மன்னார் பஜார் பகுதியில்  இன்று  திங்கட்கிழமை நள்ளிரவு வேளையில் பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது .  காவல்துறையினா்  மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் ஏற்றிக் கொண்டு வரப்பட்டு கொண்டிருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால்  பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது.

 தற்போது குறித்த வாகனம் மன்னார்  நீதி மன்ற பிரதான வீதியில்  காவல்துறை  பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.   மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாநாடா ளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள்   இந்த போராட்டத்தில் இணைந்திருக்கின்றார்கள்.

 சம்பவ இடத்திற்கு  சென்ற  மன்னார் காவல்துறையினா் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் இந்த வாகனம் கொண்டு செல்ல முடியவில்லை . தொடர்ந்தும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

 இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இரண்டு வீதிகளுக்கும் அருகாமையில் அமைதியாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது