யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் களவாடப்பட்ட நகைகளுடன் ஊர்காவற்துறை பகுதியில் நடமாடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற இளைஞனை வழிமறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்போது இளைஞன் முன்னுக்கு பின் முராண தகவல்களை தெரிவித்தமையால், இளைஞனை சோதனையிட்ட போது அவரது உடமையில் இருந்து தாலிக்கொடி , சங்கிலி உள்ளிட்ட ஒரு தொகுதி நகைகளை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து இளைஞனை கைது செய்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, இளைஞனின் உடமையில் இருந்து மீட்கப்பட்ட நகை, சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் களவாடப்பட்ட நகைகள் என தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த இளைஞனின் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மேலும் சில நகைகளும்,  கையடக்க தொலைபேசிகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.