Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனஎழுதியவர், உமாங் போட்டார்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் திருத்த செயல்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் பல முக்கியமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.
சிறப்புத் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், அவர்களை பட்டியலில் இருந்து நீக்கியதற்கான காரணத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிகாரில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை (SIR) எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. அதன் பிறகு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தத் தகவல்கள் வாக்குச் சாவடி வாரியாக இருக்கவேண்டும் என்றும் வாக்காளர் அடையாள எண் மூலம் வாக்காளர்களின் பெயர்களை தேடும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இடைக்கால உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் இந்தப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாததற்கான அடிப்படை காரணத்தையும் குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
இது தவிர, சிறப்புத் திருத்த செயல்முறைக்குத் தேவையான ஆவணங்களில் ஆதார் அட்டையையும் சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியது. வழக்கின் அடுத்த விசாரணையை எதிர்வரும் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “உச்ச நீதிமன்றம் இன்று இந்திய அரசியலமைப்பை தெளிவாகவும், உறுதியாகவும், துணிச்சலாகவும் நிலைநிறுத்தியுள்ளது. பிரதமர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் சூழ்ச்சிகளிலிருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது நீண்ட போராட்டமாக இருந்து வருகிறது. ஆனால் பிகார் சிறப்புத் திருத்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு நம்பிக்கையளிக்கும் ஒளியாக இருக்கிறது. இது ஒரு பெரிய முதல் படியாகும்” என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் முக்கிய அம்சங்கள்
இடைக்கால ஏற்பாடாக, தேர்தல் ஆணையம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது:
2025ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இருந்தும் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும் வெளியிடப்பட வேண்டும்.
இந்தத் தகவல்கள் வாக்குச் சாவடி வாரியாக இருக்கவேண்டும், ஒவ்வொரு வாக்காளரின் அடையாள எண் அடிப்படையில் பார்க்க முடியுமாறு இருக்கவேண்டும். அப்போதுதான், பொதுமக்கள் தகவல்களைப் பெற முடியும்.
வெளியிடப்பட்ட பட்டியலில் பெயர் சேர்க்கப்படாததற்கான காரணத்தையும் கொடுக்கவேண்டும்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பிகார் மாநிலத்தின் உள்ளூர் மொழிகள் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில் விரிவான விளம்பரம் செய்யப்படவேண்டும்.
இது தவிர, தொலைக்காட்சி மற்றும் வானொலி சேனல்களிலும் இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடுவதை ஒளிபரப்ப வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் ஏதேனும் இருந்தால், அங்கும் அது காட்சிப்படுத்தப்படவேண்டும்.
வாக்குச்சாவடி வாரியான சுமார் 65 லட்சம் வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அதிகாரியும் பஞ்சாயத்து மற்றும் தொகுதி மேம்பாட்டு பஞ்சாயத்து அதிகாரிகள் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும். இதனால் பொதுமக்கள் இந்தப் பட்டியலையும் பெயர்கள் சேர்க்கப்படாததற்கான காரணங்களையும் தெரிந்துக் கொள்ளமுடியும்.
சம்பந்தப்பட்ட நபர் தனது கோரிக்கையை ஆதார் அட்டையின் நகலுடன் சமர்ப்பிக்கலாம் என்று பொது அறிவிப்பில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்று, முழு அறிக்கையையும் பதிவு செய்ய வேண்டும்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு