பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா மட்டும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், மற்ற நாடுகள் அதனைக் கண்டித்தும் பேசியுள்ளன.இஸ்ரேலின் திட்டம் பணயக் கைதிகளை விடுவிப்பதைவிட அவர்களின் உயிரை மேலும் ஆபத்திற்கு கொண்டு செல்லும் என ஐ.நா பாதுகாப்பு அவை உறுப்பினர்கள் கண்டித்துள்ளனர்.

காஸா தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு அவையின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் இஸ்ரேலின் திட்டம் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் என எச்சரித்துள்ளனர்.

டென்மார்க், கிரீஸ், ஸ்லோவேனியா ஆகிய நாடுகள், இந்தத் திட்டம் பணயக்கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

காஸா மக்களுக்கு கூட்டு தண்டனை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சீனா தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

“இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், காஸாவில் மேலும் ஒரு பேரிடர் உருவாகும். இது மேலும் திணிக்கப்பட்ட இடப்பெயர்வு, கொலைகள் மற்றும் அழிவை ஏற்படுத்தும்” என ஐநா துணை பொதுச் செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா கூட்டத்தில் தெரிவித்தார்.

ஐநா மனிதாபிமான அலுவலகத்தின் பிரதிநிதியான ரமேஷ் ராஜசிங்கம் காஸாவில் நிலவுவது பசிப் பிரச்னை அல்லது அது திட்டமிடப்பட்ட பட்டினி என்பது தெளிவானது எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகள் இஸ்ரேலைக் கண்டித்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது.

இஸ்ரேலின் திட்டம் தான் போரை முடிவுக்குக் கொண்டு வர ‘சிறந்த வழி’ என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் காஸாவை மக்களை பட்டினிக்கு ஆளாக்கவில்லை எனக் கூறிய அவர், இஸ்ரேல் பணயக்கைதிகள் தான் வேண்டுமென்றே பட்டினிக்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய பிபிசி செய்திகள்: