பூமி சூடாவது நமது மூளையை எப்படி பாதிக்கிறது?

பட மூலாதாரம், Serenity Strull/ Getty Images

எழுதியவர், தெரெஸ் லூதிபதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காலநிலை மாற்றத்தால் வெப்ப அலைகள் மேலும் தீவிரமடைவதால், நமது மூளை செயல்படும் விதத்தை அதீத வெப்பம் எவ்வாறு மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

ஜேக்கிற்கு ஐந்து மாதங்கள் ஆகியிருந்தபோது முதல் டானிக்-குளோனிக் வலிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவரது சிறிய உடல் விறைத்து, பின் விரைவாக துடித்தது.

அவரது தாயார் ஸ்டெஃபனி ஸ்மித்தின் கூற்றுப்படி, “அப்போது உடல் மிகவும் சூடாக இருந்தது, அவனது உடல் அதிக வெப்பமடைந்திருந்தது. வாழ்க்கையில் இதை விட பயங்கரமான ஒரு காட்சியைப் பார்க்கவே முடியாது என அந்தக் கணத்தில் நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக, அதோடு நிற்கவில்லை.”

வெப்பம் நிறைந்த வானிலை நிலவும்போது, வலிப்பு அடிக்கடி ஏற்பட்டது. வெப்பமான, ஈரப்பதமான கோடைகால நாட்கள் வந்தவுடன் பல்வேறு குளிர்விக்கும் நுட்பங்களை குடும்பத்தினர் பயன்படுத்துவார்கள். மேலும் அந்த வலிப்புகளைத் தடுக்க ஒரு கடினமான போராட்டம் தொடங்கும்.

ஜேக்கிற்கு 18 மாதங்கள் ஆனபோது ஒரு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு டிராவெட் சிண்டரோம் இருப்பது கண்டறியப்பட்டது, இது ஒரு வகையான கால்-கை வலிப்பு ஏற்படுவதை உள்ளடக்கிய ஒரு நரம்பியல் நிலை. இது 15,000 குழந்தைகளில் ஒருவரைப் பாதிக்கிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

வலிப்பு பெரும்பாலும் அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிசம் மற்றும் ஏடிஹெச்டி போன்ற நோய்களுடன் சேர்ந்து, பேச்சு, இயக்கம், உணவு மற்றும் தூக்கத்தில் சிரமங்களை ஏற்படுத்தும்.

அதிக வெப்பம் மற்றும் திடீர் வெப்பநிலை மாற்றங்கள் வலிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஜேக்கிற்கு இப்போது 13 வயது, ஆனால் வானிலை மாற்றங்களால் எண்ணற்ற வலிப்புகளை அவர் தாங்கிக்கொண்டதாக அவரது தாயார் கூறுகிறார். ”

வெப்ப அலைகளும், அதிகரித்து வரும் கொளுத்தும் கோடைகால நாட்களும், கடுமையான இந்த நோயுடன் வாழ்வதை இன்னும் மோசமாக்குகின்றன.” என்கிறார் ஸ்மித்.

வெப்பநிலையால் அதிகரிக்கும் நரம்பியல் நோய்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நமது மூளையின் மீதான காலநிலை மாற்றத்தின் விளைவுகள் ஏற்கனவே தெளிவாக வெளிப்படுகின்றனஅதிக வெப்பநிலையால் அதிகரிக்கும் பல நரம்பியல் நோய்களில் டிராவெட் சிண்டரோமும் ஒன்று என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்தவரும், மூளையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த துறையில் முன்னோடியாகவும் இருப்பவருமான சஞ்சய் சிசோடியா கூறுகிறார்.

வலிப்பு நோயில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நரம்பியல் நிபுணரான அவர், வெப்ப அலைகளின் போது நோயாளிகளுக்கு அதிக பிரச்னைகள் ஏற்படுவதாக அவர்களது குடும்பத்தினர் கூறுவதைக் அடிக்கடி கேட்கிறார்.

“காலநிலை மாற்றம் மூளையை பாதிப்பது குறித்து நான் யோசித்துப் பார்த்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, மூளையில் உள்ள பல செயல்முறைகள், மனித உடல் வெப்பத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பதில்தான் ஈடுபட்டுள்ளன.” என்கிறார் சஞ்சய் சிசோடியா.

அறிவியல் நூல்களை ஆராய்ந்தபோது, வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிப்பால் மோசமடையும் பல்வேறு நரம்பியல் நிலைமைகளைக் கண்டறிந்தார். அவற்றில் கால்-கை வலிப்பு, பக்கவாதம், மூளையழற்சி, மல்டிபிள் ஸ்களீரோசிஸ், ஒற்றைத் தலைவலி மற்றும் பலவும் அடங்கும்.

நமது மூளையின் மீதான காலநிலை மாற்றத்தின் விளைவுகள் ஏற்கனவே தெளிவாக வெளிப்படுகின்றன என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

உதாரணமாக, 2003 ஐரோப்பிய வெப்ப அலையின் போது, அதிகப்படியான இறப்புகளில் சுமார் 7% நேரடி நரம்பியல் பிரச்னைகளால் ஏற்பட்டன. 2022 பிரிட்டன் வெப்ப அலையின் போதும் இதே போன்ற புள்ளி விவரங்கள் காணப்பட்டன.

ஆனால், வெப்பம் நமது மூளை செயல்படும் பிற வழிகளையும் மாற்றக்கூடும். நம்மை மேலும் ஆக்ரோஷம் கொண்டவர்களாக, எரிச்சல் மற்றும் மனச்சோர்வு உடையவர்களாக ஆக்குகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நமது மூளை மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இருந்தால் அவை திறன்பட வேலை செய்வதை நிறுத்திவிடும்.மூளையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

புவி வெப்பமடைதலின் விளைவாக ஏற்படும் காலநிலை மாற்றம் நமது மூளையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

மூளை உடலின் மைய வெப்பநிலையை விட 1 டிகிரி செல்ஸியஸ் (1.8°F) அதிகமாக இருப்பது அரிது. ஆனாலும், நமது உடலில் அதிக ஆற்றல் தேவைப்படும் உறுப்புகளில் ஒன்றான மூளை, நாம் சிந்திக்கும்போது, விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்போது மற்றும் எதிர்வினையாற்றும்போது வெப்பத்தை ஓரளவு உற்பத்தி செய்கிறது.

இதன் பொருள், நமது உடல்கள் அதை குளிர்ச்சியாக வைத்திருக்க கடுமையாக உழைக்க வேண்டும். ரத்த நாளங்களின் வலைப்பின்னல் வழியாகச் செல்லும் ரத்தம் அதன் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது, அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றுகிறது.

நமது மூளை செல்கள் வெப்பத்திற்கு மிகவும் உணர்திறன் கொண்டவை என்பதால் இது அவசியம். மேலும் அவற்றுக்கிடையே செய்திகளை அனுப்பும் சில மூலக்கூறுகளின் செயல்பாடும் வெப்பநிலையைச் சார்ந்தது என்று கருதப்படுகிறது, அதாவது நமது மூளை மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இருந்தால் அவை திறன்பட வேலை செய்வதை நிறுத்திவிடும்.

“இந்த சிக்கலான அமைப்பின் வெவ்வேறு கூறுகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை நாங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை,” என்கிறார் சிசோடியா.

“ஆனால், ஒரு கடிகாரத்தைப் போல அதை நாம் கற்பனை செய்யலாம், அதாவது அதன் அனைத்து கூறுகளும் இனி சரியாக வேலை செய்யாது என்ற நிலையில் இருக்கும் கடிகாரம்”

கடுமையான வெப்பம் அனைவரின் மூளையின் செயல்பாட்டையும் மாற்றினாலும் கூட, (உதாரணமாக இது முடிவெடுப்பதை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் மக்கள் ஆபத்தான முடிவுகளை எடுக்க காரணமாகிறது) நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்கள் பெரும்பாலும் மிகவும் தீவிரமாக பாதிக்கப்படுகிறார்கள்.

இது பல காரணங்களுக்காக ஏற்படுகிறது. உதாரணமாக, சில நோய்களில், வியர்வை சுரப்பது பாதிக்கப்படலாம்.

“வெப்பநிலை ஒழுங்குமுறை என்பது மூளையின் ஒரு செயல்பாடு, மேலும் மூளையின் சில பகுதிகள் சரியாக செயல்படவில்லை என்றால் அது பாதிக்கப்படலாம்,” என்கிறார் சிசோடியா.

உதாரணமாக, மல்டிபிள் ஸ்களீரோசிஸின் சில வடிவங்களில், மைய உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுவதாகத் தெரிகிறது. கூடுதலாக, ஸ்கிசோஃப்ரினியா போன்ற நரம்பியல் மற்றும் மனநல நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கும் சில மருந்துகள் வெப்பநிலை ஒழுங்குமுறையைப் பாதிக்கின்றன. இதனால் அவற்றை எடுத்துக்கொள்பவர்கள் வெப்ப பக்கவாதம் அல்லது மருத்துவ ரீதியாக அறியப்படும் ஹைப்பர்தெர்மியாவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வெப்பம் தொடர்பான மரணத்திற்கு ஆளாகும் ஆபத்தும் அவர்களுக்கு அதிகம்.

வெப்ப அலைகள், குறிப்பாக இரவு நேர வெப்பநிலை அதிகரிப்பது, மக்களின் தூக்கத்தைப் பாதிக்கலாம், நமது மனநிலையைப் பாதிக்கலாம் மற்றும் சில நிலைகளின் அறிகுறிகளை மோசமாக்கும்.

“வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு, மோசமான தூக்கம் என்பது வலிப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்” என்று சிசோடியா கூறுகிறார்.

வெப்ப அலைகளின் போது மறதி நோய் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதங்கள் மட்டுமல்லாது இறப்பு விகிதங்களும் அதிகரிப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு காரணம் வயது.

வயதானவர்களால் தங்கள் உடல் வெப்பநிலையை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியாது. இது தவிர, அறிவாற்றல் குறைபாடு காரணமாக கடுமையான வெப்பத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதிலும் சிரமப்படுவார்கள்.

உதாரணமாக, அவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கலாம், அல்லது ஜன்னல்களை மூட மறந்துவிடலாம், அல்லது அவர்கள் தேவையில்லாதபோது கடும் வெப்பத்தில் வெளியே செல்லலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடுமையான வெப்பம் அனைவரின் மூளையின் செயல்பாட்டையும் மாற்றினாலும் கூட நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்கள் மிகவும் தீவிரமாக பாதிக்கப்படுகிறார்கள்.வெப்பநிலையும் பக்கவாத இறப்புகளும்

அதிகரித்து வரும் வெப்பநிலையும் பக்கவாதம் மற்றும் அது தொடர்பான இறப்புகள் அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.

ஒரு ஆய்வு 25 நாடுகளில் இருந்து பக்கவாத இறப்பு தரவுகளைப் பெற்று பகுப்பாய்வு செய்தது. இஸ்கிமிக் பக்கவாதத்தால் ஏற்பட்ட 1,000 இறப்புகளில், வெப்பமான நாட்கள் இரண்டு அதிகப்படியான இறப்புகளுக்குக் காரணமாக அமைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

“இது பெரிய எண்ணிக்கையாகத் தெரியவில்லை,” என்று பிரிட்டனில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் முதியோர் நல மருத்துவரான பெதன் டேவிஸ் கூறுகிறார்.

“ஆனால் உலகளவில் ஆண்டுக்கு ஏழு மில்லியன் பேர் பக்கவாதத்தால் இறப்பதைக் கருத்தில் கொண்டால், அதிக வெப்பம் ஆண்டுக்கு 10,000க்கும் மேற்பட்ட கூடுதல் பக்கவாத இறப்புகளுக்கு பங்களிக்கக்கூடும்.” என்கிறார்.

ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு, பக்கவாதத்தின் அதிக விகிதங்களைக் கொண்ட நடுத்தர மற்றும் குறைந்த வருமான நாடுகள், வெப்பம் தொடர்பான பக்கவாதத்தின் சுமையின் விகிதாசார அளவைச் சுமக்கும்.

“வெப்பநிலை அதிகரிப்பது நாடுகள் மற்றும் சமூகக் குழுக்களுக்கு இடையேயும், அதற்குள்ளும் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும்” என்று டேவிஸ் கூறுகிறார்.

அதிகரித்து வரும் தரவுகள், வயதானவர்கள் மற்றும் குறைந்த சமூக பொருளாதார பின்னணியைச் சேர்ந்தவர்கள் வெப்பம் தொடர்பான இறப்புகளுக்கு அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

உலகின் வெப்பம், குழந்தைகளின் நரம்பு வளர்ச்சியையும் பாதிக்கிறது. “அதிக வெப்பத்திற்கும் குறை பிரசவங்கள் போன்ற மோசமான கர்ப்ப விளைவுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது,” என்று பிரிட்டனில் உள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரியின் உலகளாவிய பெண்கள் சுகாதாரப் பிரிவின் பேராசிரியர் ஜேன் ஹிர்ஸ்ட் கூறுகிறார்.

ஒரு அறிவியல் ஆராய்ச்சியின் சமீபத்திய மதிப்பாய்வில், குறைபிரசவங்கள் 26% அதிகரிப்புக்கு,ம் வெப்ப அலைகளுக்கு,ம் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, இது குழந்தைகளின் நரம்பு வளர்ச்சியில் தாமதம் ஏற்படுவது மற்றும் அறிவாற்றல் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

“இருப்பினும், எங்களுக்குத் தெரியாதவை நிறைய உள்ளன. அதாவது, யார் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் ஏன்? காரணம், ஒவ்வொரு ஆண்டும் 130 மில்லியன் பெண்கள் குழந்தைகளைப் பெறுகிறார்கள் என்பது தெளிவாகிறது, அவர்களில் பலர் வெப்பநிலை அதிகமாக இருக்கும் நாடுகளில் உள்ளனர், மேலும் இது அவர்களுக்கு நடக்கவில்லை.” என்று ஹிர்ஸ்ட் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூளையை பாதுகாக்கும் ஒரு அமைப்பும் வெப்பத்தால் பலவீனமடைந்து, எளிதில் ஊடுருவக்கூடியதாக மாறுகிறது.வெப்பத்தால் பலவீனமடையும் மூளை

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பம் மூளைக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும், இதனால் நரம்புச் சிதைவு நோய்களுக்கு வழிவகுக்கும் சேதங்களுக்கு ஆளாக நேரிடும். மூளையை பாதுகாக்கும் ஒரு அமைப்பும் வெப்பத்தால் பலவீனமடைந்து, எளிதில் ஊடுருவக்கூடியதாக மாறி, கிருமிகள், வைரஸ்கள் மற்றும் நச்சுகள் மனித மூளை திசுக்களில் ஊடுருவுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது.

வெப்பநிலை அதிகரிக்கும் போது இது மிகவும் முக்கியமானதாக மாறக்கூடும், அதேபோல் ஜிகா , சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற நரம்பியல் நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களைப் பரப்பும் கொசுக்களின் பரவலும் அதிகரிக்கும் .

“ஜிகா வைரஸ் கருவைப் பாதித்து மைக்ரோசெபலிக்கு வழிவகுக்கும் ” என்று சுவிஸ் டிராபிகல் மற்றும் பொது சுகாதார நிறுவனத்தின் மருத்துவ பூச்சியியல் நிபுணர் டோபியாஸ் சுட்டர் கூறுகிறார்.

“கொசு இனப்பெருக்க காலம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கி, அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் லேசான குளிர்காலம் காரணமாக தாமதமாக முடிவடைகிறது.”

ஆனால் அதிகரித்து வரும் வெப்பநிலை நமது மூளையை எவ்வாறு பாதிக்கிறது என்பது இன்னும் விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு வருகிறது. வெப்பம் மக்களை மிகவும் வித்தியாசமான வழிகளில் பாதிக்கிறது – சிலர் வெப்பமான காலநிலையில் செழித்து வளர்கிறார்கள், மற்றவர்கள் அதை தாங்க முடியாததாக உணர்கிறார்கள்.

“இந்த வேறுபட்ட உணர்திறனுக்கு வெவ்வேறு காரணிகள் பொருத்தமானதாக இருக்கலாம், அவற்றில் ஒன்று மரபணு உணர்திறனாக இருக்கக்கூடும்” என்று சிசோடியா கூறுகிறார்.

மரபணு மாறுபாடுகள் புரதங்களின் கட்டமைப்புகளை பாதிக்கக்கூடும், இது சிலரை காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாற்றக்கூடும்.

“காலநிலை மாற்றம் அதிகரிக்கும்போது, நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்களில் இன்று நாம் காணும் விஷயங்கள், நரம்பியல் கோளாறுகள் இல்லாதவர்களுக்கும் ஏற்படக்கூடும்.” என சிசோடியா எச்சரிக்கிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இன்னும் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, அதிகபட்ச வெப்பநிலையா, வெப்ப அலையின் நீளமா அல்லது இரவு நேர வெப்பநிலையா, எது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? இது ஒவ்வொரு நபருக்கும் அல்லது நரம்பியல் நிலையைப் பொறுத்து மாறுபடலாம்.

ஆனால் யார் அதிக ஆபத்தில் உள்ளனர், ஏன் ஆபத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதற்கான உத்திகளை உருவாக்குவதற்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

இவற்றில், முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்கான அமைப்புகள் அல்லது தினக்கூலி தொழிலாளர்களுக்கு, கடுமையான வெப்பத்தால் இழந்த ஊதியத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கான காப்பீடு ஆகியவை அடங்கும்.

ஜூலை 2023 உலகின் வெப்பமான மாதமாக பதிவு செய்யப்பட்டபோது, “புவி வெப்பமடைதலின் யுகம் முடிந்துவிட்டது, புவி கொதிக்கும் யுகம் தொடங்கிவிட்டது.” என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்திருந்தார்.

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மிகவும் கடுமையாகி வருகின்றன. ஆனால், வெப்பம் மூளையில் தாக்கம் செலுத்துவதற்கான யுகம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு