செம்மணி வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல கூடிய ஏது நிலைகள் காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். 

செம்மணி புதைகுழி வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மன்றில் முன்னிலையான சுமந்திரன் குறித்த விடயத்தை மன்றில் தெரிவித்தார். 

மேலும் , புதைகுழி அகழ்வு பணிகளில் சர்வதேச நிபுணத்துவ உதவிகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபணு சோதனைகளை முன்னெடுக்கவேண்டும். 

தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் வேளைகளில் , குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , பாதிக்கப்பட்ட தரப்பினர் , மயான அபிவிருத்தி சபையினர் உள்ளிட்ட தரப்புகளிடம் வாக்கு மூலங்களை பெற்று வருவது அச்சுறுத்தும் செயற்பாடாகும் எனவே குற்ற புலனாய்வு பிரிவினர் அவ்வாறான செயற்பாட்டை நிறுத்த வேண்டும் 

செம்மணியில் மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு , பின்னர் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் உள்ளது. அந்த வழக்கினை யாழ் . நீதவான் நீதிமன்றுக்கு மாற்றி , தற்போது நடைபெறும் செம்மணி புதைகுழி வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும்.

அந்த வழக்கில் கைதாகி பிணையில் உள்ள இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல கூடிய ஏது நிலை காணப்படுவதால் , அந்த வழக்கு , செம்மணி புதைகுழி வழக்குடன் இணைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மன்றில் கோரிக்கை வைத்தார். 

இது தொடர்பில் மன்றில் எழுத்துமூல சமர்ப்பனங்களை முன் வைக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.