Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஐசிஐசிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் விதி மாற்றம்: இனி ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருக்க முடியாதா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது மற்றும் பணம் செலுத்துவது தொடர்பான விதிகளிலும் மாற்றங்களைச் செய்துள்ளதுஎழுதியவர், தினேஷ் உப்ரேதிபதவி, பிபிசி செய்தியாளர்2 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ அதன் முடிவு ஒன்றினால் அண்மைக் காலத்தில் பேசுபொருளாகியுள்ளது. மாதாந்திர சராசரி குறைந்தபட்ச இருப்பு (Minimum Average monthly Balance – MAB) தொடர்பான விதியை ஐசிஐசிஐ மாற்றியிருக்கிறது.
இப்போது புதிதாக வங்கி கணக்கு தொடங்குவோர் தங்கள் கணக்கில் முன்பை விட அதிக பணத்தை வைத்திருக்கவேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த விதி 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அந்த வங்கி சொல்கிறது.
அரசு விதிகளின்படி சம்பள கணக்குகள், ஜன்தன் கணக்குகள் மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு விதியிலிருந்து தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும்.
ஐசிஐசிஐயின் இணையதளத்தின்படி, மாநகரங்கள் மற்றும் நகர்புற பகுதியிகளில் குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பு ரூ.10,000-ல் இருந்து, ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
புறநகர் பகுதிகளில் குறைந்தபட்ச இருப்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, முன்பு இந்த அளவு ரூ.5,000 ஆக இருந்தது.
கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் ரூ.10,000 இருப்பு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது முன்பு ரூ.2,500 ஆக இருந்தது.
இந்த விதிகள் 2025 ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகு கணக்கு தொடங்குவோருக்கு மட்டுமே பொருந்தும் என வங்கி தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச இருப்பை விட குறைவாக பணம் இருந்தால் வங்கி அபராதம் விதிக்கமுடியும். இந்த அபராதம் 6 சதவீதம் அல்லது ரூ.500 இதில் எது குறைவோ அதுவாக இருக்கும்.
பரிவர்த்தனைகள் தொடர்பான மாற்றங்கள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
பண பரிவர்த்தனைகள் தொடர்பான கட்டணங்கள் மற்றும் விதிகளையும் கடினமாக்கியுள்ளது.
இப்போது வாடிக்கையாளர்கள் மாதம் மூன்றுமுறை மட்டுமே பணத்தை இலவசமாக வரவு வைக்க (டெபாசிட்) முடியும், அதன் பின்னர் ஒவ்வொரு வரவு பரிவர்த்தனைக்கும் ரூ.150 கட்டணம் விதிக்கப்படும்.
ஒரு மாதத்தில் டெபாசிட் செய்யப்படும் தொகை ரூ.1 லட்சத்தை தாண்டினால் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ.3.50 அல்லது ரூ.150 (இதில் எது அதிகமோ அது) கட்டணமாக செலுத்தப்படவேண்டும்.
அதே நேரம், மூன்றாம் நபர் மூலமான வரவு வைத்தலுக்கான வரம்பு அதிகபட்சம் ரூ.25,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பணம் எடுப்பதற்கான புதிய விதிகள் என்ன?
பணம் எடுப்பதற்கான விதிகளையும் ஐசிஐசிஐ வங்கி மாற்றியுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் மூன்றுமுறைதான் இலவசமாக பணத்தை எடுக்கமுடியும். அதன் பின்னர் ஒவ்வொருமுறை பணம் எடுப்பதற்கும் ரூ.150 கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
ஒரு மாதத்தில் மொத்தமாக எடுக்கப்படும் பணம் ரூ.1 லட்சத்தை தாண்டினால் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ.3.50 அல்லது ரூ.150 (எது அதிகமோ) அதை கட்டணமாக செலுத்தவேண்டும்.
மூன்றாம் நபர் மூலமாக எடுக்கப்படும் பணத்திற்கான உச்சவரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25,000.
குறைந்தபட்ச இருப்பு விதியின் மூலம் கோடிக்கணக்கில் வருவாய்
உண்மையில், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற விதி குறித்து நீண்ட காலமாக விவாதம் நடந்து வருகிறது.
அரசு வங்கிகள் முதல் தனியார் வங்கிகள் வரை, கடந்த சில ஆண்டுகளில் இந்த விதியின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன.
2025 ஜூலை 29 அன்று மாநிலங்களவையில், மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மல்லிகார்ஜுன் கார்கேவின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய ரிசர்வ் வங்கி 2002, 2014 நவம்பர் 20 மற்றும் 2015 ஜூலை 1 ஆகிய தேதிகளில் வெளியிட்ட சுற்றறிக்கைகளில், கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லாதபோது அபராதம் வசூலிப்பது தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டதாகத் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்கு அபராதம் விதிப்பதன் மூலம் நாட்டின் 12 அரசு வங்கிகள் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக பங்கஜ் செளத்ரி தெரிவித்தார்.
இதில் இந்தியன் வங்கி 1,828 கோடியே 18 லட்சம் ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி 1,662 கோடி ரூபாய் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா 1,531 கோடி ரூபாய் இந்த வகையில் வசூலித்துள்ளன.
குறைந்தபட்ச சராசரி இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும் என்ற விதியை 2020 மார்ச் முதல் நிறுத்திவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி கூறியது.
கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி ஆகியவை 2025 ஜூலைக்கு பிறகு குறைந்தபட்ச இருப்பு தொகை விதியை நீக்கின.
மாதாந்திர சராசரி இருப்பு(எம்ஏபி) என்றால் என்ன?
எம்ஏபி(MAB)-இன் முழு வடிவம் மாதாந்திர சராசரி இருப்பு (Monthly Average Balance) ஆகும். கணக்கு வைத்திருப்பவர், மாதாந்திர சராசரி இருப்பாக வங்கி நிர்ணயித்த குறைந்தபட்ச தொகையை தங்கள் சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பது அவசியம்.
உதாரணமாக, ஐசிஐசிஐ வங்கியின் விஷயத்தில், நகர்ப்புற பகுதிகளுக்கு இது இப்போது ரூ.50,000 ஆக உள்ளது. ஒரு வாடிக்கையாளர் இந்த குறைந்தபட்ச தொகையை கணக்கில் வைத்திருக்கத் தவறினால், அவர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு நாளும் கணக்கில் ரூ,50,000 வைத்திருப்பது அவசியமா?
இல்லை. ஒவ்வொரு நாளும் கணக்கில் ரூ.50,000 வைத்திருப்பது கட்டாயமல்ல. ஒரு காலண்டர் மாதத்தில் முடிவு இருப்பின் சராசரி தொகையே மாதாந்திர சராசரி இருப்பாக கருதப்படும்.
எம்ஏபி எப்படி கணக்கிடப்படுகிறது
ஒரு வாடிக்கையாளராக, வங்கி சேமிப்பு கணக்கில் ஒரு குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பது அவசியம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தொகை வெவ்வேறு வங்கிகளால் வெவ்வேறு விதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இந்த சராசரி தொகையை எவ்வாறு கணக்கிடுகின்றன?
மாதாந்திர சராசரி இருப்பு, உங்கள் கணக்கில் ஒரு மாதத்தில் ஒவ்வொரு நாளும் வைத்திருந்த மொத்த தொகையை, அந்த மாதத்தில் உள்ள நாட்களால் வகுத்து கணக்கிடப்படுகிறது.உதாரணமாக, ஜூலை மாதத்தை எடுத்துக்கொள்வோம். ஜூலையில் 31 நாட்கள் உள்ளன. மாதாந்திர சராசரி இருப்பு ரூ.50,000 ஆக இருந்தால், 31 நாட்களும் உங்கள் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.50,000 வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
உங்கள் கணக்கில் ரூ.50,000-ஐ விட குறைவான இருப்பு இருக்கும் நாட்கள் இருக்கலாம், ஆனால் அபராதம் விதிக்கப்படாமல் இருக்க மாதத்தின் சராசரி மொத்தமாக ரூ 50,000 அல்லது அதற்கு மேல் இருக்க மற்ற நாட்களில் இருப்பு அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2025 ஜூலையில் வெவ்வேறு தேதிகளில் வெவ்வேறு தொகைகள் இருந்தால், சராசரி இவ்வாறு கணக்கிடப்படும்:
01.07.2025 முதல் 05.07.2025 வரை ஒவ்வொரு நாளும் ரூ.60,000 இருப்பு இருந்தால், இது ஐந்து நாட்களுக்கு (60,000 x 5) ரூ.3,00,000 ஆக கணக்கிடப்படும்.06.07.2025 முதல் 14.07.2025 வரை ஒவ்வொரு நாளும் ரூ. 40,000 இருப்பு இருந்தால், இது ஒன்பது நாட்களுக்கு (40,000 x 9) ரூ.3,60,000 ஆக கணக்கிடப்படும்.15.07.2025 முதல் 24.07.2025 வரை ஒவ்வொரு நாளும் ரூ.55,000 இருந்தால், இது பத்து நாட்களுக்கு (55,000 x 10) ரூ.5,50,000 ஆக கணக்கிடப்படும்.25.07.2025 முதல் 31.07.2025 வரை ஒவ்வொரு நாளும் ரூ.50,000 இருந்தால், இது ஏழு நாட்களுக்கு (50,000 x 7) ரூ.3,50,000 ஆக கணக்கிடப்படும்.அதாவது மொத்தம் 31 நாட்களுக்கு ரூ.15,60,000 ஆக கணக்கிடப்பட்டு, இதன் சராசரி ரூ.15,60,000 / 31 நாட்கள் = ரூ.50,322 ஆக இருக்கும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஜீரோ பேலன்ஸ் வசதி முடிந்துவிட்டதா?
இல்லை, அப்படி இல்லை.
உங்களால் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க முடியாதென்றால், நீங்கள் அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்கை திறக்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளும் இந்த சேவையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது பொதுவாக ஜீரோ இருப்பு கணக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
அதாவது, இதில் எந்தவித குறைந்தபட்ச தொகையோ அல்லது மாதாந்திர குறைந்தபட்ச சராசரி இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியமோ இல்லை, மேலும் வழக்கமான சேமிப்புக் கணக்கிற்கு கிடைக்கும் வட்டி இதற்கும் கிடைக்கும்.
இருப்பினும், இதில் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கைக்கு சில வரம்புகள் உள்ளன. இத்தகைய கணக்குகளில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்படக் கூடாது.
ஒரு வங்கியில் நீங்கள் வழக்கமான சேமிப்புக் கணக்கையும் ஜீரோ இருப்பு சேமிப்புக் கணக்கையும் ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியாது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு