தமிழ்நாட்டில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி – யாருக்கு செலுத்த வேண்டும்?

எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒன்று முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம் என தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 15 மாவட்டங்களில் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்றால் என்ன?

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்பது மூளையை தாக்கும் ஒரு வைரஸ் நோயாகும். இந்த நோயை ஏற்படுத்தும் வைரஸ்- ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ் (Japanese Encephalitis Virus) என்றழைக்கப்படுகிறது. இது மனிதர்களுக்கு குலெக்ஸ் ட்ரைடானியோரின்கஸ் (Culex tritaeniorhynchus) எனும் கொசு வகை மூலமாக பரவுகிறது.

பட மூலாதாரம், Getty Images

மனிதர்களிடமிருந்து பரவக்கூடுமா?

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ் பன்றிகள் மற்றும் பறவைகளிடம் காணப்படுகிறது. அவற்றிலிருந்து கொசுக்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸை கொண்ட கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது, மனிதர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவுவதில்லை. எனவே ஒருவரை தொடுவதாலோ அல்லது அவரது எச்சில் மூலமாகவோ இந்த நோய் பரவ வாய்ப்பில்லை.

இந்த நோயின் அறிகுறிகள் என்ன?

பெரும்பாலான நேரங்களில் இந்நோய் காய்ச்சல், தலைவலி போன்ற லேசான அறிகுறிகளுடன் காணப்படும். ஆனால் சில நேரங்களில் அதீத காய்ச்சல், வலிப்பு, கோமா, மனபிறழ்வு, பக்கவாதம் ஏற்படலாம்.

இந்நோய் இறப்புகளை ஏற்படுத்துமா?

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நோயிலிருந்து மீண்டு வருபவர்களில் 20 -30% நிரந்தர நரம்பியல் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு வலிப்புகள், காது-கண் பார்வை இழப்பு, பேச்சு, மொழி, நினைவாற்றல் சிக்கல்கள் ஏற்படலாம்.

ஒவ்வொரு ஆண்டு உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஏற்படுகிறது என்றும் 25 ஆயிரம் பேர் இந்நோயினால் இறக்கிறார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இது ஆசிய நாடுகளிலேயே பெரும்பாலும் காணப்படுகிறது.

யாரை அதிகம் பாதிக்கும்?

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. அவர்களுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஆரம்ப கால அறிகுறிகளாக இருக்கும்.

“தீவிர நோய் குழந்தைகளிலேயே அதிகம் காணப்படுகிறது. அதீத காய்ச்சல், வலிப்பு மற்றும் கோமா இந்நோயின் முக்கிய அறிகுறிகள். குழந்தைகளிலும் இந்த அறிகுறிகள் உண்டு” என்று குழந்தைகள் நல மூத்த மருத்துவரும் தேசிய சுகாதார திட்டத்தின் தமிழ்நாடு ஆலோசகராகவும் இருக்கும் மருத்துவர் சீனிவாசன் தெரிவிக்கிறார்.

இந்நோய் கிராமப்புறங்களில், விவசாய நிலங்களில் பணி செய்வோருக்கு அதிகம் ஏற்பட்டாலும், இப்போது நகர்ப்புறங்களிலும் காணப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி செலுத்த வேண்டும்?

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசியை ஒன்று முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைக்கிறது. ஒரு முறை எடுத்துக் கொள்ளும் தடுப்பூசியின் வீரியம் 10 முதல் 15 ஆண்டுகள் நீடித்து இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெரியவர்களில் இந்நோய்க்கான எதிர்ப்பு சக்தி, குழந்தைகளுக்கு இருப்பதை விட அதிகமாக உள்ளது. எனினும் நோய் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதியில் 15 வயதுக்கு மேறற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இந்தியாவில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரவல் எங்கு உள்ளது?

இந்தியாவில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் முதன் முதலாக தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் 1955-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 1973 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் இந்நோய் அதிகமாக பரவியது. 1978-ல் அசாம் மாநிலத்தில் இந்நோயின் பரவல் அதிகமாக இருந்தது. 2003-ம் ஆண்டு இந்நோ தேசிய வெக்டர் போர்ன் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த நோய் சேர்க்கப்பட்டது. அப்போது முதல் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 24 மாநிலங்களில் இந்நோய் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நோய் பரவல் எவ்வளவு?

வேலூரில் உள்ள சி எம் சி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இணைந்து நடத்திய ஆய்வில் தமிழ்நாடில் 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான தரவுகளின் படி, 306 பேருக்கு மாநிலத்தில் இந்நோய் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 24.2% பாதிப்பு 10 முதல் 19 வயதிலானவர்களிடம் கண்டறியப்பட்டது. அதற்கு அடுத்த படியாக 19% பாதிப்பு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் காணப்பட்டது.

2022-ம் ஆண்டு 120 பேருக்கும், 2023-ம் ஆண்டு 112 பேருக்கும் 2024-ம் ஆண்டு 74 பேருக்கும் இந்த நோய் கண்டறியப்பட்டது. தரவுகளின்படி, 40% நோய் பாதிப்பு சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்தது, திருவள்ளூரில் 8.2%, திருவாரூரில் 6.2%, திருவண்ணாமலலையில் 5.6%, செங்கல்பட்டில் 4.9%, தஞ்சாவூரில் 4.6%, விழுப்புரத்தில் 3.6%, மதுரையில் 2.6% நோய் பாதிப்பு இருந்தது.

இந்த நோய் பருவமழை காலத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் அதிகமாக பரவுகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கப்படுகிறது?

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு சுகாதாரத்துறை.

சென்னையில் ஏற்கெனவே இரண்டு மண்டலங்களில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், மீதமுள்ள 13 மண்டலங்களிலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்று முதல் 15 வயதுக்கு உட்பட்ட 27,63,152 குழந்தைகளக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்கள் தவிர ஏற்கெனவே 2007-ம் ஆண்டு முதல் விருதுநகர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், மதுரை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கரூர் போன்ற மாவட்டங்களில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த தடுப்பூசியை அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறும் சுகாதாரத்துறை, அதிக ஆபத்துள்ள மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்படுகிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி எங்கே கிடைக்கும்?

ஐந்து முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும். இந்த முகாம்களில் தனியார் பள்ளிகளில் பயில்வோர் உட்பட அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

ஒன்று முதல் ஐந்து வயதிலான குழந்தைகள், பள்ளிகளிலிருந்து இடைநிற்றலான குழந்தைகளுக்கு அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் செப்டம்பர் 13ம் தேதி முதல் அக்டோபர் 12ம் தேதி வரை திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், சிறார் இல்லங்களில் அக்டோபர் 13ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

தடுப்பூசி ஏன் அவசியம்?

“இந்நோய் தொற்று உடலில் ஏற்பட்ட பிறகு, மிக வேகமாக அடுத்தடுத்த நிலைக்கு செல்லும். வலிப்பு, கோமா, பிறகு இறப்பும் ஏற்படக் கூடும். உயிரிழப்பிலிருந்து ஒருவரை காப்பாற்ற முடிந்தாலும், அதற்குள் உடலில் பக்கவாதம் உள்ளிட்ட சில நிரந்தர பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும். இந்நோய்க்கான நேரடி மருந்து இல்லாத போது தடுப்பூசி எடுத்துக் கொள்வது நல்லது. மலேரியா போன்ற நோய்கள் பரவலாக இருந்தாலும், அதன் விளைவுகள் ஜப்பானிய மூளைக்காய்ச்சலை போல தீவிரமாக இல்லை” என்று மருத்துவர் சீனிவாசன் தெரிவித்தார்.

இந்நோய்க்கு மருந்து உண்டா?

ஜப்பானியை மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் நேரடியாக தாக்கும் மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனவே நோயினால் ஏற்படும் அறிகுறிகளை குறைக்கவே சிகிச்சை வழங்கப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு