Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எதிரெதிர் துருவங்களாக முரண்படும் ரஷ்யா-யுக்ரேன் : புதினுடனான பேச்சுவார்த்தையில் டிரம்ப் சாதிக்கப்போவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரஷ்யாவிற்கு சொந்தமான பிரதேசமாக இருந்த அலாஸ்காவில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்புஎழுதியவர், மேட்லைன் ஹால்பர்ட்பதவி, பிபிசி செய்திகள்எழுதியவர், கிறிஸ்டல் ஹேய்ஸ்பதவி, பிபிசி செய்திகள்59 நிமிடங்களுக்கு முன்னர்
யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதைப் பற்றி விவாதிக்க, ஆகஸ்ட் 15, வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திக்கவிருக்கின்றனர். இந்த சந்திப்பு அலாஸ்காவில் நடைபெறவிருக்கிறது.
யுக்ரேனில் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால், மேலும் பல கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா விதித்திருந்த காலக்கெடு முடிவடையவிருந்த நாளன்று டிரம்ப் இந்த சந்திப்பு பற்றிய செய்தியை அறிவித்தார்.
டிரம்பின் உத்தரவின் பேரில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே இந்த கோடையில் நடைபெற்ற மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினரும் எந்தவொரு முடிவுக்கும் வரவில்லை.
ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு சொந்தமான பிரதேசமாக இருந்த அலாஸ்காவில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பைப் பற்றி இதுவரை வெளியான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்.
பட மூலாதாரம், Getty Images
சந்திப்பு அலாஸ்காவில் நடப்பது ஏன்?
ரஷ்யாவுக்கு சொந்தமான அலாஸ்காவை 1867ஆம் ஆண்டில் அமெரிக்கா வாங்கியது. 1959இல் அமெரிக்க மாகாணங்களில் ஒன்றாக மாறிய ரஷ்யாவின் பழைய நகரம் ஒன்றில் நடைபெறும் சந்திப்பு என்பது, இந்த சந்திப்பை சரித்திர முக்கியத்துவம் பெறச் செய்கிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அமெரிக்காவும் ரஷ்யாவும் அண்டை நாடுகள் , பெரிங் ஜலசந்தி மட்டுமே அவற்றைப் பிரிக்கிறது என்பதை ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் சுட்டிக்காட்டுகிறார்.
“எங்கள் தூதுக்குழுவினர் பெரிங் ஜலசந்தியின் மீது பறப்பதும், அலாஸ்காவில் நடைபெறவிருக்கும் இரு நாடுகளின் தலைவர்களின் முக்கியமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட உச்சிமாநாடும் மிகவும் தர்க்கரீதியானதாகவே தெரிகிறது” என்று உஷாகோவ் கூறினார்.
2021 மார்ச் மாதத்தில், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜோ பைடனால் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜதந்திர மற்றும் தேசிய பாதுகாப்புக் குழு, ஆங்கரேஜில், சீனாவின் பாதுகாப்புக் குழுவை சந்தித்தபோது, அலாஸ்கா கடைசியாக ஒரு அமெரிக்க ராஜதந்திர நிகழ்வின் மையமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்கவில்லை. சந்திப்பின் விளைவால் கடும் கோபமடைந்த சீனா, அமெரிக்கர்கள் “உயர்வு மனப்பான்மை மற்றும் பாசாங்குத்தனம்” கொண்டவர்கள் என்று குற்றம் சாட்டியது.
அலாஸ்காவில் டிரம்பும் புதினும் எங்கு சந்திப்பார்கள்?
இரு நாட்டு அதிபர்களும் அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் சந்திப்பார்கள் என்று வெள்ளை மாளிகை செவ்வாயன்று (2025, ஆகஸ்ட் 11) அன்று உறுதிப்படுத்தியது.
இருதரப்பு ஒப்பந்தத்தை அறிவிக்கும் போது, அந்த இடம் “பல காரணங்களுக்காக மிகவும் பிரபலமானதாக” இருக்கும் என்று டிரம்ப் கூறினார், அது மாகாணத்தின் மிகப்பெரிய நகரத்தில் இருக்கும் என்பதை அவர் வெளியிடவில்லை.
அலாஸ்காவின் மிகப்பெரிய ராணுவ நிறுவலான எல்மென்டார்ஃப்-ரிச்சர்ட்சன் கூட்டுத் தளத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்கள் தங்க வைக்கப்படுவார்கள். 64,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தளம் ஆர்க்டிக் ராணுவத் தயார்நிலைக்கு அமெரிக்காவின் முக்கிய தளமாகும்.
டிரம்ப்-புதின் சந்திப்பு பின்னணி
யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் கடுமையாக முயற்சித்து வருகிறார், இருந்தபோதிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க வெற்றி ஏற்படவில்லை.
முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தலில் தான் வெற்றிபெற்று பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
மேலும், 2022இல் ரஷ்யா யுக்ரேனின் மீது படையெடுத்த சமயத்தில் தான் அதிபராக இருந்திருந்தால், இந்தப் போர் “ஒருபோதும் நடந்திருக்காது” என்றும் அவர் பலமுறை வலுவாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம்,பிபிசியிடம் பேசிய டிரம்ப், புதினால் தான் “ஏமாற்றமடைந்ததாக” தெரிவித்தார்.
இதுபோன்ற சூழலில், உடனடியாக ரஷ்யா போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது இன்னும் பல கடுமையான அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆகஸ்ட் 8ஆம் தேதி புதினுக்கு காலக்கெடு நிர்ணயித்தார் டிரம்ப்.
காலக்கெடு நெருங்கிய நிலையில், ஆகஸ்ட் 15 அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தான் நேரில் சந்திப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
புதன்கிழமையன்று அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவில் புதினை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகள், “மிகவும் பயனுள்ளதாக” இருந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தான் ரஷ்ய அதிபரை சந்திக்கவிருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, இருதரப்பும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற ஊகங்களை வெள்ளை மாளிகை நிராகரித்தது.
திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவர புதினை வலியுறுத்துவதே அவரை சந்திப்பதன் முக்கிய நோக்கம் என்றும் இது “உணர்ச்சிபூர்வமான சந்திப்பாக” இருக்கும் என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, யுக்ரேனின் ஐரோப்பியக் கூட்டாளிகளான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (இடது) மற்றும் பிரிட்டனின் பிரதமர் கீயர் ஸ்டார்மர் (வலது) — அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தனர் அலாஸ்கா கூட்டத்தில் யுக்ரேனும் கலந்துகொள்கிறதா?
யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது சந்தேகம் என்றே தெரிகிறது. திங்களன்று இந்தக் கூட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியபோது, “அவர் கலந்துக் கொள்ளலாம் என்றே நான் கூறுவேன், ஆனால் அவர் இதுவரை பல கூட்டங்களில் கலந்து கொண்டார்” என்று தெரிவித்தார்.
இருப்பினும், அலாஸ்கா சந்திப்பிற்குப் பிறகு, தான் அழைக்கும் முதல் நபர் ஜெலென்ஸ்கியாகவே இருப்பார் என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபர் புதினுடனான நேரடி சந்திப்புக்கு முன்னதாக, புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 13) டிரம்பும் ஜெலென்ஸ்கியும் மெய்நிகர் முறையில் சந்தித்து பேசுவார்கள் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பின்னர் தெரிவித்தார். ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பில் பல ஐரோப்பிய தலைவர்களும் கலந்து கொள்வார்கள்.
டிரம்ப், புதின் மற்றும் ஜெலென்ஸ்கி என மூன்று தலைவர்களும் கலந்து கொள்ளும் முத்தரப்பு சந்திப்பை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை முன்பு கூறியிருந்தது. ஆனால், ஜெலென்ஸ்கியை விலக்க வேண்டும் என்று புதின் கோரியிருந்தார்.
யுக்ரேனின் ஈடுபாடு இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் “உயிரற்ற முடிவுகளுக்கு” சமமானதாக இருக்கும் என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரேன் பகுதிகளைக் காட்டும் வரைபடம்சந்திப்பும் இரு தரப்பினரின் எதிர்பார்ப்பும்
போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ரஷ்யாவும் யுக்ரேனும் நீண்ட காலமாக கூறி வந்தாலும், ஒரு நாடு கடுமையாக எதிர்க்கும் விஷயத்தையே மற்றொரு நாடு விரும்புகிறது என்பது முக்கியமான சிக்கலாக இருந்துவருகிறது.
” சில பகுதிகளை [ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட] யுக்ரேனுக்குத் திரும்பப் பெற்றுத் தர முயற்சிக்கப் போகிறேன்” என்று திங்களன்று டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் “சில பரிமாற்றங்களும், நில மாற்றங்களும்” இருக்கலாம் என்றும் அவர் முன்னெச்சரிக்கையும் செய்துள்ளார்.
இருப்பினும், க்ரைமியா உட்பட மாஸ்கோ கைப்பற்றிய பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை ஏற்கப்போவதில்லை என்பதில் யுக்ரேன் உறுதியாக உள்ளது.
பிரதேசங்களை “மாற்றிக் கொள்ளும்” எந்தவொரு யோசனையையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று இந்த வாரம் கூறிய ஜெலென்ஸ்கி, “ரஷ்யா செய்த செயலுக்கு நாங்கள் பரிசு வழங்க முடியாது” என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ரஷ்ய அதிபர் புதினும், தனது பிராந்திய கோரிக்கைகள், யுக்ரேன் நடுநிலைமையாக இருப்பது மற்றும் ராணுவத்தின் எதிர்கால அளவு போன்ற பிரச்னைக்குரிய பல விசயங்களில் இருந்து பின்வாங்கவில்லை.
தனது படைகளை ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் கொண்டு வருவதற்காக யுக்ரேனை மேற்கத்திய தற்காப்பு கூட்டணியான நேட்டோ பயன்படுத்திக் கொள்கிறது என்று நம்பிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார்.
யுக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய தலைவர்களை சமாதானப்படுத்த, டிரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருவதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ரஷ்யாவை க்ரைமிய தீபகற்பத்தின் கட்டுப்பாட்டை வைத்திருக்க அனுமதிக்கும், மேலும் கிழக்கு யுக்ரேனின் டான்பாஸ் பகுதியை எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கும், இது டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா, 2014இல் க்ரைமியாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது மற்றும் ரஷ்ய படைகள் டான்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், தற்போது தனது ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் மற்றும் சபோரிஷியாவை ரஷ்யா விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம்.
ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், எந்தவொரு எதிர்கால ஒப்பந்தமும் “யாரையும் முழுமையாக திருப்திப்படுத்தவோ, மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யவோ போவதில்லை” என்று கூறினார்.
மேலும், “இங்கே சமாதானம் செய்ய வேண்டும்… யாரையும் விரல் நீட்டி பேசமுடியாது,” என்று அவர் கூறினார்.
“அமைதிக்கான ஒரே வழி, மக்களை ஒன்று சேரும்படி கட்டாயப்படுத்தி, வழிநடத்திச் செல்லக்கூடிய தீர்க்கமான தலைவர் ஒருவரைக் கொண்டிருப்பதாகும்” என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு