டிரம்ப்-புதின் சந்திப்பு : யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி பங்கேற்காமல் நடப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபரின் முதல் பதவிக் காலத்தில் டிரம்பும் புதினும் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளனர்.எழுதியவர், பிபிசி செய்திகள் மற்றும் உலகளாவிய இதழியல் பதவி, 8 நிமிடங்களுக்கு முன்னர்

யுக்ரேனில் ரஷ்யா முன்னெடுத்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வர பல மாதங்களாக முயற்சி செய்து வரும் டொனால்ட் டிரம்ப், வரும் வெள்ளிக்கிழமையன்று ரஷ்ய தலைவர் விளாடிமிர் புதினைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் .

போரை முடிவுக்குக் கொண்டுவர, டிரம்ப் எடுத்துள்ள சமீபத்திய முயற்சி இது.

இந்தச் சந்திப்பு, ரஷ்யா யுக்ரேனில் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டிய கடைசி நாளில் அறிவிக்கப்பட்டது.

அதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், ரஷ்யா மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும்.

இந்த கோடைக்காலத்தில், டிரம்பின் முயற்சியால் ரஷ்யாவுக்கும், யுக்ரேனுக்கும் இடையே மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், இரு தரப்பும் அமைதியை நோக்கி வரவில்லை.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இந்நிலையில், டிரம்ப் – புதின் சந்திப்பு குறித்து நமக்கு கிடைத்த தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

புதினும் டிரம்பும் சந்திப்பது ஏன் ?

ஜனவரி மாதத்தில் டிரம்ப் பதவியேற்கும் முன், யுக்ரேனில் ரஷ்யா நடத்தும் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக டிரம்ப் உறுதியளித்தார். மேலும், அதிபராகப் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும் அவர் பலமுறை கூறினார்.

ஆனால், அவர் பதவியேற்ற பிறகு, அவரது நிர்வாகம் போரை நிறுத்த கடுமையாக முயற்சி செய்தாலும், அதில் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

ஆரம்பத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையை ஏற்படுத்தின, ஆனால் பின்னர் அவை தோல்வியடைந்தன.

கடந்த மாதம், அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் பலமுறை ரஷ்யாவிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, புதின் தனக்கு ஏமாற்றம் அளித்ததாக டிரம்ப் பிபிசியிடம் ஒப்புக்கொண்டார்.

அதில் விரக்தி ஏற்பட்டதால் , உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும், இல்லையெனில் மேலும் கடுமையான அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என புதினுக்கு டிரம்ப் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்தார்.

இந்நிலையில் குறிக்கப்பட்ட காலக்கெடுவை எட்டியதால், அவரும் புதினும் , அடுத்த வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15 ம் தேதியன்று நேரில் சந்திப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்பின் கூற்றுப்படி, புதன்கிழமையன்று மாஸ்கோவில் புதினுடன் அமெரிக்க தூதர் விட்காஃப் நடத்திய “மிகச் சிறப்பான” பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ORI AVIRAM/Middle East Images/AFP via Getty Images

படக்குறிப்பு, யுக்ரேனில் நடந்த போரில், ரஷ்யா தலைநகரான கியேவைக் குறிவைத்து தாக்கியது. அங்கு பல கட்டிடங்கள் ஏவுகணைகளால் சேதமடைந்தன.கூட்டம் எங்கே நடைபெற உள்ளது ?

ரோம், ஹங்கேரி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற இடங்கள் இந்த சந்திப்பிற்காக பரிசீலிக்கப்பட்டதாக செய்திகள் பரவியிருந்தாலும், இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அமெரிக்க அதிபருக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது.

வெள்ளிக்கிழமையன்று மாலை, டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், புதினுடன் நடைபெறவுள்ள, “அதிகம் எதிர்பார்க்கப்படும் சந்திப்பு” ஆகஸ்ட் 15 அன்று “பெரிய மாகாணமான அலாஸ்காவில்” நடைபெறும் என்று பதிவிட்டுள்ளார்.

“மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்,” என்றும் கூறிய டிரம்ப் ,

சந்திப்பு நடக்கவுள்ள இடம் “பல காரணங்களுக்காக மிகவும் பிரபலமானது” என்றும் கூறியிருந்தார்.

அலாஸ்காவில் அவர்கள் சந்திக்கவுள்ள சரியான இடம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

யுக்ரேன் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறதா?

அதற்கு சாத்தியமில்லை என்பது போலத் தெரிகிறது. ஆனால், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக இருந்தால், டிரம்ப், புதின் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி ஆகியோருடன் மற்றொரு சந்திப்பு நடைபெறலாம் என அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

புதின் மற்றும் டிரம்பைத் தவிர, இந்தச் சந்திப்பில் வேறு யார் யார் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

பல மாதங்களாக, ஸெலன்ஸ்கி ஐரோப்பாவிற்கு பேச்சுவார்த்தைகளில் இடம் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார், ஏனெனில் அது ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான அணுகுமுறையை உருவாக்கும் என அவர் நம்புகிறார்.

“போர் ஐரோப்பாவில் நடைபெறுகிறது. யுக்ரேன் ஐரோப்பாவின் ஒரு முக்கிய பகுதி. நாங்கள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். எனவே, ஐரோப்பா இந்த முக்கிய செயல்முறைகளில் பங்கேற்க வேண்டும்”என்று ஸெலன்ஸ்கி கூறியிருந்தார்.

இந்த வாரம், டிரம்பும் ஸெலென்ஸ்கியும் ஒருவரையொருவரும், அவர்களது ஐரோப்பிய நண்பர்களுடனும் தொடர்பு கொண்டுள்ளனர்.

ரஷ்யாவில் தனது சிறப்புத் தூதர் புதினைச் சந்தித்த பிறகு, டிரம்ப் ஐரோப்பியத் தலைவர்களுடன் பேசினார். சாத்தியமான சமாதான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த புதினைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று, டிரம்புடன் “மிகச் சிறப்பான உரையாடல்” நடந்ததாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறினார்.

அந்த உரையாடலில், ரஷ்யா “தங்களது கொடூரமான தாக்குதல்களை” மேலும் தீவிரப்படுத்தி வருகிறது என அவர் டிரம்பிடம் தெரிவித்தார்.

யுக்ரேனின் பங்களிப்பு இல்லாமல் ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்படும் எந்த சமாதான ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது என ஸெலன்ஸ்கி முன்பே கூறியிருந்தார்.

மேலும், அடுத்து நடக்கவிருக்கும் டிரம்ப்–புதின் சந்திப்பு குறித்து, யுக்ரேன் இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, யுக்ரேனின் ஐரோப்பியக் கூட்டாளிகளான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (இடது) மற்றும் பிரிட்டனின் பிரதமர் கீயர் ஸ்டார்மர் (வலது) — அதிபர் ஸெலன்ஸ்கியைச் சந்தித்தனர். அவர்கள், யுக்ரேன் சமாதான பேச்சுவார்த்தைகளில் கட்டாயமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.யுக்ரேனின் நட்பு நாடுகள் என்ன சொல்கின்றன?

ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதான பேச்சுவார்த்தைகளும் யுக்ரேனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியும் அடங்கிய முத்தரப்புச் சந்திப்பை நடத்த டிரம்ப் தயாராக உள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது வரை, இந்த சந்திப்பு டிரம்ப்–புதின் இருவருக்கிடையிலானதாக மட்டுமே உள்ளது. ஏனெனில் அதற்கான கோரிக்கை ரஷ்ய அதிபரிடமிருந்து வந்தது.

யுக்ரேன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் “பலனற்ற முடிவுகள் தான்” என்று ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியை, புதினைச் சந்திப்பதன் மூலம் தொடங்க முடியும் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.

அதனை, “ரஷ்யாவுடன் தொடங்க” திட்டமிட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், புதின் மற்றும் ஸெலன்ஸ்கியுடன் ஒரு முத்தரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்வதில் “எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது” என்று அவர் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதின் இதை ஏற்பாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அவர் இதற்கு முன் பல நேரடி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை மறுத்துள்ளார். மேலும், முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய 3 ஆண்டுகளாக, புதினும் ஸெலன்ஸ்கியும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை.

அந்தச் சந்திப்பில் இரு தரப்பும் என்ன எதிர்பார்க்கின்றன?

டிரம்ப் தனது நோக்கத்தை தெளிவாக கூறியுள்ளார். போரை நிறுத்த வேண்டும் என்பது அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

“கொலைகளை நிறுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று அவர் இந்த வாரமும் கூறினார்.

ரஷ்யா மற்றும் யுக்ரேனுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தம் “மிக நெருக்கமாக” உள்ளது என டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று கூறினார்.

ரஷ்யாவும் யுக்ரேன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று கூறினாலும், அவர்கள் விரும்பும் விஷயங்கள் ஒருவருக்கொருவர் எதிரானதாக உள்ளன.

தான் கைப்பற்றிய பகுதிகளில் குறிப்பாக கிரிமியா போன்ற பகுதிகளில், ரஷ்யக் கட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதில் யுக்ரேன் உறுதியாக உள்ளது.

யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி இந்த கருத்தை முழுமையாக நிராகரித்துள்ளார். “இங்கு பேசுவதற்கு எதுவும் இல்லை. இது நமது அரசியலமைப்புக்கு எதிரானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், புதினும் தனது அதிகபட்ச கோரிக்கைகளில் இருந்து இதுவரை விலகவில்லை . அதாவது, யுக்ரேனின் நிலப்பரப்புகள், நடுநிலையான அணுகுமுறை, மற்றும் எதிர்காலத்தில் ராணுவத்தின் அளவு ஆகியவற்றில் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றவில்லை.

யுக்ரேன் மேற்கத்தியமயமாகி வருகிறது என்ற நம்பிக்கையால், புதின் அந்நாட்டின் மீது படையெடுத்தார். மேலும், மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோ, ரஷ்ய எல்லைக்கு அருகில் படைகளை கொண்டு வர யுக்ரேனைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரேன் பகுதிகள்ஆனால் எப்படியாவது, ஒரு சாத்தியமான திட்டத்தின் மூலம் இரு தரப்பையும் சமாதானப்படுத்த வெள்ளை மாளிகை முயற்சிக்கிறது.

யுக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய தலைவர்களை சமாதானப்படுத்த, டிரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருகிறது என பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த வட்டாரத்தின் படி,

இந்த ஒப்பந்தம்,

ரஷ்யாவுக்கு கிரிமியன் தீபகற்பத்தின் கட்டுப்பாட்டை தொடர அனுமதிக்கும்.கிழக்கு யுக்ரேனில் உள்ள டான்பாஸ் பகுதியை (டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்) எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் எனத் தெரியவருகிறது. 2014-இல், ரஷ்யா சட்டவிரோதமாக கிரிமியாவை ஆக்கிரமித்தது, மேலும் தற்போது டான்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதியை அதன் படைகள் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யா தற்போது ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கெர்சன் மற்றும் சபோரிஜியா பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும்”இரு தரப்புக்கும் பயனுள்ளதாக சில பிரதேசங்கள் இடமாற்றம் செய்யப்படும். ஆனால் அதைப் பற்றி பின்னர் அல்லது நாளை பேசுவோம்” என்று டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பட மூலாதாரம், Justin Sullivan/Getty Images

படக்குறிப்பு, டிரம்ப்–புதின் சந்திப்பு அலாஸ்காவில் எங்கு நடைபெறும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அலாஸ்காவில் கூட்டம் நடப்பது ஏன்?

அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அலாஸ்கா அமெரிக்கப் பகுதி என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை எளிதாகச் செய்ய முடிகிறது.

அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் இந்த நிலத்தை வாங்கியது. அதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபருக்கு விருந்தினராக இருப்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சூழ்நிலையாகப் பார்க்கப்படுகிறது.

“ரஷ்யாவும் அமெரிக்காவும் அண்டை நாடுகள். பெரிங் ஜலசந்தி இரு நாடுகளையும் பிரிக்கிறது. அலாஸ்கா போன்ற இடத்தில் சந்திப்பு நடப்பது “தர்க்கரீதியானது” என ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் கூறினார்.

மேலும், “ரஷ்யாவும் அமெரிக்காவும் நெருங்கிய அண்டை நாடுகள். இரு நாடுகளும் எல்லையில் இணைந்துள்ளன, எங்கள் குழு பெரிங் ஜலசந்தி மீது பறந்து அலாஸ்காவுக்கு செல்லுவது மிகவும் இயல்பானது. இரு தலைவர்களுக்கிடையிலான முக்கியமான மற்றும் எதிர்பார்க்கப்படும் சந்திப்பு அங்கே நடைபெறுவது சரியான தேர்வாகும்.” என்று அவர் தெரிவித்தார்.

அலாஸ்கா, அமெரிக்க ராஜ்ஜீய நிகழ்வில் கடைசியாக முக்கிய இடம் பெற்றது 2021 மார்ச் மாதத்தில்.

அப்போது, ஜோ பைடனின் புதிய ராஜ்ஜீய மற்றும் தேசிய பாதுகாப்புக் குழு, சீன அதிகாரிகளை ஆங்கரேஜில் சந்தித்தது.

அந்த சந்திப்பு கடுமையாக மாறியது, “மேலோங்கிய மனப்பான்மை மற்றும் பாசாங்குத்தனம்” என சீனர்கள் அமெரிக்காவை குற்றம் சாட்டினர்.

மறுபுறம், அலாஸ்கா தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னால் மற்ற முக்கிய காரணங்களும் உள்ளன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஆனால் அமெரிக்கா ஐசிசியின் உறுப்பினராக இல்லை, அதேபோல் அதன் அதிகாரத்தையும் அங்கீகரிக்கவில்லை. அலாஸ்கா அமெரிக்கப் பகுதி என்பதால், புதின் அங்கு வந்தால் கைது செய்யப்படும் அபாயம் இல்லை.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இதற்கு முன்பு நேரடியாக நடந்த பேச்சுவார்த்தைகளின் சுருக்கம்

2022 இல் ரஷ்யா யுக்ரேன் மீது முழுமையாக படையெடுத்த பிறகு, டிரம்பும், புதினும் முதன்முறையாக 2025 பிப்ரவரியில் தொலைபேசியில் பேசினர்.

பிறகு, டிரம்ப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவித்தார். யுக்ரேன் இதில் பங்கேற்கவில்லை, என்பதால் அது சர்ச்சைக்குரிய முடிவாக இருந்தது.

அதன் தொடர்ச்சியாக, இரு தலைவர்களும் இருவரின் நாடுகளுக்கும் பரஸ்பரம் செல்வதற்கு ஒப்புக்கொண்டனர்.

இதற்கு முன்பு நேரடியாக நடைபெற்றச் சந்திப்பு 2021 இல் நடந்தது.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன் , புதினை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சந்தித்தார். அந்த சந்திப்பு யுக்ரேன் மீதான படையெடுப்பிற்கு முன்னர் நடைபெற்றது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு