நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை உடனே நிறைவேற்றக் கோரும் மஹ்தி குடும்பம் – திடீர் அறிக்கைக்கு என்ன காரணம்?

26 நிமிடங்களுக்கு முன்னர்

ஏமன் சிறையில் உள்ள இந்திய செவிலியரான நிமிஷாவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உயிரிழந்த மஹ்தியின் குடும்பத்தினர் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் சனா நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நிமிஷா பிரியாவுக்கு ஷரியா சட்டத்தின்படி மரண தண்டனை நிறைவேற்றுவது மட்டுமே தங்களின் ஒரே கோரிக்கை என அவரின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி, ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஏமனின் மேஜர் ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தில் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Abdul Fattah Mahdi/Facebook

படக்குறிப்பு, தலால் அப்தோ மஹ்திநிமிஷா பிரியாவுக்கு கடந்த ஜூலை 16 ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை தள்ளி வைக்கப்பட்டது.

இதனை கடிதத்தில் மேற்கோள்காட்டி, “நாங்கள் எந்த மாற்று ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதனை மீண்டும் மீண்டும் உங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். எனவே தாமதம் இல்லாமல் தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இந்தக் கடிதத்தை ஆகஸ்ட் 9 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்கிற எங்களின் இறுதி முடிவையும், உறுதியான நிலைப்பாட்டையும், தெளிவான கோரிக்கையையும் நாங்கள் தெரிவித்துவிட்டோம். பழிவாங்கலைத் தவிர வேறு எந்த மாற்றும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்ன?

அந்த கடிதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு பழிவாங்கலுக்கான உரிமையை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் அதில், “நம் சமூகத்தில் முன்பு எப்போதும் காணாத கொடூர குற்றத்தை அவர் (நிமிஷா பிரியா) செய்துள்ளார். அவர் செய்த கொலைக்கான தண்டனையை நீதிமன்றம் வழங்கி உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்துவிட்டது. எனவே தாமதமின்றி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும். அதற்கான அவசர உத்தரவுகளை உடனடியாக வழங்கி இத்தகைய குற்றங்களை செய்ய நினைப்போரை தடுக்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

பட மூலாதாரம், Abdul Fattah Mahdi/Facebook

நிமிஷா பிரியா வழக்கில் மஹ்தியின் குடும்பம் வழங்கக்கூடிய மன்னிப்பு தான் தண்டனை நிறுத்தும் ஒரே வழி என்ன நிமிஷாவுக்காக வாதாடும் தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் சிலர் நிமிஷா பிரியாவின் விடுதலை பற்றி கூறி வரும் கருத்துக்களுக்கு மஹ்தியின் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தாங்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தி வருகின்றனர். அப்துல் ஃபத்தா மஹ்தி இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

கேரளாவைச் சேர்ந்த மதத்தலைவர் (கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார்) நிமிஷா பிரியா விடுதலை விவகாரத்தில் சம்மந்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் மஹ்தியின் குடும்பத்தினர் மறுத்திருந்தனர்.

பட மூலாதாரம், ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார்

இந்த நிலையில் முஸ்லியார் பேசியதாக வெளியான ஒரு மலையாள செய்தியை மேற்கோள்காட்டி மஹ்தி மீண்டும் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை மதித்து, நியாயமாக உணர்ந்து, இந்த காலகட்டத்தில் உண்மையை தெளிவுபடுத்த வேண்டியது இந்திய மதகுருவின் கடமை. இது தொடர்பாக யாரையும் நேரடியாகவோ அல்லது இன்னொருவர் மூலமாக சந்திப்பதையும் விவாதிப்பதையும் நாங்கள் தவிர்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முஸ்லியார் பேசியதாக வெளியான செய்திகளின் தொகுப்பை வைத்து இன்னொரு பதிவிட்டுள்ளார். அதில், “எங்களின் வலியைத் திரித்து தகவல்களை வெளியிடும் கொடூரத்தைவிட வேறு என்ன கொடூரம் இருந்துவிட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் “நீதி அதன் போக்கில் செல்லட்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

மஹ்தி குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சிலின்’ உறுப்பினர் பாபு ஜான், “நிமிஷா விடுதலை தொடர்பாக இந்தியாவிலிருந்து வரும் முன்னுக்குப் பின் முரணான செய்திகள் மஹ்தி குடும்பத்தை மேலும் கோபமடையச் செய்கிறது. அவர்கள் வசம் உள்ள வழிகளை அவர்களை கையாண்டு வருகிறார்கள்” என்றார்.

“இந்த வழக்கின் தவறான பரப்புரைகளுக்கு எங்கள் தரப்பிலிருந்து மஹ்தி குடும்பத்திடம் முழுமையான மன்னிப்பு கேட்டுள்ளோம். எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

வழக்கின் பின்னணி என்ன?

கேரளாவின் பாலக்காடைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.

அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.

நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு, ஏமனின் அல்-பைதா நகரில், ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து ஏமனின் மாரிப் எனும் நகரில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மஹ்திக்கு ‘அதிகப்படியான மயக்க மருந்து’ கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.

மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்தக் கூற்றுகளை தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா பிபிசியிடம் மறுத்திருந்தார்.

தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. 2023இல் ஏமன் உச்ச நீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. நிமிஷா பிரியா, தற்போது சனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு