பட மூலாதாரம், Sun Pictures

படக்குறிப்பு, ஆகஸ்ட் 14ஆம் தேதி (நாளை) உலகமெங்கும் வெளியாகிறது ‘கூலி’ திரைப்படம்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியத் திரையுலகில் இதற்கு முன்பாக ‘கூலி’ என்ற பெயரில் நிறைய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தத் திரைப்படங்களின் கதை என்ன? அந்தத் திரைப்படங்கள் வெற்றிபெற்றனவா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஆமிர் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி (நாளை) உலகமெங்கும் வெளியாகிறது.

ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து ஐம்பதாண்டுகள் நிறைவடையும் நாளில் இந்தத் திரைப்படம் வெளியாவது, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்தத் திரைப்படம் பற்றிய அறிவிப்பு 2023ஆம் ஆண்டு செப்டம்பரிலேயே வெளியானாலும், படத்தின் பெயர் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் வெளியிடப்பட்டது.

லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்சிலிருந்து (LCU) இந்தப் படம் விலகியிருக்கும் என்றும் தெரிகிறது. ஆனால், ‘கூலி’ என்ற இந்தப் படத்தின் பெயர், புதுமையான ஒன்றல்ல. இதற்கு முன்பு இந்தியாவில் பல மொழிகளில் இதே டைட்டிலுடன் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Lokesh Kanagaraj

படக்குறிப்பு, ‘கூலி’ என்ற படத்தின் பெயர், புதுமையான ஒன்றல்ல.அமிதாப் பச்சனின் ‘கூலி’

கூலி (1983): அமிதாப் பச்சன் நடித்து இந்தியில் வெளியான திரைப்படம் இது. அமிதாப் பச்சன், வஹீதா ரஹ்மான், ரிஷி கபூர், ரதி அக்னிஹோத்ரி ஆகியோர் நடித்து வெளியான இந்தப் படம், ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம்.

இந்தப் படத்தை அமர் அக்பர் ஆண்டனி போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கிய மன்மோகன் தேசாய் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் ரயில் நிலையத்தில் பணியாற்றும் கூலித் தொழிலாளராக நடித்தார். சிறுவயதிலேயே வில்லனால், தாய் – தந்தையரிடமிருந்து பிரிக்கப்பட்ட அவர் மீண்டும் தன் குடும்பத்தினருடன் எப்படி ஒன்று சேர்கிறார் என்பதுதான் கதை. இந்தக் கதைக்குள் பல சிறு கிளைக் கதைகள் இருந்தன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அமிதாப் பச்சன், கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்குச் சென்றார். ஆனால், மீண்டு வந்து படத்தை முடித்துக் கொடுத்தார். இந்தப் படம், அந்த ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படங்களிலேயே மிக அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக அமைந்தது. 3.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கிட்டத்தட்ட 21 கோடி ரூபாயை வசூலித்தது.

பட மூலாதாரம், Youtube

படக்குறிப்பு, 1983ஆம் ஆண்டு வெளியான அமிதாப் பச்சனின் ‘கூலி’ திரைப்படம்கூலிக்காரனாக விஜயகாந்த்

கூலிக்காரன் (1987): விஜயகாந்த், ரூபிணி ஆகியோர் நடித்த இந்தப் படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார். கூலியாக வேலைபார்க்கும் விஜயகாந்த், ஒரு கடத்தல் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகிறார். அதே நேரத்தில் அவரது சகோதரர் விபத்தில் சிக்குகிறார். வேலையும் போகிறது. விடுதலையாகிவரும் விஜயகாந்த், வில்லனிடம் திருடச் செல்கிறார். ஆனால், அதற்குள் சகோதரர் இறந்துவிட, விஜயகாந்த் மீண்டும் சிறையில் அடைபடுகிறார்.

வெளியேவரும் விஜயகாந்த் எப்படி வில்லனைப் பழிவாங்குகிறார் என்பதுதான் கதை. விஜயகாந்த் நடித்த ஆரம்பகால பிரம்மாண்டப் படங்களில் இதுவும் ஒன்று. படத்தை தாணு தயாரித்திருந்தார். இந்தப் படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளியான ‘காலியா’ என்ற படத்தின் ரீ -மேக் இது. இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜயகாந்தின் மார்க்கெட்டும் உயர்ந்தது.

பட மூலாதாரம், Youtube

படக்குறிப்பு, 1987ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் ‘கூலிக்காரன்’ திரைப்படம்தெலுங்கில் ‘கூலி நம்பர் 1’

கூலி நம்பர் 1 (1991): வெங்கடேஷ் நாயகனாக நடித்த தெலுங்குப் படம் இது. ஒரு பணக்காரப் பெண்ணை செகந்தராபாத் ரயில் நிலையத்தில் கூலியாக இருக்கும் கதாநாயகன் வெங்கடேஷ், தான் பணக்காரன் என ஏமாற்றித் திருமணம் செய்கிறார்.

இதற்குப் பிறகு உண்மை தெரிய, நாயகியும் அவரது குடும்பத்தினரும் இவரை வெறுக்கின்றனர். அதன் பிறகு நடக்கும் குழப்பங்கள், பிரச்சனைகள்தான் மீதிக் கதை. நாயகியாக தபூ நடிக்க, படத்தை கே. ராகவேந்திரராவ் இயக்கியிருந்தார். இந்தப் படம் இதே பெயரில் தமிழில் வெளியானது. இந்தியில் ‘கூலி ராஜா’ என்ற பெயரில் வெளியானது.

பட மூலாதாரம், Youtube

படக்குறிப்பு, வெங்கடேஷ் நாயகனாக நடித்த தெலுங்குப் படம் ‘கூலி நம்பர் 1’இந்தியில் ‘கூலி நம்பர் 1’

கூலி நம்பர் 1 (1995): இது இந்திப் படம்தான். ஆனால், தமிழில் இருந்து ரீ-மேக் ஆன இந்திப் படம். 1993ஆம் ஆண்டில் சந்தான பாரதி இயக்கத்தில் பிரபுவும் – சுகன்யாவும் நடித்து வெளியான ‘சின்ன மாப்ளே’ என்ற படத்தின் ரீ – மேக் இது.

பேருந்து நிலையத்தில் கூலியாக வேலை பார்க்கும் பிரபுவை, பணக்காரர் என்று ஏமாற்றி, ஒரு பண்ணையாரின் மகளுக்குத் திருமணம் செய்துவைப்பார் கல்யாணத் தரகரான விசு. ஆனால், ஒரு நாள் பிரபுவின் உண்மை நிலையை பண்ணையார் பார்த்துவிட, அது பிரபு அல்ல, அவரது தம்பி என்று பொய் சொல்வார் விசு. இதனால் ஏற்படும் குழப்பமும் தீர்வும்தான் ‘சின்ன மாப்ளே’ படத்தின் கதை. இந்தப் படம் பெரும் வெற்றிபெற்றதால், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீ – மேக் செய்யப்பட்டது.

இந்தப் படம் தெலுங்கில் ‘சின்ன அள்ளுடு’ என்றும் இந்தியில் ‘கூலி நம்பர் 1’ என்றும் ரீ – மேக் ஆனது. இந்தியில் இந்தப் படத்தில் கோவிந்தா கதாநாயகனாகவும் கரீஷ்மா கபூர் நாயகியாகவும் நடித்திருந்தனர். படத்தை டேவிட் தவான் இயக்கியிருந்தார். இந்தியில் இந்தப் படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. இந்தி சினிமாவின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது.

பட மூலாதாரம், Youtube

படக்குறிப்பு, தமிழில் வெளியான ‘சின்ன மாப்ளே’ படத்தின் இந்தி ரீ-மேக்2020ல் இதே படத்தை தனது மகன் வருண் தவானை கதாநாயகனாகக் கொண்டு மீண்டும் ரீ – மேக் செய்தார் டேவிட் தவான். கோவிட் பரவல் காரணமாக இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், விமர்சகர்களிடமிருந்து மிக மோசமான விமர்சனத்தை இந்தப் படம் பெற்றது.

பட மூலாதாரம், Youtube

படக்குறிப்பு, சரத்குமார் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம்சரத்குமாரின் ‘கூலி’

கூலி (1995): சரத்குமார் நடித்து தமிழில் வெளியான திரைப்படம் இது. படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சரத்குமார், மீனா, ராஜா, ராதாரவி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சரத்குமார் வில்லனின் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியாக நடித்திருப்பார். வழக்கம்போலவே, தொழிலாளர்களுக்காகப் போராடுகிறார். முதலாளியின் மகளாக வரும் மீனா அவரைக் காதலிக்கிறார்.

சரத்குமாரின் தங்கையை முதலாளியின் மகன் ராஜா காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சரத்குமாரை கொல்ல வில்லன் ஆளை அனுப்புகிறார். அந்த அடியாள் வில்லனையும் கொல்ல முடிவெடுக்கிறார். அந்த முயற்சியிலிருந்து வில்லனை சரத்குமார் காப்பாற்ற, எல்லாம் சுபம்.

சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைப்பாளராக அறிமுகமான இந்தப் படத்தில் பாடல்கள் எதுவும் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. படம் விமர்சன ரீதியாகவும் சரி, வர்த்தக ரீதியாகவும் சரி, தோல்விப் படமாகவே அமைந்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு