ஜம்மு காஷ்மீரில் கோவில் யாத்திரை பாதையை சூழ்ந்த திடீர் வெள்ளம் – 38 பேர் பலி

பட மூலாதாரம், Deepak Sharma

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 38 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கிஷ்த்வார் மாவட்ட துணை ஆட்சியர் பங்கஜ் சர்மா பிபிசி நிருபர் மஜித் ஜஹாங்கிரிடம் தெரிவித்தார்.

குறைந்தது 70 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிஷ்த்வார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி அந்தப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிதான் மசைல் மாதா யாத்திரை தொடங்கும் இடமாகும்.

கிஷ்த்வார் மாவட்ட துணை ஆட்சியர் பங்கஜ் சர்மாவை மேற்கோள் காட்டும் ஏஎன்ஐ நிறுவனம், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வெற்றிபெற பிரார்த்திக்கிறேன்” என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் .

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த இயற்கைப் பேரழிவு குறித்து பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் வலைதளத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

“கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்குள்ள நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.”

இந்த இயற்கைப் பேரிடரால் பெரும் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் அலுவலகம், உள்ளூர் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரிடமிருந்து அறிக்கைகள் வந்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்இந்த இயற்கைப் பேரிடர் குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ சுனில் குமார் சர்மா கூறுகையில் , “பெரிய இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது, பாதிப்பு மற்றும் சேதம் தொடர்பான முழுமையான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை. யாத்திரை இன்னும் நடந்து கொண்டிருப்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில், கனமழை காரணமாக, மெந்தர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சாலைகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளப்பெருக்கு தொடர்பான சில காணொளிகளை PTI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

“இன்று காலை 11.30 மணியளவில் கிஷ்த்வாரின் சஷோதி பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன” என்று ஜம்மு பிரிவு ஆணையர் ரமேஷ் குமார் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் .

“மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முழு தயார் நிலையில் பணியாற்றி வருகிறோம். உதவிக்காக ஹெல்ப்லைன் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கூடுதல் மீட்புக் குழுக்கள் சம்பவம் நடந்த இடத்தை அடைவதில் சிரமத்தை எதிர்கொள்வதாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

“சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, வானிலை மிகவும் மோசமாக இருப்பதால் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த முடியாது. நான் மத்திய அரசுடன் பேசி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்து வருகிறேன்.” என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா’புவி வெப்பமடைதலை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்’

மலைப்பகுதிகளில் மேக வெடிப்பு சம்பவங்கள் நிகழ்வது சர்வசாதாரணமாகிவிட்டன என்றும், இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஃபரூக் அப்துல்லா கூறினார்.

மேக வெடிப்பு குறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா, “புவி வெப்பமடைதல் பிரச்னையை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். மலைப்பகுதிகளில் இது மிகவும் பொதுவானதாகிவிட்டது. அதைச் சமாளிக்க ஏதாவது ஒரு முறையைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த துயரமான நேரத்தில் இதற்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதைப் பற்றி சிந்திக்குமாறு நான் அவரை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

“இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். நமது மலைப்பகுதிகளில் மேக வெடிப்பு ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது. உத்தரகண்டிலும் அங்கு ஏற்பட்ட சேதத்தையும் நாம் பார்த்தோம். கடந்த ஆண்டு இந்த சம்பவம் ராம்பனில் நடந்தது. இந்த முறை மசைல் மாதா யாத்திரை செல்லும் பாதையில் நடந்துள்ளது. இந்த யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர்” என்று அவர் கூறினார் .

“விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அங்கிருந்து மீட்டு வருவார்கள் என்று நம்புகிறோம். கிராமங்கள் மற்றும் கோவில் பகுதிகள் சேதமடைந்துள்ளன. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்காது என்று நம்புகிறோம்.”

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு