Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கூலி படத்துக்கு குழந்தைகளுடன் செல்லலாமா? விதிகள் சொல்வது என்ன?
பட மூலாதாரம், @sunpictures
எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணாபதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தை 18 வயதுக்கு மேல் பெரியவர்கள் மட்டுமே பார்க்கலாம் என்று A சான்றிதழ் தணிக்கை அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.
இது இத்திரைப்படத்தின் வசூலை பாதிக்குமா, திரையரங்க உரிமையாளர்கள் இது குறித்து என்ன நினைக்கின்றனர்? கடந்த காலங்களில் இப்படி வெளியான திரைப்படங்களின் நிலை என்ன ஆகியவற்றைக் குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை.
‘கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன், பாலிவுட் உச்ச நட்சத்திரமான ஆமிர்கான், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உபேந்திரா, தெலுங்கு உச்ச நட்சத்திரமான நாகார்ஜுனா, மலையாள திரையுலகின் மிகப் பிரபலான நடிகர்களில் ஒருவரான சோபின் சாஹிர், ஷ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும் நாளை (ஆகஸ்ட் 14) திரையுலகில் ரஜினிகாந்தின் 50வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூறுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் ‘கூலி’ திரைப்படத்துக்கான இமாலய எதிர்பார்ப்பு என்பது இயல்பானதாகவே தெரிகிறது.
பட மூலாதாரம், @LokeshKanagaraj
படக்குறிப்பு, ஏ சான்றிதழ் படத்துக்கு, 18 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அனுமதிக்கப்பட்டால், நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் அபாரதம் விதிக்கப்படும்.ரஜினி படத்திற்கு 36 ஆண்டுக்குப் பின் ‘ஏ’ சான்றிதழ்
ஆனால், சில நாட்களுக்கு முன், ‘கூலி’ திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம், A சான்றிதழ் வழங்கியிருந்தது. 1989 ஆம் ஆண்டு வெளியான ‘சிவா’ திரைப்படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் திரைப்படத்துக்கு A சான்றிதழ் இப்போதுதான் தரப்பட்டுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்தத் திரைப்படத்தில் வன்முறை ரீதியாக தான் சமரசம் செய்து கொள்ளவில்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதைக் குறிப்பிட்டு சிலர் ஏ சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியமில்லை என்று சொன்னாலும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது கண்டிப்பாக வசூலை பாதிக்கும் என்ற பரவலான கருத்தைப் பார்க்க முடிந்தது.
எக்ஸ் தளத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பக்கம் ஒன்று, கூலி திரைப்படத்தின் U/A பதிப்பையும் தயாரிப்பு தரப்பு வெளியிட வேண்டும், அப்போதுதான் குழந்தைகளுடன் வரும் ரஜினி ரசிகர்களாலும் படத்தைப் பார்க்க முடியும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
பிவிஆர் ஐனாக்ஸ், ஏஜிஎஸ், தேவி உள்ளிட்ட பல திரையரங்குகள், இப்போதே தங்களது சமூக வலைதள பக்கங்களில், ‘கூலி’ திரைப்படத்துக்கு A சான்றிதழ் தரப்பட்டுள்ளதால் குழந்தைகளை அழைத்து வராமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவிப்பை பகிர ஆரம்பித்துவிட்டன.
‘கூலி’ திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் உண்மையிலேயே அதற்கான விதிகளை திரையரங்குகள் சரியாக நடைமுறைபடுத்துமா? வசூல் பாதிக்கப்படுமா? என்பது குறித்து பிபிசி தமிழ் சார்பாக திரையரங்க உரிமையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
பட மூலாதாரம், @LokeshKanagaraj
படக்குறிப்பு, கூலி படத்தின் U/A பதிப்பையும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை.’விழிப்புணர்வு அவசியம்’
“வழக்கமாக ரஜினிகாந்த் திரைப்படங்கள் அனைத்து தரப்பினருக்குமானது. கடந்த இரண்டு தசாப்தங்களில் அவர் நடிப்பில் ஒரு ஏ சான்றிதழ் திரைப்படமும் வெளியானதில்லை. ஒரு வேளை கூலி திரைப்படத்துக்கு யுஏ கிடைத்திருந்தால், கண்டிப்பாக தற்போதைய வசூலை விட பெரிய வசூல் கிடைத்திருக்கும். இப்போது ஒரு வகையில் வசூல் பாதிக்கப்படும் என்றே நான் நினைக்கிறேன்” என்று கூறுகிறார் தஞ்சாவூரில் இயங்கி வரும் வெற்றி ஈ ஸ்கொயர் திரையரங்கின் உரிமையாளர் மணி வி சாந்தவேல்.
தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை தணிக்கையில் பல திரைப்படங்கள் தப்பித்திருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில், தலையை வெட்டும் காட்சி ஒன்று எந்த வித தணிக்கையும் இல்லாமல் படத்தில் இடம்பெற்றிருந்தது. இத்தனைக்கும் ஜெயிலர் UA சான்றிதழ் பெற்ற படம்.
பொதுவாக தணிக்கையின் போது நடப்பது என்ன? தயாரிப்பாளர்கள் ஏ சான்றிதழை ஏற்க தயங்குகிறார்களா என்பது பற்றி பத்திரிகையாளரும், தணிக்கை வாரியக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான கவின் மலரிடம் கேட்டோம்.
“பொதுவாக, தயாரிப்பாளர்கள் ஏ சான்றிதழை ஏற்கத் தயங்குவது உண்மையே. ஏனென்றால் ஒரு தரப்பு ரசிகர்கள் படம் பார்க்க வரவே மாட்டார்கள். குழந்தைகளை அழைத்து வர மாட்டார்கள். ஏ சான்றிதழ் என்பது வன்முறை காட்சிகளுக்காகவோ அல்லது அந்தப் படத்தின் களம் என்ன பேசுகிறது என்பதைப் பொருத்தும் கூட தரப்படும். ஆனால் ஆபாசமான படமாக இருந்ததால்தான் ஏ வழங்கப்பட்டுள்ளது என்கிற பார்வையும் நம் ரசிகர்களிடையே இருக்கிறது. இதுவே தயாரிப்பாளர்களின் தயக்கத்துக்குக் காரணம். யு/ஏ தராமல் ஏ சான்று தரும்போது அதுகுறித்த விவாதங்கள் கூட நடந்திருக்கின்றன” என்று கூறுகிறார் கவின் மலர்.
பட மூலாதாரம், Anirudh Ravichander
படக்குறிப்பு, ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.ஏ சான்று வழங்கப்பட்ட திரைப்படங்களை, 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் பார்ப்பதை தடுக்கும் வகையில் திரையரங்குகள் கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
அதே சமயம் கடந்த வருடம் வெளியான விடுதலை 2 திரைப்படத்துக்கு, ஒரு பெண் தன் குழந்தைகளை அழைத்து வந்து, அவர்கள் அனுமதிக்கப்படாததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து செய்திகளும் ஊடகங்களில் வந்திருந்தன.
ஆனால் தணிக்கை வாரியத்தின் வேலை, தணிக்கை செய்வது மட்டுமே என்கிறார் கவின் மலர்.
“திரையிடப்படும் படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது மட்டுமே தணிக்கை வாரியத்தின் பணி. மற்றபடி என்ன தணிக்கை சான்றிதழ் தரப்பட்டுள்ளது என்பதைப் பார்த்து முடிவெடுப்பது ரசிகர்களின் பொறுப்பு. பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை ஒரு படத்துக்கு அழைத்துச் செல்லும் முன், இதுபற்றிய விழிப்புணர்வைப் பெறுவது அவசியம்” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், Kavin Malar/Facebook
படக்குறிப்பு, கவின்மலர்திரையரங்க உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை
“திரையரங்குக்குள் நுழையும் சமயம் எல்லா பார்வையாளர்களையும் வயதை உறுதிப்படுத்தி கட்டுப்படுத்துவதோ கண்காணிப்பதோ மிகக் கடினமான ஒன்று. தற்போது வெளியாகவிருப்பது ரஜினி திரைப்படம் என்பதால், நிலை எப்படி இருக்கிறது என்பதை நாம் காத்திருந்துதான் கணிக்க முடியும்” என்கிறார் மணி சாந்தவேல்,
இந்நிலையில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சென்னை மண்டல அலுவலகத்தில் இருந்து தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் திரைப்பட வெளியீடு, விளம்பரம் ஆகியவற்றில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, ”தயாரிப்பாளர்கள், திரைப்படத்துடன் தணிக்கை வாரியம் தந்த மதிப்பீடு, பரிந்துரைகளை கண்டிப்பாக இணைக்க வேண்டும். மேலும், நாளிதழ், அறிவிப்புப் பலகைகள் என குறிப்பிட்ட திரைப்படத்தின் எந்த விதமான விளம்பரமாக இருந்தாலும் அதில் தணிக்கை மதிப்பீடு என்ன என்பதை குறிப்பிட வேண்டும்”
”ஏ சான்றிதழ் திரைப்படங்களுக்கு பெரியவர்கள் அல்லாத ரசிகர்கள் அனுமதிகப்படக்கூடாது என்பதை திரையரங்க உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். திரையரங்க வளாகத்தில் இருக்கும் திரைப்பட விளம்பரங்களிலும், தணிக்கை வாரியம் தந்த மதிப்பீடு, பரிந்துரைகள் வைக்கப்பட வேண்டும். ஏ சான்றிதழ் படத்துக்கு, 18 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அனுமதிக்கப்பட்டால், நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் அபாரதம் விதிக்கப்படும். மேலும் சினிமாட்டோகிராஃப் சட்டம், 1952த்தின் கீழ், திரையரங்கத்துக்கான உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம்”’ என்று இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.குழந்தைகள் பார்க்கக் கூடாது ஏன்?
ஓடிடி வந்த பிறகு குழந்தைகள் கூட சர்வதேச திரைப்படங்களைப் பார்க்கின்றனர். இதை விட அதிக வன்முறைக் காட்சிகளை தெரிந்து கொள்கின்றனர். பிறகு ஏன் இந்தக் கட்டுப்பாடு என்கிற ரீதியிலும் சில தர்க்கங்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
ஆனால் ஓடிடி தளங்கள் அனைத்துமே, அவர்கள் வைத்திருக்கும் திரைப்படங்களுக்கு, தனிப்பட்ட முறையில் ஒரு தணிக்கை வரையறையைத் தருகின்றனர். திரையரங்கில் UA சான்றிதழுடன் வெளியான சில படங்கள் கூட, ஓடிடி தளத்தில் A சான்றிதழ் பெற்றிருக்கும். வீட்டிலிருக்கும் பெற்றோர்களே, அந்தத் திரைப்படம் தங்கள் குழந்தைகளுக்கு உகந்ததா இல்லையா என்பதை முடிவு செய்ய செய்யலாம். ‘கூலி’ ஓடிடியில் வெளியானால், அப்போதும் அதற்கு A சான்றிதழே தரப்படும்.
எப்படி குழந்தைகளுக்கு உகந்த உணவுகளை அவர்களுக்குத் தர மாட்டோமோ அப்படி A சான்றிதழ் படங்கள் என்றால், அவர்களுக்கு உகந்த உணவு அல்ல என்பதைப் போல முடிவெடுப்பதே அவசியம்.
கடந்த காலங்களில் ‘ராயன்’, ‘அனிமல்’, ‘அர்ஜுன் ரெட்டி’, ‘மகதீரா’ உள்ளிட்ட திரைப்படங்கள் A சான்றிதழ் பெற்றும் மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படங்களாக மாறின.
கூலியும் அந்தப் பாதையில் செல்லும் என்பதே ரசிகர்களின், திரையரங்க உரிமையாளர்களின் எதிர்பார்ப்பு.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு