ரஷ்யாவிடம் அலாஸ்காவை வாங்கியது ‘முட்டாள்தனம்’ என்று அமெரிக்காவில் விமர்சனம் எழுந்தது ஏன்?

பட மூலாதாரம், Hulton Archive/Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் சீவர்ட் அலாஸ்காவை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.எழுதியவர், வலீத் பத்ரான் மற்றும் மரியா சக்காரோபதவி, பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

யுக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அலாஸ்காவில் நடைபெறவுள்ள உச்சி மாநாடு, கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த மிக முக்கியமான ராஜதந்திர முன்னேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த சந்திப்பு நடைபெறும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின், அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆங்கரேஜில், அமெரிக்க நிலப்பரப்பில் சந்திக்கவுள்ளனர்.

ஆனால், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தால், அது ரஷ்ய நிலப்பரப்பில் நடந்திருக்கும்.

ஏனெனில், தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலமாகவும், மொத்த நாட்டின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை உள்ளடக்கியதுமான அலாஸ்கா, ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு சொந்தமாக இருந்தது.

‘மிகவும் பொருத்தமான இடம்’

வட அமெரிக்காவின் வடமேற்கில் அமைந்துள்ள அலாஸ்கா, பேரிங் ஜலசந்தி (அதன் மிகக்குறுகிய பகுதியில் வெறும் 50 மைல்கள்தான் இருக்கிறது) மூலம் ரஷ்யாவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அதிபர் டிரம்ப் இந்த உச்சி மாநாடு அலாஸ்காவில் நடைபெறும் என்று அறிவித்தபோது, ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ், ரஷ்யக் குழு “பேரிங் ஜலசந்தியை கடந்து பறப்பதும், இரு நாடுகளின் தலைவர்களின் இத்தகைய முக்கியமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட உச்சி மாநாடு அலாஸ்காவில் நடைபெறுவதும் பொருத்தமாக உள்ளது” என்று கூறினார்.

ஆனால், ரஷ்யாவிற்கும் அலாஸ்காவிற்கும் இடையேயான வரலாற்று தொடர்புகள் 1700களின் ஆரம்பகாலத்திலிருந்து தொடங்குகின்றன, அப்போது சைபீரியாவில் உள்ள பழங்குடி மக்கள் கிழக்கில் ஒரு பரந்த நிலப்பரப்பு இருப்பதாக முதலில் பேசினர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.டேனிஷ் கடற்பயணியான விட்டஸ் பேரிங் தலைமையிலான ஒரு பயணம், இந்த புதிய நிலம் ரஷ்யாவின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தது. ஆனால், கடுமையான மூடுபனி காரணமாக அந்த பயணம் தோல்வியடைந்தது.

1741இல் மீண்டும் பேரிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கடற்பயணம் வெற்றிகரமாக அமைந்து, ஆட்கள் கரைக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் பல வணிக பயணங்கள் தொடர்ந்தன, கடல் நீர்நாய் தோல்கள் ரஷ்யாவிற்கு கொண்டுவரப்பட்டபோது, ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவின் பசிபிக் கரையோரத்திற்கு இடையே ஒரு லாபகரமான தோல் வர்த்தகத்திற்கு வழி திறந்தது.

எவ்வாறாயினும், 19ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க தோல் வர்த்தகர்கள் ரஷ்யர்களுக்கு கடுமையான போட்டியாளர்களாக மாறினர்.

1824இல் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் தனித்தனி ஒப்பந்தங்களில் ரஷ்யா கையெழுத்திட்டபோது இந்த கடுமையான போட்டி முடிவுக்கு வந்தது. கடல் நீர்நாய்கள் கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலை மற்றும் கிரீமியன் போர் (1853–56) இன் அரசியல் விளைவுகள் ஆகியவற்றின் காரணமாக அலாஸ்காவை அமெரிக்காவிற்கு விற்கும் மனநிலைக்கு ரஷ்யா சென்றது.

‘முட்டாள்தனமான முடிவு’

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வில்லியம் சீவார்ட் பேச்சுவார்த்தைகளை வழிநடத்தி, ரஷ்யர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை உறுதி செய்தார். (சித்தரிப்புப் படம்)அப்போதைய அமெரிக்க வெளியுறவு செயலாளரான வில்லியம் சீவார்ட், நில கொள்முதல் பேச்சுவார்த்தைகளை வழிநடத்தி, ரஷ்யர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை உறுதி செய்தார்.

பல எதிர்ப்புகளுக்குப் பிறகு, சீவார்டின் 7.2 மில்லியன் டாலர் கொள்முதலுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. 1867 அக்டோபர் 18 அன்று, அலாஸ்காவின் அப்போதைய தலைநகரான சிட்காவில் அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டது.

ஆரம்பத்தில், அலாஸ்காவின் நிலத்தால் எதையும் தரமுடியாது என உறுதியாக நம்பிய விமர்சகர்கள் அலாஸ்காவின் கொள்முதலை “சீவார்டின் முட்டாள்தனம்” என்று குறிபிட்டனர்.

பணவீக்கத்தை கணக்கில் கொண்டால் அமெரிக்கா செலுத்திய 7.2 மில்லியன் டாலர் இன்றைய மதிப்பில் சுமார் 100 மில்லியன் டாலருக்கு சற்றே கூடுதலாக இருக்கும்—இது தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலமாக உள்ள ஒரு நிலப்பரப்பிற்கு மிகவும் குறைந்த விலையாகும்.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, அலாஸ்காவில் தங்கம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்புகள் தொடங்கின, இவை விரைவில் கணிசமான லாபத்தை உருவாக்கத் தொடங்கின.

சீவார்டின் நகர்வு பயனுள்ளதென நிரூபிக்கப்பட்டது. 1959இல், அலாஸ்கா அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் 49வது மாநிலமாக மாறியது.

பட மூலாதாரம், Hasan Akbas/Anadolu via Getty Images

படக்குறிப்பு, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் மூலாதாரமாக அலாஸ்கா இருக்கிறது.இயற்கை வளங்களின் முக்கிய மூலமாக இருக்கும் அலாஸ்காவில் 12,000க்கும் மேற்பட்ட ஆறுகள் மற்றும் ஏராளமான ஏரிகள் உள்ளன.

அதன் தலைநகர் ஜூனோ, படகு அல்லது விமானம் மூலம் மட்டுமே அடையக்கூடிய அமெரிக்காவின் ஒரே தலைநகர் ஆகும். ஆங்கரேஜில் உள்ள லேக் ஹூட், ஒரு நாளைக்கு சுமார் 200 விமானங்கள் இயக்கப்படும் உலகின் மிகவும் பரபரப்பான கடல் விமானத் தளங்களில் ஒன்றாகும்.

அதிபர்கள் டிரம்ப் மற்றும் புதின், மாகாணத்தின் மிகப்பெரிய ராணுவ அமைப்பான ஜாயின்ட் பேஸ் எல்மென்டோர்ஃப்-ரிச்சர்ட்சனில் சந்திக்கவுள்ளனர். இந்த 64,000 ஏக்கர் தளம், ஆர்க்டிக் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ தயார்நிலைக்கு முக்கிய தளமாகும்.

அமெரிக்க இராஜதந்திர நிகழ்வு ஒன்றில் மையமாக அலாஸ்கா இருப்பது இது முதல் முறை அல்ல. 2021 மார்ச்சில், புதிதாக நியமிக்கப்பட்ட ஜோ பைடனின் இராஜதந்திர மற்றும் தேசிய பாதுகாப்பு குழு, ஆங்கரேஜில் சீனப் பிரதிநிதிகளைச் சந்தித்தது.

உச்சி மாநாடு குறித்து எந்த அதிகாரப்பூர்வ விவரங்களும் வெளியாகவில்லை, ஆனால் வெள்ளை மாளிகை, இந்த அலாஸ்கா பேச்சுவார்த்தைகள் டிரம்புக்கு ஒரு “உற்றுநோக்கும் நடவடிக்கையாக” இருக்கும் என்றும், “இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சிறந்த வழிகாட்டுதலை” அமெரிக்க அதிபருக்கு வழங்கும் என்றும் கூறியது.

கடந்த வாரம் உச்சி மாநாட்டை அறிவித்தபோது, இந்த சந்திப்பு அமைதியை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று டிரம்ப் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கியவ் பங்கேற்காத எந்த ஒப்பந்தங்களும் “நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுகள்” ஆக இருக்கும் என்று முன்பு கூறியிருந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு