Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நள்ளிரவில் கைது , தள்ளுமுள்ளு – சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் எங்கே?
பட மூலாதாரம், ANI
14 ஆகஸ்ட் 2025, 02:31 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (ஆக. 13) இரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை என, பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், போராட்டக்காரர்களை கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்கள் கைது நடவடிக்கையின்போது இளைஞர்கள் இருவரை பேருந்துக்குள் போலீஸார் தாக்கும் வீடியோவும் வெளியானது. மேலும், பெண் ஒருவர் பேருந்துக்குள் மயங்கி விழுந்திருப்பதையும் அவருக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்க வேண்டும் என மற்ற தூய்மை பணியாளர்கள் போலீஸாரிடம் கோருவதையும் காண முடிந்தது. எனினும் இந்த காணொளிகளை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுரேஷ் எனும் தூய்மை பணியாளர் பிபிசியிடம் பேசுகையில், “பெண்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இரண்டு பெண்களுக்கு இதில் காயம் ஏற்பட்டது. எங்கே அழைத்துச் செல்கிறோம் என்பதை கூட போலீஸார் கூறவில்லை. எங்களுக்கு உணவு கொடுப்பதாக கூறினர், ஆனால் நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்” என்றார்.
பட மூலாதாரம், ANI
கைதாக மறுத்து சாலைமறியல் போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் பாரதி, “பலரும் போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.
கைது செய்யப்படும்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிலர், குறிப்பாக பெண்கள் மயக்கமடைந்ததை காணொளிகள் வாயிலாக பார்க்க முடிந்தது.
நள்ளிரவு 12 மணியளவில் கைது நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். “இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டும் என காவல்துறை நினைத்ததாக” அவர் கூறினார்.
தூய்மைப் பணிகளை தனியார் மயத்துக்கு அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் என அவர் கூறினார்.
முன்னதாக, தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சென்னை மாநகராட்சி, லேபர் யூனியன், ராம்கி நிறுவனம் என 3 தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் வரும் 31ஆம் தேதி வரை பணியில் வந்து சேரும் தூய்மை பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது ராம்கி நிறுவனம்.
தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஏன்?
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 மண்டலங்களில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர்.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக போராடி வந்தனர். இரு மண்டலங்களை சேர்ந்த சுமார் 2,000 தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் ரூ.6,000 என இருந்த தங்களின் சம்பளம், கடந்த 10-15 ஆண்டுகளில் படிப்படியாக ரூ. 23,000 என உயர்ந்துள்ளதாகவும் தனியார்வசம் சென்றால் தங்கள் சம்பளம் ரூ. 16 ஆயிரமாக குறைக்கப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
“ஆகஸ்ட் 1-ஆம் தேதி வழக்கம்போல பணிக்கு சென்றபோது, ‘ஒப்பந்த வேலையில் இருப்பதாக இருந்தால் மட்டுமே வேலை, இல்லையென்றால் வேலை இல்லை’ என தங்களிடம் கூறப்பட்டதாக” தூய்மை பணியாளர்கள் கூறுகின்றனர்.
தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இரு மண்டலங்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது, தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 31(1) படி (Industrial disputes act) தண்டனைக்குரிய குற்றம் என்று உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பணிமறுப்பு, அவுட்சோர்ஸிங் (பணிகளை கையாளும் பொறுப்பை வெளி நிறுவனத்துக்கு அளிப்பது) செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்றார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தூய்மை பணியாளர்களின் 3 கோரிக்கைகள் என்ன?
தூய்மை பணியாளர்கள் பிரதானமாக 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது.போராட்டக்காரர்கள் குறிப்பாக, “தாங்கள் தற்போது பெறும் சம்பளத்தையே கொடுத்தாலும், தனியார் நிறுவனத்திடம் தங்கள் பணிகளை ஒப்படைக்கக் கூடாது ” என்பதையே பிரதானமாக வலியுறுத்துகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு