‘இரவு முழுக்க அடித்தனர்’: பெண் வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாக புகார் – என்ன நடந்தது?

படக்குறிப்பு, வழக்கறிஞர் ஆர்த்தி.எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“இரவு முழுக்க பெண் காவலர்கள் அடித்தனர். ஒருவர் கூட சீருடையில் இல்லை. தூய்மைப் பணியாளர்களுக்காக பேசுவீர்களா எனக் கேட்டு அடித்தனர்” என வீடியோ பதிவு ஒன்றில் பேசுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்த்தி.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை ஆதரித்ததற்காக சமூக செயற்பாட்டாளர் வளர்மதி, வழக்கறிஞர் ஆர்த்தி மீது ஆகஸ்ட் 14 அன்று காவல்துறை தாக்குதல் நடத்தியதாக, வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பான வழக்கில், ‘நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறை உடனே விடுவிக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ன நடந்தது?

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இரண்டு மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

மாநகராட்சி நுழைவு வாயில் முன்பாக ஆகஸ்ட் 1 முதல் 13-ஆம் தேதி வரை இரவு பகலாக அவர்களின் போராட்டம் நீடித்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் முடிவில், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதையடுத்து, ஆகஸ்ட் 13 அன்று மாலை முதலே மாநகராட்சி வளாகம் அமைந்துள்ள சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறை கூறியது. ஆனால், ‘முடிவு தெரியும் வரை கலைந்து செல்ல மாட்டோம்’ என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

இரவு சுமார் 11.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டனர். அவர்களை சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்தனர்.

படக்குறிப்பு, ஆகஸ்ட் 1 முதல் 13 ஆம் தேதி வரை இரவு பகலாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நீடித்தது.இந்தநிலையில், வேளச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற சமூக செயற்பாட்டாளர் வளர்மதியை காவல்துறை கைது செய்துள்ளது.

“வேளச்சேரியில் தன்னைக் காவல்துறை வளைத்துவிட்டதாக வளர்மதி கூறியுள்ளார். அதைக் கேட்டு வழக்கறிஞர் என்ற முறையில் உதவி செய்வதற்காக ஆர்த்தி சென்றுள்ளார். அவர் போராட்டத்தில் இல்லை. ஆனால், அவரையும் காவல்துறை அழைத்துச் சென்றது” எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இருவரையும் இரவு 2 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்துக்கு கூட்டி வந்துள்ளனர். அங்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்” என்கிறார்.

“கையை உடைத்துவிட்டனர்” – வழக்கறிஞர் ஆர்த்தி

ஆகஸ்ட் 14 அன்று காலை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் தங்களை சந்திக்க வந்த சமூக ஆர்வலர்களிடம் வழக்கறிஞர் ஆர்த்தியும் வளர்மதியும் பேசியுள்ளனர்.

அப்போது பேசிய இருவரும், “இரவு முழுக்க அடித்துக் கொண்டே இருந்தனர். ஒருவர் கூட காவல்துறை சீருடையில் இல்லை. ‘தூய்மைப் பணியாளர்களுக்காக பேசுவீர்களா?’ எனக் கேட்டு அடித்தனர்” என்றனர்.

“ஆய்வாளர் எங்கே, உதவி ஆணையர் எங்கே எனக் கேட்டோம். இருவரும் வந்துவிட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற பிறகு 15 முதல் 20 பெண் காவலர்கள் வந்தனர். அவர்கள் சுடிதார் மற்றும் புடவை அணிந்திருந்தனர். யார் எனக் கூறாமல் தொடர்ந்து அடித்தனர்” எனவும் அவர்கள் கூறினர்.

இதில், தனது கையை பெண் காவலர்கள் உடைத்துவிட்டதாகவும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லவில்லை எனவும் பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இந்த காணொளி இணையத்தில் பரவியது.

படக்குறிப்பு, தனது கையை பெண் காவலர்கள் உடைத்துவிட்டதாக பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.”இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகக் கூறி காவலர்கள் அழைத்துச் சென்றனர். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி எனப் பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றனர். ஆனால், சிச்சைக்காக உள்ளே அழைத்துச் செல்லவில்லை” எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.

“தாக்குதல் சம்பவத்தில் ஆர்த்தியின் விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

காணாமல் போன 13 பேர்?

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இவர்கள் தொடர்பான விவரம் எதுவும் வெளிவராததால், வழக்கறிஞர் ஆர்த்தி உள்பட 13 பேர் காணாமல் போய்விட்டதாகக் கூறி வழக்கறிஞர் எஸ்.விஜய் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

தூய்மைப் பணியாளர் போராட்டத்தை ஒருங்கிணைத்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான கே.பாரதி, வழக்கறிஞர்கள் சுரேஷ், மோகன்பாபு, ராஜ்குமார், ஆர்த்தி, சட்டக்கல்லூரி மாணவி வளர்மதி உள்பட 13 பேரின் பெயர்களையும் அவர் மனுவில் பட்டியலிட்டிருந்தார்.

இவர்கள் அனைவரும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதால் அவர்களை விடுவிப்பதற்கு காவல்துறை உத்தரவிடுமாறும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் ஆகஸ்ட் 14 அன்று விசாரணைக்கு வந்தது.

“காவல் நிலையத்தில் நடந்த சித்ரவதைகள் குறித்து பெண் வழக்கறிஞர் ஆர்த்தி பேசிய வீடியோ பதிவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். இதைப் பார்த்துவிட்டு நீதிபதிகள் விசாரணையை தொடங்கினர்” என்கிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.

நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டினார்.

‘அவர்கள் போராட்டம் நடத்துவதற்கு உரிமை இருந்தாலும் பாதைகள், நடைபாதைகள் மற்றும் சாலைகளில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை இல்லை’ என உத்தரவிட்டுள்ளதைக் குறிப்பிட்டார்.

படக்குறிப்பு, மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.தமிழ்நாடு அரசு சொன்னது என்ன?

13 பேர் காணாமல் போனதாக கூறப்படுவது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

” வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது ஏழு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பெரியமேடு காவல்நிலையத்திலும் அண்ணா சாலை காவல்நிலையத்திலும் பதிவாகியுள்ளன” என, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் கூறினார்.

கு.பாரதி, சுரேஷ், மோகன்பாபு மற்றும் ராஜ்குமார் ஆகிய நான்கு வழக்கறிஞர்கள் மீதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் முத்துசெல்வன் மற்றும் வளர்மதி என ஆறு பேர் மீதும் வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற ஏழு பேரை காவல்துறை விசாரித்துவிட்டு வெளியே செல்ல அனுமதித்ததாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தெரிவித்தது.

6 பேர்… 9 பிரிவுகளில் வழக்கு

கைதான ஆறு பேர் மீதும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் உள்பட ஒன்பது பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களைக் கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதுதொடர்பாக சில வீடியோ பதிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கைது சம்பவத்தின்போது பெண் காவலர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

படக்குறிப்பு, சமூக செயற்பாட்டாளர் வளர்மதிஆகவே, நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது சட்டவிரோதமாக இருக்கலாம் எனக் கருதுவதால் அவர்களை உடனே விடுவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“இவர்கள் ஆறு பேரும் அடுத்த விசாரணை தேதி வரும் வரை ஊடக நேர்காணல்கள், அறிக்கைகள், சமூக ஊடகப் பதிவுகள் என எதையும் மேற்கொள்ளக் கூடாது” எனக் கூறி ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

“சமூக செயற்பாட்டாளர் வளர்மதியை கைது செய்ததை அரசுத் தரப்பு ஒப்புக் கொண்டனர். ஆனால் ஆர்த்தி கைது செய்யப்படவில்லை எனக் கூறியது. ஆனால், அனைத்து வீடியோ பதிவுகளிலும் இருவரும் ஒரேநேரத்தில் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்கிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.

பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தாக்கப்பட்டது தொடர்பாக திங்கள்கிழமையன்று நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

காவல்துறை கூறுவது என்ன?

சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரனிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. வாட்ஸ்ஆப் உள்பட அவரிடம் விளக்கம் பெறும் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

“சீருடை அணியாத பெண் காவலர்கள் தாக்கியது உண்மையா?” எழும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சமயா சுல்தானாவிடம் பிபிசி தமிழ் பேசியது. ” எனக்குத் தெரியவில்லை. நான் அப்போது வேறு ஓர் இடத்தில் பணியில் இருந்தேன்” என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு