ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக என்ன செய்தார்? சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டம் முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள் 35 நிமிடங்களுக்கு முன்னர்

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் (ஆக. 12) 12-வது நாளை எட்டியுள்ளது. தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பது அவர்களின் கோரிக்கை.

பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஏன்?

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 மண்டலங்களில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக போராடி வருகின்றனர். இரு மண்டலங்களை சேர்ந்த சுமார் 2,000 தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ரூ.6,000 என இருந்த தங்களின் சம்பளம், கடந்த 10-15 ஆண்டுகளில் படிப்படியாக ரூ. 23,000 என உயர்ந்துள்ளதாகவும் தனியார்வசம் சென்றால் தங்கள் சம்பளம் ரூ. 16 ஆயிரமாக குறைக்கப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

“ஆகஸ்ட் 1-ஆம் தேதி வழக்கம்போல பணிக்கு சென்றபோது, ‘ஒப்பந்த வேலையில் இருப்பதாக இருந்தால் மட்டுமே வேலை, இல்லையென்றால் வேலை இல்லை’ என தங்களிடம் கூறப்பட்டதாக” தூய்மை பணியாளர்கள் கூறுகின்றனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இரு மண்டலங்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது, தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 31(1) படி (Industrial disputes act) தண்டனைக்குரிய குற்றம் என்று உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பணிமறுப்பு, அவுட்சோர்ஸிங் (பணிகளை கையாளும் பொறுப்பை வெளி நிறுவனத்துக்கு அளிப்பது) செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்றார்.

படக்குறிப்பு, இப்போராட்டம் 11 நாட்களை கடந்துள்ளது தூய்மை பணியாளர்களின் 3 கோரிக்கைகள் என்ன?

தூய்மை பணியாளர்கள் பிரதானமாக 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது.போராட்டக்காரர்கள் குறிப்பாக, “தாங்கள் தற்போது பெறும் சம்பளத்தையே கொடுத்தாலும், தனியார் நிறுவனத்திடம் தங்கள் பணிகளை ஒப்படைக்கக் கூடாது ” என்பதையே பிரதானமாக வலியுறுத்துகின்றனர்.

சம்பளம் குறைக்கப்படுமா?

சம்பளம் தொடர்பான சர்ச்சைக்குப் பதில் அளித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய சுமார் 2 ஆயிரம் பேரை நிபந்தனையின்றி நாளொன்றுக்கு 750 ரூபாய் சம்பளத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு ஒப்பந்த நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

“தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு” எனக் கூறியுள்ள குமரகுருபரன், “பி.எஃப், இ.எஸ்.ஐ, விபத்துக் காப்பீடு என பல சலுகைகள் உள்ளன. இதற்கான சம்பளம் பிடித்தம் காரணமாக குறைவான ஊதியமாக தெரிகிறது. எப்போது வந்தாலும் தனியார் நிறுவனத்தில் அவர்கள் சேர்ந்து கொள்ளலாம்” எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், PriyarajanDMK/X

படக்குறிப்பு, “கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களின் தூய்மை பணி தனியார்மயமானது” – மேயர் பிரியா தமிழக அரசு கூறுவது என்ன?

போராட்டக்காரர்களை சந்தித்த பின்னர் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அளித்த பேட்டியில், “கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களின் தூய்மை பணி தனியார்மயமானது. அப்போது ஏன் இந்த அநீதியை தடுக்கவில்லை? ஏன் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை? இப்போது மீதமுள்ள 5 மண்டலங்களில் இரண்டு மண்டலங்கள் (5 மற்றும் 6) தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள 3 மண்டலங்களும் தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்றார்.

தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூறிய அவர், ஏற்கெனவே உள்ள தூய்மை பணியாளர்களையே அந்தந்த மண்டலங்களில் பணியமர்த்துவதாக, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். பணியாளர்களுக்கு பி.எஃப், இ.எஸ்.ஐ உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தூய்மை பணியாளர்களின் ஊதியம் 23,000 ரூபாய் என்பதிலிருந்து 16,000 ரூபாயாக இதனால் குறைந்துவிடும் என போராட்டக்காரர்கள் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ரூ.17-18 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.” என தெரிவித்தார்.

தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கேட்டபோது, “பணியாளர்கள் முதலில் வேலையில் சேரட்டும், பின்னர் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என மேயர் பிரியா கூறினார்.

பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபுவிடம் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தேர்தல் அறிக்கையை கொடுங்கள், அப்படி வாக்குறுதி கொடுக்கவில்லை. போராட்டக்காரர்கள் தங்கள் தேவைகளை சொல்லியிருக்கின்றனர், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் கூறியிருக்கிறோம்.” என பதிலளித்தார்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஸ்டாலின் என்ன சொன்னார்?

பட மூலாதாரம், MK Stalin/Facebook

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இருந்த ஸ்டாலின், தற்போது அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், எண். 153ல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“அறநிலையத்துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புப் பணியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.”

அதேபோன்று, வாக்குறுதி எண். 285ல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஊராட்சிகள், அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகள், ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.”

அ.தி.மு.க ஆட்சியில் 10 மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் விடப்பட்ட போது, ‘இதனால் தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்’ என, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். “தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு தூய்மை பணியாளர்களுக்கு நல்ல காலம் ஏற்படும்” எனவும் அவர் பேசினார்.

2021-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி அப்போதைய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக NULM (தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்) திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென்று 12.01.2021 அன்று பணி நீக்கம் செய்திருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. இவர்களில் 90 சதவீதம் பேர் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற வழக்கு சென்னை உயர் நீதிமன்றதில் நிலுவையில் இருக்கும்போது பணி நீக்கம் செய்திருப்பது நல்ல நிர்வாகத்திற்கு நடைமுறை அல்ல. இவர்களின் வாழ்வாதாரம் மற்றும திறம்பட ஆற்றிய பணி கருதி 12 ஆயிரம் பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்” என அதிமுக ஆட்சியின் போது சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

போராட்டக்காரர்களை ஸ்டாலின் சந்தித்தாரா?

போராடிவரும் தூய்மை பணியாளர்களை முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை சந்திக்கவில்லை. தமிழ்நாடு அரசு சார்பாக, போராட்டக்காரர்களுடனான பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, மாநகராட்சி அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இதுவரை 7 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் கோரிக்கைகளுக்கான தீர்வுகள் எட்டப்படவில்லை என, போராட்டக்குழுவினர் கூறுகின்றனர்.

எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் கூறுவது என்ன?

அதிமுக ஆட்சியின்போது போராடிய போது தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறிய ஸ்டாலின், தற்போது இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக சார்பில் அதன் பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் நேரில் சென்று தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டக் குழுவிலிருந்து சிலர் நேற்று (ஆக. 11) தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயை பனையூரில் உள்ள அவருடைய அலுவலகத்துக்கு சென்று சந்தித்தனர்.

திமுக கூட்டணிக் கட்சிகளை பொறுத்தவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் நேரில் சென்று போராட்டக்காரர்களை சந்தித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு