கோடிகளில் கொட்டி நிர்மாணிக்கப்பட்ட பொருளாதர சந்தைகள் பலவும் தற்போது முடங்கியுள்ள நிலையில் அவற்றை இயக்க அனுர அரசு முற்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ் – மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தையும் கிளிநொச்சியில் இயங்காதுள்ள பொருளாதார மத்திய நிலையத்தையும்  வர்த்தக வாணிப, அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டுள்ளார்.

தென்மராட்சி மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம்;  மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் முடங்கியேயுள்ளது.

அதேபோன்று கிளிநொச்சியிலும் கட்டப்பட்டு பலவருடங்களாக முடங்கிய நிலையில் பொருளாதார மத்திய நிலையம் உள்ளது.

இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையங்களை அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

விஜயத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்;, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்; கலந்து கொண்டிருந்தனர் .

விஜயத்தை தொடர்ந்து யாழ். மாவட்ட செயலகத்தில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாகவும், கூட்டுறவு வங்கி தொடர்பாகவும் அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

முன்னைய ஆட்சியாளர்களது முறையற்ற திட்டமிடலால் பொருளாதார மத்திய நிலையங்களை இயக்கமுடியாத சூழல் நிலையே காணப்படுகின்றது.