கடுமையான நிபந்தனைகளின் கீழ், இலங்கையில் முதல் முறையாக சட்டப்பூர்வமாக கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக  ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளாா்.  இலங்கை முதலீட்டு சபையின்  கீழ் ஒரு திட்டமாக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கஞ்சா பயிர்ச்செய்கை திட்டத்திற்காக விண்ணப்பித்த  37 விண்ணப்பதாரர்களில் இருந்து இந்த ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு  அவர்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஆறு மாதங்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது, முன்னேற்ற அறிக்கைகளின் அடிப்படையில் பயிர்ச்செய்கை காலத்தை நீட்டிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிபந்தனையாக, ஒவ்வொரு முதலீட்டாளரும் இலங்கை மத்திய வங்கியில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தை உத்தரவாதமாக வைப்பிலிட வேண்டும் எனவும்    பயிர்ச்செய்கை முயற்சியைத் ஆரம்பிக்கத்  தேவையான குறைந்தபட்ச முதலீடு 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இந்த திட்டத்தின் மேற்பார்வை அதிகாரியாக செயல்படும் வைத்தியர்  தம்மிக அபேகுணவர்தன தொிவித்துள்ளாா்.

இலங்கையில் பயிரிடப்படும் அனைத்து கஞ்சாவும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும், என்பதுடன் அது மருந்து உற்பத்தி மற்றும் சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை முதலீட்டாளா்கள்  அரசாங்கத்திற்கு உறுதி செய்ய வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இலங்கை முதலீட்டு சபை தொடர்ந்து கண்காணித்து வருகின்றதெனவும் இந்த முயற்சிக்காக இலங்கை முதலீட்டு சபையின் கீழ் 64 ஏக்கர் நிலம் ஏற்கனவே மீரிகம பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

தற்போதுள்ள இலங்கை சட்டத்தின் கீழ், பயிர்ச்செய்கையின் போது கஞ்சா செடியின் விதைகள், இலைகள் அல்லது வேர்கள் உட்பட எந்தப் பகுதியும் வெளிப்புற சூழலுக்குள் வெளியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, பயிர்ச்செய்கை இடம் ஒரு பாதுகாப்பான வேலியால் சூழப்பட வேண்டும், மேலும் முதலீட்டாளர்கள் வளாகத்திற்கு சிறப்பு பணிக்குழு மற்றும்  காவல்துறைப் பாதுகாப்பை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வைத்தியர்  தம்மிக  அபேகுணவர்தன  தொிவித்துள்ளாா்.

இந்தத் திட்டத்தை மேற்பார்வையிடுவதற்கு இலங்கை முதலீட்டு சபை , பொதுப் பாதுகாப்பு மற்றும்  நாடாளுமன்ற விவகார அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுர்வேதத் திணைக்களம் ஆகியவை கூட்டாகப் பொறுப்பாகும்.   இந்த முயற்சி கணிசமான அந்நியச் செலாவணி வருவாயை ஈட்டும் என  அரசாங்கம் எதிர்பார்க்கிறது எனவும் வைத்தியர்   தம்மிக  அபேகுணவர்தன மேலும் தொிவித்துள்ளாா்

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைக்கான சட்ட கட்டமைப்பை நிறுவுவதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முக்கிய பங்கு வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.