யுக்ரேன் பற்றிய டிரம்ப் – புதின் பேச்சு இந்தியாவுக்கு ஏன் முக்கியம்? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தைகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.எழுதியவர், தீபக் மண்டல்பதவி, பிபிசி செய்தியாளர்15 ஆகஸ்ட் 2025, 06:11 GMT

புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 15) அமெரிக்காவின் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் இந்த சந்திப்பின் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.

ஆனால் இதற்கிடையில், அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட், ‘டிரம்ப் மற்றும் புதின் இடையேயான பேச்சுவார்த்தைகளில் ஒரு முடிவை எட்ட முடியவில்லை என்றால், இந்தியா மீதான வரிகள் மேலும் அதிகரிக்கப்படும்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியா மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டால், ரஷ்யா மீது அதிக அழுத்தம் உருவாகும் என்பது டிரம்பின் வாதம்.

இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை ஆதரிப்பதாகவும், அதனால்தான் டிரம்ப் கோபமாக உள்ளார் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ரஷ்ய பொருளாதாரத்திற்கு இத்தகைய உதவி கிடைப்பதால், யுக்ரேனுக்கு எதிரான போரை புதின் நிறுத்தவில்லை என்று டொனால்ட் டிரம்ப் நம்புகிறார்.

இதன் விளைவாக, ஆகஸ்ட் 7 ஆம் தேதி, இந்தியா மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்தார். இருப்பினும், இது ஆகஸ்ட் 27 முதல் தான் அமலுக்கு வரும்.

இதற்கிடையில், அலாஸ்காவில் இன்று நடக்கவிருக்கும் டிரம்ப் மற்றும் புதின் இடையேயான பேச்சுவார்த்தையின் மீது உலக நாடுகளின் பார்வை உள்ளது, ஆனால் இந்தியா இந்த சந்திப்பின் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது.

டிரம்ப் மற்றும் புதின் இடையேயான பேச்சுவார்த்தைகள் இந்தியாவிற்கு ஏன் மிகவும் முக்கியம் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

வரி தொடர்பான அழுத்தங்கள்

பட மூலாதாரம், Andrew Harnik/Getty Images

படக்குறிப்பு, வரிகளை அறிவிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்)இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நல்லுறவுகள் காரணமாக, வரி பிரச்னையில் டிரம்ப் இந்தியாவிடம் மென்மையான போக்கை கடைபிடிப்பார் என்று நரேந்திர மோதி அரசாங்கம் நம்பியது.

ஆனால், ‘அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு அதிக வரிகளை விதிக்கும் நாடு இந்தியா’ என்று டிரம்ப் வர்ணித்தார்.

இதன் பிறகு, அவர் முதலில் இந்திய ஏற்றுமதிகளுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார், பின்னர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கூடுதலாக 25 சதவீத வரியை அறிவித்தார்.

இதன் மூலம் அமெரிக்காவின் அதிக வரிகளை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது டிரம்ப் இந்த கூடுதல் வரியை விதித்துள்ளார்.

வரவிருக்கும் நாட்களில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாமல், ஆகஸ்ட் 27 அன்று கூடுதலாக 25 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால், ஆசியாவில் அதிக அமெரிக்க வரிகள் விதிக்கப்படும் அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளியாக இந்தியா மாறும்.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக இந்தியாவை ‘தண்டித்த’ பிறகு, இந்த நடவடிக்கை ரஷ்ய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

பெரும்பாலான இந்திய ஏற்றுமதியாளர்கள் 10 முதல் 15 சதவீத வரியை தாங்கிக்கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள். 50 சதவீத வரியை தாங்குவது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது.

ஜப்பானிய நிதிசார் நிறுவனமான நோமுரா, “இந்த வரி அமல்படுத்தப்பட்டால், அது ஒரு ‘வர்த்தக தடை’ போல இருக்கும். வரியால் பாதிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி உடனடியாக நிறுத்தப்படலாம்” என்று கூறியது.

அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. இந்தியா தனது பொருட்களில் 18 சதவீதத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.2 சதவீதமாகும்.

50 சதவீத வரி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 முதல் 0.4 சதவீதம் வரையிலான சரிவை ஏற்படுத்தக்கூடும். இது இந்த ஆண்டு, பொருளாதார வளர்ச்சியை ஆறு சதவீதத்திற்கும் கீழே தள்ளக்கூடும்.

இந்திய ஏற்றுமதியாளர்கள் மீதான அமெரிக்க வரிகளின் தாக்கம் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி சார்ந்த துறைகளான தோல், ஜவுளி, ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் போன்றவற்றுக்கான ‘அமெரிக்க ஆர்டர்கள்’ குறையத் தொடங்கியுள்ளன.

ஏனெனில் வரிகள் காரணமாக, இந்தியப் பொருட்கள் அமெரிக்க தொழிலதிபர்களுக்கு விலை உயர்ந்தவையாக மாறிவிட்டன.

இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு ஏற்பட்டுள்ள சோதனை

பட மூலாதாரம், Getty Image

படக்குறிப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தங்களை நல்ல நண்பர்கள் என்று விவரிக்கிறார்கள், ஆனால் ‘ஆபரேஷன் சிந்தூர்’க்குப் பிறகு டிரம்பின் அணுகுமுறை மாறிவிட்டதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.கடந்த முப்பது வருடங்களாக அமெரிக்காவுடனான தனது உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சியைத் தடுக்க அமெரிக்காவிற்கும் இந்தியா தேவை.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் அமெரிக்கா இந்தியாவிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ள முயன்றால், அது இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை பலவீனப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

சர்வதேச விவகாரங்களில் நிபுணரும், இந்தியா-அமெரிக்க உறவுகளை கூர்ந்து கவனிப்பவருமான பிரேமானந்த் மிஸ்ரா, “இந்த நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் அணுகுமுறை மிகவும் தனிப்பட்ட விஷயமாகத் தெரிகிறது” என்று கூறுகிறார்.

“அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை அவமானப்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது. பிரச்னை எண்ணெய் வாங்குவது பற்றியது அல்ல. சீனா, இந்தியாவை விட ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்குகிறது, ஆனால் டிரம்ப் சீனாவுக்கு எதிராக கூடுதல் வரிகளை விதிக்கவில்லை. இதற்காக அவர் 90 நாள் காலக்கெடுவை வழங்கியுள்ளார்” என்று அவர் கூறுகிறார்.

“அமெரிக்கா இந்தியாவுடனான அதன் மூலோபாய சமன்பாட்டை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறது. எனவே, வரி விதிப்பு ஒரு சாக்குப்போக்கு தான். அமெரிக்கா இந்தியா மீது அழுத்தம் கொடுக்க விரும்புவதால், அது பாகிஸ்தானை ஆதரிக்கிறது” என்று பிரேமானந்த் நம்புகிறார்.

டிரம்ப் மற்றும் புதின் இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவுகள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளைத் தீர்மானிக்காது என்றும், டிரம்பின் ‘சுயநல’ உத்தி வரும் நாட்களில் இந்தியா- அமெரிக்கா உறவுகளைத் தீர்மானிக்கும் என்றும் பிரேமானந்த் கூறுகிறார்.

“இந்த சந்திப்பின் விளைவு என்னவாக இருந்தாலும், இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.”

ரஷ்யா-இந்தியா பாதுகாப்பு உறவுகளின் அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா இன்னும் தனது பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிலிருந்தே வாங்குகிறது. வரலாற்று ரீதியாக ரஷ்யாவிடம் இருந்து அதிக ஆயுதங்களை வாங்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரான்சிலிருந்தும் ஆயுதங்களை வாங்கத் தொடங்கியுள்ளது இந்தியா.

இப்போதும் கூட, இந்தியா தனது பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடமிருந்து தான் வாங்குகிறது. 2018 மற்றும் 2023க்கு இடையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வாங்கியது.

கூடுதலாக, எதிர்கால ஆயுதத் தேவைகளுக்காக பத்து பில்லியன் டாலர் ஆர்டர் வழங்கப்பட்டது. இந்தியா மட்டுமே ரஷ்யாவின் ஆயுதங்களில் 20 சதவீதத்தை வாங்குகிறது.

“பாதுகாப்பு ஒத்துழைப்பில் ரஷ்யாவைத் தவிர இந்தியாவிற்கு வேறு வாய்ப்புகள் மிகக் குறைவு. இன்று, அதன் ராணுவ உபகரணங்களில் 60 முதல் 70 சதவீதம் சோவியத் ஒன்றியம் அல்லது ரஷ்யாவிலிருந்து வந்தவை” என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி பிபிசியிடம் தெரிவித்தார்.

“இந்த ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களின் பராமரிப்பு, சேவை மற்றும் அவற்றின் உதிரி பாகங்களை மேம்படுத்துவதற்கு இந்தியா முழுமையாக ரஷ்யாவைச் சார்ந்துள்ளது” என்று அவர் கூறினார்.

“இந்தியா ரஷ்யாவிடமிருந்து புதிய உபகரணங்களை வாங்காமல் போகலாம், ஆனால் ரஷ்ய உதவி இல்லாமல் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பழைய உபகரணங்களைப் பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.”

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை கண்காணிக்கும் நிபுணர்கள், ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியதற்காக அமெரிக்கா எதிர்காலத்தில் இந்தியாவை தண்டித்தால், அது சிக்கல்களை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.

இது இந்தியா-அமெரிக்க உறவுகளை மேலும் மோசமடையச் செய்யும். எனவே, டிரம்ப் மற்றும் புதின் இடையேயான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்றும், அத்தகைய சூழ்நிலை ஏற்படக்கூடாது என்றும் இந்தியா விரும்புகிறது.

ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர் ரேஷ்மி காசி, “ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது வரிகள் அதிகரிக்கப்படுவது போல, ஆயுதங்களை வாங்குவதற்கும் அமெரிக்காவின் அதிருப்தியை வெளிப்படுத்தலாம்.” என்கிறார்.

புவிசார் அரசியல் சமநிலை பற்றிய கேள்வி

பட மூலாதாரம், Bloomberg via Getty Image

படக்குறிப்பு, ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளில் சமநிலையைப் பேணுவது பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ளது.இந்தியாவின் புவிசார் அரசியல் தேவைகளுக்கு, புதினுக்கும் டிரம்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் வெற்றி மிகவும் முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நேரத்தில், அமெரிக்காவுடன் மட்டுமல்லாமல், உலகின் பிற பெரிய சக்திகளுடனும் சிறந்த உறவுகளைப் பேணுவது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.

அதே சமயம், இப்போது இந்தியா ரஷ்யாவை நோக்கி சாய்ந்து கொண்டிருப்பதாக நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் தனது பொருளாதார நிலையை வலுப்படுத்துவது இந்தியாவிற்கு மிகவும் முக்கியம், அப்போதுதான் அது மூலோபாய ரீதியாகவும் வலுவாக மாற முடியும். இதைச் செய்ய, ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தற்போது இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவுகள், வரிகள் தொடர்பான விவகாரத்தில் சற்று கசப்பாகத் தோன்றினாலும், இது ஒரு பெரிய விஷயமல்ல என்று ரேஷ்மி காசி நம்புகிறார்.

“இதை ஒரு வர்த்தக ஒப்பந்தம் மூலம் சரிசெய்ய முடியும். ஆனால் அமெரிக்காவுடனான தனது உறவைக் கெடுக்காமல் இருப்பது இந்தியாவுக்கு முக்கியம். இது இந்தியாவின் பொருளாதார வலிமைக்கு மிக முக்கியமான உத்தியாக இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

“டிரம்ப் மற்றும் புதின் இடையேயான வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் இந்தியாவின் பொருளாதார வலிமைக்கு மட்டுமல்ல, அதன் வலுவான புவிசார் அரசியல் நிலைக்கும் முக்கியம்” என்று அவர் கூறுகிறார்.

இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தால், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளில் இந்தியா சமநிலையைப் பேண முடியும் என்றும், அது பல வகைகளில் பயனளிக்கும் என்றும் ரேஷ்மி காசி நம்புகிறார்.

அமெரிக்கா- பாகிஸ்தான் உறவுகள்

பட மூலாதாரம், YouTube/@ISPR

படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர்ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் நாட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவும் அமெரிக்காவும் இந்தியாவைச் சுற்றி வளைப்பதற்கான ஒரு வழிமுறையாக பாகிஸ்தானைப் பயன்படுத்த விரும்புகின்றன. இந்த முறை அமெரிக்கா அதையே செய்துள்ளது.

“பாகிஸ்தானில் ஜனநாயக அமைப்பு பலவீனமாக இருப்பதால், அமெரிக்காவோ அல்லது சீனாவோ அதன் தலைவர்கள் மீது செல்வாக்கு செலுத்துவது எளிதாக இருக்கிறது. எனவே, இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்த பாகிஸ்தானைப் பயன்படுத்துவது அவர்களுக்கு எளிதாகிவிடும்” என்று பிரேமானந்த் மிஸ்ரா கூறுகிறார்.

இந்தியாவை நெருக்கடியில் வைத்திருக்க மற்றும் இந்திய வெளியுறவுக் கொள்கையின் சுயாட்சியை அசைத்துப் பார்க்க பாகிஸ்தான் என்ற காரணி பயன்படுத்தப்படுகிறது என்று பிரேமானந்தா மிஸ்ரா கூறுகிறார்.

பிரேமானந்த் மிஸ்ராவின் கூற்றுப்படி, “நரேந்திர மோதி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கியமான அம்சம் இந்தியாவின் மூலோபாய சுயாட்சி ஆகும். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவின் இந்தக் கொள்கையை தொடர்ந்து எதிர்க்க முயற்சிக்கும்.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு