படக்குறிப்பு, பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு விவசாய நிலத்தைக் கொடுத்துவிட்டு இழப்பீடு கோரி போராடும் குடும்பங்கள்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“அந்த குடும்பத்தில் 4 பேர் இருந்தனர். அவர்கள் அப்பா காலத்தில் 5 ஏக்கரை பாரதியார் பல்கலைக் கழகத்துக்குக் கொடுத்தனர். ஒரு ஆளுக்கு 1.33 ஏக்கருக்கான இழப்பீடுதான் வரும். அது கிடைக்காமலே 3 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) மட்டும் இருக்கிறார். அவருக்கும் வருமானம் ஏதுமின்றி மருதமலையில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். இப்போது அதற்கும் முடியாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார். அவருடைய காலத்தில் இழப்பீடு கிடைக்குமா என்பது தெரியவில்லை!”

நவாவூர் பிரிவைச் சேர்ந்த மணி, பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல் இது. இவரும் அதே பல்கலைக்கழகத்துக்கு விவசாய நிலத்தைக் கொடுத்துவிட்டு இழப்பீடு கோரி போராடுபவர்களில் ஒருவர்.

“எங்க மாமனார் காலத்தில் 9 ஏக்கர் நிலம் கொடுத்தாங்க. அவர் இறந்து, என்னோட வீட்டுக்காரரும் இறந்து, என் மகனும் கொரோனாவில் இறந்துவிட்டார். சொல்ல முடியாத துயரத்தில் இருக்கோம். ஆனால் இன்னும் எங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. நான் கண் மூடுவதற்குள் இந்த இழப்பீடு கிடைக்குமென்ற நம்பிக்கையும் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கிறது.” கல்வீரம்பாளையத்தைச் சேர்ந்த 68 வயது லட்சுமி, விரக்தியுடன் வெளியிட்ட வார்த்தைகள் இவை.

படக்குறிப்பு, லட்சுமி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு, நிலம் கொடுத்தவர்களில் பெரும்பாலான குடும்பங்களின் நிலை இதுதான். கூடுதல் இழப்பீடு கோரிய தங்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு, மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளின்படி இழப்பீடு வழங்காமல், மேல் முறையீடுக்கு உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியிருப்பதே இந்த நிலைக்குக் காரணமென்று நில உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இழப்பீடு கோரி நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதல்வரிடம் கலந்து பேசிய பின், கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கமிட்டி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர் எ.வ.வேலு, பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகம்!

கோவை, மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகம், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்புடையது.

இதிலிருந்தே அண்ணா பல்கலைக்கழகத்தின் கோவை வளாகத்துக்கு கடந்த 2010 ஆம் ஆண்டில் 130 ஏக்கர் வழங்கப்பட்டது. சட்டக்கல்லுாரி மற்றும் உயிரி தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றுக்கும் இடம் தரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ‘டெக்சிட்டி’ அமைக்கவும் இங்கு 321 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாஸ்டர் பிளான் தயாரிக்கத் தேவையான நிறுவனத்தைத் தேர்வு செய்ய இ டெண்டரும் விடப்பட்டது.

ஆனால் இந்த பல்கலைக்கழகத்திற்கு தங்களின் விவசாய நிலங்களைக் கொடுத்த விவசாயிகளின் குடும்பங்கள் 45 ஆண்டுகளாகியும் இன்று வரை போதிய இழப்பீடு கிடைக்கவில்லை என கூறுகின்றனர்.

படக்குறிப்பு, கோவை, மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகம், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்புடையது.கடந்த 1978 ஆம் ஆண்டில், தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது, கோவையை தலைமையிடமாகக் கொண்டு பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக மருதமலை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டாய நிலமெடுப்புச் சட்டத்தின்படி, 925.84 ஏக்கர் பட்டா நிலங்களை எடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. அரசு புறம்போக்கு நிலம் மற்றும் 925 ஏக்கர் பட்டா நிலம் உட்பட இந்த பல்கலைக்கழகத்துக்காக கையகப்படுத்தப்பட்ட 1072 ஏக்கர் நிலத்துக்கு, அப்போது அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, ரூ.86 லட்சம். நீதிமன்றத்தில் அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் 799.67 ஏக்கர் நிலம் விவசாய நிலமாக இருந்துள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1978 ஆம் ஆண்டிலிருந்து 1984 ஆம் ஆண்டு வரையிலும் ஒரு ஏக்கர் துவங்கி, 5 ஏக்கர் வரையிலும் ஒவ்வொருவரிடமிருந்தும் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய நிலையில் 925 ஏக்கர் நிலத்துக்கு 300 குடும்பங்கள் உரிமையாளர்களாக இருந்ததாகவும், இப்போது அந்த எண்ணிக்கை, 2 தலைமுறை வாரிசுகளின் அடிப்படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களாகி விட்டதாகச் சொல்கிறார், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் இழந்தோர் கூட்டமைப்பின் தலைவர் கணேசன்.

படக்குறிப்பு, விவசாயிகளுக்கு 160 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.”அப்போது ஒரு ஏக்கருக்கு ரூ.3392 என்று குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. வட்டியுடன் அது ரூ.5100 ஆக உயர்ந்தது. அடுத்த கட்டமாக நிலமெடுத்தபோது அது ரூ.8 ஆயிரமாகவும், இறுதியாக எடுத்தபோது ரூ.10 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போதே அது மிகக்குறைவான தொகை என்பதால் ஆட்சேபணையின் பேரில் பணம் பெற்றுக்கொள்கிறேன் என்று எழுதிக்கொடுத்தே அனைவரும் பணத்தைப் பெற்றுக்கொண்டனர்.” என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் கணேசன்.

ஆட்சேபத்தின்பேரில் பெற்றுக்கொண்டதால், விவசாயிகள் பலரும் சேர்ந்து கோவை நீதிமன்றத்தில் 19 வழக்குகள் தொடுத்தனர். கடந்த 2007 ஆம் ஆண்டில் தீர்ப்பு வந்தது. மொத்தம் 799 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 160 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தொகை, வட்டியுடன் சேர்த்து 2012 அக்டோபர் 31 தேதியின்படி, ரூ.202.24 கோடி என்று கோவை மாவட்ட ஆட்சியர் எழுதிய நினைவூட்டல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

வட்டி கொடுத்த ஜெயலலிதா; வாக்குறுதி கொடுத்த ஸ்டாலின்!

ஆனால் இந்த தீர்ப்பின்படி, இழப்பீடை வழங்காமல், 2011 ஜனவரியில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. கடந்த 2011 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின், இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, 9 மற்றும் 15 சதவீதத்திற்குப் பதிலாக 7 சதவீதம் மட்டுமே வட்டி கணக்கிடப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு 40 கோடியே 20 லட்சத்து 47 ஆயிரத்து 754 ரூபாய் 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசால் விடுவிக்கப்பட்டது.

இதைப்பற்றி விளக்கிய கல்வீரம்பாளையம் மணி, ”அந்தத் தொகையை இப்போதுள்ள பல நுாறு குடும்பங்கள் பிரித்தபோது யாருக்குமே பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. இன்றைய நிலையில் பல குடும்பங்கள் இன்னும் கூலி வேலைக்குச் செல்லும் நிலையில்தான் உள்ளன. ஆனால் நாங்கள் கொடுத்த நிலத்தின் மதிப்பு, பல ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது. ஒரு ஏக்கர் நிலம் இப்போது ரூ.2 கோடிக்கும் அதிகம்.” என்றார்.

படக்குறிப்பு, பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் இழந்தோர் கூட்டமைப்பின் தலைவர் கணேசன்.தமிழக அரசு மேல் முறையீடு செய்த வழக்கிலும், 2022 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. அதிலும் கோவை நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இவ்விரு நீதிமன்றங்களின் தீர்ப்பின்படி இழப்பீடு வழங்கப்பட்டாலும் அந்தத் தொகை ரூ.300 கோடியளவிலேயே இருக்குமென்று கணக்கிடும் கூட்டமைப்பின் தலைவர் கணேசன், ஒரு ஏக்கருக்கு ரூ.27 லட்சத்திலிருந்து ரூ.32 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும் என்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கோவை கொடிசியாவில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது கணேசனிடம் மைக் கொடுத்து, இந்த கோரிக்கையை விளக்கச் சொன்ன ஸ்டாலின், ”அடுத்து நமது ஆட்சிதான் வரும். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.” என்றார்.

இந்த காணொளி அப்போது நிலம் இழந்தோர் அனைவரிடமும் வேகமாகப் பரப்பப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபின், 100 நாட்களில் தீர்வு காணப்படவில்லை. மாறாக கடந்த 2022 ஆம் ஆண்டில் கீழமை நீதிமன்ற உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்த பின்னும், தற்போது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய தொண்டாமுத்துார் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மணி, ”கோவை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் இரண்டிலும் திமுக ஆட்சியின்போதுதான் தீர்ப்பு வந்தது. இரு முறையும் இழப்பீடு வழங்காமல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் இதற்கு தீர்வு காணப்படுமென்று ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டி 800 கடிதங்களை அனுப்பினோம். எதற்குமே பதில் இல்லை. பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அவரையும் சந்தித்து இதைப்பற்றி விளக்கினோம். அவருடைய சந்திப்புக்குப் பின் வேதனையுடன் வெளியே வந்தோம்!” என்றார்.

கடந்த ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கோவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும், பரப்புரைக்கு வந்த திமுக எம்.பி கனிமொழியும் இதே வாக்குறுதியைக் கொடுத்ததை நில உரிமையாளர்கள் பலரும் சுட்டிக்காட்டினர். விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இவர்கள் மீண்டும் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

நிலத்தைக் கொடுத்த பலருடைய குடும்பங்களை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது. கடந்த 45 ஆண்டுகளில் இக்குடும்பங்களில் நிறைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த போது, விவசாயம் செய்து வந்த இவர்களுடைய குடும்பங்கள் அந்த விவசாய நிலம் பறிபோனதும் அதை நம்பி வளர்த்த கால்நடைகளையும் வளர்க்க முடியாமல் கூலி வேலைக்கு சென்றதாக குறிப்பிடுகின்றனர். தற்போது மூன்றாவது தலைமுறையினர் இழப்பீடுக்காக அரசிடம் போராடிக்கொண்டிருப்பதையும் அறிய முடிந்தது.

‘இழப்பீடுக்கும் இன்றைய நில மதிப்புக்கும் பெரும் வித்தியாசம்’!

பிபிசி தமிழிடம் பேசிய பொம்மணம்பாளையத்தைச் சேர்ந்த மாலதி (வயது 65) , ”எங்கள் குடும்பத்தில் இந்த 45 ஆண்டுகளில் 9 பேர் மறைந்துவிட்டனர். மாமனார் காலத்தில் நிலம் கொடுத்தோம். அவர் இறந்து, அவரின் 4 மகன்களும் இறந்துவிட்டனர். இப்போதும் ஏதாவது வேலைக்குப் போய்தான் பிழைப்பை நடத்துகிறோம்.” என்றார்.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுப்பதற்கு முன்பு, அந்தப் பகுதியில் தங்கள் குடும்பத்திற்கு இருந்த நிலத்தில் மஞ்சச்சோளம், கொள்ளு, கேழ்வரகு, அவரை, சிறுதானியங்கள், நிலக்கடலை, துவரைச் செடி போன்றவை பயிரிடப்பட்டதாகச் சொல்கிறார் ரதி (வயது 60).

”நிலத்தை எடுப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான், இங்கே கோசாப்பழம் எனப்படும் தர்பூசணி விவசாயம் துவங்கியது. அதில் நல்ல வருவாய் கிடைத்தது. அப்போதெல்லாம் யானைத்தொல்லை என்பது அறவே கிடையாது. ஆனால் காட்டுப்பன்றிகள், மான்கள், பாம்புகள் அதிகமிருந்தன. அதனால் இரவில் சாலை அமைத்து அதன் மீது எங்கள் வீட்டு ஆண்கள் இரவில் காவல் காப்பார்கள்.” என்கிறார் ரதி.

படக்குறிப்பு, மாலதி மருதமலை தவிர்த்து சோமையம்பாளையம் கிராம ஊராட்சியிலுள்ள மலைப்பகுதிகள் அனைத்தும் அப்போதே பட்டா நிலங்களாகவே இருந்ததாகவும், அங்கே கல் எடுக்கும் பணி நடந்ததாகவும் கூறுகிறார் நவாவூர் பிரிவு மணி. இங்கிருந்தே உரல்கள், அம்மிக்கல் போன்றவற்றுக்கும் கல் எடுக்கப்பட்டதாகவும், பேரூர் கோவில் கட்டவும் இதே பகுதியிலிருந்தே கல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறார்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும், வடவள்ளி பகுதி வளர்ச்சியடைந்த நகரப்பகுதியாகவும் மாறிவிட்ட நிலையில், பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் நிலத்தின் மதிப்பு பெருமளவு உயர்ந்து விட்டதைச் சுட்டிக்காட்டும் கல்வீரம்பாளையம் முத்துசாமி, தங்களுக்கு கிடைக்கப்போகும் இழப்பீடு, தற்போதைய நிலமதிப்பில் பத்தில் ஒரு பங்கே என்கிறார்.

“வழிகாட்டி மதிப்பு, சந்தை மதிப்பு என எப்படிக் கணக்கிட்டாலும், எங்களுக்கு நீதிமன்றம் வழங்க உத்தரவிட்ட தொகைக்கும், இப்போதுள்ள அந்த நிலத்தின் மதிப்புக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. ஆனால் அதையும் தரமறுத்து இழுத்தடிப்பதைத்தான் எங்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. எங்களுடைய சொந்த நிலம் இருந்த பாரதியார் பல்கலைக்கழகத்திற்கும், அங்கு பணியாற்றும் அலுவலர்கள் குடியிருப்புகளுக்கும் நாங்கள் வேலைக்குப் போகிறோம்.” என்றார் முத்துசாமி.

படக்குறிப்பு, முத்துசாமிபோராட்டத்திற்கிடையே போனில் அழைத்துப் பேசிய அமைச்சர்

தேர்தலுக்கு முன்பாக தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த இவர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த விவசாயக் குடும்பங்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக விவசாயிகள் சங்கம் களம் இறங்கியுள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, இழப்பீடு வழங்க வலியுறுத்தி, இந்த அமைப்பின் சார்பில், கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இதில் பங்கேற்றதால் பெரிதும் கவனம் ஈர்த்தது.

நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உட்பட நுாற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, சாலையில் அமர்ந்து உணவருந்தி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதில் பேசிய பெ.சண்முகம், “இந்த போராட்டம் தொடர்பாக என்னிடம் தொடர்பு கொண்டு பேசிய தமிழக அமைச்சர் எ.வ.வேலு, பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறியிருப்பதால் போராட்டத்தை ஒத்தி வைக்கலாம்.” என்றார்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ”இரண்டு மாதங்களுக்குள் இழப்பீடை டெபாஸிட் செய்ய வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 3 ஆண்டுகளாகிவிட்டது. இது நிதித்துறை, வருவாய்த்துறை, உயர்கல்வித்துறை என பல துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள், கோவை மாவட்ட ஆட்சியர் என பல தரப்பினரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். தொகையும் ரூ.400 கோடி எனும் அளவில் பெரிதாகவுள்ளதால் இதற்கு உயர்மட்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அரசிடம் வலியுறுத்தினோம். அது ஏற்கப்பட்டுள்ளது.” என்றார்.

படக்குறிப்பு, விவசாயக் குடும்பங்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக விவசாயிகள் சங்கம் களம் இறங்கியது”போராட்டம் பற்றி அறிந்ததும் என்னிடம் பேசிய தமிழக அமைச்சர் எ.வ.வேலு, இன்னும் ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தைக்கு தேதி சொல்வதாக உறுதியளித்துள்ளார். இது 40 ஆண்டு கால பிரச்னை. இனிமேல் இழப்பீட்டுத் தொகை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும். அதை எப்படி வழங்குவது என்பதைத்தான் இனி பேச வேண்டும். நிலம் கொடுத்த 400 விவசாயக் குடும்பங்களின் வாழ்வாரத்தைக் காப்பாற்ற இது மட்டுமே வழி” என்றார் பெ.சண்முகம்.

ஆனால் அமைச்சர் அளவில் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தும் தங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்டோர்.

கல்வித்துறை அமைச்சராக அன்பழகன் இருந்தபோது, இதுதொடர்பாக அவரிடம் பேசியபோது, உயர்நீதிமன்ற உத்தரவு வந்தால் அதை நிச்சயம் செயல்படுத்துவோம் என்று கூறியதாகவும், ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபின் அதை செயல்படுத்தாமல் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்ததே இதற்கு தீர்வு கிடைக்காததற்குக் காரணம் என்கிறார் கணேசன்.

தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் இதுபற்றி பிபிசி தமிழ் பேசியது. அதற்கு பதிலளித்த அவர், ”மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக கூட்டணியில் உள்ளது. அதன் மாநிலச் செயலாளர் பங்கேற்று போராட்டம் நடத்தியதால் அதன் முக்கியத்துவம் கருதி, அவரிடம் பேசினோம். இதைப்பற்றி, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லவிருக்கிறோம்.” என்றார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கோவையில் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி பற்றியும், அதற்குப்பின் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு சென்றதே இப்போதைய போராட்டத்துக்குக் காரணமென்றும் அவரிடம் கூறியபோது, ”நிதி விவகாரம் என்பதுடன், பெரும்தொகை என்பதால் அதிகாரிகள் முடிவெடுத்து மேல் முறையீடு செய்திருக்கலாம். இதில் இப்போது என்ன செய்வது என்பது பற்றி முதல்வரிடம் பேசப்படும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதற்கு ஒரு கமிட்டி அமைப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.” என்றார் அமைச்சர் எ.வ.வேலு.

மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்புள்ளதா?

ஆட்சேபத்தின்பேரில் பணத்தைப் பெற்றுக்கொண்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு, அதன்பின் கூடுதல் இழப்பீடு கோரி, மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கமளித்த மூத்த வழக்கறிஞர் நிக்கோலசு, ”அதற்கு சட்டத்தில் அனுமதியுள்ளது. இது நிலம் மற்றும் விபத்துக்கான இழப்பீடு எதுவானாலும் பொருந்தும். உதாரணமாக, விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் 10 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி, வழக்கு தாக்கல் செய்கிறார். அவருக்கு ரூ.3 லட்சம் மட்டும் வழங்கி, கீழமை நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அவர் அந்தத் தொகையை ‘ஆட்சேபத்தின் பேரில் வாங்கிக்கொள்வதாக’ எழுதிக் கொடுத்துவிட்டு, அதை வாங்கிக் கொண்டு, மேல்முறையீடு செய்யலாம்.” என்றார்.

அரசின் திட்டங்களுக்கு நிலத்தைக் கொடுப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்ற அவர், ”சில வழக்குகளில், கொடுப்பதைப் பெற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டு தொகையை வாங்கிக்கொண்டால் அவர் மேல் முறையீடு செய்ய முடியாது. சட்டப்பூர்வமாக இது முரண்தடை (estoppel) என்று கருதப்படுவதால், இவ்வாறு ஒப்புக்கொண்டவர்களின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்படாது. ஆனால் ‘ஆட்சேபத்தின்பேரில் பெற்றுக் கொள்வதாக எழுதிக்கொடுத்தால்’ அவர்கள் மேல் முறையீடு செய்ய முழு உரிமையுண்டு” என்றார்.

படக்குறிப்பு, உச்சநீதிமன்றத்தில் இதுவரை மேல் முறையீடு செய்யப்பட்டதாக தெரியவில்லை என்கிறார் கூட்டமைப்பின் தலைவர் கணேசன்பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்து, மேல் முறையீடு செய்தவர்களுக்கு, கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கீழமை நீதிமன்ற உத்தரவை, கடந்த 2022 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளாகவே முடிவு செய்து, மேல் முறையீடு செய்திருக்கலாம் என்றே அமைச்சர் வேலுவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் இதுவரை மேல் முறையீடு செய்யப்பட்டதாகவே தெரியவில்லை என்கிறார் கூட்டமைப்பின் தலைவர் கணேசன்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் தாங்கள் கேட்டதற்கு, மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் வழக்கு எண் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்ததாகவும் கணேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அரசு நினைத்தால் இப்போதும் இந்த மேல் முறையீட்டு மனுவை விலக்கிக்கொண்டு இழப்பீடு தரலாம் என்பதே நிலம் அளித்தோரின் கருத்தாகவுள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு