Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கூலி திரைப்படம் எப்படி உள்ளது? – ஊடக விமர்சனம்
பட மூலாதாரம், SunPictures
14 ஆகஸ்ட் 2025, 10:47 GMT
புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (ஆகஸ்ட் 14) வெளியாகியுள்ளது. நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் அமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சிக்கிட்டு வைப், மோனிகா, கூலி பவர் ஹவுஸ் என அடுத்தடுத்து பாடல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியது.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள கூலி திரைப்படம் அதைப் பூர்த்தி செய்துள்ளதா? ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன?
பட மூலாதாரம், @Sunpictutres
படக்குறிப்பு, அடுத்தடுத்து வெளியான பாடல்களால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.’கூலி’ திரைப்படத்தின் கதை என்ன?
ஒருபுறம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தனது ஆட்களுடன் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார் சைமன் (நாகார்ஜுனா). அவருக்கு வலது கையாக இருக்கிறார் தயாளன் (சோபின் சாஹிர்).
மறுபுறம் சென்னையில் மேன்ஷன் நடத்திவருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) விசாகப்பட்டினத்தில் உயிரிழந்த தகவல் அறிந்து அவருக்கு அஞ்சலி செலுத்த தேவா செல்கிறார். அப்போது, ராஜசேகரின் மரணம் இயற்கையானது அல்ல, அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை தேவா அறிந்துகொள்கிறார். நண்பரின் மரணத்துக்கு பழிவாங்க தேவா கிளம்ப அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதி கதை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
சத்யராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? தனது உயிர் நண்பனின் மரணத்துக்கு பழிதீர்த்தாரா ரஜினிகாந்த்? ரஜினிகாந்த் – நாகார்ஜுனா இடையே மோதல் வெடிப்பது ஏன்? ரஜினிகாந்தின் கடந்த காலம் எப்படி இருக்கிறது?
பட மூலாதாரம், @SunPictures
படக்குறிப்பு, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தனது ஆட்களுடன் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார் சைமன்படம் எப்படி இருக்கு?
“படத்தின் முதல் பாதி பாடல், நடனம், பன்ச் வசனம் என ரசிகர்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. இது விறுவிறுப்பாக அமையக்கூடிய படத்தின் வேகத்தை குறைக்கிறது. கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், இரண்டாம் பாதியில் லோகேஷ் உண்மையிலேயே விருந்தை படைத்துவிட்டார்” என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பாராட்டியுள்ளது.
மேலும் “கேமியோக்கள் சரியாக பொருந்தியுள்ளது. இவர்கள் கதைக்கு உண்மையான பலத்தையும் சேர்க்கிறார்கள். சரியான நேரத்தில் வரும் திருப்பங்கள் பார்வையாளர்களை கவர்கிறது” எனவும் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, கூலி படம் இரண்டு ‘ஜெயிலரா’? – ரசிகர்களின் விமர்சனம்தி இந்து நாளிதழ் விமர்சனத்தின்படி, “படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க ரஜினிகாந்தைப் பற்றியது அல்ல. மேன்ஷனில் நடக்கும் Slow Motion சண்டை காட்சிகள் மற்றும் சில உபதேசங்கள் மூலம் லோகேஷ் உங்களை கதைக்குள் ஈர்க்கிறார். ரஜினிகாந்த், சத்யராஜ் இடையேயான நட்பு பற்றி மேலும் அறிய ஆவல் ஏற்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ரஜினிகாந்துக்கே உண்டான ஸ்டைலில் அறிமுக காட்சி அமைக்கப்பட்டுள்ளது, ரசிகர்களை பரபரப்பில் வைத்திருக்கும் வகையிலான கதைக்களத்துடன் படம் தொடங்குகிறது. ஆனால் போகப் போக, நிறைய கிளைக் கதைகள் வருகின்றன. ஆனால் அவை சரியாக கையாளப்படவில்லை” என இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
பட மூலாதாரம், @sunPictures
படக்குறிப்பு, “சரியான நேரத்தில் வரும் திருப்பங்கள் பார்வையாளர்களை கவர்கிறது”நடிகர்களின் நடிப்பு கச்சிதம்
“74 வயதிலும் ரஜினிகாந்த் திரையில் தோன்றும்போது அது ரசிகர்களை வெகுவாக ஈர்க்கிறது. அவரது கண்களுக்கு வைக்கப்பட்ட க்ளோஸ் அப் காட்சிகளே ரசிகர்களை உற்சாகப்படுத்த போதுமானது” என இந்தியா டுடே பாராட்டியுள்ளது.
“நாகார்ஜூனாவின் வில்லத்தனமான நடிப்பு மிரட்டல். எதிராளிகளை அவர் கொலை செய்யும் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அமீர்கான், உபேந்திராவின் வருகையும் கவனிக்க வைக்கிறது. ஒரு பாட்டுக்கு மட்டுமே வந்தாலும் பூஜா ஹெக்டேவின் நடனம் மெருகூட்டுகிறது. சௌபின் ஷாஹிரின் யூகிக்க முடியாத நடிப்புக்கு பாராட்டலாம்” எனக் குறிப்பிட்டுள்ள தினத் தந்தி நாளிதழ் விமர்சனம், “ஸ்ருதிஹாசனின் நடிப்பும் பாராட்டை பெறுகிறது. உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் உலக நாயகனின் மகள் என்பதை நிரூபித்து இருக்கிறார். சத்யராஜின் நக்கல் நடிப்பும் ரசிக்க வைக்கிறது” என பாராட்டு தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், @SunPictures
படக்குறிப்பு, “ஸ்ருதிஹாசனின் நடிப்பும் பாராட்டை பெறுகிறது”‘கூலி’ படத்தின் நிறை – குறைகள்
“தொழில்நுட்ப ரீதியாக கூலி திரைப்படம் சிறப்பாக உள்ளது. கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, அனிருத்தின் அரசவைக்கும் இசை, ஒலிப்பதிவு, VFX என அனைத்தும் கச்சிதம்” என்கிறது இந்தியா டுடே.
“படத்தில் உள்ள பல முரண்பாடுகள், படத்தை ரசிக்க முடியாதபடி மாற்றிவிட்டது. நிறைய இடங்களில் கைத்தட்டல்கள் கிடைத்தாலும் லோகேஷ் கனகராஜின் வழக்கமான, தனித்துவமான காட்சி பாணியுடன் இது வேறுபடுகிறது” என விமர்சித்துள்ளது.
“வழக்கமான பழிவாங்கல் படலம் என்றாலும் புதுமையான திரைக்கதையில் பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளைக் கொண்டு ரசிக்கக்கூடிய படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்” என பாராட்டியுள்ளது தினத்தந்தி நாளிதழ்.
பட மூலாதாரம், @SunPictures
”ஆக்ஷன், கவர்ச்சிகரமான நட்சத்திர பட்டாளம், சரியான இடங்களில் வைக்கப்பட்ட திருப்புமுனைகள் (Twist) ஆகியவை ‘கூலி’ படத்தை வெகுஜன மக்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு படமாக மாற்றுயுள்ளது” என தனது விமர்சனத்தில் கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
ஃபிளாஷ்பேக்கில் வரும் இளம்வயது ரஜினியின் காட்சிகள் மாஸாக இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
”படத்தில் ரஜினியைத் தாண்டி அதிகம் கவனம் பெறுவது வில்லன்களாக நடித்திருக்கும் நாகார்ஜுனா மற்றும் சௌபின் தான். அதிலும் நாகார்ஜுனாவின் வில்லத்தனமான நடிப்பு மிரட்டலாக உள்ளது” என தினத்தந்தி பாராட்டியுள்ளது.
சைமன் கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா ஸ்டைலிஷாக இருப்பதாக பாராட்டியிருக்கும் இந்தியா டுடே, ஆனால் அவரது கதாபாத்திரம் எளிமையாக இருப்பதாகவும், அவரது Charisma-வை மட்டுமே அதிகம் சார்ந்திருக்க வேண்டி இருப்பதாகவும் கூறியுள்ளது.
போதைப்பொருள் கும்பலின் தலைவராக வில்லத்தனத்தை நுணுக்கமாக நாகார்ஜுனா வெளிப்படுத்தியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
ஆமிர்கானின் கேமியோ ரோல் திணிக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல் இயல்பாக இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. அதேநேரம், அவரை சரியாக பயன்படுத்தவில்லை என இந்தியா டுடே விமர்சனம் குறிப்பிடுகிறது.
அளவுக்கு மீறிய யோசனைகளால் சோர்வடையும் ஒரு குறைந்த ரசனைக்குரிய பொழுதுபோக்கு படமாக கூலி இருப்பதாக கூறும் இந்தியா டுடே, ரஜினிகாந்த்-ன் திரை தோற்றமும், அனிருத்தின் இசையும் படத்தை காப்பாற்றியுள்ளதாக குறிப்பிடுகிறது
தினத்தந்தி விமர்சனத்தின்படி மொத்தத்தில் “கூலி விறுவிறுப்பான கதை”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு