத பரிசோதனையில்,” என்று கூறும்போது அவரது குரல் சிறிது நடுங்கினாலும், “சரியான ரசாயன பரிசோதனை இல்லாமல், வெப்பத்தால் ஏற்பட்ட தீக்காயத்தையும் மின்சாரத்தால் ஏற்பட்ட தீக்காயத்தையும் வேறுபடுத்த முடியாது”என்று அமைதியாக அவர் வாதிட்டார்.

“பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் மின்சாரம் தாக்கியதற்கான தெளிவான அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார்” என நீதிபதி விவேக் அகர்வால் அவரிடம் தெரிவித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

மின்சாரத்தை பாய்ச்சி தனது கணவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 63 வயதுப் பெண் ஒருவர், அமிலங்களும் திசுக்களின் எதிர்வினைகளும் தீக்காயத்தின் தன்மையை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதை நீதிமன்றத்தில் விளக்கினார். அந்த தருணம் மிகவும் அபூர்வமானதாகவும், கிட்டத்தட்ட நம்ப முடியாததாகவும் இருந்தது.

அந்த உரையாடல் ஏப்ரல் மாத விசாரணையின் போது வீடியோவில் பதிவாகி, இந்தியாவில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் நீதிமன்றத்தில், மம்தா பதக் ஒரு நிபுணராக பேசினாலும், அரசு தரப்பின் வழக்கை அவரால் மாற்ற முடியவில்லை.

மம்தா பதக்கின் கணவர் கொலை செய்யப்பட்டதாக பதியப்பட்ட அந்த வழக்கின் பின்னணியில் சந்தேகமும் , அவர்களது திருமணம் தொடர்பான முரண்பாடுகளும் இருந்தன.

கடந்த மாதம், மம்தா பதக்கின் மேல்முறையீட்டை நிராகரித்த உயர் நீதிமன்றம், 2021 ஏப்ரலில் ஓய்வுபெற்ற மருத்துவரான மம்தாவின் கணவர் நீரஜ் பதக்கைக் கொலை செய்ததாக அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

பிரேத பரிசோதனையில் உள்ள இடைவெளிகள், வீட்டின் மின்காப்பு மற்றும் மின்வேதியியல் கோட்பாடு ஆகியவற்றைக் கொண்டு தானே முன்வந்து மம்தா பதக் வாதிட்டார்.

ஆனால் நீதிமன்றம் சூழ்நிலை ஆதாரங்களை உறுதியானதாகக் கருதி தீர்மானித்தது. அவர் தனது கணவருக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து, பின்னர் மின்சாரத்தை பாய்ச்சிகொலை செய்ததாகக் கூறப்பட்டது.

நீதிமன்றத்தில், இரண்டு குழந்தைகளின் தாயான மம்தா, வழக்குக் கோப்புகளின் அடுக்கை கவனமாகப் பார்த்து, அவற்றைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

பின்னர் உற்சாகமாக பேசத் தொடங்கினார்.

“ஐயா, மின்சார தீக்காயங்கள் மரணத்திற்கு முன்பானதா , பிறகானதா என்று பிரேத பரிசோதனையில் வேறுபடுத்த முடியாது,” என ஒரு தடயவியல் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி வாதிட்டார் மம்தா.

“பிரேத பரிசோதனை அறிக்கையில் அதை மின்சாரத்தால் ஏற்பட்ட தீக்காயம் என்று மருத்துவர்கள் எப்படி எழுதினார்கள்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நுண்ணோக்கி மூலம் பார்த்தால், மின்சாரத்தால் ஏற்பட்ட தீக்காயங்கள் மரணத்திற்கு முன்பும் பிறகும் ஒரே மாதிரியாகத் தெரியும். அதனால், சாதாரண பரிசோதனைகள் மூலம் தெளிவான முடிவை கூற முடியாது. ஆனால், தோலில் ஏற்படும் மாற்றங்களை நெருக்கமாகப் படித்தால், அந்த தீக்காயம் எப்போது ஏற்பட்டது என்பதை கண்டறிய வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது .

படக்குறிப்பு, மம்தா பதக் உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கை வாதிடும் நீதிமன்ற அறை காணொளி வைரலானது.வேதியியல் எதிர்வினைகள் பற்றி திடீரென ஒரு விவாதம் நடந்தது. நீதிபதி ஆய்வகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கேள்விகள் எழுப்பினார். மம்தா பல வகையான அமிலங்களைப் பற்றி பேசினார். அவற்றை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் வேறுபடுத்த முடியும் என்றார்.

ஆனால் இது பிரேத பரிசோதனை அறையில் சாத்தியமில்லை. அவர் நீதிபதிக்கு எலக்ட்ரான் நுண்ணோக்கி எப்படி வேலை செய்கிறது, அமிலங்கள் எப்படி வேறுபடுகின்றன என்பதைக் கூற முயன்றார். அங்கிருந்த மூன்று பெண் வழக்கறிஞர்கள் இதைக்கேட்டு சிரித்தனர்.

மம்தா தொடர்ந்து பேசினார்.

சிறையில் ஒரு வருடமாக சட்டம் படித்து வருவதாகக் கூறினார். ஸ்டிக்கர்கள் ஒட்டிய கோப்புகளைப் புரட்டினார், தடயவியல் மருத்துவ புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டினார். விசாரணையில் ஏற்பட்ட குறைகளைச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், குற்றம் நடந்த இடம் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை, சம்பவ இடத்தில் தகுதியான மின் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இல்லை என்று தெரிவித்தார்.

“எங்கள் வீடு 2017 முதல் 2022 வரை காப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆய்வுகள் மூலம் அது மின்சாரத்தில் ஏற்பட்ட தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது,” என்று கூறினார்.

தனது கணவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் இருந்தது. “வயது முதிர்வின் காரணமாக இதய தமனிகள் குறுகியது மற்றும் கால்சியம் படிந்ததது (calcium deposit)” தான் அவரது இறப்புக்கான உண்மையான காரணம் என்ற மம்தா, அவர் வழுக்கி விழுந்து இரத்தம் உறைந்திருக்கலாம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.

ஆனால் இதை உறுதிப்படுத்த சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை என்று மம்தா நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

2021 ஏப்ரல் 29-ஆம் தேதி, 65 வயதான நீரஜ் பதக் தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், மின்சாரம் தாக்கியதால் தான் அவர் இறந்ததாக கூறப்பட்டது.

சில நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி மம்தா கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

அவர்களது வீட்டில் இருந்து இரண்டு பின் பிளக் கொண்ட 11 மீட்டர் மின்சார கம்பி மற்றும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

10 தூக்க மாத்திரைகள் கொண்ட அட்டையில் இருந்து ஆறு மாத்திரைகள் மீட்கப்பட்டன.

பிரேத பரிசோதனை அறிக்கையில், பல இடங்களில் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட இருதய-சுவாச அதிர்ச்சியே மரணத்திற்கான காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது, மே 1-ஆம் தேதி நடந்த பரிசோதனைக்கு 36 முதல் 72 மணி நேரத்திற்கு முன்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

“ஆனால் அந்த மாத்திரைகளில் என் கைரேகைகள் எதுவும் இல்லை,” என்று மம்தா நீதிபதிகளிடம் கூறினார். ஆனால், அவரது வாதங்கள் விரைவில் பலவீனமடைந்தன. நீதிபதிகள் அகர்வால் மற்றும் தேவ்நாராயண் சின்ஹா அவருடைய விளக்கங்களை நம்பவில்லை.

மம்தாவும் நீரஜ் பதக்கும் சத்தர்பூரில் நாற்பது ஆண்டுகளாக ஒரு அமைதியான நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமான சத்தர்பூர், பண்ணைகள், கிரானைட் குவாரிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு பெயர் பெற்ற இடம்.

மம்தா அரசு கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக இருந்தார். நீரஜ் மாவட்ட மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றினார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் வெளிநாட்டில் குடியேறியுள்ளார், மற்றவர் மம்தாவுடன் வசித்து வந்தார்.

நீரஜ் 2019-இல் 39 ஆண்டுகள் அரசு பணியில் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். பின்னர் வீட்டிலேயே தனியாக கிளினிக் ஒன்றைத் தொடங்கினார்.

படக்குறிப்பு, மம்தா பதக் அரசு கல்லூரியில் 36 ஆண்டுகள் வேதியியல் கற்பித்தார்.இந்தச் சம்பவம் கொரோனா காலத்தில் நடந்தது. நீரஜுக்கு கோவிட் அறிகுறிகள் இருந்ததால், அவர் முதல் மாடியில் தனியாக இருந்தார். மம்தாவும் அவரது மகன் நிதிஷும் தரைத் தளத்தில் தங்கியிருந்தனர். தரைத் தளத்திலிருந்து இரண்டு இடங்களில் படிக்கட்டுகள், நீரஜ் இருந்த அறைகளை அவரது மருத்துவமனையுடன் இணைத்திருந்தன. அங்கு சுமார் 6 ஊழியர்கள் ஆய்வகம், மருந்துக் கடையிலும் பணிபுரிந்தனர்.

மம்தா ஏப்ரல் 29 அன்று, தனது கணவர் நீரஜ் படுக்கையில் சுயநினைவு இழந்த நிலையில் இருந்ததாகக் கூறினார். ஆனால், அவர் மே 1 வரை மருத்துவரையோ காவல்துறையையோ தொடர்பு கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, தனது மூத்த மகனை 130 கி.மீ. தொலைவில் உள்ள ஜான்சிக்கு அழைத்துச் சென்று, அதே மாலையில் திரும்பினார். அந்த பயணத்திற்குத் தெளிவான காரணம் இல்லை என ஓட்டுநர் கூறினார். பின்னர் காவல்துறையைத் தொடர்பு கொண்டபோது, நீரஜ் எப்படி இறந்தார் என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்று மம்தா கூறியதாக, இந்த வழக்கில் வெளியான 97 பக்க தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமைதியின் பின்னால் ஒரு சிக்கலான திருமண வாழ்க்கை இருந்தது. நீண்ட காலமாக மம்தா மற்றும் நீரஜ் பிரிந்து வாழ்ந்தனர். மம்தா தனது கணவர் துரோகம் இழைத்தாக சந்தேகித்தார்.

நீதிபதிகள் இந்த முரண்பாட்டை சுட்டிக்காட்டினர்.

நீரஜ் இறந்த நாளன்று காலை, அவர் தனது நண்பர் ஒருவரை அழைத்து மம்தா தன்னை சித்திரவதை செய்கிறார் என்று கூறியுள்ளார்.

“அவர் என்னை குளியலறையில் அடைத்து வைத்தார், பல நாட்கள் உணவு கொடுக்கவில்லை, உடலில் காயங்கள் ஏற்படுத்தினார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பணம், ஏடிஎம் கார்டுகள், வாகன சாவிகள் மற்றும் வங்கி வைப்பு நிதி ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் கூறினார். உதவி கேட்டு, நீரஜின் மகன் ஒரு நண்பரிடம் தகவல் தெரிவித்தார். அந்த நண்பர் காவல்துறையைத் தொடர்பு கொண்டார். பின்னர், காவல்துறையினர் ஓய்வு பெற்ற மருத்துவரான நீரஜை “மம்தாவின் கட்டுப்பாட்டிலிருந்து” மீட்டனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்த தம்பதி பிரிந்து வாழ்ந்தது, நீதிமன்றத்தின் சந்தேகங்களுக்கு வலு சேர்த்தது.

மம்தா நீதிமன்றத்தில், தான் ஒரு ‘சிறந்த தாய்’ என்று கூறினார். அதற்கு ஆதாரமாக, குழந்தைகள் கொடுத்த பிறந்தநாள் அட்டையை காட்டினார்.

கணவருக்கு உணவளிக்கும் புகைப்படங்களையும், குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களையும் காட்டினார்.

ஆனால், நீதிபதிகள் மனம் மாறவில்லை.

“பாசம் காட்டும் ஒரு தாய், சந்தேகத்திற்குரிய மனைவியாகவும் இருக்கலாம்” என்று அவர்கள் குறிப்பிட்டனர். அவரது பாசம், அவரது உள்நோக்கத்தை மறைக்காது என்பதே அவர்களின் கூற்றாக இருந்தது.

சாட்சியம் அளித்த 50 நிமிடங்களுக்குப் பிறகு, பல கேள்விகளுக்கு பதிலளித்து நீதிமன்றத்தின் சந்தேகங்களுக்கு எதிராக தன்னைத்தானே தற்காத்துக் கொண்ட மம்தா, முதல் முறையாக மனஅமைதியை இழந்தார்.

“எனக்கு ஒன்று மட்டும் தெரியும்… நான் அவரைக் கொல்லவில்லை,” என்று தடுமாறிய குரலில் கூறிய மம்தா பிறகு, “இதை என்னால் இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றார்.

“நீங்கள் இதற்குப் பழகியிருப்பீர்கள்… கல்லூரியில் 50 நிமிட வகுப்புகள் எடுக்கிறீர்கள் அல்லவா?” என்று அவரது பதற்றத்தை குறைக்க, நீதிபதி அகர்வால் நகைச்சுவையாக கூறினார்.

“நாற்பது நிமிடங்கள், ஐயா. ஆனால் அவர்கள் சிறிய குழந்தைகள்,” என்று மம்தா பதில் அளித்தார்.

“கல்லூரியில் சிறிய குழந்தைகளா? நீங்கள் பேராசிரியர் தானே?” என்று நீதிபதி மீண்டும் கேள்வி எழுப்பினார்.

“ஆனால் அவர்கள் குழந்தைகள் ஐயா,” என்று மம்தா மீண்டும் கூறினார்.

அதற்கு, “இதுபோன்ற கதைகளை எங்களிடம் சொல்லாதீர்கள்,”என நீதிபதி அகர்வால் கடுமையாக தொனியில் கூறினார்.

மம்தா, ஒரு பிரதிவாதியாக மட்டுமல்ல, ஒரு ஆசிரியையாகவும் நீதிமன்ற அறையை வேதியியல் வகுப்பாக மாற்ற முயன்றார். அறிவியல் மூலம் தன்னை குற்றமற்றவராக நிரூபிக்க முயற்சித்தார். ஆனால் இறுதியில், அவரது வாதங்களைவிட, நீதிமன்றத்தில் உள்ள உறுதியான ஆதாரங்கள் வலுவானவை என்பது நிரூபணமாயின.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு