Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அமெரிக்கா – ரஷ்யா: இந்தியாவுக்கு எந்த நாட்டின் உறவு அதிக பலன் தரும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் , இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (இடமிருந்து வலமாக)எழுதியவர், அபினவ் கோயல்பதவி, பிபிசி செய்தியாளர்57 நிமிடங்களுக்கு முன்னர்
ரஷ்யாவும் அமெரிக்காவும் பல ஆண்டுகளாக இந்தியாவிற்கு முக்கியமான உத்தி சார்ந்த கூட்டாளிகளாக இருந்து வருகின்றன.
தற்போதைய உலக அரசியல் சூழல், இந்தியா யாருடைய பக்கம் இருப்பது அதிக நன்மை பயக்கும் என்ற கேள்வியை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது அமலுக்கு வரும் போது, இந்தியாவின் ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் வரி 50 சதவீதமாக அதிகரிக்கும்.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நீண்ட கால மற்றும் நம்பகமான உறவு உள்ளது. பாதுகாப்பு ஒப்பந்தங்கள் முதல் எரிசக்தி (கச்சா எண்ணெய்) விநியோகம் வரை ரஷ்யா இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) படி, 2019 மற்றும் 2023 க்கு இடையில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் ஆயுத இறக்குமதி 36 சதவீதமாக இருந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
சமீப காலங்களில், ரஷ்யாவிலிருந்து வந்த மலிவான கச்சா எண்ணெய் இந்திய பொருளாதாரத்தின் அழுத்தத்தை குறைத்துள்ளது.
மறுபுறம், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. 2024-25 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 131.84 பில்லியன் டாலராக இருந்தது.
அதேநேரத்தில், உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு உபகரணங்கள் முதல் பசுமை ஆற்றல் வரையிலான துறைகளில் அமெரிக்காவை இந்தியா அதிகமாகச் சார்ந்துள்ளது.
ஆனால், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வளர்ந்து வரும் மோதலில் யாருடைய நெருக்கம் இந்தியாவிற்கு அதிக பயனளிக்கும் என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் லாபமும் இழப்பும்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா ஆண்டுதோறும் சுமார் 10 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்துகிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.
வர்த்தக அமைச்சகத் தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 35 சதவீதம் ரஷ்யாவிலிருந்து வந்தது, அதேநேரத்தில் 2018 நிதியாண்டில் இது 1.3 சதவீதமாக மட்டுமே இருந்தது.
யுக்ரேன் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதன் பிறகு, ரஷ்யா சலுகை விலையில் எண்ணெயை விற்பனை செய்கிறது, இது இந்தியாவுக்கு அதிக நன்மை பயக்கிறது.
ரஷ்யாவிலிருந்து மலிவான எண்ணெயை வாங்குவதன் மூலம் இந்தியா ஆண்டுதோறும் 10 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்துகிறது என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா நம்புகிறார்.
“மறுபுறம், இந்தியா அமெரிக்காவுடன் சுமார் 41 பில்லியன் டாலர் வர்த்தக உபரியைக் கொண்டுள்ளது (அதாவது, அதிக ஏற்றுமதி, குறைவான இறக்குமதி). நாம் அமெரிக்காவிற்கு சுமார் 87 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்கிறோம்” என்று அவர் கூறுகிறார்.
“டிரம்பின் 50 சதவீத வரி அமலானால், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலர் வரை குறையக்கூடும். ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்காவிட்டால் இந்த வரி 25 சதவீதமாக இருக்கும். அத்தகைய சூழலில் இந்தியாவின் ஏற்றுமதி 30 பில்லியன் டாலர் குறையும்” என்று அஜய் ஸ்ரீவஸ்தவா விளக்குகிறார்.
அதேபோல், ‘தி இமேஜ் இந்தியா இன்ஸ்டிடியூட்’ தலைவர் ராபிந்திரா சச்தேவும் இதையே கூறுகிறார்.
“அமெரிக்காவின் ஒரு சதவீத வரி என்பது சுமார் ஒரு பில்லியனுக்கு சமம். டிரம்ப் 50 சதவீத வரியை விதித்தால், இந்தியா சுமார் 50 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்கும்” என்று கூறும் ராபிந்திரா சச்தேவ்,
“இந்தியாவில் பணம் மட்டுமல்ல, ஏராளமான வேலைவாய்ப்பு இழப்புகளும் ஏற்படலாம். வரிகள் அதிகரித்தால், குறைவான பொருட்களே அமெரிக்காவிற்குச் செல்லும், இந்தியாவில் வர்த்தகம் பாதிக்கப்படும், வேலையிழப்பும் ஏற்படும்” என்று கூறுகிறார்.
அமெரிக்கா 50 சதவீத வரியைத் தொடரும் பட்சத்தில், இந்தியாவில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வரை இழப்பு வரலாம் என்று அவர் மதிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி (கோப்புப் படம்)இரு நாடுகளுக்கும் இடையிலான முடிவுகள் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டும் எடுக்கப்படுவதில்லை, மாறாக உலக அரசியல், ராஜ்ஜீய மற்றும் தேசிய நலன்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் நம்புகின்றனர்.
நிகோர் அசோசியேட்ஸின் பொருளாதார நிபுணர் மிதாலி நிகோர், டிரம்பின் அழுத்தத்தின் கீழ் இந்தியா எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று குறிப்பிடுகிறார்.
டிரம்பின் அழுத்தத்திற்கு ஆட்பட்டு ரஷ்யாவுடனான உறவை இந்தியா கெடுத்துக் கொள்ள முடியாது என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கருதுகிறார்.
“நெருக்கடியான காலங்களில், அமெரிக்காவை விட ரஷ்யா இந்தியாவுக்கு உதவியிருக்கிறது என வரலாறு நமக்குச் சொல்கிறது” என்று அஜய் கூறுகிறார்.
1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில், ரஷ்யா (அப்போதைய சோவியத் ஒன்றியம்) இந்தியாவிற்கு ஆயுதங்கள், ராஜ்ஜீய ஆதரவை வழங்கியதுடன், ஐக்கிய நாடுகள் சபையிலும் உறுதுணையாக நின்றது.
மறுபுறம், அமெரிக்கா பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்து, இந்தியப் பெருங்கடலில் இந்தியாவிற்கு எதிராக தனது 7வது கடற்படையை அனுப்பியது.
1998ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனைக்குப் பிறகும் ரஷ்யா இந்தியாவிற்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கியது. மேற்கத்திய நாடுகள் இந்தியா மீது பல்வேறு தடைகளை விதித்து வந்த காலம் அது.
“இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நம்பகத்தன்மை பற்றிய கேள்வியும் உள்ளது. இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அமெரிக்கா அதன் 25 சதவீத கூடுதல் வரியை நீக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று கூறும் அஜய் ஸ்ரீவஸ்தவா, “2024 ஆம் ஆண்டில், சீனா ரஷ்யாவிடமிருந்து 62.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை வாங்கியது, இந்தியா 52.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை வாங்கியது. அப்போதும், சீனா மீது அமெரிக்கா அத்தகைய வரிகளை விதிக்கவில்லை, ஏனெனில் இது எண்ணெய் பற்றிய பிரச்னை மட்டுமல்ல” என்று விளக்குகிறார்.
“பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டதற்கு ஒரு காரணம் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு எதிரான வழக்குகள், மற்றொரு காரணம் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்)” என்றும் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த சில கருத்துகளை நீக்குமாறு அந்த நிறுவனத்திடம் பிரேசில் அரசு வலியுறுத்துகிறது. டிரம்ப் பல நிபந்தனைகளை விதிக்கிறார். அதனால், இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கவில்லை என்றால் இந்தியா மீது அமெரிக்கா வரி விதிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை”என்கிறார்.
இதுதொடர்பாகப் பேசிய என்று மிதாலி நிகோர், “இப்போது ரஷ்ய எண்ணெய் தொடர்பான பிரச்னை உள்ளது. நாளை அமெரிக்கா, பிரிக்ஸ் குறித்து இந்தியா மீது அழுத்தம் கொடுக்கலாம். நாளை மறுநாள் வர்த்தக ஒப்பந்தத்தை ஒரு நிபந்தனையாக மாற்றலாம். இப்படியான சூழ்நிலையில், அமெரிக்கா சொல்வதைக் கேட்டு இந்தியா ஒருதலைப்பட்சமாக ஒப்புக்கொள்ள முடியாது” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க இந்தியா-அமெரிக்கா இலக்கு நிர்ணயித்துள்ளது.’சமநிலையை பேண வேண்டும்’
இந்தியா தொடக்கத்தில் இருந்தே அணிசேரா கொள்கையைப் பின்பற்றி வருகிறது. இந்தியா எந்த ஒரு பெரிய ராணுவ அல்லது அரசியல் கூட்டணியிலும் சேரவில்லை. அது எப்போதும் சுதந்திரமான, பாரபட்சமற்ற நிலைப்பாட்டை பின்பற்றி வருகிறது.
“இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு நாள் சலுகை விலையில் கச்சா எண்ணெயை வாங்க முடியும் என்பது தெரியவில்லை. எண்ணெய் என்பது தற்காலிக விஷயம். பாதுகாப்பு துறையில் ரஷ்யா–இந்தியா உறவு பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. எண்ணெய் வாங்காமல் இருப்பது அந்த நட்பை பாதிக்காது. இந்தியா ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சமநிலையை பேண வேண்டும்”என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
சச்தேவும் அதையே கூறுகிறார். இந்த வரிவிதிப்புப் போர் நீண்ட காலம் நீடிக்காது என்று அவர் நம்புகிறார்.
“இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியம் என்பது மட்டுமின்றி, அமெரிக்காவாலும் இந்தியா இல்லாமல் பல விஷயங்களைச் செய்ய முடியாது. அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சவாலாக சீனா உள்ளது. அதைச் சமாளிக்க இந்தியாவின் ஆதரவு அமெரிக்காவுக்கு அவசியம்”என்று சச்தேவ் கூறுகிறார்.
“இந்தியாவின் சந்தை அமெரிக்கா விரும்பும் பெரிய சந்தையாக உள்ளது. 2030க்குள் இரு நாடுகளும் 500 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கை நிர்ணயித்துள்ளன. அமெரிக்க பெருநிறுவனங்கள், வரிவிதிப்புக்கு எதிராக டிரம்பிற்கு அழுத்தம் கொடுக்கின்றன”என்றும் அவர் விளக்குகிறார்.
மறுபுறம் இதுகுறித்து மிதாலி நிகோர் பேசுகையில், “இது கடினமான காலம். இந்தியா வலுவாக நிலைத்திருக்க வேண்டும். அமெரிக்க குடியரசுக் கட்சியில் பலரும் டிரம்பின் நடவடிக்கைகளை கேள்வி எழுப்புகின்றனர். அமெரிக்காவுக்குள் நடக்கும் விஷயங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கின்றன” என்கிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தியாவுக்கான பாடங்கள்
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 18 சதவீதம் அமெரிக்காவிற்கு செல்கிறது.
“இந்தியா பன்முகத்தன்மை கொண்ட உத்தியோடு செயல்பட வேண்டும். ஒரே நாட்டை நம்பி இருக்க முடியாது. ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பெரிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த வேண்டும்” என்று மிதாலி நிகோர் கூறுகிறார்.
“இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 25,000 கோடி ருபாய் மதிப்புள்ள இறால்களில் சுமார் 40% அமெரிக்காவுக்கு அனுப்புகிறது. இப்போது இந்தியா பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன் பிறகு, இந்தியா தனது இறால்களை பிரிட்டனுக்கும் அனுப்ப முடியும். அங்கும் நல்ல தேவை உள்ளது. இந்த வழியில், இந்தியா பிற சந்தைகளையும் தேடலாம்” என்று இதனை விளக்கும் மிதாலி, “புதிய சந்தைகளைக் கண்டறிய இந்திய வணிகர்கள் வலுவாக இருக்க வேண்டும். சிறு வணிகர்களுக்கு அரசாங்கம் ஆதரவு தர வேண்டும். இதனால் ‘மேக் இன் இந்தியா’ வலுப்படும். வெளிநாடுகளை நம்பும் நிலை குறையும்” என்றும் குறிப்பிடுகிறார்.
ஆனால்,’ஏற்றுமதி சந்தையை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல’ என்று சச்தேவ் கூறுகிறார்.
“இந்தியா ஏற்றுமதிகளை ஓரளவிற்கு பன்முகப்படுத்தலாம். ஆனால் அது சுலபமல்ல. அமெரிக்கா மிகப் பெரிய சந்தை. அத்தகைய சந்தையை உலகில் கண்டுபிடிப்பது கடினம்” என்ற அவர், “இந்தியாவிற்கும் உள்நாட்டில் சீர்திருத்தங்கள் தேவை. ஒரு வருடத்திற்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்வதை கட்டாயமாக்க வேண்டும். இதைச் செய்தால், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2% வரை அதிகரிக்கக் கூடும்” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு